இந்தியா இன்னும் ஏன் வல்லரசாகவில்லை, லண்டன் பத்திரிகையில் படித்தவை, மூடநம்பிக்கையினால் உணவுப் பொருள்களை வீணடிக்கின்றனர்.
முதலாவது, எலுமிச்சம் பழம். அது படும்பாடு மிகவும் சுவாரசியமானது. அதை இரண்டாக வெட்டி குங்குமத்தை தடவி வாசற்படி இரு மருங்கிலும் வைத்தல், மனிதனை முன்நிறுத்தி எலுமிச்சையை காலால் நசுக்கி அதை நாலாப் பக்கமும் பிய்த்து எறிதல், மாலையாக கட்டி காயும் வரை நிலையில் கட்டி தொங்க விடுதல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் சக்கரங்களில் வைத்து நசுக்குதல், வாகனத்தின் முகப்பில் மாலையாக தொங்க விட்டு திருஷ்டி கழித்தல், தற்சமயம் கடைகளில் கண்ணாடி குவளை நீரில் மிதக்க விடுதல்.
இரண்டாவது, தேங்காய். இதை சூரைத் தேங்காய் என்று வீதியில் போட்டு உடைத்தல். இது சிதறி மண்ணோடு கலந்து யாருக்கும் பயன்படாமல் செய்வது. மேலும் வாகனங்களின் டயர்களை குத்தி சேதப்படுத்துகிறது. மலையாளிகள் தென்னம்பாளையை வெட்டி குவளை (உலோகப் பானையில்) வைத்து அனைத்து விழாக்களிலும் வைக்கின்றனர். அது தேங்காயை கருவிலேயே அழிப்பதாகும்.
மூன்றாவது, பூசணிக்காய் காய்கறிகளிலேயே மிகவும் சத்துள்ளது. மிகவும் குளிர்ச்சியானது. அதை நடு வீதியில் போட்டு உடைத்தல் அல்லது அதில் விகாரமான உருவத்தை வரைந்து நிலையில் கட்டி தொங்க விட்டு அழுகச் செய்வது. நடுவீதியில் போட்டு உடைப்பதால் அதன் மீது ஏறும் வாகனங்கள் சறுக்கி நிறைய விபத்துகள் உண்டாகின்றது. மேலம் பூசணிப் பூக்களை பறித்து சாணியில் சொருகி வைத்து கருவிலேயே அதை அழித்து அழகு பார்க்கின்றனர்.
தினமும் சூடம் (கற்பூரம்) கொளுத்தும் பக்தர்கள் அது வலிநிவாரணி மற்றும் தேமலுக்கு தயாரிக்கும் மருந்து என்று தெரியாமல் வீணடிக்கின்றனர். அதை வெளிநாட்டினர் மருந்தாக்கி இந்தியரிடமே ஒரு குப்பி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர்.
ஆடி மாதமானால் வேப்ப மரங்களை மொட்டையாக்கி விடுகின்றனர் அம்மன் பக்தர்கள். வேப்பிலை ஆடை அணிந்து கற்கால மனிதனாகின்றனர். அந்த வேப்பக் கொட்டையை எடுத்து வெளிநாட்டினர் பல நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்கின்றனர்.
அபிஷேகம் என்ற பெயரில் கற்சிலைகளுக்கு பால், தேன், நெய், தயிர், இளநீர் ஆகியவற்றை ஊற்றி வீணடிக்கின்றனர்.
யாகம் என்ற பெயரில் நெய், பொரி போன்ற உணவுப் பொருள்களையும் விலையுயர்ந்த பட்டுத் துணிகளையும் தீயில் போட்டு பொசுக்குகின்றனர்.
கடவுளை வழிபடும் பக்தர்கள் சிந்தித்தால் இதைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு இக்கருத்தைத் தெளிவுபடுத்தினால் இந்தியாவின் பொருளாதாரத் தையும், நிதியையும் பெருக்கலாம். விலைவாசியைக் கட்டுப்படுத்தி அரசாங்கத்தைக் குறை கூறுவதைத் தவிர்க்கலாம். இப்படி பக்தியின் பெயரால் உணவுப் பொருள்களை வீணடிக்காமல் இருந்தால் நாமும் நம் நாட்டை வல்லரசாக்கலாம் என்று நம்புவோமாக.
- திருமதி.வாசுகி திருவள்ளுவர்
தகவல்: சேக்கிழான், சென்னை _ 81.
No comments:
Post a Comment