Friday, April 27, 2018

பிஜேபியின் தூண்டிலுக்கு இரையாவாரா ரஜினி?

சென்னையில் பொங்கல் நாளில்  'துக்ளக்' ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இவ் வாண்டு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியும், 'துக்ளக்' ஆசிரியர் எஸ். குருமூர்த்தியும் பங்கேற்றுப் பேசி இருக்கின்றனர்.
இவ்விருவரும் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் எப்படி அமைய வேண்டும் என்ற தங்களின் ஆசையை அப்பட்டமாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆன்மிக அரசியல்வாதியான ரஜினிகாந் துடன் பா.ஜ.க. கூட்டணி வைத்தால் பெரிய மாற்றத்தைக் காண முடியும் என்று 'துக்ளக்' ஆசிரியர் எஸ். குருமூர்த்தி கூறியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியும் தன் பங்குக்கு அதே கருத்தினை வேறு சொற்களால் வெளிப்படுத்தி யுள்ளார்.
"ரஜினியும், பா.ஜ.க.வும் இணைந்து வேலை செய்கிறது என்றால், ஒரு பக்கம் நடிகர் ரஜினி படம், இன்னொரு பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி படத்தை இணைத்தால் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் முடிவைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை" என்று கவ லையை மறக்கும் அரசியல் மாத்திரையை வழங்கியுள் ளார் மத்திய அமைச்சர்.
இது குறித்து திராவிடர் கழகம் ஏற்கெனவே தனது கருத்தைத் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறது.
இந்த முயற்சியால் அவர்கள் எதிர்ப்பார்ப்பது போல பெரிய மாற்றம் வர வாய்ப்பில்லை என்று 'இந்தியா டுடே' ஏடு ஒரு கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.
பிஜேபிக்கும், ரஜினிக்குமிடையே உள்ள இணைப்புப் புரிந்து கொள்ளத்தக்கதே; இரண்டும் ஆன்மிக அரசியலைக் கையிருப்பில் வைத்திருப்பவைதான்!
மதவாதம் என்பதை வேறு வார்த்தையில் ஆன்மிகம் என்று அறிவித்துள்ளார் ரஜினி. அதனை அறநெறி அரசியல் என்று பகுபதம் செய்து விளக்கம் அளிக்க சில அரசியல் தரகர்கள் முன் வந்துள்ளனர்.
அப்படியென்றால் குழப்பமான பல பொருள்களுக்கு இடம் தரும் அந்த ஆன்மிகம் என்ற சழக்கைத் தூக்கி யெறிந்து ரஜினியின் அரசியல் அறநெறி அரசியல் என்று சொல்ல வேண்டியது தானே!
நேர்மையான சிந்தனையும், நேர் கொண்ட பார்வையும் இருந்தால் வெளிப்படையாகத் தங்கள் கருத்தை வெளிப் படுத்துவார்கள்.
பிஜேபியிடம் கண்டிப்பாக அதனை எதிர்ப்பார்க்க முடி யாது. ரஜினி, பிஜேபியின் கைப் பிள்ளையாக இருப்பதால் இந்தக் குழப்பங்கள்!
ரஜினி முன் வைக்கும் இந்த ஆன்மிகத்தில் மதம் சார்பற்ற தன்மைக்கு இடம் உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதச் சார்பற்ற, பகுத்தறிவுக் கொள்கை கொண்டவர்களுக்கு இவரது ஆன்மிக அரசியலில் உள்ள இடம் என்ன என்பதெல்லாம் விளக்கப்பட வேண்டாமா?
குருமூர்த்தியாக இருக்கட்டும்; அருண்ஜேட்லியாக இருக்கட்டும், வாய்த் திறந்து இப்பொழுது, அதுவும் ஒரே நிகழ்ச்சியில் கூறுகின்றனர் என்றால், இது ஏதோ எதிர் பாராமல் நடந்த விபத்து அல்ல; ஏற்கெனவே அவர்களின் உயர் மட்டத்தில் ஆலோசனை நடத்தியதன் வெளிப்பாடே!
அந்த நிலை உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் ரஜினிகாந்த் எதிர் நோக்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் உண்டே! குறிப்பாக சிறுபான்மை மக்கள் சினத்துக்கு இவர் ஆளாக  வேண்டும்; இந்தக் கருத்து அலட்சியப்படத்தக்க ஒன்று அல்ல ஆவேசமாகத் தலை தூக்கும் அதி முக்கியமான பிரச்சினை.
சிறுபான்மையினரை எதிர்த்து நச்சு அம்புகளை எய்துவதையே தங்களின் குருதியோட்டமாகக் கொண்ட பிஜேபி - சங்பரிவார்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் ரஜினிகாந்த் பொறுப்பேற்க நேரிடும்  என்பது உறுதியான கல்வெட்டாகும்.
பிரச்சினைகளின் அடிப்படையில் எழுப்பப்படும் வினாக்களுக்கெல்லாம் கட்சியின் தலைவர் என்ற முறையில் ரஜினி பதில் அளித்தே தீர வேண்டும். கொள்கைகளைப் பற்றி கேட்டாலேயே தலை சுற்றுகிறது என்று சொல்பவர் நாள்தோறும் எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும், வினாக்களுக்கும் எப்படி விடை கூறப் போகிறார்?
தமிழ்நாட்டில் அரசியல் நடத்த விரும்பும் ரஜினி - தமிழ்நாட்டின் உயிர் நீரோட்டமான சமூகநீதியைப் புறந்தள்ள முடியுமா? பிஜேபியின் தோளில் கைபோட்டுக் கொண்டு சமூகநீதியைப் பற்றி ரஜினி உதட்டை அசைக்க முடியுமா?
அப்படியே கூட்டு சேர்ந்தாலும் ஒரு கட்டத்தில் பிஜேபி தன் அதிகார பலத்தைப் பயன்படுத்தி ரஜினியை பணிய வைக்குமே - காரணம் ரஜினியின் சினிமா உலகச் சந்தையே!
தமிழ்நாட்டைப் பொருத்தவரை தந்தை பெரியார் அவர் களால் பக்குவப்படுத்தப்பட்ட பூமி. மதவாதத்தை இங்கு திணித்து வெற்றி பெற முடியாது என்பதற்கு ஆதாரம் 1971 சட்டப் பேரவைத் தேர்தல்.
பக்திமான்களாக இருந்தாலும் தந்தை பெரியார் அவர் களின் தொண்டினையும், கருத்தினையும் மதிக்கக் கூடிய மக்கள்தான் தமிழ்நாட்டு மக்கள்.
திராவிட இயக்கத்திற்கு மாற்றாக ஓர் அரசியலைக் கொண்டு வர வேண்டும் என்ற பிஜேபியின் திட்டத்திற்கு ரஜினியின் சினிமா செல்வாக்கை ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பார்க்கிறது பா.ஜ.க. இந்த விஷத் தூண்டி லுக்குப் புழுவாக ரஜினி சிக்குவாரேயானால், அவர்மீது அனுதாபம் கொண்டவர்கள் மத்தியிலும் வெறுப்பைத்தான் தனக்குத் தானே சம்பாதித்துக் கொள்வார் - இது ரஜினிக்குத் தேவைதானா?
பா.ஜ.க. என்பது பார்ப்பனியமே! பார்ப்பனியத்தின் பல்லைப் பிடுங்கிப் பதம் பார்க்கும் தமிழ்நாட்டில் பார்ப்பன 'அவதார மகிமை' செல்லுபடியாகாது - நோட்டாவுக்கும் கீழேதான் அவர்களுக்கான இடம். உள்ளதையும் பறி கொடுப்பது ரஜினிக்கு நல்லதல்ல!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...