Friday, April 27, 2018

வழக்குகளை வரவேற்போம்!

மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பேசினால் மூர்க்கத் தனமான கூச்சல், பகுத்தறிவுக் கருத்துக்களை எடுத்துச் சொன்னால் பக்திப் போதையில் ஊறியவர்களிடமிருந்து பயங்கரக் கூச்சல்!
இவற்றை எல்லாம் கடந்துதான், சந்தித்துத்தான் சீர்திருத்தக் கருத்துகள் மக்களிடம் போய்ச் சேர்ந் திருக்கின்றன. மூடநம்பிக்கைவாதிகள் முழுப் பகுத்தறி வாதிகளானதெல்லாம் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைக் கேட்டுக் கேட்டுதான் - பகுத்தறிவு நூல்களைப் படித்துப் படித்துதான்!  உலகம் உருண்டை என்று சொன்ன  கலிலியோவாக இருந்தாலும் சரி, உயிர்களின் தோற்றம் பற்றி ஆய்ந்து சொன்ன டார்வினாக இருந்தாலும் சரி அரசின் அடக்குமுறைகளுக்கு - மதவாதிகளின் கோபாக்னிக்கு ஆளானவர்கள்தாம்.
ஆனால் கால வளர்ச்சியில் கத்தோலிக்க தலைமைப் பீடம் வாடிகனிலிருந்து போப் மதக் கருத்துக்களிலிருந்து வெளியேறி விஞ்ஞானிகள் கலிலியோ, டார்வின் ஆகி யோர்மீது விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கு வருத்தம் தெரிவித்த அதிசயம் நடந்திருக்கிறது.
மாற்றம் என்பதுதான் மாறாதது. அந்த அடிப் படையிலே மதம் என்ற காரணத்தாலோ, கடவுள் என்ற காரணத்தாலோ, விமர்சிக்கக் கூடாது என்றால் மனிதன் இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் தவழுகிறான் என்று பொருள்.
இன்றைக்கு மனிதன் விஞ்ஞானக் காற்றைச் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் மதப் பிரச்சாரம்கூட விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்திதான் நடந்து கொண்டு இருக் கிறது.
விஞ்ஞானக் கருவிகள் மூலம் அஞ்ஞானக் குப்பை களைப் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருவிகள் எல்லாம் எந்தக் கடவுளின் அருளாலோ, எந்த சாமியார்களின் கை அசைப்பினாலோ மானுடத்துக்குக் கிடைத்துவிடவில்லை.
'பகவான்' சாயிபாபாவே ஒயிட் ஃபீல்டில் மிகப் பிர்மாண்டமான மருத்துவமனையைக் கட்ட வேண்டிய அவசியம்தான் ஏற்பட்டது. பல மாதங்கள் நோயின் தொல்லைக்கும் அவர் ஆளாகியதும் நாடறியும்.
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கு வெளிநாட்டிலிருந்து நவீனக் கருவிகள் எல்லாம் இறக்குமதி செய்யப்பட்டு மருத்துவ வசதிகள் மேற் கொள்ளப்படவில்லையா?
உண்மை இவ்வாறு இருக்க, ஏனிவர்களுக்கு இந்த இரட்டை வேடம்? அறிவு நாயணமற்ற தன்மை!
பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் விழுந்தான் ஓர் இராட்சதன் என்று சொன்னால், அதனை எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடாதா? அப்படிக் கேட்டால் மத வாதிகளின் மதத்தைப் புண்படுத்துவதாக ஆகுமா?
திருச்சிராப்பள்ளியில் இம்மாதம் 5,6,7 நாள்களில் உலக நாத்திகர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பேசிய மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கவிஞர் கனிமொழி ஒரு பகுத்தறிவு கருத்தைப் பதிவு செய்தார்.
"சர்வ சக்தி வாய்ந்தவன் கடவுள் என்கிறார்கள், தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் ஏழுமலையான் என்கிறார்கள். உண்மையிலேயே இப்படி சொல்லுப வர்கள் அதில் நம்பிக்கை உடையவர்களாக இருப்பார் களேயானால், ஏழுமலையான் உண்டியலுக்குப் பக்கத் தில் துப்பாக்கி ஏந்திய காவலாளி ஏன்?" என்று கேட்டார்.  ஏன் அலறுகிறார்கள்? முடிந்தால் அதற்குப் பதில் சொல்லட்டும்;  அதுதானே மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கான அடையாளமாக இருக்க முடியும்.
அதனை விட்டுவிட்டு கனிமொழி எப்படி அப்படிக் கூறலாம்? எங்கள் மனதை ரொம்பவே புண்படுத்தி விட்டார் என்று கூறி நீதிமன்றம் செல்லுவதும், நீதி மன்றம் அதனை ஏற்றுக் கொள்வதும் கடைந்தெடுத்த நகைச்சுவைதான்!
கருத்துத் தெரிவிக்கும் உரிமை மதவாதிகளுக்கு மட்டும்தான் உண்டா? மத எதிர்ப்பாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறிட, பிரச்சாரம் செய்திட உரிமை கிடையாதா?
இராமனையும், சீதையையும் இலட்சுமணனையும் எரிக்கும் இராவண லீலாவை திராவிடர் கழகத்தின் சார்பில் தலைவர் அன்னை மணியம்மையார் நடத்திக் காட்டினாரே - அதன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் என்ன தீர்ப்புக் கூறியது?
அவ்வாறு செய்ததில் எவ்விதக் குற்றமும் கிடையாது. இராம லீலா நடத்திட உரிமை உண்டென்றால் இராவண லீலாவை நடத்திட மற்றவர்களுக்கும் உரிமை உண்டு என்று கறாராகத் தீர்ப்பு வழங்கப்பட்டதே!
வழக்குகள் தொடுக்கப்படுவதை வரவேற்போம் - பகுத்தறிவுக் கருத்துக்களை நீதிமன்றத்தில் பதிவு செய்யக் கிடைத்த அரிய வாய்ப்பு என்றுதான் பகுத்தறிவுவாதிகள் கருதுவார்கள்.


ஆண்டாள் பிரச்சினையும் அந்த வகையில் 'வர வேற்கப்பட' வேண்டிய ஒன்றே! அச்சுறுத்திப் பணிய வைத்து விடலாம் பகுத்தறிவுவாதிகளை என்று நினைத் தால் அதைவிடப் பரிதாபம் வேறு எதுவுமில்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...