அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இரண்டாண்டுகளைக் கடந்து வந்துள்ளது; ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் - சட்டப் பேரவையில் பாராட்டுக் குவியல்கள்.
இவற்றையெல்லாம் குறையாகச் சொல்ல முடியாது. எந்த ஆட்சியிலும் பொதுவாக இவையெல்லாம் நடக்கக் கூடியவைதான்.
வேண்டுமானால் திகட்டக் கூடியதாக இது இருக்கிறது என்று விமர்சிக்கலாம்.
சட்டமன்றத்தில் குறைகளை சுட்டிக்காட்ட எந்த எதிர்க்கட்சியாலும் முடியவே முடியாது. எதிர்க்கட்சிகளை சட்டப் பேரவையில் இருக்க அனு மதித்தால்தானே அவர்களால் பேச முடியும்? அப்படியே அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தால் ஆயிரம் ஆயிரம் குறுக்கீடுகள்; அதையும் மீறி குறை கூறினால் அவை அவைக் குறிப்பில் இடம் பெறாது.
சட்டசபையில் 110ஆவது விதி என்பது மிகவும் அரிதாகப் பயன் படுத்தப்படுவது; அதன்கீழ் அறிக் கையை முதல் அமைச்சர் படித்தால் அது குறித்து யாரும் எதிர்த்து பேசக் கூடாது - விமர்சனங்களை வைக்க முடியாது, - குறைகூறிப் பேச முடியாது.
இதனை இலாவகமாகப் பயன் படுத்தியதில் இன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களை வெல்ல யார் இருக் கிறார்கள் இந்த வையத்தில்? அதே நேரத்தில் பாராட்டி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆளும் கட்சியும், ஒத்து ஊதும் கூட்டணிக் கட்சிகளும் பிற் பகல் ஒன்றரை மணி நேரம் பாராட்டுப் பத்திரத்தை வாசித்துக் கொண்டே இருக்க தாராளமான அனுமதி.
பிற்பகல் ஒன்றரை மணி வரை இந்த பாராட்டுச் சடங்கு தங்குத் தடையின்றி நடந்து கொண்டே இருக்கும். அதற்குமேல் மக்கள் பிரதி நிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் எதைப் பேசுவது!
ஒரு வருடம் வரை குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை அவைக்கு வரக் கூடாது (Suspension) என்று எந்தக் காலத்தில் எந்த அவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்? இந்தச் சாதனையை வேண்டுமானால் மார் தட்டிச் சொல்லலாம் அ.இ. அ.தி.மு.க. அரசு.
எதிர்க்கட்சி என்றால் குறைகளை எடுத்துக் கூறத் தாராளமாக வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் அவர்கள் கூறுவதில் நியாயம் இருந்தால் திருத்திக் கொண்டு செயல்பட ஆளும் கட்சி முன்வர வேண்டும். இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் என்று திருவள்ளுவர் சொல்ல வில்லையா?
ஆனால் அதெல்லாம் பழைய காலம்; அ.இ.அ.தி.மு.க. சகாப்தத்தில் அதற்கெல்லாம் இடம் கிடையாது.
இவை ஒருபுறம் இருக்கட்டும். ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்குவோம் என்று சொன்னார்களே. இரண்டாண்டுக்குப் பிறகும் நிலை என்ன? தி.மு.க. ஆட்சியில் இரண்டே இரண்டு மணி நேரம் மின் தடை இருந்ததற்கே மண் ணுக்கும் விண்ணுக்கும் தாவிக் குதித் தார்களே --_ இப்பொழுது நிலை என்ன?
எப்பொழுது மின்சாரம் வரும்? எப்பொழுது போகும் --- என்று யாருக் குத் தெரியும்? மின்சாரம் வருவதும் உண்டு என்று வேண்டுமானால் கூறலாம். 10 மணி; 12 மணி நேரம் என்று மின்தடை!
இரவிலும் விட்டு விட்டு மின்சாரம் வந்தால் யார் நிம்மதியாகத் தூங்க முடியும்? உங்களைத் தூங்க விட மாட்டேன் -_ ஜாக்கிரதை! என்கி றார்களா? பொது மக்கள் குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் நிலைமை என்ன? தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களின் கதி என்ன?
தொழிற்சாலைகள் எப்படி செயல் படும்? அவற்றை இழுத்து மூடும் நிலையில், தொழிலாளர்களின் வேலை வாய்ப்பில்தானே கை வைக்கப்படும். வேலை கிட்டாத தொழிலாளர்களின் வீட்டு அடுப்பில் பூனைக் குட்டி தானே தூங்கும்? திருப்பூர் போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த ஊரின் நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கட்டுமே!
சூரியன் மறைந்ததால் ஏற்பட்ட இருட்டுக்கு பெயர்தான் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்றே சொல்லத் தோன் றுகிறது.
அறிவிப்புகளை அன்றாடம் மாண்புமிகு முதல் அமைச்சர் அறி வித்துக் கொண்டே இருந்தாலும், அந்த அறிக்கைகளைப் படித்துப் பார்க்கக் கூட மின்சாரத்தைக் கொடுத்தால் தானே முடியும்?
வந்ததும் வராததுமாக மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு என்ற முப்பிரி சங்கிலியால் மக்களின் முதுகு நார் நாராகக் கிழிக்கப் பட்டாயிற்று.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அண்ணாவின் நூற்றாண்டையொட்டி அவருக்குப் பொருத்தமாக நினைவு கூரும் - எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.230 கோடி செலவில் விண்ணை முட்ட எழுந்து நிற்கும் அறிவுச் சோலையாம் நூலகம் - திமுக ஆட்சி யில் - அதுவும் மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்து கட்டி முடிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்தால் அதனை இட மாற்றம் செய்யத் துடித்த துடிப்புக்கு என்ன பெயர்? ஆரியத் துடிப்புத் தானே! அம்மையாருக்கு ஆல வட்டம் சுழற்றும் வேலையை அட்சரம் பிறழாமல் செய்து வந்த திருவாளர் சோ ராமசாமியாலேயேகூட அதனை நியாயப்படுத்த முடியவில்லையே!
அதே போல தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 9 லட்ச சதுர அடியில் 450 கோடி ரூபாய் செலவில் கட்டப் பட்ட சட்டமன்றத்தை உள்ளடக்கிய தலைமைச் செயலகத்தை முடக்கியதும், செம்மொழி மாநாட்டை ஒட்டி அறிவிக்கப்பட்டுச் செயல்பட்ட புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்த நூலகத்தை நொறுக்கிய கொடுமை என்ன? அதில் இடம் பெற்றிருந்த அரிய நூல்களும் பழங்கால ஓலைச் சுவடிகளும் குப்பைமேடாக அல்லவா ஆக்கப்பட்டது. சமச் சீர் கல்வியையும் பிடிவாதமாக அமல்படுத்த மறுத்தபோது உச்சநீதி மன்றம் உச்சந் தலையில் ஓங்கி அடித்த பிறகுதானே ஒட்டாரம் ஓய்ந்தது.
அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணி அடித்துச் சொன்ன வார்த் தைகள் சாதாரணமானவைகளா? The Law must permit change of policy because another political party with different political philosophy coming to power, as it is to the decision of the government. The state is the authority under article 12 of the constitution, and not a particular person or party which is responsible for implementation of the policies என்று உச்சநீதிமன்றம் கூறியதே! அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு வழங்கிய தங்கப்பூண் போட்ட பாராட்டுப் பத்திரமா இது? முதலில் இருந்த ஓர் ஆட்சி ஒரு காரியத்தைச் செய்தால் தனிப் பட்ட முறையில் செய்தார்கள் என்று யாரும் கருதிட முடியாது. இன்னொரு ஆட்சி வரும்போது பழைய ஆட்சி யினுடைய தொடர்ச்சி.
சென்ற ஆட்சி யின் செயலைப் பின்பற்ற வேண்டியது தான் _ வந்திருக்கும் ஆட்சியின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அதை உடைப்பதற்குப் புதிய அரசுக்கு அரசியல் சட்ட ரீதியாக உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் வரை யறுத்த வார்த்தைகளால் வறுத்தெடுத்த பிறகாவது அண்ணா தி.மு.க. ஆட்சி புத்திக் கொள் முதல் பெற வேண்டாமா?
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு நலச் சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா கொண்டு வரப்படவில்லையா? (18.8.2011).
ஆரம்பக்கட்ட நிலையிலேயே அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகள் எதிர்க்க வில்லையா? கூட்டணி கட்சியாக இருந்தால் என்ன, அறிஞர் அண்ணாவின் பெயரில் இருந்த நூலகமாக இருந்தால் என்ன? - அவை தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்தவை _ அதுவும் தன் ஜென்மப் பகைவரான கருணாநிதி செய்தது என்றால், அதன் குடலைக் கிழித்து மாலையாகப் போடாத வரை ஓய மாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டவர் ஆட்சி ஆயிற்றே!
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண் டென்று கருணாநிதி சட்டம் செய்தாரா? விடப் போவதில்லை சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தலைகீழாகப் புரட்டியடிக்கவில்லையா?
உழவர் திருநாளை கலைஞர் கொண்டாடினார் தைப் பொங்கலை ஒட்டி என்றால் அதனை நான் ஏற்க முடியுமா? கொளுத்தும் கோடையில் உழவர் விழாவை நடத்துவேன் என்று ஏட்டிக்குப் போட்டியாக நடத்த வில்லையா? செம்மொழி பூங்காவா? - அந்தப் பெயரை இருட்டடிப்பு செய்! தொல் காப்பியர் பூங்காவா? - தொலைத்துக் கட்டு அந்தப் பெயரை _ என்பதெல் லாம் ஓர் அரசின் மகத்தான சாதனையோ!
2427.40 கோடி ரூபாயில் சேது சமுத் திரத் திட்டம் தி.மு.க. அமைச்சர் டி.ஆர். பாலுவின் முயற்சியால் வந்ததா?
மூக்கணாங் கயிறு போட்டு, முற்றுப் புள்ளி வை!
அய்யா சொன்னால் என்ன? அண்ணா விரும்பியிருந்தால் என்ன? அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தால் தான் என்ன? அதெல்லாம் அப் பொழுது; இப்பொழுது நம் முன் உள்ள பிரச்சினை - அது தி.மு.க. ஈடுபட்ட விவகாரம் - விடப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் வரை சென்று முடக்கி இருப்பது எப்படிப்பட்ட சாதனை? இரண்டாண்டுகளில் இப்படிப்பட்ட சாதனைகள் அனந்தம்! அனந்தம்!
சட்ட ஒழுங்கா? அடேயப்பா, ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, வன்முறையின் வாள் வீச்சுகள் நீதிமன்ற வளாகத்துக் குள்ளேயே குத்து வெட்டு கொலை.
இடதுசாரிகள் இவற்றிற்கெல்லாம் ஏற்றப்பாட்டு இசைப் பாட்டுப் பாடுவார்கள்; ஊடகங்கள் ஒலி பெருக்கிகளாகச் செயல்படும்.
ஆனாலும் மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் உணர்வு என்பது மட்டும் வேறுதான். அதி காரத்தில் இருக்கும்போது அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது.
மக்கள் உரிய முறையில், சரியான சந்தர்ப்பத்தில் தெரிவிக்க வேண்டிய நேரத்தில் தெரிவிப்பார்கள் என்பது மட்டும் உறுதி! உறுதி!!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- கருநாடகம் கற்பிக்கும் பாடம்!
- பக்தி நம்பிக்கை பூஜை அறைக்குள் இருக்கட்டும்!
- சூரியப் பூக்களே வருக!
- ஜெயங்கொண்டத்தில் ஜெயபேரிகை!
- இனக்குறையைப் போக்க, புரட்சிக்கவிஞர் அழைக்கிறார்!
No comments:
Post a Comment