Wednesday, April 11, 2012

திராவிடர் பார்வையல்ல


பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு ஆளான திராவிடர் இனம் - அதிலிருந்து மீட்கப்பட திராவிடர் இயக்கம் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழில் மறுமலர்ச்சி- தமிழினப் பண்பாட்டு மீட்டெடுப்பு என்கிற  வகையில் திராவிடர் இயக்கத் தின் தன்மான இயக்கத்தின் சாதனை பெரிது.
அக்ராசனர் தலைவர் ஆனதும், நமஸ்காரம் வணக்கம் ஆனதும், வந்தனோபசாரம் நன்றியுரை யானதும், உபந்நியாசம் சொற்பொழிவானதும் தன்மான இயக்கத்தின், திராவிடர் இயக்கத்தின் தனிப் பெரும் சாதனைகளாகும்.
பார்ப்பனீய, சமஸ்கிருத மயம் என்பவை திராவிடர் இன மக்களிடத்திலே இடையிலே புகுந்து சின்னா பின்னப்படுத்தின.
தமிழன் கட்டிய கோவில்களில் தமிழன் அர்ச்சகர்  ஆக முடியாது. தமிழ் அரசர்கள் கட்டிய கோயில் களில் தமிழ் வழிபாட்டு முறை என்ற நிலை தகர்க்கப்பட்டது.
கடவுள் பெயர்களும், தமிழர்களின் பெயர்களும் சமஸ்கிருதமாகின; தமிழன் இல்லங்களில் பார்ப்பன மயப் பண்டிகைகள் உள்ளே புகுந்தன.
இதன் விளைவு - தமிழர்கள் தங்கள் நிலை திரிந்தனர். இளங்கோ என்றும், அறிவுடைநம்பி என்றும் இருந்த தமிழர்களின் பெயர்களும் கேசவன் என்றும், ஆதிகேசவன் என்றும் (தமிழில் மயிரான் என்று பொருள்) குஞ்சிதபாதம் என்றும் சமஸ்கிருதமாகின.
தமிழர் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாகின. மயிலாடுதுறை மாயவரம் ஆயிற்று, திருமரைக்காடு வேதாரண்யம் ஆயிற்று, திருமுது குன்றம் விருத்தாசலம் ஆயிற்று. இப்படி தமிழன் ஊர்ப் பெயர்கள் எல்லாம் திட்டமிட்ட வகையில் சமஸ்கிருதமயமாக்கப்பட்டன.
தீபாவளிக்கும் தமிழர்களுக்கும் உறவு என்ன? தொடர்பு என்ன? ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் எப்பொழுது வந்து இங்கு குடிபுகுந்தன?
தமிழ் ஆண்டு என்று அறுபது பெயர்களைச் சொன்னவர்கள் யார்? அறுபது ஆண்டுகள் எப்படி பிறந்தனவாம்? கிருஷ்ணன் என்ற கடவுளுக்கும், நாரதன் என்ற கடவுளுக்கும் பிறந்ததுதான் 60 தமிழ் ஆண்டுகள் என்று சொன்னதை அறிவும், ஒழுக்கமும் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா?
தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்பட்ட அந்த அறுபதாண்டுகளில் மருந்துக்காவது ஒரு பெயராவது தமிழில் உண்டா?
எத்தனை எத்தனைக் கூட்டங்களில் தந்தை பெரியார் எடுத்துக் கூறியிருப்பார் - எழுதிக் குவித்திருப்பார்?
மொழி மான உணர்வும், இனமான உணர்வும் தமிழர்களுக்கு ஊட்டப்பட்டது சாதாரணமான ஒன்றா?
1921இல் தமிழ் அறிஞர்கள் கூடி முடிவெடுத் ததுதானே தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது? அவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளா? அல்லவே! தமிழ் கற்றாய்ந்த கடல் போன்ற புலமை உடையவர்கள் ஆயிற்றே!
மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது தைமுதல் நாள் புத்தாண்டு - திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம் என்பது இந்த முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று உண்மைகளைப் பின்னணியாகக் கொண்டுதானே சட்டம் இயற்றப்பட்டது.
இதனை அரசியல் கண்கொண்டு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பார்க்கலாமா?
அண்ணாவின் பெயரையும், திராவிட  என்ற இனப் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்ட ஒரு கட்சியின் பொதுச் செயலாளர், ஆட்சியின் முதல்வர் இந்தப் பின்னணிகளை மதிக்க வேண்டாமா?
சித்திரை முதல் நாள்தான் தமிழ் ஆட்சிப் பிறப்பு என்று கூறி அந்நாளில் தமிழ் அறிஞர்களுக்கு எல்லாம் அரசு சார்பில் விருது என்று அறிவிப்பது, விதாண்டாவாதமும், வெறுப்பு கலந்த அரசியல் கலவையும் என்பதல்லாமல் வேறு என்னவாம்?
எந்தக் கண்ணோட்டத்தில் அதிமுக ஆட்சி சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் செய்தாலும், வரலாற்றின் பெரும் பழிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆளாவதிலிருந்து தப்பித்துவிட முடியாது.    திராவிடர் இயக்கத்தில் ஆரியம் புகுந்ததால் ஏற்பட்ட கேடு என்று தான் வரலாறு எங்கும் பேசப்படும்.
திராவிடர்  கழகத்திற்கு அரசியல் பார்வை கிடையாது. கொள்கைப் பார்வைதான். அந்த அடிப்படையில் அழுத்தமாகக் கூறுகிறோம். சித் திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது திராவிடர் இயக்கப் பார்வையல்ல - ஆரியக் கலாச்சாரப் பார்வையே!


.
 1

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...