Saturday, February 4, 2012

உச்சமும் அச்சமும் தேவை வாழ்க்கைக்கு!


மனிதர்களின் வாழ்வை பொய் என்று பிதற்றும் பித்தமனிதர்களிடம் நாம் ஒதுங்கியே வாழ வேண்டும்.
செத்தபிறகு சிவலோகம் - வைகுந்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்.
பித்த மனிதர், அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! என்று சுப்ரமணிய பாரதியார் பாடினார்!
நல்ல அடைமொழி - பித்தமனிதர் என்பது!
பித்த மனிதர்கள், சுத்த மனிதர் களாவது எப்படி? எப்போது?
இவ்வுலக வாழ்வுதான் மெய்; மற்ற உலகம் பொய்யானது - புரட்டானது கற்பனையின் உச்சம்! என்று கருதி வாழ்க்கை அமைத்து,
குற்றம் புரியாது மனத்துக்கண் மாசு இல்லாத வாழ்க்கையாக நம் வாழ்க் கையை அமைத்துக் கொள்ளுதலும், அப்படி வாழும்போது தொண்டு மனப் பான்மையோடு பிறருக்குத் தொண்டு செய்து, மன மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அதன் மூலம் செல்வதே சிறந்த வாழ்க்கை யாகும்!
பதவி, பட்டம் பெருமைகள், பணத்தை அளவு கடந்து சேர்க்க ஆலாய்ப் பறந்து, நொந்து நூலாகிப் போகும் செக்கு மாட்டு வாழ்க்கை மனிதர்களை தற் காலிக மகிழ்ச்சிக்கு உட்படுத்தினாலும் கூட, நிரந்தர துன்பம், துயரத்திற்கும், தொல்லைக்கும் ஆளாக்கி விடுகிறதே!
எத்தனைப் பேர்களை அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம்.
பணத்தின், பதவியின் உச்சத்திற்குச் செல்வதற்காக அவர்கள் குறுக்கு வழிகளில் ஈடுபட்டு தங்களுக்கு ஏதோ அபரிமித செல்வாக்கு வற்றாது கிடைத் துக் கொண்டே இருக்கும் என்று தவ றான கணக்குப் போட்டு, தலை கால் தெரியாமல் ஆடிய பிறகு, தலைகுப்புற விழுவதும் எழ முடியாமல் ஏங்கித் தவிப் பதும் கண்டு, மற்ற மனிதர்கள் நாம் அனை வரும் பாடம் கற்றுக் கொள்ள வேண் டாமா?
இயற்கை நியதி (Natural Law) என்பது அறிவுப் பூர்வமான ஒன்று. மறுக்க முடியாதது; தப்பிக்க முடியாதது.
ரப்பர் துண்டை இழுக்க இழுக்க அது நீளும்; ஆனால் ஓரளவு வரைதானே! அது தெரியாமல் இழுத்துக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் அது அறு படத்தானே செய்யும்?
குழந்தைகள் பலூனை ஊதும் அனுபவத்தையும் எண்ணிப் பாருங்கள். குழந்தைகளுக்கு ஊத ஊத அது பெரிதாக, பெரிதாக மகிழ்ச்சிக் கூத்து, அதற்காக மேலும் ஊதியவுடன் பட்டென்று வெடிக்கும் நிலை ஏற்பட்டு, பிறகு அதே குழந்தைகள் அழுது கொண்டே இருப்பர்!
வாழ்வின் உயர்நிலைக்கு உச்சத் திற்குச் செல்வது தவறல்ல; ஆனால் ஒரு எல்லை தாண்டும் நிலையில் அதற்கு மேலும் செல்ல வேண்டுமா என்று எண்ணிட வேண்டும்.
எண்ணித் துணிக கருமம் என்பதில் எண்ணி என்பதற்கு ஆழமான பொருள் உண்டே!
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (குறள் 124)
என்ற குறளில் வள்ளுவர் தரும் அறிவுரை மிகவும் அருமையானது, உச்சம் செல்வோருக்குத் தேவையானது!
மேலே செல்லச் செல்ல அடக்கம் பணிவு, கனிவு, எல்லாம் நம்மை எப்போதும் போல் வாழ்க்கையை நடத்திச் செல்லும் எளிமைக் குணமே - அடக்கத்தின் வெளிப் பாடு ஆகும்!
மலையைவிட உயர்ந்த மாமனிதர் களாக அவர்களது உயரம், அடங்கியதன் மூலம் தெரியும் என்கிறார்!
மாமனிதர்கள் என்பவர்கள் இவர்களே! உச்சத்திற்குச் செல்லச் செல்ல அது சுமையாகி விடக் கூடாதே, நம்மை மாற்றி விடக் கூடாதே, என்று  அஞ்சுவது அஞ்சும் அச்சம் தேவை அதுவே வாழ்க்கைக்கு சரியான கலங்கரை விளக்கு ஆகும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...