'தினமலர்' என்னும் அதிகார பூர்வமற்ற ஆர்.எஸ்.எஸ். ஏட்டின் வார மலரில் (3.3.2019) திராவிடர் கழகத் தலைவர் -தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்மீது கொலை வெறியைத் தூண்டும் கேள்வி பதில் வெளியானதும், அது தொடர்பாக 'தினமலரின்' ஆசிரியர், பதிப்பாளர், வெளியிடுபவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், சென்னைப் பெரு நகரக் காவல்துறை ஆணையர் அவர்களுக்கு 5.3.2019 நாளிட்ட புகார்க் கடிதம் நேரில் கொடுக்கப்பட்டது.
சென்னை வேப்பேரிகாவல்துறை ஆய்வாளருக்கும் அதே போல எழுத்து மூலமாகப் புகாரும் நேரில் கொடுக்கப்பட்டது.
அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கழகத் துணைத் தலைவர் - பெருநகரக் காவல்துறை ஆணையருக்கும், வேப்பேரி காவல்துறை ஆய்வாளருக்கும் நினைவூட்டுக் கடிதம் அனுப்பப்பட்டது. (4.4.2019)
அதனைத் தொடர்ந்து சென்னை, வேப்பேரி மத்தியக் குற்றப் பிரிவு கன்வென்ஷனல் கிரைம் அணி - 19, ஆய்வாளர் அவர்களிடமிருந்து 5.4.2019 நாளிட்ட கடிதம் நேற்று மாலை கிடைக்கப் பெற்றது. (5.4.2019)
காவல்துறை எழுதிய அந்தக் கடிதம்
அந்தக் கடிதம் வருமாறு:
05.04.2019
அனுப்புநர்: காவல் ஆய்வாளர், மத்திய குற்றப்பிரிவு, கன்வென்ஷனல் கிரைம், அணி-19, வேப்பேரி, சென்னை -07.
பெறுநர்: திரு. கலி. பூங்குன்றன், துணைத்தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண். 84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை -600 007.
அய்யா,
பார்வை: திரு, கலி, பூங்குன்றன், துணைத்தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண். 84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007 அவர்களின் புகார் மனு
நாள்: 05.03.2019
பார்வையில் கண்ட நடப்புத்தாளானது வழிவழியாக கடந்த 09.03.2019-ம் தேதி பெறப்பட்டதில், தாங்கள் தினமலர் செய்தி தாளின் 03.03.2019-ந்தேதி வாரமலர் பகுதியில் "அந்துமணி" கேள்வி - பதில்கள் என்ற பகுதியில் திராவிடர் கழக தலைவர் மாண்புமிகு கி. வீரமணி அவர்களை பற்றி தென்காசி திரு. கே. வெங்கட்டராமன் என்பவர் கேட்ட கேள்வியை வெளியிட்டு, அதற்கு பதில் என்ற பெயரில் இந்து மதத்தின் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்தான் வடமாநிலத்தில் காந்தியை சுட்டுக் கொன்றார் என்றும், வாஞ்சிநாதன் என்ற அதே ஜாதிகாரர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்றார் என்றும், இனி நடக்க இருக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதே போல் அதே ஜாதியைச் சேர்ந்த வெறிகொண்ட இளைஞன் ஒருவன் தி.க தலைவர் வீரமணியை கவனிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும், எனவே அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அந்த ஜாதிகார இளைஞர்களை கொலை செய்ய தூண்டும் நோக்கத்துடன் அப்பட்டமான கொலை முயற்சி திட்டத்தை கேள்வி பதில் என்ற பதிவில் வெளியிட்டுள்ளதாகவும், இந்த திட்டமிட்ட பதிவினை வெளியிடுவதற்கு காரணமான தினமலர் ஆசிரியர், எடிட்டர், பதிவாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகார் மனுவாகும்,
தங்களது புகார் மனு சம்பந்தமாக அரசு வழக்குரைஞர் அவர்களிடம் சட்ட கருத்துரை கோரியதில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள முகாந்திரம் ஏதும் இல்லை என்று சட்ட கருத்துரை வழங்கியுள்ளார். எனவே மேற்படி புகார் மனு தொடர்பாக தாங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அவதூறு வழக்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் தேடிக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
காவல் ஆய்வாளர்,
மத்திய குற்றப்பிரிவு,
கன்வென்ஷனல் கிரைம், அணி-19,
வேப்பேரி, சென்னை-07.
காந்தியைச் சுட்டுக் கொன்ற அதே ஜாதியைச் சேர்ந்த (வேறு யார்? பார்ப்பனர்தான்) வெறி கொண்ட இளைஞன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.க. தலைவர் வீரமணியைக் "கவனிக்க" வாய்ப்பு ஏற்படும் என்று 'தினமலர்' வார மலர் எழுதியிருப்பதற்கு என்ன பொருள் என்று அகராதிகளைத் தேடிக் கொண்டு இருக்க வேண்டுமா? கொலை செய்வதைத் தான் 'கவனிப்பு' என்ற சொல்லாடலின் மூலம் தெரிவிக்கப் படுகிறது என்பதை பகுத்தறிவைப் பயன்படுத்தும் எவரும் தெரிந்து கொள்ளலாம்.
நுண்மான் நுழைபுலம் அறிந்து நுணுக்கமாக உண்மை களைக் கண்டுபிடிக்கத் தெரிந்த காவல்துறைக்கு - அதுவும் உளவுத்துறைக்கு 'தினமலர்' - வாரமலர் எழுதியிருப்பதன் பொருள் பைத்தியக்காரர்களைத் தவிர அனைவருக்குமே எளிதில் விளங்கும்.
அரசு வழக்குரைஞர்கள் யார்?
அரசு வழக்குரைஞர் சட்டப்படி நடவடிக்கை மேற் கொள்ள முகாந்திரம் ஏதும் இல்லை என்று சொல்லி விட்டாராம்.
அரசு வழக்குரைஞர் என்றால் யார்? ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்தானேபெரும்பாலும்? அவர்கள் எப்படி ஆளும் கட்சிக்கு விரோதமாகக் கருத்தினைக் கூறுவார்கள்?
'தினமலர்' பாரதிய ஜனதாவின் ஊது குழல் - அதன் அதிபர் விசுவஹிந்து பரிஷத்தின் பொறுப்பாளர் - ஆளும் அ.இ.அ.தி.மு.க.வே பா.ஜ.க.வின் தொங்கு சதை என்ற நிலையில் பா.ஜ.க. ஏட்டின் மீது நடவடிக்கை எடுக்க (அ.இ.அ.தி.மு.க.) அரசு வழக்குரைஞருக்கு எப்படி மனம் வரும்? அந்தப் பேனா நியாயத்தின் பக்கம் நின்றா எழுதும்?
தினமலர் அன்று எழுதியதையும், திருச்சி நிகழ்வையும் இணைத்துப் பாரீர்!
தினமலர் -வார மலர் ஏட்டில் வெளி வந்த பதில் என்ன? தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு ஜாதி வெறியன் வீரமணியின் உயிருக்குக் குறி வைப்பான் என்பதுதானே!
அப்படியென்றால் அந்த ஆள் யார் என்பது தின மலருக்குத் தெரிந்திருக்கிறது அல்லவா - அந்த அடிப் படையில் - சம்பந்தப்பட்ட 'தினமலர்' கூறும் அந்த ஆசாமி பற்றி இதுவரை காவல்துறை விசாரித்ததா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். விசாரித்துத் தெரிந்து கொள்ளவில்லை என்றால், அது காவல்துறையின் அலட்சியத்தைத் தான் காட்டும்.
திருச்சியில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் பயணித்த வாகனத்தை இருபது - முப்பது பேர்கள் வழி மறித்ததைப் பார்க்கும் பொழுது - அன்று தினமலர் - வார மலர் எழுதியது நினைவுக்கு வருகிறதா - இல்லையா?
அதனுடைய தொடர்ச்சிதானே இது! அந்த நேரத்தில் உடன் வந்த திராவிடர் கழகத் தோழர்கள் தடுக்காவிட்டால், திராவிடர் கழகத் தலைவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்காதா?
குற்ற நடவடிக்கைகளை ஆணி வேர், பக்க வேர், சல்லி வேர் வரை சென்று துல்லியமாக ஆய்வு செய்யும் காவல்துறைக்கு இந்தப் பின்னணியும், நடப்பும் புரியாதா?
தமிழகத் தலைவர்கள் கண்டனம்!
திராவிடர் கழகத் தலைவரைக் குறி வைத்து நிகழ்த்தப் பட்ட இந்து முன்னணி கும்பலின் வன்முறைத் தாக்குதலைக் கண்டித்து தமிழகத் தலைவர்கள் எல்லாம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இவை எல்லாம் கண் முன்னே நடக்கும் இந்தக் கால கட்டத்தில், திருச்சி வன்முறை சம்பவம் நடந்த மறு நாள் தேதியிட்டு (5.4.2019) தினமலர் வார மலர் எழுதிய கொலை செய்யத் தூண்டும் கேள்வி பதில் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று காவல்துறை எழுதுவது - உண்மையிலேயே மூர்க்கத்தனமானதுதான்!
தமிழகத்தின் மூத்த தலைவருக்கே
பாதுகாப்பு இல்லையா?
தமிழகத் தலைவர்கள் கண்டன அறிக்கைகளில் அமுத்தமாகக் குறிப்பிட்டதுபோல தமிழ்நாட்டின் ஒரு மூத்த தலைவருக்கே அ.இ.அ.தி.மு.க. அரசில் பாதுகாப்பு இல்லை என்பது நிதர்சனமாகவே தெரிந்து விட்டது.
தமிழர் தலைவரைப் பாதுகாத்த கழகத் தோழர்களுக்குச் சிறையா?
இதில் என்ன கொடுமை என்றால், திருச்சியில் திராவிடர் கழகத் தலைவர் பயணித்த வேனை மறித்துத் தாக்க முயன்றவர்களைத் தடுத்து தலைவரைக் காப்பாற்றிய கழகத் தோழர்கள் எழுவர்மீது ஏழு பிரிவுகளில் (பிணையில் வர முடியாத பிரிவும் உண்டு) வழக்குப் பதிவு செய்து சிறையிலும் தள்ளியதுதான்.
திராவிடர் கழகத் தோழர்கள் தடுத்திராவிட்டால் 'தினமலர் - வாரமலர்' எழுதியிருந்த அந்தக் "கவனிப்பு" நடந்திருக்கும் அல்லவா! அது நடக்காமல் தடுத்த திராவிடர் கழகத் தோழர்கள்மீது திருச்சி காவல்துறை வழக்குப் பதிவு செய்து சிறைக்குள் தள்ளியிருப்பது எந்த அர்த்தத்தில்?
கொலை வெறியர்களை உற்சாகப்படுத்தாதா?
'தினமலர்' வார மலர் எழுதியுள்ள பதில் குற்றமுடையது அல்ல என்ற முடிவுக்கு காவல்துறை வந்துவிட்ட நிலையில், மதவாத பாசிச கும்பலுக்கு மேலும் உற்சாகம் ஏற்பட்டு அடுத்த முயற்சியில் இறங்க வழிவகை செய்யாதா?
அப்படி ஏதாவது நிகழுமாயின் அதற்குக் காவல்துறை யும், தமிழ்நாடு அரசும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எச்சரிக்கின்றோம். சில தலைவர்களும் இதே கருத்தைத்தான் சொல்லியுள்ளார்கள் என்பதையும் நினை வூட்டுகிறோம்.
மானமிகு வீரமணி யார் தெரியுமா?
பத்துவயதில் தந்தை பெரியார் கரம்பற்றி இந்த 86 வயது வரை, தந்தை பெரியார் பணி முடிப்பதே தன் பணி என்று 75 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரராக இரவுப் பகல் பாராமல், நாட்டு மக்களுக்குத் தொண்டாற்றும் ஒரு தலைவரின் உயிர் கிள்ளுக்கீரை என்று காவல்துறை நினைக்கிறதா - அதற்கு மாநில அரசு தூண்டுதலாக இருக் கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல - உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், பகுத்தறிவாளர்களும், மனிதநேயர்களும் கண்டிப்பாகக் கேள்வி எழுப்புவார்கள்.
நரேந்திர தபோல்கர் வரிசையிலா?
நரேந்திர தபோல்கர், கோவிந்த பான்ஸ்ரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ்கர் வரிசையில் திராவிடர் கழகத் தலை வரையும் குறிவைக்க காவிக் கூட்டம் திட்டம் தீட்டியுள்ளது என்பதை, சூசகமாக 'தினமலர்' - வாரமலர் தெரிவித்திருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் 'தினமலர்' வகையறாக் களைப் பாதுகாக்கும் முயற்சியில் காவல்துறையும், தமிழ் நாடு அரசும் இருக்கிறது போலும்!
அவ்வாறு இல்லை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கடமை கட்டாயம் காவல்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கண்டிப்பாக இருக்கிறது - இருக்கவே இருக்கிறது!
பொள்ளாச்சிக் கொடூரத்துக்கு பெரியாரும், வீரமணியும் காரணம் என்று 'துக்ளக்' எழுதவில்லையா?
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளுக்கு பெரியாரும், வீரமணியும்தான் காரணம் என்று 'துக்ளக்' அபாண்டமாக எழுதலாம்; அதற்குப் பதில் கொடுத்து ஆதாரத்தோடு திராவிடர் கழகத் தலைவர் பதில் சொன்னால், அதுவும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி - அவர்களின் பிரதம ஆலோ சகரான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய நூலிருந்தே எடுத்துக் காட்டிக் கூறினால், 'அய்யய்யோ எங்கள் கடவுளை நிந்திக்கிறாரே வீரமணி' என்று நீலிக் கண்ணீர் வடிப்பதும், அதையே தேர்தல் பிரச்சார யுக்தியாக மாற்றுவதும் தமிழ்நாட்டில் எடுபடாது! எடுபடவே எடுபடாது!!
கடவுள் மறுப்பு இயக்கம் மட்டுமல்ல!
தந்தை பெரியார் இயக்கம் - வெறும் கடவுள் மறுப்பு இயக்கம் மட்டுமல்ல - மக்களின் சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும், சம நிலைக்கும், எல்லார்க்கும் எல்லாம் என்ற சமதர்மத்துக்கும், பாலியல் நீதிக்கும், பகுத்தறிவு விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும் (இந்திய அரசமைப்புச் சட்டம் 51A-h - இதைத்தானே வலியுறுத்துகிறது) பாடுபடும் ஓர் இயக்கத்தை - அதன் தலைவரைப்பற்றிப் பொய்ப் பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் தேடலாம் என்று யார் நினைத்தாலும், யார் துணைப் போனாலும் எதிர் விளைவுதான் ஏற்படும் - இதற்கு முன்னுதாரணமும் இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.4.2019
No comments:
Post a Comment