Monday, July 10, 2017

தமிழகம் அமைதிப் பூங்கா அல்ல; போராட்டப் பூங்கா! குற்றாலம்



குற்றாலம், ஜூலை 10 தமிழகம் அமைதிப் பூங்காவாக அல்ல - போராட்டப் பூங்காவாக இருக்கிறது என்று செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் கூறினார்.


குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் கடைசி நாளான நேற்று (9.7.2017) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:

நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமாக ஒருமனதாக தமிழக சட்டமன்றத்தில் ஏறத்தாழ அய்ந்தரை மாதங்களுக்கு முன்னதாக மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாட்டிற்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற அந்த இரண்டு மசோதாக்கள் மத்திய அரசின் உள்துறையாலும், கல்வித் துறை, சுகாதாரத் துறை ஆகிய துறைகளாலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் திட்டமிட்டே நீட் தேர்வு நடந்து முடிக்கும் வரையில் அப்படியே கிடப்பில் வைத்திருந்தார்கள்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை

நீட் தேர்வு சம்பந்தமாக முதன்முதலில் நாடாளுமன்றத்தில் கலந்தாலோசிக்கப்பட்டபொழுது, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில், எந்த மாநிலம் விலக்குக் கோருகிறதோ, அதற்கு விலக்கு அளிக்கப்படவேண்டும். நீட் தேர்வு எல்லா மாநிலங்களுக்கும் கட்டாயமாக்கப்படவேண்டிய அவசியம் இல்லை என்று திட்டவட்டமாக நாடாளுமன்ற நிலைக்குழு  பரிந்துரை செய்தது.

அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இந்திய அரசியல் சட்டப்படி, மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளையும் அலட்சியப்படுத்திவிட்டு, வேண்டுமென்றே இவர்கள் குடியரசுத் தலைவருக்கு அந்த மசோதாக்களை அனுப்பாமல் ஒரு புதிய குடியரசுத் தலைவரே பதவியேற்கக் கூடிய காலம் வரை காலதாமதம் செய்தார்கள்.

இதற்கிடையில் 'நீட்' தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள்; கேள்வி கேட்கப்பட்ட முறை - ஒரே கேள்வித்தாள் என்று சொல்லிவிட்டு, பல கேள்வித் தாள்கள்  - இவைகளையெல்லாம் நீதிமன்றங்கள்  விசாரித்துக் கொண்டிருக்கின்றன.

சமூக நீதியை முன்னிலைப்படுத்தி, மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கூடிய அந்த மசோதாக்களை சட்டமாக்குவதற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற, எந்தத் தடையையும் ஏற்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, வருகின்ற 12 ஆம் தேதியன்று ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பாக, நாடு தழுவிய அளவில், மாவட்டத் தலைநகரங்களில் அறப்போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு

திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், இந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்வதற்கு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய சமூகநீதி கட்சி, த.மு.மு.க., எஸ்.டி.பி.அய்.  விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி இப்படி அத்துணை ஜனநாயக எதிர்க்கட்சிகளும் அதோடு கல்வியாளர்களும், மருத் துவர்களும் சமூக நீதியாளர்களும் அந்த அறப்போராட்டத்தில் ஏராளமாகக் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ஆகவே, அந்த அறப்போராட்டம் முதல் கட்டமானது.

அதேபோல, மாணவர்களும், பெற்றோர்களும் ஒரு கோடி அஞ்சலட்டையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் போராட்டமும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கேகூட நேற்று மாணவர்கள்  அஞசலட்டையை அனுப்பிய படம் இன்றைய விடுதலையில்கூட தெளிவாக வெளிவந்திருக்கிறது. மின்னஞ்சல் மூலமாகவும் அதனை அனுப்பலாம்.

எனவே, நீட் தேர்வைப் பொறுத்தவரையில் அந்தப் பணி தொடர் பணியாகும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வரையில் ஒத்தக் கருத்துள்ள அத்துணை பேரும் போராடுவோம்.

மத்திய அரசுக்கு நியந்தனையாக
ஆளுங்கட்சியாக இருக்கக்கூடியவர்கள், அவர்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து, மத்திய அரசை வற்புறுத்தியிருக்கவேண்டும். இன்னுங்கேட்டால், குடியரசுத் தலைவர் தேர்தலில், அவர்களுக்கு வாக்களிப்பதற்கேகூட இதனை ஒரு நிபந்தனையாக வைத்திருக்கவேண்டும். அதனை செய்யத் தவறினார்கள்.

அனைத்துக் கட்சிகளையும் கூட்டி, அவர்களை அழைத் துச் சென்று பிரதமரையோ, குடியரசுத் தலைவரையோ சந்தித் திருக்கவேண்டும் - அதனையும் அவர்கள் செய்யவில்லை.
இப்படி பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் மற்ற மாநிலங்கள் எல்லாம் அனைத்துக் கட்சியைக் கூட்டுகின்றன. ஆனால், தமிழகம் அதுபோன்று செய்யாமல், ஏதோ தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்ற - தன்னுடைய அணியில் யார் சேருகிறார்கள் என்பதிலேயே அவர்கள் கவனஞ்செலுத்துவது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டின் நலன் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது.
அதோடு, தமிழகத்தில் இருக்கின்ற ஒரு ஆட்சியை, தங்கள் வயப்படுத்திக்கொண்டு, தாங்கள் நினைப்பதையெல்லாம் நடத்திக்கொள்ளலாம் - இவர்கள் எதிர்க்கமாட்டார்கள் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை, நிலைமையை இன்றைக்கு மத்திய அரசு - மோடி அரசு உருவாக்கியிருக்கிறது.

தமிழாய்ந்த ஒரு முன்னாள் துணைவேந்தரை ஒதுக்கி விட்டு...

உதாரணமாக,  கலைஞர் அவர்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்தபொழுது, அரும்பாடுபட்டு நமக்குப் பெற்றுத்தந்த ஒரு அற்புதமான வாய்ப்பு என்னவென்று சொன்னால், தமிழ் செம்மொழி என்கிற நிறுவனம். அந்த நிறுவனத்தையே - இவர்கள் பதவிக்கு வந்த பிறகு, அதனுடைய பணிகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவையும் செய்து - தமிழாய்ந்த ஒரு முன்னாள் துணைவேந்தரை ஒதுக்கி விட்டு - தமிழ் மொழியே தெரியாத ஒரு அம்மையாரைப் பொறுப்பில் போட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக, மெல்லக் கொஞ்சும் நஞ்சுபோல.

அதற்கடுத்தபடியாக இப்பொழுது என்ன செய்தி வருகிறது என்றால், செம்மொழி நிறுவனம் என்பது ஒரு ஆய்வுக்காக மத்திய அரசால்  உருவாக்கப்பட்ட ஒரு தனி நிறுவனம்.
ஆனால், இப்பொழுது அதனுடைய முக்கியத்துவத்தை அறவே எடுத்துவிட்டு, தமிழ்மொழிக்கு சங்கடத்தை உருவாக்கக்கூடிய அளவிற்கு, செம்மொழி என்கிற அந்தஸ்தையே மாற்றிக் காட்டுவதை நடைமுறை படுத்துவதுபோன்று - பத்தோடு பதினொன்றாக - மத்திய பல்கலைக் கழகமாக இருக்கின்ற திருவாரூர் பல்கலைக் கழகத்தோடு - அதனை ஒரு துறை போன்று  இணைத்துவிடலாம் என்பது கண்டிக்கத்தக்கது. அதனை எதிர்த்துப் போராடவேண்டும். காரணம் என்னவென்றால், தமிழ்மொழிக்கு என்று ஆய்வுகள் - மக்கள் மத்தியில் செம்மொழிகளிலேயே எழுத்து, பேச்சு வழக்கு எல்லாவற்றிலும் புழங்கக்கூடிய செம்மொழி தமிழ்தான் மூத்த மொழி - காலத்தால், கருத்தால்.

அப்படிப்பட்ட அதன் தனித்தன்மையை இழக்க வைத்து, ஒரு பக்கம் இந்தித் திணிப்பு, இன்னொரு பக்கம் சமஸ்கிருதத் திணிப்பு என்றெல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

மதுரை கீழடி அகழாய்வு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மதுரைக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய கீழடி ஆய்வுகள் நடைபெற்ற நேரத்தில், அதனுடைய அதிகாரியை மாற்றினார்கள். அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு போய் நாங்கள் வேறொரு இடத்தில் கண்காட்சி வைக்கப் போகிறோம் என்றார்கள். மதுரை உயர்நீதிமன்றக் கிளை தலையிட்டு, கீழடியில்தான் அந்தப் பொருள்கள் எல்லாம் இருக்கவேண்டும் என்றும், அந்த அதிகாரியை ஏன் மாற்றினீர்கள் என்றும் கேள்வி கேட்டிருக்கிறது. அதற்கு சரியான பதிலை இதுவரையில் சொல்லவில்லை.

ஆகவே, தமிழகத்தினுடைய நலன்களை, தமிழ்நாட்டினுடைய பண்பு நலன்களை அறவே அழிக்கவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறதோ என்கிற அச்சம், சந்தேகம் வெகுவாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆகவே, இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல. இது முழுக்க முழுக்க இன உணர்வாளர்கள், மொழி உணர்வாளர்கள் அத்துணைப் பேரும் ஒன்றிணைந்து எதிர்த்திட வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு சமுதாய இயக்கமாக இருக்கக்கூடிய திராவிடர் கழகம் அதனை முன்னெடுத்துச் செல்லும்.

திராவிடர் கழகம் பங்கேற்குமா?

செய்தியாளர்: 12 ஆம் தேதி நடைபெறுகின்ற போராட்டத்தில் திராவிடர் கழகம் பங்கேற்குமா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: திராவிடர் கழகம்தான் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது - ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு. மாநில உரிமைகள், சமூகநீதி, மதச்சார்பின்மை இந்த மூன்றையும் முன்னிலைப்படுத்தி, பொதுப் பிரச்சினைகளுக்காக அத்துணைப் பேரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க மாநில உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய மொழி உரிமை, இன உரிமை, மனித உரிமை, சமூகநீதி இவைகளைப் பாதுகாக்கத்தான்.
படித்தவர்கள் சொல்லவில்லை; சொன்னவர்கள் படிக்கவில்லை
செய்தியாளர்: ஜி.எஸ்.டி.பற்றி...?
தமிழர் தலைவர் ஆசிரியர்: நான் நேற்றுகூட பொதுக்கூட்டத்தில் சொன்னேன். ஜி.எஸ்.டி.யும், கடவுளும் ஒன்று என்று. கண்டவர் விண்டிலர்; விண்டிலர் கண்டிலர். படித்தவர்கள் சொல்லவில்லை. சொன்னவர்கள் படிக்கவில்லை.

இன்னும் யாருக்கும் எதிலே ஜி.எஸ்.டி. இருக்கிறது - எதிலே ஜி.எஸ்.டி. இல்லை. அது முடிவுற்றதா? முடிவில்லையா? என்பது தெரியவில்லை. இன்னமும் பல பேருக்குக் குழப்பம்தான்.

வெளிப்படையாக தெரியக்கூடிய பல செய்திகள் - ஒற்றை ஆட்சியை உண்டாக்கவேண்டும். ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே  நாடு - ஒரே வரி. இதுபோன்று செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தீர்களேயானால், பல வரிகளுக்குப் பதில் நாங்கள் ஒரே வரியாக செயல்படுத்துகின்றோம் என்று சொல்கிறார்கள். இந்தியாவினுடைய மாநில அமைப்புகள், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விதமான வருமானங்கள் வரும். அதையெல்லாம் இவர்கள் ஒரே சீர்மையாகக் கொண்டு வரவேண்டும் என்கிறார்கள். இதை நீண்ட காலமாக காங்கிரசு ஆண்டபொழுதே பரிசீலித்தார்கள். அதனை தெளிவுபடுத்தி, மக்களை அதற்கு ஆயத் தப்படுத்தவேண்டும். எந்த சட்டமும் வெற்றி பெற வேண்டுமானாலும், முதலில் மக்களை அதற்கு ஆயத்தப்படுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி.யைப் பார்த்தீர்களேயானால், வியாபாரி களைப் பொறுத்தவரையில் எல்லோரும் கடைகளை மூடிவிட்டார்கள். கடைசியாக நமக்கு மிஞ்சியது கடலை மிட்டாய்தான். கடலை மிட்டாய் ஏழை, எளிய மக்கள் சாப்பிடுகிற ஒரு சாதாரண சத்துணவு. அதற்குக்கூட வரியைப் போட்டிருக்கிறார்கள்.

எனவேதான், அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது என்ற முறை மாற்றப்படவேண்டும். நிதானமாக எல்லோருக்கும், பாதிக்கப்பட்ட பலதரப்பு மக்களையும் அழைத்து, அந்தந்த தரப்பிலிருந்து என்னென்ன மாற்றங்கள் செய்தால், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் செய்ய வேண்டும்.

குடிதழீஇ கோலோச்சும் அரசு வேண்டுமே தவிர, குடிமக்களின் கருத்துக்களுக்கு மாறாக, மேலே திணிப்பது ஜனநாயகமாகாது. போராட்டம் இல்லாத 
நாளே கிடையாது
செய்தியாளர்: தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் சொல்லி யிருக்கிறாரே?

தமிழர் தலைவர் ஆசிரியர்: அவருடைய கருத்துப்படி தமிழகம் அமைதிப் பூங்காவாகவா இருக்கிறது?  கதிராமங்கலத்தில் தடியடி; திருப்பூரில் காவல்துறை அதிகாரி பெண்ணின் கன்னத்தில் அறைகிறார்; அவருக்குப் பாராட்டு, பதவி உயர்வு.

போராட்டம் இல்லாத நாளே கிடையாது. தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யாத நாளே கிடையாது. அதுமட்டுமல்ல, இன்னொரு கொடுமையையும் உங்களுக்குச் சொல்லவேண்டும்.

கடலில் ஒன்றும் மதிற்சுவரை எழுப்ப முடியாது. மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்பொழுது, காற்றடித்து எல்லையைத் தாண்டினால், அவர்களுக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை. படகுகளை பறிமுதல் செய்வோம், அபராதம் விதிப்போம் என்று சொல்லி சட்டம் இயற்றுகிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தப் பிரச்சினையெல்லாம் தீர்ந்துவிடும் என்று எல்லோரும் நம்பி வாக்களித்தார்கள். இன்றைக்கு மூன்றாண்டு காலமாகிவிட்டது. ஒரு பயனும் இல்லை. கடிதம் எழுதியிருக்கிறேன், கடிதம் எழுதியிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, எந்தப் பக்கம் திரும்பினாலும், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் போராட்டமாக இருக்கிறது.

எனவே, தமிழகம் போராட்டப் பூங்காவாக இருக்கிறதே தவிர, அமைதிப் பூங்கா அல்ல. பூங்காவில் போராட்டம் - இதுதான் தமிழகத்தின் நிலை.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...