கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை தமிழ்நாட்டின் பிரச்சினைக்குரிய பிரச்சினையாக வடிவெடுத்துள்ளது.
அணுமின் நிலையம் உருவானால், அப்பகுதியில் உள்ள மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானி யுமான அப்துல்கலாம் அவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பார்வையிட்டு, சரியான வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அச்சப்படத் தேவையில்லை என்று தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.
இதற்கு ஆதரவு - எதிர்ப்பு என்ற இரு நிலைகள் தோன்றியுள்ளன. எதிர்ப்பு அணியின் குழுவினர் பிரதமரை சந்தித்துத் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு அவர்களின் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை ஒரு மதப் பிரச்சினையாக திசை திருப்புவதில் இந்து முன்னணி முனைந்து நிற்பது ஆபத்தான அணுகு முறையாகும்.
இந்து முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர் ஒருவருக்கு தொலைப்பேசியில் மிரட்டல் விடப்பட் டுள்ளதாம். மிரட்டியவர்கள் யார் என்று தெரிய வில்லை. இப்படி அனாமதேயமாக தொலைப்பேசியில் விடப்பட்ட மிரட்டலை மய்யப்படுத்தி, இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் திருவாளர் இராம. கோபாலன், இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி- அணுமின் நிலையத்தை எதிர்ப்பவர்களின் பின்னணி யில் வெளிநாட்டு சக்திகள் இருக்கின்றன என்ற தோரணையில் பிரச்சினையைச் சூடுபடுத்தி யிருக்கிறார்.
கூடங்குளம் வட்டாரத்தில் வாழும் மக்கள் பெரும்பாலோர் கிறித்துவர்களாக இருப்பதை மனதிற் கொண்டு இந்து முன்னணி அமைப்பாளர் மிரட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஏதாவது பிரச்சினை கிடைக்காதா - அதனைச் சிறுபான்மையினருக்கு எதிராகத் திசை திருப்ப முடியாதா என்கிற நரிக்குணம் எப்பொழுதுமே இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு உண்டு. அதில் பெரும்பாலும் தந்திர யுக்திகள் தோள் தட்டி, தொடை தட்டி நிற்கும்.
இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு காந்தியாரைச் சுட்டுக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரான நாதுராம் கோட்சேயின் வழி வந்தவர்களாயிற்றே!
இந்தப் பிரச்சினையையும், இந்து - கிறித்தவர் பிரச்சினையாக உருமாற்றம் செய்யத் துடித்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஏற்கெனவே தென் மாநிலங்களில் இந்தப் பிரச்சினையை ஆறிப் போய் விடாமல் அவ்வப்போது விசிறிவிடும் ஒரு வேலையை இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றன.
கூடங்குளம் அணுமின் நிலையம் என்பது மதரீதியான பிரச்சினையல்ல; அது ஒட்டு மொத்தமான நாட்டு மக்கள் பிரச்சினை.
இதனை மதப் பிரச்சினையாக்க முயல்வதைவிட கேடு கெட்டதனம் வேறு ஒன்றும் கிடையாது. எதையும் மதப் பார்வையோடு பார்க்கும் ஓர் அணுகுமுறையை சங்பரிவார்க் கும்பல் செய்து வருகிறது.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் இராமனைக் கொண்டு போய்த் திணித்து அதனை முடக்கியவர்கள் அல்லவா!
முற்றும் உணர்ந்தவர்கள் என்ற நிலையில் உள்ள உச்சநீதிமன்ற பேரறிவாளர்கள் அதனை ஏற்று, இடைக்காலத் தடையை ஏற்படுத்தி, நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொருளாதார ரீதியாக வளம் ஏற்படுத்தும் திட்டத்திற்கு முட்டுக் கட்டை போட்டுள்ளனர்.
இதுபோன்றவைகளில் மத மூக்கை நுழைய விடுவதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். அனாமதேயங்கள் தொலைப்பேசியில் பேசியதாகக் கூறப்படுவதையெல்லாம் வைத்துக் கொண்டு, வீராவேச பேச்சுகளில் ஈடுபடக் கூடாது, கூடவே கூடாது.
காவல் புலனாய்வுத் துறை இதில் துரிதமாகச் செயல்பட்டு, யார் தரப்பில் தவறு இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.
No comments:
Post a Comment