Saturday, July 7, 2012

மூன்று பிரச்சினைகள் மீதானவிவாதங்கள்


கிடந்தது கிடக்கட்டும் கிழ வனைத் தூக்கி மணையில் வை என் பார்கள்.
அ.இ.அ.தி.மு.க. அரசின் முக்கிய வேலையே கடந்த கால திமுக ஆட் சியில்  நடைபெற்ற நல்ல திட்டங் களை எல்லாம் தலைகீழாகப் புரட்டி அடிப்பதுதான்.
சென்னை -_ கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு விழாவை யொட்டி, அண்ணாவின் பெயரில் நூலகம் ஒன்று திமுக ஆட்சிக் காலத் தில் எழில் சோலையாக உருவாக் கப்பட்டது.
ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க நூலகம் என்று நடுநிலையாளர்களும் சிந்தனையாளர்களும் போற்றும் வண்ணம் அமைத்தது.
ஒன்பதுதளங்களில் பன்னிரெண்டு லட்சம் நூல்களோடு ஒய்யாரமாக நிற்கிறது. படிப்பதற்கும் எழுதுவதற்கும் ஏகப்பட்ட ஏற்பாடுகள்! கல்வி அமைச்சராக இருந்த மானமிகு தங்க பாண்டியன் அவர்களால் பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டது.
ஆடியோ வீடியோ மூலம் தகவல்களை அறிந்து கொள்ளவும் வசதி! நம் காலத்தில் இவற்றை எல் லாம் காணக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது குறித்து  மகிழாதார் யார்? 230 கோடி ரூபாய் செலவில் எட்டு ஏக்கர் பரப்பில் 3.75 லட்சம்  சதுர அடியில்  அட்டாணிக் கால் போட்டு அமர்ந்திருந்தது. அந்த அறிவுக் கூடம். புத்தகத் தேனீயான அண்ணாவின் பெயரால் அமைந் திருந்ததுதான் என்ன பொருத்தம்!
அமெரிக்காவில் தமக்கு நடக்க இருந்த அறுவை சிகிச்சையைக் கூட தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் படித்து முடிக்காத நிலையில் அறுவை சிகிச்சையை ஒரு நாள் ஒத்தி வைக்க  முடியுமா என்று டாக்டர் மில்லரிடம் வேண்டுகோள் வைத்த அறிஞர் அண்ணாவின் பெயரால் இருக்கும் நூலகத்தை அண்ணாவின் பெயரால் கட்சியை வைத்துக் கொண்டு இருக்கும் ஒரு கட்சியின் ஆட்சி வேறு இடத்திற்கு மாற்றுவேன் என்பதும், நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்பதும் - நாம் 21 ஆம் நூற்றாண்டில் அறிவார்ந்த கால கட்டத்தில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை உடலைக் கிள்ளிப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியாகும்.
எந்த அளவுக்கு மனப்போக்கு மாறியிருக்கிறது? கற்றறிந்தவர்கள் கருத்து மணம் பரப்பும் மாநாட்டு அரங்கத்தைத் திருமணம் நடத்த வாடகைக்கு விடுவதும், விவேகத் தோடு உருவாக்கப்பட்ட அந்த வளாகத்தில் சமையல் செய்ய அனுமதிப்பதும் நினைத்துப் பார்க் கப் பட முடியாத ஒன்றே! உயிரோடு ஒரு மனிதனை நிற்க வைத்துக் கொளுத்துவதற்கு ஒப்பாகும் இது!
ஒவ்வொரு கட்டத்திலும் நீதி மன்றம்தான் நெற்றியடி சாட்டை யைக் கழற்றி முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இன்னொரு தகவலும் உண்டு. அண்ணா நூற்றாண்டு - நூலகத்தில் பில்லா 2 படவிழா ரத்து! அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் என்பதுதான் அந்தச் செய்தி! முதல் நாள் உயர் நீதிமன்றம் சுழற்றிய சாட்டையால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது.
அன்று பவுத்தத்தின் பெட்டக மான நாலந்தா பல்கலைக் கழகத்தைப் பார்ப்பனர்கள் தீ வைத்துக் கொளுத்தவில்லையா? உலகப் புகழ் பெற்ற யாழ் நூலகத்தைச் சிங்கள வெறியர்கள் கொளுத்திக் கூத்தாட வில்லையா?
அண்ணா நூலகம் இதுவரை அந்தப் பட்டியலில் இடம் பெறாத வரை மகிழ்ச்சிதான்!
மதிய உணவுத் திட்டம்
மதிய உணவு திட்டத்தினால் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து  இந்து ஏடு ஒரு சிறப்புக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.
குறிச்சி, ரங்கசாமி அய்யங்கார் என்ற ஆசிரியர்தான் ஏழைப் பிள்ளைகளுக்காக சென்னை இந்து தியாலஜிகல் கல்லூரியில் மதிய உணவுத் திட்டத்தை 1918இல் முதலா வதாகஅறிமுகப்படுத்தினார் என்று இந்துவின் கட்டுரை கூறுகிறது.
மதுரையில் சவுராஷ்டிரா சமுதாயம் நடத்திய ஒரு பள்ளியில் 1920இல் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட தகவலும் தவறாமல் குறிப்பிட்டுள்ளது. 1951இல் கல்வி வள்ளல் காமராசர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இத் திட்டத்தையும் அட்சரம் பிசகாமல் எடுத்துச்  சொன்னது வரவேற்கத் தக்கதே!
இவ்வளவுத் தகவல்களையும் வரைந்துதள்ளத் தெரிந்த இந்து ஏட்டுக்கு சென்னை மாநகரில் மாநகராட்சித் தந்தையாக வலம் வந்த வெள்ளுடை வேந்தர் தியாகராயர் அறிமுகப்படுத்திய மதிய உணவு திட்டம் நினைவிலிருந்து மறந்தது எப்படி?
முதல் முதலாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள பள்ளி களில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அன்றைய மாநகராட்சித் தலைவர் பி. தியாக ராயர்; அதன் காரணமாக ஓராண் டுக்குள் மாணவர்கள் சேர்க்கை 3075லிருந்து 3705ஆக உயர்ந்தது என்றால் தெரிந்து கொள்ளலாமே.
நீதிக் கட்சித் தலைவர் தியாகராயர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை மறைப்பதில் பார்ப்பனர்கள் எப்பொழுதுமே குறியாக இருந்து வருகின்றனர்.
திருவாளர் சோ. ராமசாமி துக்ளக் இதழில் (9.5.2012 பக்கம் 31) அளித்த கேள்வி பதில் பகுதியில்கூட இலவச மதிய உணவுத் திட்டத்தை முதலில் கொண்டு வந்தவர் காம ராஜர்தான் என்று பதில் கூறி யதையும் கவனிக்க வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவைச்சேர்ந்த கர்னல் ஆல்கட் என்பவரால் சென்னை அடையாறில் தாழ்த்தப்பட்ட மக் களுக்காகத் 1902இல் தொடங்கப் பட்ட ஆல்காட் பள்ளியில்தான் மதிய உணவு முதன் முதலில் அறி முகப்படுத்தப்பட்டது.
ஆல்காட் ஆரம்பித்த முதல் தாழ்த்தப்பட்டோர் பள்ளி
இலவச உணவுத் திட்டம் பள்ளி களில் வழங்கப்பட்டதற்கு இவ்வள வுத் தகவல்கள் இருக்கும்போது இந்து ஏடு ஏதோ ஓர் அய்யங்கார் தான் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்ததாகச் சாதிப்பது எல்லாம் சரியானதுதானா?
எதிலும் வருணப் பார்வைதானா?
கேள்வி: ஓர் ஆணின் வெற்றிக் குப்பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பவர்கள் ஒரு பெண்ணின் வெற்றிக்குப்பின் ஓர் ஆண் இருக் கிறார் எனச் சொல்வதில்லையே ஏன்?
பதில்: வெற்றி அடைகிற பெண் சம்பாதிப்பதை அவனே அனுப வித்து விடாமல், அதில்தானும் பங்கு பெறுவதற்காகவோ, அல்லது மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு விடுவதற்காகவோ ஓர் ஆண் திட்ட மிடுவதில்லை. அதனால் வெற்றி பெறுகிற பெண்ணின் பின்னால் நின்று கொண்டு கண்காணிப்பு வேலையில் ஆண் ஈடுபடுவதில்லை. அவன்தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போகிறான். ஒரு பெண் ணின் வெற்றிக்குப் பின்னால் ஆண் இல்லாததற்கு இதுதான் காரணம்.
(-துக்ளக் 13.6.2012 சோ ராமசாமி)
பெண்ணின் வெற்றிக்கு ஆண் இருக்கிறாரா இல்லையா என்பது தான் கேள்வி; ஆம் என்று சொல்ல வேண்டும் அல்லது இல்லை என்று சொல்ல வேண்டும். ஆனால் சோ ராமசாமி தனக்கே உரித்தான பாணியில் பிரச்சினையைத் திசை திருப்பி, வேறு தளத்திற்குக் கொண்டு சென்று குழப்பும் வேலையை இதிலும் செய்துள்ளார்.
பெண் சம்பாதிப்பதில் ஆண் உரிமை கொண்டாடுவது கிடையாதா? பணியில் இருக்கும் பெண் சம் பாதிப்பதை அப்படியே கறாராகத் தன்னிடம் கொடுத்தாக வேண்டும் என அதிகாரம் செய்யும் ஆண்கள் நாட்டில் இல்லையா?
தன்னைவிட அதிகம் படித்த பெண் மனைவியாக இருந்தால் அந்த ஆண் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறான் என்பது நடை முறையில் காணக் கூடிய ஒன்று தானே!
தன்னைவிட அதிகம் படித்து, வேலைக்குச் செல்லும் மனைவியாக இருந்தால் ஆண் எப்படி எப்படி எல்லாம் சந்தேகப்படுகிறான்? எத்தனை எத்தனை குடும்பங்களில் உள் கட்சிப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது, இத்தகு பிரச்சனைகளால் விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றம் வரை செல்லு வதெல்லாம் நாட்டின் நடப்புத்தானே?
இந்துமதத் தத்துவத்தின் படி பெண் என்பவர் ஒரு உயிருள்ள ஜீவனே அல்லவே! பெண்ணானவர் பால்ய பருவத்தில் தந்தையின் ஆக்ஞையிலும், யெனவனத்தில் கணவனின் ஆக்ஞையிலும், வயோ திகத்தில் மகனின் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியவள் என்பதுதானே இந்து மத மனுதர்மத்தின் கட்டளை.(அத்தியாயம் 5 சுலோகம் 148).
இந்த இந்து மதத்தை தனது ஊனும் உயிரும் ரத்தவோட்டமு மாகக் கருதுகிற சோ ராமசாமி அய் யர்களிடமிருந்து வேறு எது மாதிரியான பதிலை எதிர்ப்பார்க்க முடியும்?
கேள்வி: சட்டசபையில் முதல்வர் துதி சலிப்படையும் அளவுக்கு அதிகமாக உள்ளதே! தாங்கள் இதைக் கண்டு கொள்ளாதது ஏன்?
பதில்: யார் யாரை யார் யார் போற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதுதான் என் வேலையா? உங்களைக் கூடத்தான் உங்கள் வீட்டில் யார் யாரோ பாராட்டிக் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் நான் கண்டு கொள்கிறேனா என்ன?
- இதுவும் சோ ராமசாமி அதே துக்ளக் இதழில் எழுதிய பதில்தான்.
கலைஞர்பற்றிய கேள்வியாக இருந் திருந்தால் இதுமாதிரியான பதிலை சோ ராமசாமி அய்யர் எழுதுவாரா?
கேள்வி நியாயமானது _ உண்மை யானது என்பது சோ அய்யர் வாளுக்குத் தெரியாதா? நன்றாகத் தெரியும். ஆனாலும் அவரால் இதற்குப் பதில் சொல்ல முடியாது. சொன்னால் அவாள் ஆத்துப் பெண்ணை அவமதிப்பதாக ஆகி விடும். அது வட்டியும் முதலுமாக எதிரொலிக்கும் அதனால்தான் இந்தச் சாமர்த்தியமான பதில்!
கேட்கப்பட்ட கேள்வி சட்ட சபையில் ஆளும் கட்சி துதிபாடுவது பற்றி _ இதற்குப் பெரிய ஆராய்ச் சிகள் தேவையில்லை. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் கேட்கப்பட்ட கேள்வி ஜெயலலிதாவைப் பற்றி என்பதால் தடுமாறுகிறார்.
கலைஞர் வீட்டுப் பிரச்சினைபற்றி யெல்லாம் எழுதத் தெரிந்தவருக்கு சட்டசபையில் அப்பட்டமாக நடப்பது எல்லாம் தெரியாதா?
இதுபோன்ற இடங்களில்தான் பார்ப்பனர்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...