அய்தராபாத், ஜன.7 தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையிலான ஆந்திர மாநில அரசின் சார்பில் பல்வேறு பகுதிகளில் ஜென்ம பூமி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், சிறீகாகுளம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று மக்களிடையே பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- ஆந்திர மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் 100 சதவீதம் கழிப்பறை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 7 மாவட்டங்களிலும் இதேபோல் நிறைவேற்றப்பட வேண்டும். முழுவதும் தூய்மையான மாநிலமாகவும், சுகாதாரம் மிக்க மாநிலமாகவும் ஆந்திரா மாற வேண்டும் என்ற இயக்கத்தை நான் குறிக்கோளாக கொண்டுள்ளேன்.
சிறீகாகுளம் மாவட்டத்தில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 204 வீடுகள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 624 வீடு களில் மட்டுமே கழிப்பறைகள் உள்ளன. உங்கள் வீடுகளில் கழிப்பறைகளை கட்டாவிட்டால் நீங்கள் சுயமரியாதையை இழந்தவர்களாகி விடுவீர்கள். கழிப்பறை வசதிகள் இல்லாத தால் ஆந்திர மாநிலத்தின் கவுரவம் குலைவதுடன் உங்களது ஆரோக்கியமும் சீர்கேட்டுக்குள்ளாகிறது.
வேறு சில மாவட்டங்களிலும் இதேநிலை நீடிப்பதாக தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் வரும் மார்ச் 31-ஆம் தேதிவரை அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் கழிப்பறை வசதி இல்லாத எந்த வீடும் இம் மாநிலத்தில் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். அப்படி இல்லை யென்றால், உங்கள் கிராமத்துக்கு நான் வருவேன். இரவும் பகலும் உங்களுடன் இருந்து கழிப்பறையை கட்டிய பிறகு தான் அமராவதி நகருக்கு திரும்பி செல்வேன்.
இல்லையென்றால், வரும் மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்கு பிறகு அமைதியான வழியில் தர்ணா போராட்டத்தில் குதிப்பேன். ஒருநாள் முழுவதும் பட்டினிப் போராட்டமும் இருப்பேன். அதன்பிறகாவது என் மீது பரிதாபப்பட்டு நீங்கள் கழிப்பறைகளை கட்டுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
பெண்கள், சிறுமிகள் அடைத்து வைத்து சித்ரவதை - டில்லி சாமியார் மீது வழக்கு
புதுடில்லி, ஜன.7 டெல்லியில் பாபா விரேந்தர் தீக்சித்துக்கு சொந்தமான 'அத்யாத்மிக் விஷ்வா வித்யா லயா' இயங்கி வருகிறது. இங்கு சிறுமிகள் மற்றும் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து டில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டில்லி பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைகள் நலக் குழுவானது காவல்துறையினருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த ஆசிரமத்தில் பல சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந் தனர். அவர்களில் 41 சிறுமிகளை காவல்துறையினர் மீட்டனர். அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் கூறினர். மேலும் பல சிறுமிகள் அங்கு இருப்ப தாக கூறப்படுகிறது. டில்லி ரோகினி பகுதியில் உள்ள ஆசிர மத்தில் சிறுமிகள் கைதிகள் போல் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என டில்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியிருந்தார். இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் பாபா விரேந்தர் தீக்சித் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்படும். மேலும் அவர்களது 8 ஆசிரமங்களின் பட்டியலையும் சமர்பிக்க வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.அய். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment