உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் சாமியார் ஆதித்யநாத், துணை முதல்வர் மவுரியா ஆகியோர் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கடும் தோல்வியை சந்தித்து விட்டது.
உ.பி.யில் ஆட்சியைக் கைப்பற்றிய பிஜேபி சுதந்திரத்திற்கு முன்பிருந்த மேல் ஜாதி அரசியலை கையில் எடுத்தது. உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் ஆதித்யநாத் பதவியேற்றது முதல் 'விடுதலை' நாளிதழ் அவரது ஆட்சியின் அதிகாரிகள், அமைச்சர்கள், செய லாளர்கள் குறித்தும், அங்கு நிலவும் மேல் ஜாதி ஆதிக்கம் குறித்தும் தொடர்ந்து எழுதி வந்தது. உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை பண்டிட்டுகள் (பார்ப்பனர்கள்), தாக்கூர்கள், கயஸ்தா, காத்ரி, பூமிகார் ஆகியோரை மேல்ஜாதியினராகக் கருதுகின்றனர். சாமியார் ஆதித்யநாத் அமைச்சரவையில் கேபி னெட் தகுதியுள்ள பெரும்பான்மை அமைச்சர்கள் மேல்ஜாதியினர் தான். பல முக்கிய துறைகளின் அமைச்சர்களில் 25 பேர் உயர்ஜாதியினர். ஒட்டுமொத்த அமைச்சரவையில் இதர பிற்படுத்தப்பட்டோர் 15 பேர்; தாழ்த்தப்பட்டோர் - 4; சீக்கியர்-1; முஸ்லிம்- 1; இதில் தாழ்த்தப்பட்ட அமைச்சர்களுக்கு நீண்டகாலமாக நிர்வாகம் ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட 2 அமைச்சர்களுக்கு இன்றுவரை வீட்டுவசதி, இதர உதவியாளர்கள் வசதி செய்துதரப்படவில்லை. இது தொடர்பாக சாமியார் முதல் அமைச்சரிடம் கேட்ட போது "நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறோம்; விரைவில் அனைவருக்கும் வீடுகள் கிடைத்துவிடும்" என்று அலட்சியமாகவே கூறினார். (உயர்ஜாதி அமைச்சர்கள் அனைவருக்கும் உடனடி யாக வீடுகள் ஒதுக்கப்பட்டு, உதவியாளர்களும் கிடைத்து விட்டனர்).
சாமியார் ஆதித்யநாத் ஆட்சி அமைந்த உடன் மேல்ஜாதி தாக்கூர்களுக்குதான் நிர்வாகத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட வர்கள் மீது சமீபகாலமாக தாக்கூர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். சாமியார் அரசு நிர் வாகம் தாக்கூர்கள்பக்கம்தான் நிற்கிறது. இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 'விடுதலை' நாளிதழ் உத்தரப்பிரதேசத்தில் 75 மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பு அதிகாரிகளில் 13 பேர் தாக் கூர்கள், 20 பேர் பார்ப்பனர்கள் என்பதை பட்டிய லிட்டுக் கூறியிருந்தது.
இதில் வெறும் 2 இதர பிற்படுத்தப்பட்ட அதிகாரிகள், 2 முஸ்லிம்கள் மற்றும் இதர உயர்ஜாதியினர். சாமியார் ஆட்சியை 'தங்களது பொற்காலம்' திரும்பிவிட்டதாக பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும் கொண்டாடி வருகின்றனர். இந்த மேல்ஜாதிய ஆதிக்கம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களை இயல்பாகவே கோப மடைய வைத்துவிட்டது. இது பர்ப்பன தாக்கூர் களின் அரசுதான் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.
மக்களவைத் தேர்தலில், சட்டசபைத் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை அறுவடை செய்தது பாஜக. ஆனால் அப்போது அந்த சமூகத்தினர் அமையப் போவது உயர்ஜாதிமக்களுக்கான அரசு என்பதை உணரவில்லை. இப்போது அப்பட்டமாக இது தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிரான அரசாக முழுமையாக மாறி நிற்பதை உணர்ந்து விட்டார்கள். அந்தளவுக்கு உயர் ஜாதி ஆதிக்கம் திமிரியுள்ளது.
இதனால்தான் எதிர் நிலைகளில் இருந்த சமாஜ் வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இயல்பான கூட்டணியாக உருவெடுத்தன. நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் பரந்து பட்ட இந்து வாக்கு வங்கியை உருவாக்கிய பாஜக அதைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை. தங்களை நோக்கி வந்த இந்து வாக்கு வங்கியை மேல்ஜாதி ஆதிக்க அணுகுமுறைகளால் பாஜகவே தனக்குத் தானே தகர்த்துவிட்டது. ஜாதி அரசியல் என்பது மிகவும் குறுகிய கால ஆபத்தான பலனை அளிக்கும் என்பதை உ.பி. அரசுக்கு மீண்டும் உணர்த்திவிட்டது.
பிஜேபியின் இந்துத்துவ மதவாத ஆட்சியை, சமூக நீதிக்கு எதிரான வன்முறை ஆட்சியை, கார்ப்பரேட்டு களுக்கும், சாமியார்களுக்குமான பாசிச ஆட்சியை 2019 மக்களவைத் தேர்தலில் வீழ்த்துவதைத் தவிர நாட்டு நலன் கண்ணோட்டத்தில் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
அதற்கான வழிமுறையை உ.பி., பீகார் மக்களவைத் தேர்தல்கள் கைகாட்டி விட்டன. பிஜேபிக்கு எதிராக மதச் சார்பின்மை, சமூகநீதி சக்திகள் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தக் கைகாட்டி - வழிகாட்டி!
இடதுசாரிகளின் பங்களிப்பும் இதில் முக்கியமான தாகும். காங்கிரசையும், பிஜேபியையும் சம தூரத்தில் பார்க்கிறோம் என்பதெல்லாம் பிஜேபிக்குத்தான் பயன்படும் - எச்சரிக்கை!
No comments:
Post a Comment