தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 52 விழுக்காடு மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் 'பெரும்பான்மை' என்று பெருமையாக சொல்லிக்கொள்ள முடியாது.
6 விழுக்காடு மக்கள் பொதுக் கழிப்பிடத்தைப் பயன் படுத்துகிறார்கள் என்றும் அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 விழுக்காடு மக்கள் மட்டுமே வீடுகளில் கழிப்பறைகளைக் கட்டிப் பயன்படுத்துகிறார்கள்.
கழிப்பறை இல்லாத வீடுகள் அனைத்தும் வசதி இல்லாதவர்களின் வீடு என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் தோப்புகளிலும் ஆற்றோரங்களிலும் 'போய்' பழகிவிட்டனர். வீடு கட்டும்போது கழிப்பறைக் கட்டவேண்டும் என்ற சிந்தனையே வருவதில்லை அவர்களுக்கு. உண்மையான 'வாஸ்து' வல்லுனர்கள் போலிருக்கிறது!
சுத்தம்-அசுத்தம், புனிதம்- தீட்டு, தூய்மை-அழுக்கு, ஆசாரம்-அனாசாரம் என்ற வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்த இந்தச் சமூகம் வாழ்க்கையில் இதைப் பயன்படுத்த வலியுறுத்திக் கற்றுக் கொடுக்கவில்லை.
வெளியிடங்களைக் கழிப்பறைகளாகப் பயன் படுத்திப் பழக்கப்பட்டு விட்டதால் திறந்த வெளி எல்லாமே அசுத்தம் செய்யுமிடங்கள்தான் என்று நினைக்கிறார்கள். கண்ட இடங்களில் எச்சில், சளியைத் துப்புவது பற்றி சிறிதும் கூச்சப் படுவதில்லை நம் மக்கள். சாலையோரங்களில் மலம் கழிக்கலாம் எனும்போது சாலை நடுவில் எச்சில் துப்புவதில் தவறென்ன இருக்க முடியும்?
இன்றைய நாளில் இன்றியமையாப் பொருளாகிவிட்ட செல்பேசி பயன் படுத்துகிறவர்கள் 74 விழுக்காடாம். அதி நவீனக் கருவியைப் பயன்படுத்தும் இம்மக்களில் பலர் நவீன கழிப்பிடத்தைப் பயன்படுத்தாது ஏனோ?
தூய்மை சுகாதாரம் என்பதையெல்லாம் எதோ படிக்காத பாமரர்கள்தான் கடைபிடிக்காமலிருக் கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். படித்த மேதாவிகள் கூட இந்த விஷயத்தில் அறியாமையில் தான் இருக்கிறார்கள்.
நாம் எடுத்துச் சொல்லப் போனால் "நீ என்ன பாப்பார வீட்டில் பொறந்த மாதிரி பேசற?" என்று(பார்ப்பனர்கள்தான் சுத்தத்திற்கு 'அதாரிட்டி'என்பது போல) கேட்கிறவர்கள் இருக்கிறார்கள். அன்றாட வாழ்வில் செய்யும் ஆரோக்கியமற்ற செயல்கள்.
தூய்மையாக இருப்பது என்பது கண்களுக்கு அழகு என்பது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அதுவே ஆதாரம்.
எச்சில் படிப்பு :
'படித்த' மக்கள் செய்யும் முக்கியமான ஒரு செயல் என்ன தெரியுமா? புத்தகத்தை எச்சில் தொட்டுப் புரட்டுவதுதான். இதுவரை எனக்குப் புரியாதது அதுதான்! 'நான் புரட்டும் போது எச்சில் தொடாமலே திரும்பி விடுகின்ற பக்கங்கள் இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறது?' பழையப் புத்தகங்களில் பூஞ்சான், பாக்டிரியா போன்றவை அலர்ஜியை ஏற்படுத்தி உடலுக்கு கேடு விளைவிப்பதைச் சொன்னால், "ஆமாம், அப்படியே ஒட்டிகிறது!" என்று முகம் திருப்பிக் கொள்கிறார்கள் நண்பர்கள்! பணத்தாளை எண்ணும்போதும் இதே செயல்தான் தொடர்கிறது!
வாகனத்தில் செல்லும்போது எச்சில் துப்புதல்!
நம்மவர்களுக்கு எந்த தவறான பழக்கத்தையும் உடனே பற்றிக் கொள்ளும் 'ஆற்றல்' உண்டு! பான் பராக், குட்கா போன்ற தேவையற்ற பொருளை வாயில் போட்டுக்கொண்டு உடலுக்குத் தேவையான உமிழ் நீரை வெளியேற்றி விடும் 'நல்ல' பழக்கம் நமக்கு உண்டு! இந்தப் பழக்கத்தினால் அவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று சொன்னால் துப்புக் கெட்டவர்கள் மறுப்பார்கள்! கழிப்பிட வசதிதான் இல்லை.
ஆனால் வாகன வசதி பலருக்கும் வாய்த்து விட்டது! இதைப் பொறாமைப் பட்டுச் சொல்வதாக நினைப்பார்கள் சிலர். வாகனத்தில் போகிறவர்கள் அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யாமல் போனால் இதைப் பற்றிப் பேசப் போவதில்லை.
இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பவர்கள் பின்னால் வருபவர்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் எச்சிலைத் துப்பிவிட்டுப் போகும்போது அந்த வாகனத்தைத் தொடர்ந்து வருபவர்கள் எச்சில் தன் மீது பட்டு விடக் கூடாது என்று 'சட்'டென்று பிரேக் போட, அவரைத் தொடர்ந்து வருபவர்கள் அவர் மீது மோத என ஒரு விபத்து நடப்பதற்கு ஒரு 'எச்சில்' காரணமாகி விடுகிறது.
அகத்தின் நலம் நகத்தில் உள்ளது! உடல் உழைப்புத் தொழில் செய்பவர்களின் கைகள் அழுக்காகத்தானிருக்கும். ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதைப் பார்த்து நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் நகக் கண்களில் உள்ள அழுக்கால் எவ்வளவு கெடுதல் என்பதைப் பற்றிச் சொல்வதனால் அவர்கள் ஆரோக்கியம் காக்கப் படும்.
இங்கே இன்னொரு செய்தியையும் கவனிக்க வேண்டும். அழுக்கில் வேலை செய்பவர்கள் நகத்தில்தான் அழுக்கு உள்ளதா? 'கறை' படியாத வேலை செய்பவர்களும் சுத்தத்திற்கு 'அதாரிட்டி' எனப்படுபவர்களும் கூட நகத்தை வெட்டி தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல்தான் இருக்கிறார்கள்.
பெண்கள் பலர் நகப் பூச்சு (nail polish) பூசுவதால் வெளியில் தெரியாமல் இருக்கிறது. ஆனாலும் சுகாதார நோக்கில் மறைப்பதால் எந்தப் பயனும் இல்லையே?
வாரம் ஒருமுறை விரல்களைத் தாண்டி வளர்ந்த நகத்தை நறுக்கிப் பராமரிப்பது நல்லது. 'உணவு உண்பதற்கு முன்பும் மலம் கழித்த பின்னும் சோப்புப் போட்டு கழுவுங்கள்' என்று சொன்னால் "ரொம்ப சுத்தம் பார்க்கிறவர்களுக்குத்தான் எல்லா நோயும் வரும், எங்களுக்கு ஒன்றும் ஆகாது" என்று வியாக்கியானம் பேசுகிறவர்கள் உண்டு! அவர்களுக்கு வருகின்ற நோய்க்கு 'அது'தான் காரணம் என்று புரியாமலே!
நார்வேயில் இந்தியத் தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் கலாச்சாரப்படி கையால் உணவு ஊட்டியதால் அந்தக் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து காப்பகத்தில் வைத்திருப்பது கூட சுகாதாரத்தை வலியுறுத்தத்தான்.
கைகளால் உணவு ஊட்டும்போதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் பாசப்பிணைப்பு அதிகரிக்கிறது என்று வாதிடுவோர் உணவு ஊட்டும் முன் தன் கைகளை நன்கு சுத்தம் செய்துவிட்டோம் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் நோய்க்கும் குழந்தைக்குமான பிணைப்புதான் அதிகமாகும்.
கைக் குழந்தைகளுக்கு மாட்டுப் பால் கொடுக்கும்போது கூட பாட்டிலில் கொடுக்காதீர்கள், அந்த பாட்டிலை முழுமையாக தூய்மைப் படுத்துவது கடினம். அதனால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படக் காரணமாகிறது.. ஸ்பூனில் மெதுவாக ஊட்டுங்கள் அதைத் தூய்மைப் படுத்துவது எளிது என்று மருத்துவர்கள் சொன்னால் எத்தனை பேர் கேட்கிறார்கள்? மீண்டும் மீண்டும் மருத்துவரிடம் ஓடும் நேரத்தைப் பார்த்தால் ஸ்பூனில் ஊட்டும் நேரம் குறைவுதானே? பணமும் மிச்சம். குழந்தையும் நலமாக இருக்கும்.
பக்தி வந்ததால் போனது புத்தி:
நம்முடைய கோயில்கள் புனிதமானவையாம்! அதாவது அதி தூய்மையானது என்று பொருள். ஆனால் அங்கு இருப்பதைப் போல் ஆபத்தான நோய்க் கிருமிகள் வேறெங்கும் இருக்காது. தேங்காய் உடைப்பது, கூழ் ஊற்றுவது, கால்களைக் கழுவி வணங்குவது என்று கண்ட இடங்களையும் ஈரமாக்கி அதன் மீதே நடந்து சேறும் சகதியுமாக்கிவிட்டு பக்திப் பரவசத்தில் தன்னை மறந்திருக்கும் போது கிருமித் தொற்றுக்கு ஆளாகிறார்கள் பக்த கோடிகள்.
அதாவது கடவுளின் அருளைப் பெற்று விடுகிறார்கள்! கோடைக் காலத்தில் நடக்கும் திருவிழாக்களில் பல ஆயிரம் பேர் ஒன்றாகக் கூடும்போது ஒருவரின் வியர்வை மற்றவரின் உடலில் சவ்வூடு பரவல் மூலம் பரிமாறப்படும் பாருங்கள்! சந்தேகமே வேண்டாம்.
தேகம் அடையும் கும்பி பாகம். அப்புறம் கோயில்களில் அபிஷேகம் செய்ய பக்தர்கள் கொடுத்த பிரசாதத்தை (பிறர் சாதத்தை?)அய்யர் தன் 'கையால்' கொடுப்பார் பாருங்கள் அதற்கு அலாதி சுவை உண்டு! கூடவே வியாதி பரவுவதும் உண்டு!
மூக்கில் மூச்சு விடுங்கள் _ விரலை அல்ல!
உங்கள் அருகில் உள்ளவர்களோ அல்லது நீங்களோ மூக்கில் விரலை வைத்து குடைந்து கொண்டிருப்பவரா? நீங்களோ உடன் இருப்பவரோ யார் இந்த செயலைச் செய்தாலும் அதனால் குடைபவருக்கு ஏற்படும் பிரச்சனை கொஞ்சம் தாமதமாகக் கூட ஏற்படலாம்.
ஆனால் உடன் இருப்பவர் படும் அவஸ்தை உடனடி விளைவு! உண்மையில் மூக்கைக் குடைபவர் ஒரு வித போதை மயக்கத்தில் இருக்கிறார்! அவருடைய இரண்டு கைகளுக்கும் ஒரே நேரத்தில் வேலை இல்லை என்றால் ஒரு கையை மூக்கிற்குள் செலுத்தி விடுகிறார்.
பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் மூக்குக் குடையும் அருவருப்பான பழக்கத்திற்கு ஆளானவர் என்று அவருடைய முன்னாள் பாதுகாவலர் கூறியதாக 'டெய்லி மெயில்' பத்திரிக்கை கூறுகிறது.
நம் நண்பர்கள் சிலர் இப்படி 'பயமுறுத்தும்' அளவிற்கு மூக்குக் குடையும் போது அவரிடமிருந்து எப்படித்தப்பிப்பது என்று நாம் மூக்கை சொரிந்து யோசிக்க வைக்கிறது. எங்கேயும் எப்போதும் அவர்கள் "ஒரே முறை" என்று நினைத்துக் கொண்டு வரைமுறை இல்லாமலும் "யாரும் கவனிக்க மாட்டார்கள்" என்று நினைத்துக் கொண்டு மற்றவர்கள் முகம் திருப்பிக் கொள்ளும் அளவிற்கும் இந்த செயலைச் செய்கிறார்கள்.
இதனால் ஏற்படும் 'நோய்த் தொற்று' என்பது அவரைப் பொறுத்தது. ஆனால் அவரை விட்டு விலகும் நேரத்தைப் பார்ப்பது நம்மைப் பொறுத்தது.
இதே போன்று தான் வாயில் விரலை விட்டு உணவுத் துணுக்குகளை அகற்றுவது, காது குடைவது, வாயில் எச்சிலோடு பேசுவது, தெருவில் வந்து பல் தேய்ப்பது, அக்குளில் கை வைத்து சொரிந்து கொண்டே பேசுவது போன்றவையும் அடுத்தவர் நம்மை 'அண்ட' விடாமல் செய்யும் செயல்களாகும்.
உணவகத்தில் உள்ளவர்களுக்கும்- உண்பவர்களுக்கும்:
உணவகங்களில் பரிமாறப்படும் உணவோடு சேர்த்து அவர்கள் செய்யும் 'சேவை' பாக்டிரியா வையும் பரிமாறுவதுதான்! டைப்பாய்டு நோயை உண்டாகும் பாக்டிரியாக்கள் தண்ணீர் அல்லது உணவோடு கலந்து மனிதர்கள் மீது பயணித்து அடுத்த மனிதர்களுக்கும் பரவுகிறது.
மாசடைந்த, ஆரோக்கியமற்ற தண்ணீர் அல்லது உணவின் மூலம் காலரா, வயிற்றுப்போக்கு போன்றவையும் உண்டாகிறது. விரலை விட்டுக் கொண்டுவரும் தண்ணீர் டம்ளர்கள் விரல் விட்டு எண்ணும் நாளில் நமக்கு நோயைக் கொண்டு வருவது நிச்சயம்.
விலை மலிவான உணவகங்களில் இந்த சுகாதாரம் என்பது கொஞ்சமும் பேணப்படு வதில்லை. விலை குறைவு என்பது கவனக் குறைவு, ஆரோக்கியக் குறைவு என்றும் பொருள்படும்.
உணவகங்களில் உண்ணும் அவசியம் ஏற்படும்போது நன்கு கொதித்து வேக வைக்கப்பட்ட உணவுகளை சூடாக இருக்கும் போதே உண்ண வேண்டும். கொதிக்க வைக்கப் பட்ட தண்ணீர் அல்லது குளோரின் மூலம் சுத்தமாக்கப்பட்ட தண்ணீரைக் கேட்டு வாங்கிக் குடிக்கலாம்.
சாலட் எனப்படும் காய்கறி அல்லது பழக் கலவைகளை உணவகங்களில் உண்ண வேண்டாம். அவை அவ்வளவு சுகாதாரமாக தயாரிக்கப்படுவதில்லை. பழச்சாறு வகைகளும் அப்படித்தான். இறைச்சி வகைகள் கூட பல உணவகங்களில் பயன்படுத்தப்படுபவை புதிய மாமிசங்களாக இருப்பதில்லை.
மேலும் கொழுப்பு நிறைந்ததாக உள்ளன. உணவகத்தில் நல்ல தரமான உடலைக் கெடுக்காத உணவுகளைப் பரிமாறினால்தான் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருவார்கள். உணவகம் நலமாக இயங்கும்.
அதற்கு உணவாகப் பணியாளர்களுக்குச் சில அறிவுறுத்தல்களை உரிமையாளர்கள் கொடுக்கவேண்டும்.
1. அடிப்படையான சுகாதார பயிற்ச்சிகளை வழங்க வேண்டும். அவர்களது ஆடை முதற்கொண்டு சரியாக வடிவமைக்கப்பட வேண்டும். நகங்கள் , தலை முடி சரியாக திருத்தப் பட்டிருக்க வேண்டும்.பற்களை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
2. தரமான சேவை வழங்குவது குறித்தும் விருந்தோம்பல் செய்வது குறித்தும் பயிற்சி வழங்கப் பட வேண்டும்.
3. உணவகங்களில் வேலை செய்ய உண்மையிலேயே விருப்பமுள்ளவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும்.
4. வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் பணியாளர்களுக்குப் பாராட்டும் பரிசும் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். அன்றாட வாழ்வில் அவரவர் நலனைப் பேணுவதோடு மற்றவர் நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.
நம்முடைய வேளைகளில் சோம்பல் படாமல் சுகாதாரத்தில் அக்கறையுடன் செயல் பட்டால் நம்மை சுற்றியுள்ள வர்கள் நம் மீது ஒரு பெருமிதப் பார்வையைப் படர விடுவார்கள். படிப்பறிவு என்பது பகுத் தறிவுடன் இருக்க வேண்டும். பகுத்தறிவு என்பது சுகாதார விஷயத்திலும் இருக்க வேண்டும்.
- க.அருள்மொழி
No comments:
Post a Comment