Saturday, July 28, 2012

மதம் பிடித்து அலையாதீர்! 2


குல தர்மம் கெட்டுப் போகுமா? -    க.அருள்மொழி
மதங்கள் பொதுவாக வலியுறுத்துவது மாற்று மதத்தினருடன் 'கலப்பு' கூடாது என்பதைத்தான். உங்கள் மத ஆசாரங்களைக் கடைபிடிப்பவர் களுடனே நீங்கள் உறவாட  வேண்டும் என்று வலியுறுத்துவதும் பொருந்தாத நம்பிக்கை உடையவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென்பதும் குலக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
ஒரு வகை 'நம்பிக்கை' முறைகளினால் ஆசீர்வதிக் கப்பட்டவர்கள் அல்லது காப்பாற்றப்பட்டவர்கள் மற்ற வகை 'நம்பிக்கை' உடையவர் களிடமிருந்து வேறுபட்ட வர்கள். அதாவது, 'இவர்கள்' கடவுளின் வெளிச்சத்தில் இருப்பவர்கள். 'மற்றவர்கள்' நரக இருட்டில் இருப்பவர்கள். சில மதத்தினர் வேற்று மதத்தின ரிடம் கொஞ்சமும் சகிப்புத் தன்மை இல்லாமல் இருக்கி றார்கள். நம்முடைய மதத்தை நம்பாதவர்கள் 'ஜென்ம விரோதிகள், என்பதும் அவர்களின் 'நம்பிக்கை!' மதக் கருத்துகளுக்கு எதிராக நடப்பவர்களை மதத்திலிருந்து நீக்குவதன் மூலம் மதத்தின் தூய்மையைக் காப்பதோடு 'சுதந்திர' எண்ணத்தையும் அழித்து விடுகிறார்கள்.
நாம்-எதிர்-அவர்கள்  என்ற தவறான எண்ணம் எப்போதும் ஒரு நல்ல வாழ்க்கை முறைக்கு முரணானதாகும். விரிவான பார்வையைக் குருடாக்கும் முட்டாள்தனம் அது.
இப்போதும் குடும்பச் சொந்தம் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக 'முறை' ஒத்து வரவில்லை என்றாலும் சொந்தத்திற் குள்ளேயே திருமணம் செய்வது 'வர்ணக் கலப்பு' ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான். சித்தப்பாவின் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதும் அத்தை மகனை மணந்துகொள்வதும் இந்தப் பயத்தால் ஏற்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுதான்.
இப்படி அடிமைக் கூட்டத்தைவிட்டு வெளியேறி அறிவுடையோர் இருக்குமிடத்தை நாடிச்சென்றால் அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதமுண்டு.
முட்டாள்கள் -போலிகள் எந்தப் பெயர் பிடிக்கும்.?: நீங்கள் எந்த மதத்தை விரும்பினாலும் இந்த இரண்டு பெயர்களில் ஒன்றைத்தான் தேர்ந்தேடுக்க வேண்டியிருக்கும். ஒன்று புனைந்துரைக்கப்பட்ட உளறல்களை எல்லாம் உண்மை என்று நம்பித் தலையாட்ட வேண்டும். அதாவது இந்தப் பூமி தட்டையானது, அதைப் பாயாகச் சுருட்ட முடியும் என்றாலும் ஒருவன் இரண்டாயிரம் ஆண்டுகள் உயிரோடு இருக்கிறான் என்றாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து போனவர் மீண்டும் உயிரோடு வருகிறார் என்றாலும் ஒருவன் நானே கடவுள் என்றாலும் கேள்வி கேட்காமல் நம்பித் தீர வேண்டும். அப்படியானால் நீங்கள் ஒரு நம்பிக்கையாளர்! நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். எல்லா வளமும் பெற்று நூறாண்டுகள் வாழ கடவுள் துணையிருப்பார்! அப்படி நம்பாவிட்டால்? அந்தக் கேள்விக்கே இடமில்லை. நம்பிக்கைதானே எல்லாம்?
இரண்டாவதாக, இந்த உளறல்கள் எல்லாம் பொய்கள்தான். இந்தக் கதைகள் எல்லாம் 'உடான்ஸ்' என்பதையெல்லாம் நன்கு அறிந்து அதையெல்லாம் கொஞ்சமும் நம்பாவிட்டாலும் அதை நம்புவதாகக் காட்டிக் கொண்டு அவற்றைப் பற்றிப் பெரிதாக சிலாகித்துப் பேசி அதன் மூலம் வருமானம் மற்றும் பலான பலான சுகங்களை எல்லாம் அனுபவிக்க முயல்பவராக இருப்பது.
இதையெல்லாம் செய்யாமல் சும்மா மதச் சடங்குகளில் கலந்துகொண்டால்கூட போதும். நீங்களும் அந்தக் கூட்டத்தில் ஒருவர்தான். ஏனென்றால், அவற்றையெல்லாம் நீங்கள் எதிர்க்கவில்லை அல்லது தடுக்கவில்லை அல்லவா?
உங்களை நீங்கள் தீவிர மத வெறியராகவும் காட்டிக் கொள்ளாமல் அதேசமயம் மத நம்பிக்கை இல்லாதவராகவும் காட்டிக் கொள்ளாமல் 'ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால்'  என்று செயலற்றவராக இருப்பதும் 'போலி' என்ற வகையில் சேருபவராவீர். நீங்கள் எவ்வளவு தவறான வழியைக் கையாள்கிறீர்கள் என்று உணர்கிறீர்களா?
உங்கள் மூளைக்குப் போடப்பட்ட விலங்குகளை நீங்களே உடைத்து எறியுங்கள். நீங்கள் வாழ்வதற்கு மற்றவர்களின் உத்தரவை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? நீங்களே முடிவெடுங்கள். ஒருவேளை, கடவுளே இருந்தாலும் உங்கள் இரட்டை வேடத்தைக் கண்டுபிடித்துவிட மாட்டாரா?
பரம்பரைத் தவறுகள்:
இப்போது நீங்கள் பின்பற்றும் மதத்தில் நீங்கள் பிறந்திருக்காவிட்டால் அந்த மதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவீர்களா? உங்கள் குழந்தைகளும் அதையே பின்பற்ற வேண்டும் என்றுதானே நினைக்கிறீர்கள்?
வேறு கலாச்சாரத்தில் பிறந்திருந்தால் என்ன செய்வீர்கள்?  இப்போதுள்ள 'நம்பிக்கை' முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இருக்கிறதா? இவையெல்லாம் சமூகத்தால் வலியுறுத்தப்படுவதால் பின்பற்றுகிறீர்களே  தவிர உங்கள் அறிவால் தேர்ந்தெடுத்த செயல்களா? கிறித்தவம் பெரும்பாலும் யூதர்களின் வழிபாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இன்னும் பின்னோக்கிப் போனால் கிறித்துவத்துக்கு முன் பின்பற்றப்பட்ட பல சடங்குகளைப் பின்பற்றியே இப்போதும் வழிபாடுகள் நடந்துவருவது தெரியும். அதே போல் ஒவ்வொரு மதத்திற்கும் பின்னணிகள் உண்டு.  ஒவ்வொரு மத (மட) அதிபர்களும் மக்களை மூளைச் சலவை செய்து அவர்களின் பின்னால் வரச் செய்கிறார்கள். ஒவ்வொரு மதமும் பிரச்சாரத்தினால்தான் வளர்க்கப்படுகிறதே தவிர 'உண்மை'யினால் அல்ல! அறிவு முதிர்ச்சியும் காலத்திற்கேற்ற மாற்றமும் தேவை என்பதை உணருங்கள்.
இரக்கமற்ற அரக்கத்தன்மை: மதங்களின் சட்டங்களும் விதிமுறைகளும் அறிவு வளர்ச்சியைத் தடை செய்கின்றன. இதனால் தேவையற்ற வன்முறைகளும் கலவரங்களும் வெடிக்கின்றன. மதவாதிகள் மனிதாபிமானமற்றவர்களாக இருக்கிறார்கள். இதற்கு சிலுவைப் போர் முதல் சமணர்களைக் கழுவிலேற்றியது, கோவில்களில் குண்டுவைப்பது, ஸ்டெய்ன்ஸ் பாதிரியார் மற்றும் இரு குழந்தைகளைக் கொன்றது, 'மோடி' பயங்கரம்  என பலப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறினால் ஏட்டில் அடங்காது. அவர்கள் செய்வது சரியானதே என்று பாசாங்கு செய்கிறார்கள்.
அன்பைப் போதிப்பதாகக் கூறி உண்மையில் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதையே விரும்புகிறார்கள். அவர்களுக்குள்ளே உள்ள ஒரே ஒற்றுமை ரத்த வெறிதான். முரண்பட்ட கருத்தைக் கொண்டிருந்தால் அவர்களின் கழுத்தை நெறிக்கத் தயங்க மாட்டார்கள். "ஒத்துப்போ  அல்லது செத்துப்போ" என்பதே அவர்களின் தாரக மந்திரம்.
கடவுளை நம்புகிறவர்களிடமிருந்து நிபந்தனையற்ற அன்பை எதிர்பார்க்க முடியாது. மனிதாபிமானம் பற்றிப் பேச முடியாது. எல்லாம் வினைப்பயன் என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். 'தருமம் தலைக் காக்கும்' என்பதாலும் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பதாலும் 'பாவ' விமோசனத்திற்கு ஆகவுமே சிலர் சில நல்ல காரியங்களைச் செய்கிறார்களே தவிர உண்மையான அன்பு அல்லது மனித நேயத்தால் அல்ல!
பய பக்தி:
மதமும் கடவுளும் பயத்தினாலும் பேராசையினாலும் உண்டானதாகும். கடவுளிடம் பணிவாக இருந்தால் ஆசீர்வதிப்பார். கடவுளிடம் தொழுது நின்றால் வரம் தருவார். விரதமிருந்தால் வேண்டியது கிடைக்கும். காணிக்கை செலுத் தினால் கடவுளின் கடைக்கண் பார்வைபடும். தூய நெஞ்சோடு கடவுளை வணங்கினால் ஆயுள் நூறு. ஆம்! மாறாக நடந்தால்? அவ்வளவுதான்...கேடு சூழ்ந்து குடும்பத்தையே நாசம் செய்துவிடுவார்!? என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது!?
உங்களை முதுகெலும்பு அற்றவர்களாக ஆக்குவதே மத அதிபர்களின் வேலை. இப்படிச் செய்வது அறிவீனம்தானே தவிர ஆன்மிகம் ஆகாது. நீங்கள் மாறுபட்டு இருப்பதற்கும் சொந்தக் காலில் நிற்பதற்கும் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கும் பயம் கொள்ள வைப்பதே மதவாதிகள் செய்யும் முக்கிய வேலை.
நீங்கள் பாவம் செய்தவர், நீங்கள் மதிப்பற்றவர், நீங்கள் ஒரு பாவி, நீங்கள் ஒரு இழி பிறவி, நீங்கள் ஆசீர்வதிக்கப்படாதவர் என்று பலவாறு உங்களைப் பயமுறுத்துவதுதான் மதத்தின் வேலை. இதற்கெல்லாம் விமோசனம்? ஒன்றேதான்! சரணாகதி அடையுங்கள். நீங்கள் கீழானவர் என்பதை நம்புங்கள்! மதமும் கடவுளும் சொல்வதுபோல் நடந்துகொள்ளுங்கள். உங்களுக்கென்று புத்தியும் சக்தியும் இருக்கிறதென்பதை மறந்து விடுங்கள். மீதமுள்ள வாழ்க்கையையும் கடவுளின் மீது பயம் கெண்டு இருங்கள்! 'முடிவில்' எல்லாம் சரியாகிவிடும்.
'நம்பிக்கை' என்பது துணிவின் அழிவாகும். அதாவது கோழைத்தனமாகும். 'நம்பிக்கை'யின் கட்டுப்பாட்டில் இருப்பவர்களே இந்த மத வியாபாரத்தின் முக்கிய இலக்காகும். உங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்க விருப்பமில்லாமை அல்லது பயம் என்பதுதான் மதத்திற்குப் பொருத்தமான குணாம்சமாகும். இந்த பயம் வாழ்க்கையின் வழி நெடுக வந்துகொண்டே இருக்கும்.
உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் அறிவின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களை நீங்களே அடிமை சாசனம் எழுதிக் கொடுக்காதீர்கள். மதம் பிடித்து அலையாதீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...