Tuesday, July 10, 2018

குடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் பத்தொன்பது பன்முகத் தீர்மானங்கள்


இரு கட்டமாக தமிழகம் தழுவிய அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் உலகை உய்விக்கும் பெரியார் தத்துவத்தைப் பரப்ப சூளுரை!

* கல்வியை மாநிலப் பட்டியலுக்குக்கொண்டு வருக!

* மாணவர்கள் மத்தியில் கல்வியில் கவனமும், கட்டுப்பாடும் தேவை!

* எல்லா வகையான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்க!

* தீண்டாமை ஒழிப்பு- கோவில் கருவறையிலிருந்து தொடங்கப்படட்டும்!

* சமூகநீதி -மதச்சார்பின்மைக்கு விரோதமான மத்திய பி.ஜே.பி. ஆட்சி அகற்றப்படவேண்டும்

* மனப்பாடக் கல்வி முறை கூடாது!




கும்பகோணம், ஜூலை 9  குடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் பன்முகத் தன்மைகொண்ட பத்தொன்பது அரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கே.சி..சிற்றரசு, திருப்பத்தூர்

தீர்மானம் எண்:  1

கல்வியும் - அரசின் கடமையும்!

மாணவர்கள் எதைப் படிக்க விரும்புகிறார்களோ அதைப் படிக்கத்தக்கதான ஏற்பாடுகளைச் செய்ய வேண் டும் என்று மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு வலி யுறுத்துகிறது.

நீண்டகாலமாக கல்வி மறுக்கப்பட்ட காரணத்தால் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள், முதல் தலை முறையாகக் கல்லூரிப் படிப்பைத் தொடரக் கூடியவர்கள், கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்குக் கடன் வழங்குவதில் தாராளத் தன்மை காட்டப்பட வேண்டும் என்றும், அரசியல் காரணங்களுக்காக இலவசம் வழங்கு  வதைக் கூடத் தவிர்த்து, அவ்வீட்டுப் பிள்ளைகளின் கல்விக்கு ஊக்கம் கொடுப்பதுதான் உறுதியான அடித் தளத்திற்கு உதவும் என்பதால் எல்லாக் கட்டத்திலும் கல்வியை இலவசமாக அளிக்க முன்வர வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தம்பி பிரபாகரன், திண்டிவனம்

தீர்மானம் எண்:  2

இளைஞர்களுக்கு ஏட்டுப் படிப்போடு விளையாட்டும் தேவை!

()  ஏட்டுக் கல்வியோடு மாணவர்களின் கல்வி நிறைவு பெற்றது என்று நினைப்பது அசல் பார்ப்பனத் தனமாகும். விளையாட்டு என்பதும் கல்வியோடு சேர்ந்த ஒன்றே! விளையாட்டு மைதானங்களே இல்லை என்றால் கல்விக் கூடங்களுக்கு உரிமம் கிடையாது என்ற நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். விளையாட்டுத் திறனுக்காக மதிப்பெண்கள் குறிப்பிட்ட அளவுக்குக் கல்வியில் சேர்க் கப்பட வேண்டும்.

()  கிரிக்கெட் என்ற சூதாட்ட விளையாட்டு என்பது பார்ப்பனர்களுக்கானது என்பதால் மற்ற விளையாட்டுகள் பின்தள்ளப்பட்டுவிட்டன.

இந்திய மண்ணுக்கே உரித்தான ஹாக்கிக்கு உரிய வசதிகளை - உதவிகளை மத்திய அரசு செய்து கொடுக் காததால் அதிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா உலகக் கால்பந்துப் போட்டியில் பங்கு பெறுவதற்கான தகுதியைப் (Qualify) பெற முடியவில்லை என்றால் இதைவிட வெட்கக்கேடு ஒன்றும் இருக்க முடியாது. இந்நிலையில் விளையாட்டு, உடல் திறன்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தியாவில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

வீரமணி, அத்திவெட்டி
 
தீர்மானம்
எண்:  3
  
 பாடத்திட்டங்களில் மாற்றம் தேவை!

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(H) என்ற பிரிவு மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மை, சீர்திருத்த உணர்வுகளை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடி மகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட்டுள்ளதால் கல்விப் பாடத்திட்டத்தில் இவற்றிற்கு மாறான மூடத் தனமான பகுதிகளை (குறிப்பாக புராணங்கள், இதிகாசங்கள் உள்ளிட்டவற்றை) அகற்றி, விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் வகையில் பாடத் திட்டங்களை வகுக்குமாறும் உருப்போடும் கல்விமுறையை முற்றிலும் ஒழிக்குமாறும் மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

கல்விக் கூடங்களில் கடவுள் வாழ்த்து என்ற ஏற் பாட்டை அகற்றுமாறும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

.சவுந்தரபாண்டியன், நெல்லை

தீர்மானம் எண்:  4

கல்வியை மாநிலப் பட்டிலுக்குக் கொண்டு வருக - நீட் தேவையில்லை!

இந்தியாவில் பல்வேறு பாடத் திட்டங்களும், கல்வி முறைகளும், கல்விக்கூடக் கட்டமைப்பில் பெரும் ஏற்றத் தாழ்வுகளும் உள்ள நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்தி, தகுதி உடையவர்களைத் தேர்வு செய்வது என்பது நேர்மையற்றதும், பாரபட்சமும் கொண்டதாகும் என்பதை இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறது.

கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவந்து, பாடத் திட்டங்களையும் அந்தந்த மாநிலங்களே வகுப்பதோடு அந்தந்த மாநிலங் களின் பொறுப்பில் மாணவர் சேர்க்கையும் நடைபெற ஆவன செய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலி யுறுத்துவதுடன், மாநில அரசுகளும் இதில் முனைப்புக் காட்டிட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வின் காரணமாக கடந்த ஈராண்டுகளாக கிராமப்புற, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கதவு மூடப்பட்டிருப்பதை மிகுந்த கவலையோடு எடுத்துக்காட்டுவதுடன், அரசுகளும், நீதிமன்றமும் இந்த அநீதிக்குக் காரணமாகவும், எதேச்சதிகாரத்துடனும் நடந்து கொள்ளும் போக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறு வதால் அவர்களிடம் எழுந்துள்ள வஞ்சத்தைத் தீர்ப்பதற் கான வழியோ என்று அய்யமுறச் செய்கிறது. மருத்துவக் கல்விக்கு மட்டுமல்லாது, தனிப்பயிற்சி நிலையங்களின் கொள்ளையை அதிகப்படுத்தும், எவ்வித நுழைவுத் தேர்வுகளும் கூடாது என்றும் இம்மாநாடு உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறது.

4() யூஜிசி (UGC) எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு, உயர்கல்வி  ஆணை யத்தை (HECI)” அமைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு இம்மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது. முற்றாக  தனியார் மயம், உலக மயம் என்று கல்வித் துறையில் அரசின் பங்கேற்பைத் தவிர்த்துவிட்டு, உலக வர்த்தக மய்யத்திடம் போட்ட ஒப்பந்தப்படி, கல்வியை வணிமயமாக்கும் போக்கும், இதனைப் பயன்படுத்தி சமூகநீதிக் கதவுகளைச் சாத்திவிடும் சதித் திட்டமும் இதில் இருப்பதை மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர் களும் கவனமுடன் எதிர்க்க வேண்டியிருப்பதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

()  மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டு ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்கி வரும் பல்கலைக்கழகங்களை தரமுயர்த்துதல் என்ற பெயரில் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு சென்று பன்னாட்டு வணிகத்துக்கு வாய்ப்பு வழங்கும் புதிய கல்விக் கொள்கை 2016ன் திட்டத்தை மறைமுகமாக நிதி ஆயோக் மூலம் கொண்டுவரும் முயற்சி முற்றிலும் முறியடிக்கப்பட திராவிட மாணவர் கழகம் முழுமூச்சுடன் போராடும் என்று இம்மாநாடு உறுதியேற்கிறது.

()  ஆர்.எஸ்.எஸ். தன் காவிச் சிந்தனைகளை கல்வி என்ற பெயரில் திணிக்க முயலும் நடவடிக்கைகளை முறியடிக்கத் தொடர்ந்து அனைத்து அமைப்புகளும் இணைந்து போராட முன்வர வேண்டும் என்று திராவிட மாணவர் கழகம் வேண்டுகோள் விடுக்கிறது. இந்த வேலையில், தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் கல்வி விரோதப் போக்குகளைக் கண்டித்துக் களம் காணும் அனைத்து மாணவர் அமைப்புகளுக்கும் திராவிட மாண வர் கழகம் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

கோ.விக்னேசுவரி, .

தீர்மானம் எண்:  5

மாணவர்களின் கடமை

()  மாணவர்கள் தமிழர் இன மீட்சிக்கும், மேம் பாட்டிற்கும், ஆரிய ஆதிக்கத்தை அழிக்கவும், சமூகநீதி காக்கவும், மனித உரிமைகளுக்காகவும் மக்களுக்கு விழிப்பூட்ட இணைய தளங்களை (முகநூல், வாட்ஸ்ஆப்... இன்னபிற...) முழுமையாகப் பயன்படுத்தி அதுசார்ந்த கருத்துகளைப் பரப்புவதை தங்கள் முக்கியக் கடமையாகக் கொள்ளவேண்டும்.

()  திராவிடர் கழக சிறு வெளியீடுகளை வாங்கி உடன் பயிலும் மாணவர்களுக்கு வழங்கி அவர்களுக்கும் விழிப்பூட்டும் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

()  போதை, ஒழுங்குமீறல் போன்ற உணர்வுகளுக்கு அடிமையாகாமல், நல்ல எதிர்காலம், சமூக உணர்வு, குடும்ப வளர்ச்சி, இலட்சிய உணர்வு போன்றவற்றில் கவனம் செலுத்தி தடம் புரளாத் திட உணர்வுடன் மாண வர்கள் செயல்பட வேண்டும்.

()   பொது இடங்களில் கரும்பலகை வைத்து பெரி யாரியல் சிந்தனைகளைப் பரப்பும் பணியினை மாண வர்கள் - இளைஞர்கள் மேற்கொள்வது அவர்கள் ஆற்ற வேண்டிய முக்கியமான சமுதாயக் கடமையாகும்.

()  கல்விக் கூடங்கள்தோறும் திராவிட மாணவர் கழக அமைப்பினை உருவாக்குவதன் மூலம் சமதர்ம சமத் துவ சமுதாயத்தை உருவாக்குதல் இன்றியமையாததாகும்.

()  மாணவர்கள் மத்தியில் ஒழுக்கக் குறைவு ஏற்பட்டுள்ளது என்றும், கைகளில் கத்தி போன்ற ஆயு தங்களுடன் வருகின்றனர் என்றும், காவல்துறையினர் சோதனை செய்தே கல்லூரிக்குள் அனுப்பப்படுகிறார்கள் என்றும் செய்தி வந்த நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் விடுதலையில் வெளியிட்ட அறிக்கை காலத்தால் விடுவிக்கப்பட்டதாகும்.(20.6.2018, விடுதலை)

கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த நமது ஒடுக்கப்பட்ட சமுதாயம் தந்தை பெரியார், திராவிடர் இயக்கம், பச்சைத் தமிழர் காமராசர் போன்றவர்களால் கல்வி வாய்ப்பு பெற்று முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய நமது மாணவர்கள், தவறான திசையில் செல்ல வேண்டாம்; கல்வியில் கருத்தூன்றிக் கவனம் செலுத்தி, வீடும், நாடும் நலம் பெற, வளம் பெறச் செய்ய வேண்டும் என்று மாணவர் சமுதாயத்தை இம்மாணவர் மாநாடு உரிமையுடன், வலி மையுடன் கேட்டுக்கொள்கிறது. பெற்றோர்கள், ஆசிரி யர்கள், தலைவர்கள், ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியோடு இதற்கு ஒத்துழைக்குமாறும் இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது. இத்திசையில் மற்ற மாணவர்களுக்கு வழிகாட்டியாக திராவிட மாணவர் கழகம் திகழ வேண்டும்.

()   திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவு எடுத்தால் ஜாதி, மதம், சடங்கு ஒழிந்த இணையரைத் தேர்வு செய்வது என்றும், அதிலும் சிறப்பாக மறுமணம், விவாக விடுதலை பெற்றோர் ஆகியோரைத் திருமணம் செய்து கொள்வதில் முன்னுரிமை கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

()   தீண்டாமை எங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும், ஜாதிச் சண்டைகள் எங்கு தலையெடுத்தாலும், உடனே அங்கு சென்று தீர்வு காண்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

இரா.குமார், புதுக்கோட்டை மண்டல மாணவர் கழக செயலாளர்

தீர்மானம் எண்: 6

கல்வி உதவித் தொகை / ஊக்கத் தொகை வழங்குதலில் காலதாமதம் ஒரு ஊழலே!

மத்திய அரசாங்கம், பல்வேறு வகை ஆராய்ச்சி உதவித் தொகை / ஊக்கத் தொகை பெற்றுவரும் பல லட்சம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய கல்வி உதவித் தொகையை சரியான நேரத்தில் அளிக்காமல் (குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு) மாபெரும் நிதிச்சுமையை மாண வர்களுக்கு அளித்துவருகிறது. ஒரு தேசம், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக செய்யும் செலவு என்பது வருங்காலத் துக்கான அத்தேசத்தின் முதலீடு என்பதற்கு மாறாக, சரியான நேரத்தில் ஆராய்ச்சி உதவித்தொகை / ஊக்கத் தொகை கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் பெரும் துயரத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். அண்மையில் இறந்த ரோகித் வெமுலா போன்ற ஆராய்ச்சி மாணவர்கள் கூட தனது இறுதி மரண வாக்குமூலத்தில் நீண்ட காலமாக வரவேண்டிய ஆராய்ச்சி உதவித் தொகையை / ஊக்கத் தொகை எங்கள் வீட்டுக்கு சரியாக - நியாயமாக பெற்றுக் கொடுங்கள் என்று குறிப்பு எழுதி வைத்துவிட்டு இறக்கும் அளவுக்கு மிக முக்கியமானது இந்த உதவித் தொகை / ஊக்கத் தொகையாகும். கிராமப் புறங்களிலிருந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்தச் சிக்கல் வாழ்வாதாரப் பிரச்சினையாக விளங்குகிறது. ஆகவே, இந்தக் கல்வி உதவித் தொகைகளை / ஊக்கத் தொகைகளை உடனடியாக சரியான நேரத்தில் மாணவர் களுக்குக் கிடைக்க, மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் உறுதி செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

6 () தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை யைக் குறைத்திருப்பதும், தொடர்ந்து மாணவர்களின் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் மாணவர்கள் பாதிப்படையும் நிலையை அதிகரிப்பதும் சரியானதல்ல என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுவதோடு, தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு, முழுமையான உதவித் தொகை கிடைக்கும் வகையில் அரசாணை எண்: 51, 52அய் ரத்து செய்திட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழர் தலைவர், சேலம்

தீர்மானம் எண்: 7

நெட் தேர்வு (CBSE - NET, CSIR - NET, ASRB -TET) போன்ற பல்வேறு தேர்வுமுறை - மாநிலவழிக் கல்வி கற்ற மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை

ஆராய்ச்சிப் படிப்பு (Ph.D.) படிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஆவதற்கான தகுதியாக தற்போதைய மத்திய அரசாங்கம் புதிதாக நெட் தேர்வைக் கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை நடந்துவந்த நெட் தேர்வுகளை நேரடியாக யுஜிசி எனும் பல்கலைக்கழகங்களுக்கான மானியக்குழு நடத்திவந்தது. ஆனால், தற்போது பா... அரசு வந்ததன் பின்பு உயர்கல்வியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த முனைவர் பட்டம் பெற்றோருக்கான தேர்வை நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE)  எனும் பள்ளிக் கல்விகளுக்கான குழுவிடம் கொடுத்திருப்பது அதிர்ச்சிக்குரியதாகவும், நேர்மையற்றதாகவும் காணப் படுகிறது. இந்த நெட் தேர்வு (CBSE - NET, CSIR - NET, ASRB -TET) போன்ற பல்வேறு தேர்வு முறைகள் என் பவை பொதுவாக மாநில வழிக் கல்வி கற்ற மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகவும், பெரும்பாலும் வடமாநில மற்றும் அய்.அய்.டி, எம்.அய்.டி, அய்.அய்.எம். போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்களே அதிகமாகத் தேர்வாகும் சூழலாகவும் அமைந்திருக்கிறது.  இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து ஆசிரியருக்கான தகுதிச் சான்றிதழ் பெற்ற பின்னர் மறுபடியும் தகுதித் தேர்வு (TET) என்பது தேவையில்லாத ஒன்று என்பதால் இதனை நீக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மாநில உரிமை, சமூகநீதி இவற்றின் அடிப்படையில் இதில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

.பிரபாகரன், கோவை, மாநில துணைச் செயலாளர்

தீர்மானம் எண்:  8

சமூகநீதிக்கு மேலும் முன்னுரிமை தேவை!

இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டவர்களுக்குச் சட்டப்படி அளிக்கப்படுவ தாகக் கூறினாலும் கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு உரிய விகித அளவு இடங்கள் அளிக்கப்படுவதில்லை. இது அரசமைப்புச் சட்ட விரோதமாகும். இதற்குக் காரண மானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதுடன், சட் டப்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குரிய சதவிகித இடங் கள் அளிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலி யுறுத்துகிறது.

குறிப்பிட்ட சில துறைகளில் இடஒதுக்கீடு கிடையாது என்ற விதிவிலக்குகள் அகற்றப்பட வேண்டும். உச்சநீதி மன்றம் வரை இடஒதுக்கீடு என்பது மிகவும் அவசியமாகும். அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தள்ளப்பட்ட மக்கள் என்ற அளவுகோலை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், குறிப்பாகக் கிரீமிலேயர் போன்ற எந்தவித இடைச் செரு கல்களையும் நீதிமன்றமோ, அரசோ திணிக்கக் கூடாது என்று இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள் கிறது.

அரசுத் துறைகள், பொதுத் துறைகள் சுருங்கி, தனியார் துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பதுதான் சரியான சமூகநீதியாக இருக்க முடியும் என்பதால் மத்திய அரசு இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளும் ஒரு மித்த முறையில் இதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ளதை வரவேற்கிறோம். அதே வாய்ப்பு பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

பகுத்தறிவு, தஞ்சை மாநகர செயலாளர்

தீர்மானம் எண்:  9

மறுக்கப்படும் பெண்ணுரிமை - அதிரடி மாற்றம் தேவை!

மக்கள் தொகையில் சரிபகுதியினரான பெண்கள் உரிமை என்பது ஆண் ஆதிக்க உலகால் புறக்கணிக்கப் படுகிறது. இந்த நிலையில் கல்வி, வேலைவாய்ப்பு இவற்றில் பெண்களுக்கு 50 விழுக்காடு அவசியம் தேவை என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இந்தியாவில் சட்டமன்றங்கள் - நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவித இடஒதுக்கீடு சட்டம் 1996ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறது. உள் ஒதுக்கீட்டுடன் இந்தச் சட்டத்தை உடனடியாக நிறை வேற்றாவிடின், தேர்தலில் வாக்களிப்பதைப் புறக்கணிக்கும் முடிவைப் பெண்கள் எடுக்க வேண்டிய உறுதியான நிலை ஏற்படும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது.

ஓசூர் வெற்றி, கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர் கழக தலைவர்

தீர்மானம் எண்:  10

கடைப்பிடிக்க வேண்டிய ஒழுகலாறுகள்
 



நமது கழக மாணவர்கள், இளைஞர்கள் தனி வாழ்விலும், பொது வாழ்விலும் சிறந்த ஒழுக்கத்தை - சுய கட்டுப் பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் - சட்டத்தை மதிக்க வேண்டும்.

குறிப்பாக சாலை விதிகளை மதித்து நடத்தல்.

இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது தலைக் கவசம் கட்டாயம் அணிதல்.

எல்லா வகைப் போதைகளிலிருந்தும் விடுபடுதல்.

அத்துமீறும் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு அடிமையாகாமல் இருத்தல்.

காலந்தவறாமை, எளிமை, சிக்கனம், பிறர்நலம் பேணல் உள்ளிட்ட உயர் எண்ணங்களை நன்னடத்தைகளை கடைப்பிடித்தலும், இவர்கள் திராவிடர் கழக மாணவர்கள் என்று பிறர் அடையாளங்கண்டு பெருமையோடு கூறும் அளவுக்குப் பெரியாரியல் ஒழுகலாறுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நமது கழக இளைஞர்களை - மாண வர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்வதுடன் சிறப்பாக தமிழின இளைஞர்களும் இதனைக் கடைப்பிடித்து சிறக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

செல்லதுரை, தருமபுரி மாவட்ட மாணவர் கழக செயலாளர்

தீர்மானம் எண்:  11

தீண்டாமை ஒழிப்பு என்பது கோவில் கருவறையிலிருந்து தொடங்கப்படட்டும்!

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைப்பிடிக்கப்பட்டாலும், அது சட்டப்படி குற்றமே என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பிரிவு கூறும் நிலையில், கோயில் கருவறைக்குள் ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் என்பதும், மற்ற ஜாதியினர் சிலையைத் தீண்டினால் தீட்டு என்பதும் மற்றொரு வகையான தீண்டாமையும் மனித சமத்துவத்திற்கும், உரிமைக்கும் எதிரானதுமானதால், இந்து மதத்தைச் சேர்ந்த எந்த ஒரு ஜாதியினரும் அதற்குரிய பயிற்சி பெற்று, கோயிலுக்குள் அர்ச்சகராகப் பணியாற்றும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் கொள் கையை ஏற்று இந்த வகையில் சட்டம் இயற்றப்பட்டும், அதனை நடைமுறைப்படுத்திடத் தயங்குவது, அடிப் படையிலேயே தவறானது என்றும், அண்டை மாநிலமான கேரளாவில் இதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதால், அதனைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் எழுப்பி வந்த இன இழிவை ஒழிக்கும் மனித உரிமைக் கோரிக் கையை செயல்படுத்துமாறும் தமிழ்நாடு அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.

சங்கர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர் கழக அமைப்பாளர்

தீர்மானம் எண்:  12

பெல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சியிலும் -தேர்விலும் தமிழுக்கு இடம் தேவை!

திருச்சி பெல் நிறுவனத்தின் பயிற்சிப் பள்ளியில் தொழில் பழகுநர் (Act Aprentice) பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இரண்டாயிரம் பேருக்கு மேல் இந்தப் பயிற்சி முடித்து வெளியில் சென்று பல்வேறு நிறு வனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். பயிற்சி முடித்து செல்லுகின்றபொழுது வைக்கப்படும் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களை வைத்துதான் பணி வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

அகில இந்திய அளவில் நடத்தப்படும் அந்தத் தேர்வு கடந்த 2017ஆம் ஆண்டுக்கு முன்புவரை தமிழில் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்வானது ஆன்லைனில் ஆங்கிலத்தில் நடத்தப் பட்டது. வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பதால் மொழி சரியாகப் புரியாத காரணத்தால், அத் தேர்வில் கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் தமிழக மாண வர்கள் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற்ற மற்றவர்களும் மிக மிகக் குறைந்த மதிப்பெண்ணே பெற்றுத் தேர்ச்சி பெற்றார்கள். ராணிப்பேட்டை பெல் நிறுவனத்திலும் இதே நிலைதான்.

அதனால் அகில இந்திய அளவில் நடத்தப்படும் எந்த ஒரு தேர்விற்கும் விண்ணப்பிக்கக்கூட போதிய மதிப் பெண் இல்லாமல் இளைஞர்கள் திண்டாடுகிறார்கள். இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் அவர்களது தாய்மொழியில் தேர்வு நடத்தப்படுவதால் அதிக மதிப் பெண்கள் எடுத்து, வேலைவாய்ப்புகளைத் தட்டிச் சென்று விடுகிறார்கள். அதனால் நம் தமிழக இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

பொதுவாக அய்.டி.அய் போன்ற படிப்புகளில் கிராமப் புற ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மாண வர்களே அதிகம்; பெற்றோர்களும் பெரிதும் போதுமான கல்வி அறிவு பெறாத நிலை ஆகியவற்றைப் புரிந்து கொண்டு தாய்மொழியில் தேர்வு எழுதிட வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். எனவே, 2017-க்கு முன்பு பின்பற்றப்பட்டு வந்தவாறு தமிழிலும் தேர்வு எழுதும் வாய்ப்பு மீண்டும் தொடரப்பட ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் முக்கிய கவனம் செலுத்தி தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பயிலுவோருக்கான வாய்ப்பைப் பெற்றுத்தர வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இரா.செந்தூரபாண்டியன், மாநில மாணவர் கழக அமைப்பாளர்

தீர்மானம் எண்:  13

இயக்க ஏடுகள், நூல்களைப் பரப்புதல்!

திராவிட மாணவர் கழகத் தோழர்கள், இளைஞரணித் தோழர்கள் இயக்க ஏடுகளுக்கு, இதழ்களுக்குச் சந்தா சேர்க்கும் பணி என்பது தந்தை பெரியாரியல் கருத்துப் பரவுவதில் முதன்மையான பணி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூகநீதி, மதச்சார்பின்மைக் கொள்கைகளைப் பரப்பும் விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேஷனலிஸ்டு, குழந்தைகளுக்கான பெரியார் பிஞ்சு இதழ்களை அரசு நூலகங்களுக்கு விநியோகம் செய்துவந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மணிபாரதி, புதுச்சேரி

தீர்மானம் எண்:  14

நடைபாதைக் கோயில்களை அகற்றுக!

()  நடைபாதைக் கோயில்கள் கண்டிப்பாக அகற்றப் பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இதுகுறித்துப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நேரில் வரவேண்டும் என்றும் தமிழ்நாட்டில்தான் அதிகமாக 77,450 (14.9.2010) நடைபாதைக் கோயில்கள் உள்ளன என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக ஆணை பிறப்பித்த நிலையில் (16.2.2010), தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் வருவாய்த் துறை அமைச்சர் தலைமையில் இதுகுறித்து உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கையில் ஈடுபடும் என்று நீதிமன்றத்தில் வாக்குக் கொடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் 5 மாதங்கள் ஓடிய பிறகும் இதுவரை அத்தகைய நடவடிக் கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளத் தவறியதன் மூலம் உச்சநீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாகியுள்ளது என் பதைக் சுட்டிக்காட்டி, உடனடியாக உச்சநீதிமன்ற ஆணையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைச் சந்திக்க நேரிடும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது!

()  அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்று அரசு ஆணைகளைச் சுட்டிக் காட்டி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தும் (17.3.2010) நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் அரசு வளாகங்களுக்குள் வழிபாட்டுத் தலங்களை அமைப்பதும், அலுவலகங்களுக்குள் பூசை, புனஷ்காரங்கள் செய்வதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்று செயல்படாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது.

()  மதக் காரணங்களைக் காட்டி மக்களின் உயிருக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் மத நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் (Welfare State) கடமை என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் தொடர்பாக குறிப்பாக 2016இல் நடைபெற்ற மகாமகத்தின்போது அக்குளத்தில் 28 சதவிதம் மலக்கழிவும், 40 சதவிதம் சிறுநீர்க் கழிவும் உள்ளதாக தண்ணீரை சோதனை செய்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அதிகாரப்பூர்வமாக  அறிவித்ததை இம்மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

அரவிந்த், குடந்தை மாவட்ட மாணவர் கழக செயலாளர்

தீர்மானம் எண்:  15

நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம்!

இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலும், வெகுமக்கள் மத்தியிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51-A(h) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் இரண்டு கட்டமாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக நாகர்கோயிலில் தொடங்கி விழுப்புரம் வரை 22.8.2018 முதல் 28.8.2018 வரையிலும், இரண்டாவது கட்டமாக அரியலூரில் தொடங்கி சென்னை முடிய 1.9.2018 முதல் 9.9.2018 வரை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

அறிவுவிழி, குடந்தை

தீர்மானம் எண்:  16

பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்துக!

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பது கீழ்க்கண்ட காரணங்களின் அடிப்படையில் வீழ்த் தப்பட வேண்டும் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள் கிறது.

()  இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத் தப்பட்டுள்ள மதச்சார்பின்மை, சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகள்.

குறிப்பாக மதச்சார்பின்மைக்கு விரோதமாக - குடியரசு தின அரசு விளம்பரத்தில்கூட திட்டமிட்டு செக்குலர் என்று அரசமைப்புச் சட்டத்தில் உள்ள முக்கிய சொல்லை அகற்றியமை.

விஞ்ஞானத்திற்கு எதிராக புராண - இதிகாச - மதவாத மனப்பான்மையுடன் செயல்படுதல் - பிரச்சாரம் செய்தல் - பாடத்திட்டம் வகுத்தல்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்து மதக் கோட்பாடான கோமாதா என்பதை உயர்த்திப் பிடித்தல், மாட்டுக்கறி உணவைத் தடை செய்தல் - இந்து ராஜ்ஜியம் அமைப்போம் - ராமராஜ்ஜியம் அமைப்போம் என்று சூளுரைத்தல்.

மத்திய அமைச்சர்களாக இருக்கக் கூடியவர்களே இந்த வகையில் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்தல்.

சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுதல், கலகம் விளைவித்தல் போன்ற இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மைக்கு விரோதமான செயல்பாடுகள்.

()  சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் நீட் தேர்வு, நெட் தேர்வு, ஆசிரியர் பணிக்கான டெட் தேர்வு.

தேசியக் கல்வி என்றும், குருகுலக் கல்வி என்றும் கூறி வர்ணாசிரமக் குலக்கல்வித் திட்டம் - கல்வியைக் காவிமயமாக்குதல் - சமஸ்கிருதம் - இந்தித் திணிப்பு.

ஆர்.எஸ்.எஸின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச் சாரம் என்னும் இந்துத்துவாவைத் திணிக்கும் போக்குகள்.

()  தாழ்த்தப்பட்டவர்கள் - பழங்குடியினர் மீதான வன்முறைகள், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினைப் பாதுகாக்க மறுத்தல் - பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமைகள்.

()   ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமை.

()  பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய வீழ்ச்சி, ரூபாய் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இவற்றை செயல்படுத்தியதால் விலைவாசி உயர்வு, ஏற்கெனவே செயல்பட்டு வந்த சிறுதொழில் - குறுந்தொழில்கள் அழிவு. இதன் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிப்பு. கார்ப்பரேட்டுகள், சாமியார்களுக்கான ஆட்சி என்று சொல்லத்தக்க வகையில் ஆட்சியின் போக்குகள்.

()  விவசாய புறக்கணிப்புக் காரணமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்தல் - தொழிலாளர்களின் உரிமைப் பறித்தல்.

()  பி.ஜே.பி. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களாக ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமித்து, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக ஜனநாயக விரோத செயல்பாடுகளில் ஈடுபடச் செய்தல்.

()   தேர்தல் ஆணையம் - நீதிமன்ற அதிகாரத்திலும் தலையிடுதல்.

()   வெகுமக்களுக்கு விரோதமாகவும் மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காமலும் அன்றாட வாழ்வில் கொடூரமான பாதிப்புகளை உண்டாக்கக்கூடியதும், கார்ப் பரேட்டுகளைக் கொழுக்க வைக்கக் கூடியதுமான  மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ போன்றவற்றைத்  திணித்தல்; நதிநீர்ப் பிரச்சினையில் அரசியல் லாபக் கண்ணோட்டத்தோடு ஒரு சார்பு நிலை எடுத்தல், உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தும் மக்களை மாநில அரசின் துணையோடு காவல்துறையினர் மூலம் ஒடுக்குதல், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துதல், தேசிய பாதுகாப்புச் சட்டங்களை ஏவி சிறையில் தள்ளுதல் போன்ற பாசிச நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.

எதிர்க்கட்சி மாநில முதல் அமைச்சர்களைக்கூட சந்திக்க மறுக்கும் பிரதமர் - எதிலும் கட்சிக் கண்ணோட் டத்தோடு அணுகும் போக்குகள் - குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பா... ஆட்சி என்பது பச்சைப் பாசிச ஆட்சியாக செயல்படுவதால் 2019ஆம் ஆண்டில் நடை பெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.யையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் வாக்குகள் மூலம் பெரும் தோல்வியைக் கொடுத்தே தீருவது என்பதில் வாக்காளர்கள் முனைப்பாக இருந்து தீர வேண்டும் என்று இம்மாநாடு வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறது.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், பா... என்னும் பாசிச ஆட்சியை வீழ்த்தும் களத்தில் முழு வீச்சாக ஈடுபட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

இத்தகைய பிற்போக்கு மத்திய பி.ஜே.பி. அரசுக்கு ஏவலாக இருந்து செயல்படும் தமிழ்நாடு .தி.மு.. அரசும் அகற்றப்பட வேண்டியதே என்பதை இம்மாநாடு தெரி வித்துக் கொள்கிறது.

பொன்.அருண்குமார், பழனி

தீர்மானம் எண்:  17

அகழ்வாராய்ச்சிகளில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசின் போக்குக்குக் கண்டனம்

1876ஆம் ஆண்டு வெள்ளைக்காரர்களின் ஆட்சிக் காலத்திலேயே ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வுத் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இதுவரை அதி காரப்பூர்வமாக ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை.

அதேபோல, சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆய் வுகள் மேற்கொள்ளப்பட்டு இடையிலே அது நிறுத்தப் பட்டுள்ளது.

இந்த ஆய்வுகள்மூலம் திராவிட இனத்தின் தொன்மை, நாகரிகம் உள்ளிட்ட பெருமைகள் வெளியில் வந்தால், அவை ஆரிய நாகரிகத்துக்கு முந்தையது - பெருமை யுடையது என்ற உண்மை வெளிவந்துவிடக் கூடாது என்ற பார்ப்பனிய நோக்கில்தான் மத்திய அரசு நடந்துகொள்கிறது என்று இம்மாநாடு திட்டவட்டமாகவே அறிவிக்கிறது.

மேலும் காலந்தாழ்த்தாமல் அறிவு நாணயத்தோடு ஆய்வுக் கண்ணோட்டத்தில் தொல்லியல் பணிகளை கீழடியில் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆதிச்சநல் லூரின் அதிகாரப்பூர்வ ஆய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசும் போதிய அழுத்தம் கொடுக்குமாறும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்ற வெளிநாட்டு ஆய்வாளர்கள் உட்பட தக்கச் சான்றுகளுடன் உறுதிப்படுத்திய பிறகும் அதனை ஆரிய நாகரிகம் என்று பொய்யான ஆதாரங்களைத் திணித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸின் தேசிய தலைவர் மோகன் பாகவத் மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகியவை ஹிந்து நாகரிகம் என்று கூறுவது நயவஞ்சகமானது. ஹிந்து என்ற போர் வையில் திராவிட நாகரிகத்தை மண்மூடச் செய்யும் சூழ்ச்சியே என்று இம்மாநாடு திட்டவட்டமாகவே தெரி வித்துக்கொள்கிறது.

நா.பார்த்திபன், மாநில மாணவர் கழக  துணைச் செயலாளர்

தீர்மானம் எண்:  18

பகுத்தறிவாளர்கள் படுகொலைகளுக்குக் கண்டனம்!

பகுத்தறிவாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பான்சரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவு முற்போக்குச் சிந்தனையாளர்கள், மதவாத பிற்போக்கு கும்பலால் தொடர்ந்து கொலை செய்யப்படுவதற்கு இம் மாநாடு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. குற்ற வாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவதில் ஏற்படும் தாமதமும் கண்டிக்கத்தக்கது. இதில் முனைப்புக் காட்டி தண்டனையைப் பெற்றுத் தருமாறு மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு வலி யுறுத்துகிறது.

நாத்திக.பொன்முடி

தீர்மானம் எண்:  19

மாநாட்டின் வழிகாட்டுச் சூளுரை!

ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை, மதவாதம், பயங்கரவாதம், கார்ப்பரேட்டுக்காரர்களுக்கான பொருளா தாரம் என்ற போக்கு, சுரண்டல்கள், பாலினப் பாகுபாடுகள், ஒழுக்கச் சிதைவு என்கிற கடும் நோய்களால் அமைதித் தொலைப்பு ஒருபுறம் - இல்லாமை, போதாமை, கடும் ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள் என்னும் பேதாபேதங்கள் மறுபுறம் என்று உருக்குலைந்து நிற்கும் மானுடம் அமைதிக் காற்றைச் சுவாசித்து, சமதர்ம - சமத்துவ - சகோதரத்துவ சுகவாழ்வு பெற்று இலங்கிட, உலகம் ஒரு குடும்பம் என்ற உன்னதம் ஓங்கிட, மதமற்ற பகுத்தறிவு, ஒப்புரவு உலகு என்னும் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைக் கொள்கைச் சித்தாந்தமே உய்விக்கும் ஒரே தத்துவம் என்பதை இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது. மானமும் அறிவும் மனிதர்க்கழகு, சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு, அனைவருக்கும் அனைத்தும் என்னும் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு, மனிதநேய - மனித உரிமை முழக்கத்தை தமிழ்நாடு அளவில் மட்டுமல்லாது - உல குக்கே எடுத்துச் செல்லுவோம் என்று இம்மாணவர் மாநாடு சூளுரைக்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...