Thursday, January 26, 2012

அறிவு வேட்டை அவசியம்! அவசியம்!!


அறிவு என்பது பலதரப்பட்டவை.
பட்டறிவு, பகுத்தறிவு, படிப்பறிவு, நுண்அறிவு, பொது அறிவு - இப்படிப் பலப்பல உண்டு!
நம் நாட்டில் அறிஞர்கள் என்பவர்கள் கூட, அறிந்திராத செய்திகள் அநேகம் உண்டு. அதில் அதிசயமும் இல்லை; தவறும் இல்லை. அது ஒரு குறையும் ஆகாது!
ஆனால்,  படித்தவர்கள் என்பவர்களுக்குப் பட்டறிவும், (அனுபவத்தால் பெறும் முதிர்ச்சியின் வெளிப்பாடு) பகுத்தறிவும் மிகவும் இன்றியமையாதவை.
ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? எங்கு? - என்று எல்லாம் கேள்விகளாகப் போட்டு ஆராய்ந்து அறிவதே பகுத்தறிவு.
பகுத்தறிவு - பகுத்தறிவாளர்கள் என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன என்று சிலர் கேட்கலாம்!
வேறுபாடு உண்டு; பகுத்தறிவு - ஆறாவது அறிவு - அய்ம்புலன்களால் அறியப்படுவதைப் பகுத்து, ஆராய்ந்து, அலசி அறிவதே பகுத்தறிவு. அது மனிதனுக்குள்ள தனிச்சிறப்பு.
அய்ந்தறிவு மிருகங்களுக்கு மனிதர்களை விட சில விடயங்களில் கூடுதல் ஆற்றல் உண்டு.
உதாரணமாக மோப்பத்தின் மூலம் குற்றவாளிகளைக் கண்டறியும் சக்தி நாய்களுக்கு  இருப்பதால்தான் புலனாய்வுத் துறையில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன!
என்றாலும் ஆராய்ந்து பார்த்து அதை சமூகநலம் சார்ந்ததாக ஆக்கும் திறமை மனிதர்களுக்கே உள்ளது.
சென்றவிடத்தில் செலவிடாது, தீமைகளை அகற்றி, நன்மைகளையே மய்யப்படுத்தி செயல்படும்படிச் செய்யும் அறிவை, மேலும் கூர்மை தீட்டிப் பயன் பெறுவதற்கே பகுத்தறிவு.
சில நேரங்களில் மனிதர்கள் எவ்வளவுதான் கசடறக் கற்றவர்களாக, அவர்தம் துறையில் விளங்கினாலும் மற்ற துறை அறிவில் மற்றவர்களைத் தான் நாடவேண்டும்.
எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்திருப்பதோ, கற்றுக் கொள்ளுவதோ, முடிந்த செயல் அல்ல!
ஆனால் குறைந்தபட்ச பொது அறிவு சமூகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் தேவை!
படிப்பு வேறு, அறிவு வேறு என்பதை அனுபவம் மிக்க அறிஞர் பெருமக்கள் கூறுவர்.
ஆம். அது உண்மைதான். அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ நிகழ்வுகளில் இதனைக் கண்டறியும் வாய்ப்பு கிடைக்கிறது!
ஒரு தொழிற்படிப்புக் கல்லூரி நிறுவனம்; அதில் ஒரு தலைமைப் பேராசிரியர் பணிக்கான நேர்காணல், அதில் கலந்து கொண்டவர்கள் -  அந்த ஒரு பதவிக்கு அய்ந்து பேர்! பரவாயில்லை. போட்டி குறைவுதான்!
அத்தனைப் போட்டியாளர்களும் ஒருவர் தவிர்த்து மற்ற 4 பேர்களும் பிஎச்.டி. (Ph.D.) பட்டம் பெற்று பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோர்.
ஒடுக்கப்பட்டோர், சிலர் தாழ்த்தப்பட்டோர்  Ph.D. சிலர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிலர் பிற்படுத்தப் பட்டோர்.
ஒரே ஒருவர் மட்டும் (Ph.D. ஆய்வு முடித்து நேர்காணலுக்குக் கலந்து கொண்டிருந்தார்.
அத்துணைப் போட்டியர்களும் ஏற்கனவே 3 ஆண்டு, 4 ஆண்டுகளுக்கு முன்பே முனைவர் (Ph.D.  டாக்டர்) பட்டம் பெற்றவர்கள்.
நேர்காணலில் அவர்களுக்கு (தனித்தனிதான்) பல கேள்விகளில் ஒன்று, தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு உண்டா? இருந்தால் எத்தனை விழுக்காடு?
இந்தக் கேள்வி சுமார் 4 பேர்களிடமும் கேட்கப்பட்டது. (மறந்துவிடாதீர்கள் எல்லாம் Ph.D. பட்டதாரிகள்).
ஒருவர் கூட முழுமையாகச் சரியாக விடை அளிக்கவே இல்லை! தடுமாறினர்!
ஏற்கெனவே இவர்கள் இட ஒதுக்கீட்டில்தான் கல்லூரிகளில் இடம் பெற்று, தற்போதுள்ள பதவிகளை அந்தந்த நிறுவனங்களில் அனுபவிக்கின்றனர்.
சிலர் தத்தம் பிரிவுக்கு உள்ள இட ஒதுக்கீட்டைக் கூட சரியாகச் சொல்லவில்லை!
ஆனால், கிராமத்திலுள்ள அதிகம் படிக்காத ஒரு விவசாயி அவர் விடுதலையை நாளும் படிப்பவராக இருப்பின், பட்டென்று பதில் கூறுவார் 69 சதவிகிதம் என்று!
பல அய்.ஏ.எஸ். அதிகாரிகள் கூட இட ஒதுக்கீட்டைப் பற்றி - சமூக நீதிப்பற்றி மிகவும் தவறான கருத்துகளை அசை போட்டுக் கொண்டிருப்பது இன்றைய பரிதாப நிலை!
மண்டல் கமிஷன் பற்றி அறிந்தவர்கள் அதன் பரிந்துரை என்னவென்று பிற்படுத்தப்பட்ட அதிகாரிகளிடம் கூடக் கேளுங்கள். பதில் சரியான விடை கிடைக்கிறதா என்று பாருங்கள்!
தத்தம் துறையில் நிபுணத்துவம் எவ்வளவு இருந்தாலும் பொது அறிவு - அடிப்படை அறிவு - சமுதாயம் சார்ந்தவை,  மக்கள் நலம் சார்ந்தவை பற்றி அறியாமையில் உழலுபவர்களாக அவர்கள் இருப்பின் அது ஏற்கத்தக்கதா?
எனவேதான் பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்; பகுத்தறிவைச் சுருக்கிக் கொள்ளாதீர்கள்! மூடநம்பிக்கைதான் தன்னம்பிக்கை யின் முதல் எதிரி! எனவே அறிவு சார்ந்த செய்திகளை பசியால் இரைதேடும் பிராணிகளைப் போலவே வேட்டையாடுவீர்!
                                                                                                                                                                                           - கி வீரமணி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...