Tuesday, December 6, 2011

நல்ல திருப்பம்தான்


பக்தர் உலகத்திலும் நாட்டுணர்ச்சி - இன வுணர்ச்சி வெடித்துக் கிளம்பியிருப்பது வரவேற்கத் தக்கதே!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு அத்துமீறி முரண்டு பிடிக்கிறது. சட்டம், நியாயம், உண்மைக்கு மாறாக நடந்து கொண்டு வருகிறது.

999 ஆண்டு ஒப்பந்தம் 1945ஆம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டதாகவெல்லாம் உளற ஆரம்பித்து விட்டது.

அடுத்த கட்டமாக கேரள எல்லைகளில் தமிழ் நாட்டுப் பேருந்துகள் செல்வதற்குத் தடை விதிப்பது உள்பட வன்முறையிலும் கேரள மக்கள்   - மலை யாளிகள் துள்ளித் திரிகின்றனர். தமிழர்களும் எல்லைப் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக முதல் அமைச்சரும், கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து இருமுடி தூக்கிச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யப்பப் பக்தர்களிடம்கூட இனவுணர்ச்சி ஏற்படும் வகையில் உணர்வு பீறிட்டு இருப்பது வரவேற்கத்தக்கதே!

தமிழ் எழுச்சி இயக்கம் என்னும் அமைப்பின் தலைவர் வேலுமணி தலைமையில் கடந்த இரண்டாம் தேதி சென்னை அம்பேத்கர் மணி மண்டபம் எதிரில் இருந்து அய்யப்பப் பக்தர்கள் ஊர்வலம் சென் றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கருகே சென்றவுடன் அந்த அய்யப்பப் பக்தர்கள் கழுத்தில் அணிந்திருந்த அய்யப்பப் பக்தர்களுக்குரிய மாலைகளைக் கழற்றி எறிந்துள் ளனர். சட்டையையும், மேல் துண்டையும்கூட வீசி எறிந்துள்ளனர்.

மீட்டெடுப்போம், மீட்டெடுப்போம்! - முல்லைப் பெரியாறு அணையை மீட்டெடுப்போம்! காப்பாற் றுவோம், காப்பாற்றுவோம்! முல்லைப் பெரியாறு அணையைக் காப்பாற்றுவோம்.

போக மாட்டோம், போக மாட்டோம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குப் போக மாட்டோம்! என்கிற முழக்கங்களையும் ஒலித்துள்ளனர்.

இது ஒரு நல்ல திருப்பம்தான் - பக்தியினால் புத்தி மயங்கி, நாட்டு நடப்பைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பதைவிட பக்திக்கும் மேலானது நம் உரிமை என்ற புத்தி வந்தது வரவேற்கத்தக்கதாகும்.

இன்னொரு வகையிலும் அய்யப்பப் பக்தர்கள் சிந்திக்கலாம். கடவுள் என்றால் உண்மை, நேர்மை, நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டும் என்று தானே பக்தர்கள்கூட விரும்ப வேண்டும். அப்படிப் பார்த்தால் இந்த அய்யப்பன், கேரள அமைச்சர்களுக்கும், அரசி யல்வாதிகளுக்கும், மலையாளிகளுக்கும் நல்ல புத் தியைக் கொடுக்கவில்லையே! நம்பிக்கையுள்ள தமிழக பக்தர்கள்  இப்படி சிந்திக்க வேண்டும் அல்லவா!

கேரளாவில் கட்சிகளை, மதங்களை, ஜாதிகளைக் கடந்து ஒன்றுபட்டு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தங்கள் பக்கம் நியாயம் இல்லை என்பது நன்கு தெரிந்திருந்தும், அவற்றையெல்லாம் குப்புறத் தள்ளி, ஒன்றிணைந்து குரல் கொடுக் கிறார்களே - அந்த உணர்வு நமக்கு இருக்க வேண்டாமா?

அதுவும் அனைத்து நியாயங்களும் நம் பக்கம் நன்கு இருக்கும்போது பக்தியையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஒற்றைக் குரலில் முழங்குவது தானே சரியானது? அந்த வகையில் தமிழக அய்யப்பப் பக்தர்கள் நடந்து கொண்டு இருப்பது வரவேற்கத் தக்கதேயாகும்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பது அறிவின் உச்ச கட்டமாகும். அந்த அளவுக்குச் செல்ல முடியாவிட்டாலும் வேறொரு வகையில் அவர்களின் சிந்தனையைத் திருப்பலாமே!

தமிழ்நாட்டில் கோவில்களுக்கா பஞ்சம்? தடுக்கி விழுந்தால் கோவில்களில்தானே விழ வேண்டும். நடைபாதைகள் வரையிலும் கோவில்கள் யாருடைய அனுமதியும் இன்றி தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ளதே!

இவையன்றி விளம்பரப்படுத்தப்பட்ட கோவில்கள் எத்தனை எத்தனையோ! பழனி முருகன் கோவிலி லிருந்து ஆரம்பத்தால்   சிறீரங்கம் ரெங்கநாதன், திருச்செந்தூர் சுப்பிரமணியன், நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று சொல்கிறார்களே - அந்த திருவண்ணாமலை அண்ணாமலையார், சிதம்பரம் நடராசன் என்று எத்தனை எத்தனையோ கோவில்கள் உள்ளனவே!

இந்தக் கடவுள்களுக்கெல்லாம் சக்தியில்லையா? சக்தியில்லை என்று நினைத்துக் கொண்டு தானே இன்னொரு மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குச் செல்லுகிறார்கள்!

இந்த நேரத்திலாவது தமிழ்நாட்டுப் பக்தர்கள் இந்தக் கோணத்தில் சிந்திப்பது கொஞ்சம் நல்லது.

குறைந்தபட்சம் நம் நாட்டுப் பணமும், பொருளும் இன்னொரு மாநிலத்திற்குப் போகாமலாவது இருக் கிறது அல்லவா! இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சிந்தித்தால், கறுப்புச் சட்டைக்காரர்கள் கூறும் கருத்துகள் பக்கமும் கவனம் திரும்பும்  வாய்ப்புகள் உண்டு அல்லவா!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...