Monday, February 10, 2020

நேருவின் பெயரை தவறாக பேசலாமா பிரதமர்?

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பெயரை நாடாளுமன்றத்தில் தேவையில்லாமல் பயன்படுத்தி, தவறான தகவல்களை அளித்த பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி வலியுறுத்தினார்.
மக்களவையில் வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘பாகிஸ்தானில் இருந்து வந்த மதச் சிறுபான்மையினருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு விரும்பினார்.
மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுடன் அவர் ஒப்பந்தமும் மேற்கொண்டார். அதற்காக, அவர் ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்க விரும்பினார் என்று நாம் முடிவு செய்து விடலாமா? பல ஆண்டுகளுக்கு முன் நேரு சொன்னதைத்தான் நாங்கள் இப்போது (குடியுரிமை திருத்தச் சட்டம்) செய்கிறோம்’ என்றார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நமது நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, மோசமான பொருளாதார நிலை என அடுக்கடுக்காக பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் பற்றி அதிகம் பேசாத பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானைக் குறித்து மட்டும் 7 முறை பேசியுள்ளது மிகவும் கெட்டவாய்ப்பானது. கடந்த சில ஆண்டுகளாக அவர் பாகிஸ்தானைச் சுட்டிக்காட்டி பேசி அரசியல் நடத்துவது அதிகமாகிவிட்டது.
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்ட மோடி, நாட்டு மக்களிடையே பிரிவினையைத் தூண்டிவிட்டு உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார். மக்களவையில் பிரதமர் பேசியதன் ஒருபகுதி மதவாதத்தை தூண்டுவதாகவும், பொய்யுரைகளாகவும் இருந்தது. மற்றொரு பகுதி நகைச்சுவை நாடகக் காட்சியாக அமைந்தது.
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பெயரை மோடி தேவையில்லாமல் அவையில் பயன்படுத்தினார். 1947-ஆம் ஆண்டு இருந்த சூழல்தான் இப்போதும் நாட்டில் உள்ளதா?. மேலும், நேரு மேற்கொண்ட ஒப்பந்தம் குறித்து பொய்யான தகவல்களை கூறினார். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு அவர் தவறான செய்தியை அளித்துள்ளார். இதற்காக பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
ஹிந்து-முஸ்லிம் பிரிவினையைத் தூண்டியும், இந்தியா-பாகிஸ்தான் பகைமையை வளர்த்தும்தான் அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இப்போது உள்ளது. தங்கள் ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பல்வேறு தீய வழிகளைக் கையாளுகிறது. நாட்டின் பொருளாதாரம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதுபோல மோசமான நிலையில் உள்ளது. ஆனால், அதற்கு சாதாரண காய்ச்சலுக்கு உள்ள மருந்தை அளிப்பதுபோல நமது நிதியமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...