Friday, April 27, 2018

டில்லியில் சமூக நீதிக் குரல்!

மத்திய அரசு எப்பொழுது நீட் தேர்வை அறிவித்ததோ அற்றை நாள் முதல் தமிழ்நாடு எதிர்ப்புக் குரலை உயர்த்தி வருகிறது. குறிப்பாக திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையை முன் வைத்து அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து "ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு" என்ற ஒன்றை உருவாக்கி சமூக நீதிக் கோட்பாடு உள்ள அனை வரையும் ஒருங்கிணைத்து ஒத்தக் குரலை தமிழ்நாட்டிலிருந்து கேட்கும்படிச் செய்து வருகிறது.
அனைத்துத் தரப்பு மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் "சமூக நீதி பாதுகாப்புப் பேரவை" என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்புகள் சார்பாக மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் என்னும் நுழைவுத் தேர்வினை எதிர்த்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன.
இந்த திசையில் கடந்த 3ஆம் தேதி இந்திய தலைநகரில், டில்லியில் நாடாளுமன்றம் முன் ஜந்தர் மந்தரில் முற்பகலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அதனைத் தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற கருத்தரங்கமும்  சமூக நீதி வரலாற்றுத் திசையில் குறிப்பிடத்தக்க ஒளி வீசும் மைல்கல்லாகும்.
தமிழ்நாட்டில் உள்ள சமூக நீதிக் கோட்பாடு உள்ள கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல; வடமாநிலங்களிலும் உள்ள அத்தகைய அமைப்புகளின் தலைவர்களும், புதுடில்லி பல்கலைக்கழக மாணவர்களும், மற்ற மாநில மாணவர்களும் ஆர்ப்பாட்டத்திலும், கருத்தரங்கிலும் கலந்து கொண்டனர். கனல் கக்கினர். டில்லியில் உள்ள ஏடுகள் எல்லாம் இவற்றை தலைப்புச் செய்தியாக வெளியிட்டு முக்கியத்துவம் அளித்தன. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு முக்கிய சட்ட முன் வரைவுகள் (மசோதாக்கள்) நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 14 மாதங்கள் ஓடோடிய பிறகும் இதுவரை அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் மத்திய பிஜேபி அரசு ஊறுகாய் ஜாடியில் போட்டுள்ளது என்றால், இது என்ன ஆணவம் - ஜனநாயகப் படுகொலை - மாநில ஆட்சிகளை மட்டமாக நினைக்கும் மமதை!
சமுக நீதி, இட ஒதுக்கீடு என்றால் பிஜேபி அதன் சங்பரிவார் கும்பலுக்கு ஒரே குமட்டல்தானே! மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்தியதற்காக சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆட் சியை கவிழ்த்த ஆரிய குல திலகங்கள் அல்லவா இவர்கள்.
அத்தகையவர்கள் சமூக நீதியைக் குழிதோண்டி புதைப் பதில் அதீத ஆர்வம் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் மக்கள் சமுத்திரம் கொந்தளித்து எழுந்தால், பிரச்சினையை வீதிக்கு கொண்டு வந்தால் எந்த அராஜக அரசும் பணிந்து மக்கள் குரலுக்குச் செவி சாய்க்கவே செய்யும். ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை நாடு பார்க்கவில்யை?
எதைக் கொடுத்தாலும் சூத்திரர்களுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்று சொல்வது இந்த இந்துமதம் - உலகில் வேறு எந்த மதத்திலும், எந்த நாட்டிலும் கேட்டிராத பெரும் கொடுமை இது.
தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் வர்ணாசிரம படிக்கட்டில் கீழ்நிலையில் தள்ளப்பட்ட கிராமப் புறத்தவர்களும் டாக்டராவதா? அதனை நாம் அனுமதிப்பதா? என்ற ஆத்திரத்தில்தான் அதிகாரம் தங்கள் கைவசம் இருக்கும் காரணத்தால் ஒத்து ஊத ஊடகங்களும் பூணூலை மாட்டிக் கொண்டு இருப்பதால் நம்மை அசைக்க முடியாது என ஆரிய புத்தி ஆட்டம் போட்டுப் பார்க்கிறது.
தமிழ்நாட்டைத் தாண்டி இப்பொழுதுதான் தலைநகரமாகிய டில்லியில் சமூகநீதிக்கும், தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கும் சமூகநீதி சங்கநாதம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. நாடாளு மன்றத்திலும் எதிரொலிக்கக் கூடிய வாய்ப்பும் உண்டு.
நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கிக் கொண்டு தான் உள்ளது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் சமூக நீதியின் கழுத்தை நெரித்த கங்குபட்டர் வழிவந்த வகையறாக்களுக்கு - பாஜக என்ற ஆதிக்க அமைப்புக்கு வட்டியும் முதலுமாக நல்ல பாடம் கற்பிப்பர் என்பதை எத்துனையும் அய்யமில்லை, இல்லவே இல்லை.
இதுதான் சரியான சந்தர்ப்பம்; மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இந்தத் தரப்பினர்தான். கையில் கிடைத்த வாக்குச் சீட்டு என்னும் ஆயுதத்தால் பாடம் கற்பிக்க தயாராக வேண்டும். அதற்கான விழிப்புணர்வூட்டும் அடிப்படையில் தமிழ்நாட்டில் சமூக அமைப்புகள் ஈடுபடும் - ஈடுபடவும் வேண்டும். மாணவர்கள் - இளைஞர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்வோம்.
கட்சி மாச்சிரியங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்று இருக்கிறது என்றால் தமிழ்நாட்டில் அது இந்த சமூகநீதிதான் - இட ஒதுக்கீடுதான்.
சமூக நீதிக்கு எதிராக அது இலைமறை காயாக இருந் தாலும் சரி, யார் இருந்தாலும் அவர்கள் அடி வேரோடு தூக்கி எறியப் படுவார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் மங்காப் புகழ் வரலாறு.
மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுக - சட்டப்பேரவையில் நிறைவேற்றிக் கொடுத்த இரு சட்ட முன்வரைவுகளுக்காக ஒப்புதலைப் பெறுவதில் தோல்வி அடையுமானால், பிஜேபியுடன் சேர்ந்து முற்றிலும் துடைத் தெறியப்படுவார்கள் - எச்சரிக்கை. டில்லி போராட்டத்திலும், கருத்தரங்கிலும் பங்கேற்ற தலைவர்களுக்கும், மாணவர்களுக்கும், நேர்த்தியாக நடை பெற ஒத்துழைப்புத் தந்த அனைவருக்கும் நமது பாராட்டுகளும், நன்றியும் உரித்தாகுக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...