Friday, January 4, 2013

மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எச்சரிக்கை அறிக்கை !


உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அரசிதழில் தீர்ப்பை வெளியிடவில்லை என்பது நொண்டிச் சாக்கே!
இயல்பான சட்டக் கடமையைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்?
மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை!
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் (கெசட்டில்) வெளியிடுவது மத்திய அரசின் இயல்பான கடமையாகும். அதை வெளியிடக் கூட தயங்கும் நிலையில், மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு - இறுதித் தீர்ப்பு வெளியானது 2007 ஆம் ஆண்டு!
காவிரி நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக நடுவர் மன்றம் அமைக்கும் தமிழ்நாட்டின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றியவர் - மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியின்போது - மத்தியில் சமூகநீதிக்காவலர் வி.பி. சிங் அவர்கள்.
அதன்படி இடைக்கால நிவாரணமாக அந்நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு கருநாடக அரசு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்கவேண்டுமென்று ஆணை பிறப்பித்தது!
தொடக்கத்திலிருந்தே, கருநாடக அரசு இதன்படி, ஒரு சில ஆண்டுகள் தவிர, முழுமையாக நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வழங்கவில்லை.
கருநாடகம் எந்தச் சூழலில் தண்ணீரைத் திறந்துவிடும் தெரியுமா?
வறட்சி ஏற்படும் காலத்தில் பங்கீடு எப்படி என்ற Distress Formula- வையும் பின்பற்றியும் நடந்துகொள்ளவே இல்லை.
நடுவர் மன்றத்தையே ஒப்புக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும், அவசரச் சட்டம், பிறகு தனிச் சட்டம், வழக்கு, தாவா என்றெல்லாம் திட்டமிட்டே தண்ணீரைத் தர மறுத்தே வந்துள்ளது.
கிருஷ்ண ராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) மற்றும் கபினி போன்ற அணைகளில் குடகு பகுதியில் ஏராளம் மழை பெய்து, கருநாடகத்தில் உபரி மழைநீர் வெள்ளத்தைத் தடுக்க முடியாது என்ற நிர்பந்த நிலையில் மட்டுமே அவர்களது அணைகளைக் காப்பாற்றும் பொருட்டே, தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்துவிடுவது சில ஆண்டுகளில் நடந்தது!
இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து 2007 இல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தரப்பட்டது. அதன்படி, 419 டி.எம்.சி. (தமிழ்நாடு கேட்டது 562 டி.எம்.சி.) கருநாடகாவிற்கு 270 டி.எம்.சி. (அது கேட்டது 465 டி.எம்.சி.), கேரளாவிற்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி., சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு 10 டி.எம்.சி. தனி ஒதுக்கீடாக (Reserved) வைக்கப்பட்டது.
128 முறை பேச்சுவார்த்தை
முன்பு பேச்சுவார்த்தைகள் இரு மாநிலங்களுக்கிடையே 127 முறை; சில வாரங்களுக்கு முன் ஒரு தடவை ஆக, சுமார் 128 தடவை நடைபெற்றும், உருப்படியான பலன் ஏதும் ஏற்படவில்லையே.
உச்சநீதிமன்றம், பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதி நீர் ஆணைய ஆணைப்படிகூட விடப்படும் நீரின் அளவால் தமிழ்நாட்டிற்குக் குறுவை சாகுபடியை தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பகுதி நிலங்களில் மட்டுமே நடைபெறக்கூடிய நிலையில், 2 பகுதி நடைபெறாமலும், சம்பா பயிர் நட்டும் காய்ந்து, கருகி வாடியதாலும், மனமுடைந்த காவிரிப் பாசன விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 12-க்குமேல் பெருகியும் வந்துள்ள நிலையில்கூட, மேற்சொன்ன உச்சநீதிமன்ற ஆணைக்கும் கட்டுப்படாமல், பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுக்குக் கட்டுப்படாமல் தண்ணீர் தர மறுத்து அடம் பிடிக்கிறது கருநாடகம்.
கருநாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில்!
சற்றும் மனிதாபிமானம் அற்று, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்குத் தர இயலாது என்று அடம் பிடிக்கிறது கருநாடக அரசு. (வாக்கு வங்கி அரசியல் முழு முதற்காரணம்) அங்கு அனைத்துக் கட்சிகளும் ஒரே அணி; ஒரே குரல் அங்கே! அந்த முதலமைச்சர் 10 முறை அனைத்துக் கட்சிக் கூட்டம்; பிரதமரைச் சந்திக்க சர்வக் கட்சிக் குழு என்ற நடைமுறை கருநாடகத்தில்.
தமிழ்நாட்டில், அது அறவே இல்லை; எல்லாம் முதலமைச்சர் நினைப்பதுதான்! எத்தனைக் கட்சிகள் கோரிக்கை வைத்தும், இப்பிரச்சினையில் அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமுறை கூட கூட்டப்படவே இல்லை.
இங்கும் எதிர்க்கட்சிகள் மீதும், ஆளுங்கட்சியும், மற்றவர்களும் பரஸ்பர குற்றச்சாற்று வைத்து அரசியல் நடக்கும் அவலமான நிலை!
இந்நிலையில், இறுதித் தீர்ப்பு (நடுவர் மன்றத்தின்) வந்த 90 நாள்களில் மத்திய அரசின் கெசட்டில் வெளியிட்டிருக்கவேண்டிய நடுவர் மன்றத் தீர்ப்பு - 5 ஆண்டுகளாகியும் மத்திய அரசால் வெளியிடப்படாத வேதனையான நிலை!
அரசிதழில் வெளியிட்டால்...
இப்படி வெளியிட்டால்தான் அத்தீர்ப்புக்கு சட்ட வலிமை ஏற்படும்; அப்படி வெளியிட்ட பிறகு நடுவர் மன்றம் முடிந்துவிட்டதாகவும், அதன்படி பிரதமர் தலைமையில் அமைந்த காவிரி நதிநீர் ஆணையமும் தானே முடிவுக்கு வந்ததாகக் கருதப்படும்.
உடனடியாக தீர்ப்பு செயல்படுத்தப்படவேண்டியதாகி விடும்.
இதனைக் கருநாடக அரசு வேண்டுமென்றே எதிர்க்கிறது.
அதனை மத்திய அரசு கெசட்டில் வெளியிடவேண்டும் என்பது சட்டப்படி கடமை. சலுகையோ, விருப்பத்தையொட்டியதோ அல்ல; கட்டாயம் வெளியிடப்படவேண்டியதாகும்.
சில வாரங்கள் முன்பு உச்சநீதிமன்றமே உரத்த குரலில் மத்திய அரசு வழக்குரைஞரைப் பார்த்து, ஏன் இன்னும் தீர்ப்பை வெளியிடாமல் உள்ளீர்கள் என்று கேட்டு, அதற்கு விரைவில் வெளியிடுவோம் என்று கூறி பல வாரங்களுக்குமேல் ஓடிவிட்டன!
மத்திய அரசின் போக்கு...
இப்போதும் மத்திய அரசின் போக்கு பாம்புக்குத் தலை; மீனுக்கு வால் காட்டுவது மாதிரி தட்டிக் கழிக்கும் வகையில், சில செய்திகளை சட்ட அமைச்சகம் பரிசீலிக்கிறது என்று கசிய விடுவது, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், சட்டக் கடமைக்கும், உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிக்கும் விரோதமானது  - கண்டிப்பாக விரோதமானதே!
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது நொண்டிச்சாக்கு - அடிப்படையற்றது. (அந்த உச்சநீதிமன்றம்தானே கெசட்டில் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது).
ஸ்டே ஏதாவது உள்ளதா? உச்சநீதிமன்றம் இதை வெளியிடத் தடையா வழங்கியுள்ளது? இல்லையே! பின் ஏன் இந்த செப்படி வித்தை, ஜாலங்கள்? உடனடியாக வெளியிடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிப்பது - மக்கள் கிளர்ச்சியாக வெடிப்பது தவிர்க்க இயலாது!
மத்திய அரசின் இயல்பான சட்டக் கடமையைச் செய்வதில்கூட, இப்படி ஓர் அரசின் அழுத்தமா தேவை?
வெட்கம்! மகாவெட்கம்!! வேதனை!!!

- கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
3.1.2013


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...