கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக,
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாபெரும் வெற்றி, தந்தை பெரியார்,
பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின்
கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். தமிழ்நாட்டில் மதவாதம் எடுபடாது
என்பதற்கு - மக்கள் தந்த இந்த தீர்ப்பே நல்லதொரு சான்றாகும்.
தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு,
சமூக நீதி மாநாடு 2019 - பிப்ரவரி 23, 24 ஆகிய நாட்களில் நடைபெற்ற
அம்மாநாட்டில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட - மதச்சார்பற்ற முற்போக்குக்
கூட்டணியின் தலைவர்களை எல்லாம் அழைத்து, அவர்களது தன் முனைப்புகளைப் போக்கி
(ஈகோ) ஓர் அணியில் இணைத்த பெருமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையே
சாரும்.
வடமாநிலங்களில் தனக்கே பெரிய செல்வாக்கு
என்ற இறுமாப்பில் மாநிலக் கட்சிகள் தன்னிச்சையாகத் தேர்தலில் நின்று தன்
முனைப்பு காட்டி; பெரிய தோல்வியைத் தழுவிக் கொண்டன. பதவி ஆசைகளும் ஒரு
பெரிய காரணமாக அமைந்துவிட்டது. தஞ்சை சமூகநீதி மாநாட்டில், திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றும்போது, "திராவிட முன்னேற்றக் கழகம் செல்ல
வேண்டிய பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கிறது - கலங்கரை விளக்கமாக
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய தாய்க்கழகம்
தான் திராவிடர் கழகம்" என்றார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழர்
தலைவர் ஆசிரியர் அவர்கள் 26.3.2019 தொடங்கி 16.4.2019 வரை - தனது பயண
திட்டத்தை வகுத்து சுமார் 5,200 கிலோமீட்டர் தேர்தல் பரப்புரைப் பயணமாக -
கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு, கடும் வெயில்
என்றும் பாராமல், மருத்துவர்களின் அறிவுரைகளையும் தாண்டி பரப்புரை
செய்தார்கள் என்றால், அது என்ன சாதாரணமா? தன் இனத்தைக் காட்டிக் கொடுத்து
வயிறு வளர்ப்போர்களின் (விபீடணர்களின்) எதிர்த்தாக்குதலை எல்லாம் சமாளித்து
தனது வெற்றிப் பயணத்தை பீடு நடையோடு நடத்தினார்கள் என்பதும், அசாதாரண
துணிச்சல் ஆகும்.
திராவிடர் கழகம் - ஒரு கலங்கரை விளக்கம்
தான் என்பதை பொது மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து "ஒருவிரல் புரட்சி"
மூலம் நிரூபித்துள் ளார்கள். கடவுள், ஜாதி, மதங்களைக் காட்டி, ஆர்ப்
பரித்த ஒரு கூட்டத்தை - தமிழ்நாட்டு மக்கள் நாடாளு மன்றத் தேர்தல் மூலமாக
படுதோல்வி அடையச் செய்து, அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்து விட்டார்கள்.
நீதிமன்றங்களைக்கூட கேவலமாகப் பேசும்
எச்.ராஜா-க்கள் இனி தமிழ்நாட்டில் தமக்கு வேலை இல்லை என்பதை
உணர்ந்திருப்பார்கள். நமக்கு எதிராக வேலைப்பார்த்த தொப்புள் கொடி உறவுகள்
இனித் திருந்த வேண்டும். கூட்டணி கட்சிகளின் தோழர்கள் பகுத்தறிவுப்
பிரச்சாரத்தை நாடெங்கும் தொடர வேண்டும். வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி
உணர்வோடு, உண்மையுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில்
உரிமைக் குரல் ஒலிக்கட்டும்! நன்றி! வணக்கம்!
- கா.நா.பாலு
மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், சேலம்
No comments:
Post a Comment