Thursday, January 26, 2012

இதோ ஒரு புத்தாக்க புத்தகம்!


கி வீரமணி
சிங்கப்பூரில் ஒரு புத்தக யாத்திரை நடத்தி ஒரு புதிய புத்தகக் கடைக்குச் சென்று பல்வேறு புதிய நூல்களை - நமக்குப் பிடித்த நூல்களை வாங்கி அளிக்கும் நண்பர் மா. அன்பழகன் அவர்கள்,
வளரும் உலகம் (The Developing World) என்ற தலைப்பில் சுவீடன் நாட்டுக் கல்வி அறிஞர் பிரெட்ரிக் ஹாரென் என்பவர் எழுதிய மிகவும் பயனுள்ள ஒரு புத்தகம் கிடைத்தது. மிகவும் அரிய சிந்தனைத் தொகுப்புகளைக் கொண்டதாக அந்தப் புத்தகம் அமைந்துள்ளது!
புத்தாக்கச் சிந்தனைகள் (Innovative Ideas) ஏராளம் இன்றைய உலகில் எங்கிருந்தும் கிடைக்கின்றன என்பதைப் புதிய கோணத்தில் அவர் அளித்துள்ளார்!
தொழில் அறிவு, தகவல் தொழில்நுட்பப் புரட்சிமூலம் கிடைத்துள்ள பல்வேறு நன்மைகள், இணையப் புரட்சிக்கு இணையான அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி அண்மைக் காலத்தில் எங்கும் இல்லை என்பதை மிகவும் துல்லியமாக விளக்கி உள்ளார்!
ஏழு நூல்கள் எழுதிய அவரது ஆற்றல் மிகவும் பாராட்டத்தக்கது.
30 நாடுகளுக்குச் சென்று 1000 கருத்தரங்க மாநாடுகளில் பங்கேற்றுள்ளார் அவர்.
அவரது தொழில் சார்ந்த அறிவு நூல்கள் 14 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன!
2007 இல் அவர் ஸ்வீடனில் இந்த ஆண்டின் தலைசிறந்த பேச்சாளர் என்ற விருது வழங்கப்பட்டவராக உள்ளார்!
ஃபியானோ மில்லர் (Fiona Miller) என்ற விருது பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்து ஆசிரியராக பணியாற்றிய அம்மையார் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்!
இவர் சீனா சென்று சுமார் மூன்று ஆண்டுகள் (2005 முதல் 2008 வரை) தங்கியிருந்து ஆய்வு செய்ததோடு, உரைகளையும் ஆற்றியுள்ளார்.
தற்போது சிங்கப்பூரில் தங்கி ஏறத்தாழ அதையே தனது குடியிருப்பு நாடாக ஆக்கியுள்ளார் எனத் தெரிகிறது.
மலேசியா, மியான்மா, தாய்லாந்து, இந்தியா போன்ற பற்பல நாடுகளுக்குச் சென்று பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து, புத்தாக்கச் சிந்தனைகள் கல்வித் துறையில் எப்படியெல்லாம் உருவாகவேண்டும் என்றும் உரையாற்றி பேட்டி தந்துள்ளார்!
21 ஆம் நூற்றாண்டு புத்தாக்கத்தை(Innovaters) நோக்கிச் செல்லும் மாநாடு!
இனிவரும் உலகில் எப்படி புத்தாக்கம் உருவாகும் என்பதை நமது பட்டறிவால் 1947, 60, 70 ஆண்டுகளுக்கு முன்பே தமது சுய சிந்தனையாலும், பட்டறிவினாலும், பரந்த அனுபவங்களாலும் வடித்துக் காட்டினார் தந்தை பெரியார்!
இன்றைய கைத்தொலைப்பேசி காணொளி (வீடியோ கான்பரன்சிங்) பரிசோதனைக் குழாய் குழந்தை பிறப்பு முதலியவைகளை - விஞ்ஞானிகளே வியக்கும் வண்ணம் பேசினார்; எழுதினார் பெரியார் என்ற தொலைநோக்காளர் (யுனெஸ்கோ அதைக் கண்டறிந்ததால்தானே அப்படி அழைத்தது!).
ஃபிரெட்ரிக் ஹாரேன் அவர்கள் ஒரு புத்தாக்கமான கருத்தை வைத்தே இந்தப் புத்தகத்தை தொடங்குகிறார்!
இன்றைய உலகில் வளர்ந்த நாடுகள் (Developed Countries) என்றும், வளரும் நாடுகள் (Developing Countries)   என்றும் பிரித்துப் பார்ப்பது தவறான அணுகுமுறை என்று சுட்டிக்காட்டுகிறார்!
இந்தியா, சீனாவை மற்ற வளர்ந்த நாடுகளாக அமெரிக்கா, சுவீடன், அய்ரோப்பிய நாடுகளைக் காட்டுகிறார்கள். அது தவறு.
வளர்ச்சி என்பது ஒரு தொடர்ச்சி. வளரும் நாடுகளில் தான் அதிக முன்னேற்றம், வளர்ச்சி அடைந்துவிட்ட நாடு என்றால்,  அங்கே எல்லாம் முற்றுப் பெற்றுவிட்டதாக அல்லவா ஆகிவிடும்.
இந்த நூற்றாண்டில் (21 ஆம் நூற்றாண்டு) கருத்து வளம், புதிய சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி உண்டா?
நாளும், மணியும், நிமிடமும், வினாடியும் வளர்ச்சி! வளர்ச்சி! புதுமைப் புத்தாக்கம் பிறந்து கொண்டே உள்ளது!
இணையத்தின்மூலம் வளரும் நாடுகளில் உள்ள இளைஞர்களின் புத்தாக்கம் (Innovative Ideas)  எவ்வளவு செய்திகளை - சாதனைகளைக் குவிக்கிறது தெரியுமா? இப்படி அடுக்கடுக்காகச் சொல்லி மாணவர், இளைஞர்கள், கல்வியாளர்களை நன்கு ஊக்கப்படுத்தி உழைக்கத் தூண்டுகிறார் இவர்!
அனைவரும் படிக்கவேண்டிய நூல் மட்டுமல்ல; படித்துப் பின்பற்றி நடக்கத் தூண்டும் தூண்டுகோலாகவும் இப்புத்தகம் அமைகின்றது!
சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ கூறிய ஒரு கருத்தை அருமையாகச் சுட்டிக் காட்டுகிறார்; தனியாருக்குக் கூட சீனப் பொதுவுடைமை நாடு கதவு திறந்ததுபற்றிக் கூறுகையில்,
பூனை கறுப்பாக இருந்தால் என்ன? வெள்ளையாக இருந்தால் என்ன? எலிகளைப் பிடிக்க வேண்டியதுதானே முக்கியம்? என்று அதிபர் பதில் அளித்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்;
இப்படி பல சுவையான தகவல்கள் அப்புத்தகத்தில் உள்ளன. படித்துப் பயன் பெறுக!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...