Friday, April 27, 2018

சமூக நீதியில் ஏப்ரல் 3 முக்கிய நாள்!

சமூகநீதி, இடஒதுக்கீடு என்ற சொற்களை கேட்டாலே பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் வட்டாரத் தினருக்கு அளவிட முடியாத ஆத்திரம், எல்லையில்லாத வெறுப்பு!
காரணம் வெளிப்படையானதே; இடஒதுக்கீடு என்ற ஒன்று செயல்படுத்தாத கால கட்டத்தில் அனேகமாக நூற்றுக்கு நூறு இடங்களையும் கல்வியிலும், வேலை வாய்ப் பிலும் சுளைசுளையாக விழுங்கி வயிற்றின்மேல் சந்தனம் தட்டிக் கொண்டு சாய்வு நாற்காலியில்  சுகமாக உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் பிர்மாவின் முகத்தில் பிறந்ததாகக் கூறிக் கொள்ளும் பார்ப்பனர்களே! பாரதீய ஜனதா கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் முதலில் உள்ள 'பா' என்ற எழுத்துப் பார்ப்பனர்களைத்தான் நடைமுறையில் குறிக்கும்.
இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருக்கக் கூடிய மோகன் பாகவத் வெளிப்படையாகவே இட ஒதுக்கீடு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று இடை இடையே சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிக் கொண்டே வருகிறார்.
மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி சேர்க் கையைப் பொருத்தவரை, இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு (எம்.பி.பி.எஸ்.) என்று வருகிறபோது ஒவ்வொரு மாநிலமும் 15 விழுக்காடு இடங்களை மத்திய தொகுப்புக்குக் கொடுத்திட வேண்டும். இதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உரிய வகையில் இடஒதுக்கீடு உண்டு.
அதே நேரத்தில் முதுகலை மருத்துவப் படிப்புக்கும் (எம்.எஸ்., எம்.டி. போன்ற) 50 விழுக்காடு இடங்களை மத்திய அரசின் தொகுப்புக்கு அளித்திட வேண்டும். இதில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உண்டு; ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
ஏனிந்த பாரபட்சம்? தாடிக்கு ஒரு சீயக்காய், தலைக்கு ஒரு சீயக்காயா? 27 சதவீத இடஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மத்திய அரசுத் துறைகளில் வழங்கப்பட வேண்டும் என்று  அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டும்  அதற்கு முரணாக மத்திய பி.ஜே.பி. அரசு செயல்படுவது ஏன்?
இந்தியா முழுவதும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 10 ஆயிரம் இடங்களில் சட்டப்படி 27 விழுக்காடு என்கிற அளவுகோலின்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2700 இடங்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிடைத் துள்ள இடங்கள் எத்தனைத் தெரியுமா? வெறும் 165தான். டிப்ளோமா பிரிவில் வெறும் 18 இடங்கள்தான்.
இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! மத்திய அரசின் இந்தப் பார்ப்பனத்தனத்துக்கு இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்களும் துணை போவது ஒரு வகையில் நீதிமன்ற பயங்கரவாதம் (யிuபீவீநீவீணீறீ கிநீtவீஸ்வீsனீ) என்றே சொல்லத் தோன்றுகிறது.
இதில் சீரணிக்கவே முடியாத மிகப் பெரிய அநீதி, கொடூரம் என்னவென்றால் இந்த 165இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஒருவருக்குக்கூட இடம் கிடைக்கவில்லை என்பதுதான்.
மத்திய தொகுப்புக்கு தமிழ்நாடு அரசு அளிக்காதிருந்தால் தமிழ்நாட்டுக்குரிய அனைத்து இடங்களும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கே கிடைத்திருக்குமே!
தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் 39 பேர்கள் இருக்கிறார்களே - அவர்களின் கடமை என்ன? இதற்காகக் குரல் கொடுப்பதைவிட வேறு எந்த முக்கிய  வேலையில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்? மாநிலங்களவையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களே, இரு அவைகளையும் சேர்ந்த தமிழ்நாடு உறுப்பினர்கள் ஒரு கணம் சிந்தித்துச் செயல்பட்டால் அடுத்த கணமே தமிழ்நாட்டின் உரிமை காப் பாற்றப்பட்டு விடுமே - கை மேல் பலன் கிடைத்து விடுமே!
போதும் போதாதற்கு 'நீட்' என்ற கோடாரி வேறு. +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை தமிழ்நாட்டில் இருந்து வந்தது. இதில் படித்து  மருத்துவர்கள் ஆனவர்கள் எந்த விதத்தில் சோடைப் போனவர்கள்?
'நீட்' தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்றவர்கள் டாக்டர்கள் ஆனால்தான் அவர்களால் சிறந்த முறையில் மருத்துவராகப் பணியாற்ற முடியும் என்று எந்த மட்டக் கோலை வைத்துள்ளனர்?
இன்னும் சொல்லப் போனால், மருத்துவக் கல்லூரியில் படித்து தங்கப் பதக்கம் வாங்கிய டாக்டர்கள்தான் தலை சிறந்தவர்களாக ஒளி வீசுகிறார்கள் என்பதற்கான புள்ளி விவரம் உண்டா என்று தந்தை பெரியார் எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் உண்டா?
மார்க்கு என்பது வேறு - உண்மையான திறமை என்பது; வேறு என்பது தான் நடைமுறை உண்மை.
தந்தை பெரியாராலும், திராவிட இயக்கத்தாலும் தமிழ்ப் பூமியில் சமூக நீதி சிந்தனையில் கூர்மையாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டதால் தான் இப்பிரச்சினையில்! இங்கு கொதி நிலை; உண்மையைச் சொல்லப் போனால் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் பெரும் அளவில் பாதிக்கப்படவே செய்கின்றனர். அங்கெல்லாம் போதிய விழிப்புணர்ச்சி இல்லாமையால் உயர் ஜாதிப் பார்ப்பன, பனியா கும்பல் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது குதிரை சவாரி செய்து கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் பல வடிவங்களில் மத்திய அரசின் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட் டங்களையும், கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் இடை விடாமல் நடத்தி வருகிறோம்.
சமூகநீதியில் அக்கறை உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் உருவாக்கியுள்ளோம். அதன் சார்பாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறோம்.
அடுத்த கட்டமாக வரும் ஏப்ரல் 3ஆம் தேதியன்று டில்லியில் நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டமும், கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சமூக நீதியில் அக்கறை உள்ள அகில இந்தியத் தலைவர்கள் எல்லாம் பங்கேற்க இருக்கின்றனர். பல மாநிலங்களிலிருந்து இருபால் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில்  இவை நடப்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறும் என்பதில் அய்யமில்லை; வாய்ப்புள்ளோர் டில்லி வருக என்று அழைக்கின்றோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...