வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்த திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அவர் களை கட்டப்பஞ்சாயத்து, ஜாதிஅமைப்பு பஞ்சாயத்து, ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் தாக்குவது சட்டவிரோதமானது எனும் வரவேற்கத்தக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தெரி வித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மேலும், ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் இளம் தம்பதிகள் கவுரவக் கொலை செய்யப்படுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் ராஜூ ராமச்சந்திரன் அளித்த பரிந்துரைகள் மீது மத்திய அரசின் நிலைப்பாட்டையும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
சக்தி வாஹினி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 2010-இல் இந்த வழக்கைத் தொடர்ந்தது. ஜாதி மாறி திருமணம் செய்பவர்களை கட்டப்பஞ்சாயத்து மூலம் தாக்குவதும், பிரித்து வைப்பது, கொலை செய்வது போன்றவை குறித்தும் முறையிட்டிருந்தது. இதனைத் தடுக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைக் கோரியிருந்தது. அரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் இத்தகைய கட்டப் பஞ்சாயத்து சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதைக் குறிப்பிட்டு, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு, கிராம பஞ்சாயத்துகளின் வன்முறைகளில் இருந்து பெண்களைக் காக்க, கண்காணிக்க உச்ச நீதிமன்றமே ஏதாவது வழிமுறையைச் சொல்ல வேண்டும் எனக் கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளைத் தாக்குவது சட்டவிரோதமானது எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த மனமாற்றத்திற்கு சமீபத்தில் வெளியான உடுமலை சங்கர்கொலையும் - கொலையுண்ட கணவனுக்காக நீதிகேட்டு துவண்டுபோகாமல் போராடிய சங்கரின் மனைவி கவுசல்யா, மிகவும் முக்கிய காரணியாக இருந்தார். எந்த மாற்றமும் தெற்கில் இருந்து உதயமாகும் போது இந்தியாவின் மனசாட்சியை உலுக்கி வைத்துவிடும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் சங்கர் - கவுசல்யா காதல் திருமணமும், அதனைத் தொடர்ந்து சங்கர் கொலையும் - கொலைக்குப் பின் நிகழ்ந்த நிகழ்வுகளும்.
இரண்டு வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அதனை ஏற்க மறுக்கும் சமூகத்திற்குத் எதிராக துணிவோடு எதிர்த்து நின்று போராடும் துணிச்சல்மிக்கவராக திகழ்ந்தார் கவுசல்யா. கவுசல்யாவின் துணிச்சல் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் எதிர்காலத்தினருக்கும் இருந்தால், ஜாதி என்ற பாகுபாடே இல்லாத ஒரு உலகை உருவாக்க முடியும். கல்லூரி காலத்தில் காதல், திருமணம் என்பது இயல்பான ஒன்று தான். அப்படி நினைத்துத் தான் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும், உடு மலைப்பேட்டையை சேர்ந்த சங்கரும் காதலித்து பெற்றோர் எதிர்த்ததால் பழநி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக மகள் என்றும் பாராமல் கவுசல்யாவையும், சங்கரையும் கொல்ல கூலிப்படையை ஏவினார் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி. 8 மாத திருமண வாழ்க்கை கூலிப்படையின் எட்டே நிமிட அரிவாள் வெட்டில் முடிந்து போனது; புதுமண இணையர்கள் வெளியே சென்றிருந்த சமயத்தில் உடுமலை சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த போது கூலிப்படையினரின் சரமாரி அரிவாள் வெட்டிற்குப் பலியானார்கள். தன் கண் முன்னே கணவன் துடிதுடிக்க வெட்டப்படுவதைத் தடுக்கச் சென்ற கவுசல்யாவிற்கும் வெட்டுக்கள் விழுந்தன. சமூகத்தை நடுங்க வைக்கும் இந்த காட்சிகளை சிசிடிவி காட்சிகளாகப் பார்க்கும் போதே அனைவருக்கும் பதற்றம் வரும். ஆனால் கவுசல்யா இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர். கணவனை கண் முன்னே துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற அந்தத் தருணம் அவரால் வாழ்நாளிலும் மறக்கவே முடியாது.
வேறொரு பெண் என்றால் இந்த சம்பவத்திற்குப் பிறகு ஒன்று தவறான முடிவை எடுத்திருப்பார் அல்லது மன நிலை பாதிக்கப்பட்டிருப்பார். ஆனால் சங்கரின் கொலைக்கு நீதி கேட்டு நீதிமன்றப் படியேறினார் கவுசல்யா. சாதாரண பெண்ணாக இருந்த கவுசல்யா, சங்கர் கொலைக்குப் பிறகு தன்னையே மாற்றிக் கொண்டார். சங்கர் குடும்பத்துடனேயே இந்த ஜாதி வெறி பிடித்த சமூகத்திற்கு எதிராக பாடம் புகட்டும் சக்தியாக தன்னை ஒன்றரை ஆண்டுகளாக மாற்றிக் கொண்டுள்ளார் கவுசல்யா.
கணவனின் குடும்பத்தாருடனே இருந்து கொண்டு அவர்களுக்கு முடிந்த உதவியை செய்து கொடுத்து சங்கர் இடத்தில் இருந்து அவர்களை கவனித்துக் கொள்கிறார். துணிச்சல்கார கவுசல்யா! மனதளவிலும், உடல் அளவிலும் தன்னை வலிமை மிக்க துணிச்சல்மிக்கவராக மாற்றிக் கொண்ட கவுசல்யாவின் மனதுணிவு தான் சங்கர் கொலையில் தன்னுடைய பெற்றோர் என்றும் பாராமல் நீதிக்காகப் போராடி இருப்பதன் மூலம் தெரிகிறது. காதல் என்பது வயசுக் கோளாறு என்று தட்டிக்கழிக்கும் பெற்றோருக்கும், ஜாதி மதத்தில் ஊறித் திளைத்திருப்பவர்களுக்கும் கவுசல்யா ஒரு சவுக்கடியைக் கொடுத்துள்ளார்.
கவுசல்யா பெற்றுள்ள மன உறுதி இருந்தால் போதும் எதிர்காலத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் சாத்தியமே! எந்த பிரச்சினை வந்தாலும் எடுத்த முடிவில் துணிவுடன் இருக்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததால் நடந்த ஆணவக்கொலைக்கு சரியான தீர்ப்பை அளித்துள்ள நீதிபதி அலமேலு நடராஜனின் பங்கும் இதில் முக்கியத்துவம் வாய்ந்தது. இனியாவது ஆணவக்கொலை செய்ய துணியும் ஜாதி வெறியர்கள் சட்டத்தை கண்டு அஞ்சுவார்கள் என்று நம்புவோம். ஜாதிகள் இல்லாத எதிர்காலம் மலரவும், காதல் திருமண ஊக்குவிப்புகளுக்கும் சங்கரின் கொலை வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஒரு முன் உதாரணமாக இருந்தது. தன்னார்வத்தொண்டு அமைப்புகளின் கள ஆய்வுப் புள்ளிவிபரங்களின் படி இந்தியாவில் ஜாதிமாறி திருமணம் செய்த 100-பேர்களில் 40 ஜோடிகள் பிரித்துவைக்கப்படுகின்றனர். 12-ஜோடிகள் கொலைசெய்யப்படுகின்றனர். மீதமுள்ளவர்களும் பெருத்த எதிர்ப்பு மற்றும் மிரட்டல்களுக்கு இடையே தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் இந்தியா முழுவதும் ஜாதிமறுப்புத்திருமணங்கள் அதிகரிக்கும், அதற்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.
இப்படி ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தனி இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் சிபாரிசு செய்திருந்தால் இந்தத் தீர்ப்புக்கு மேலும் பெருமை சேர்ந்திருக்குமே.
No comments:
Post a Comment