சிறீரங்கத்தில் அர்ச்சகப் பார்ப்பனர்களைத் தூக்கிச் செல்ல மீண்டும் முயற்சியா?
திராவிடர் கழகம் களம் இறங்கிப் போராடும்!
சிறீரங்கத்தில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்களைப் பல்லக்கில் வைத்துத் தூக்கும் மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் தொடர்ந்தால், திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
சிறீரங்கத்தில் பிரம்ம ரதம் என்ற பெயரில் ஆண்டுக்கு மூன்று முறை, பார்ப்பன அர்ச்சர்களைப் பல்லக்கில் சூத்திரத் திராவிடர்கள் - தமிழர்கள் மற்றும் அய்யங்கார்கள் தூக்கி பவனி வரும் வழக்கம் நடைபெற்று வந்தது. நமது எதிர்ப்பாலும், மான உணர்ச்சியும், நியாய உணர்ச்சியும் உள்ள திராவிடப் பக்தர்களின் பேராதரவினாலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலமும் இம்முறை நிறுத்தப்பட்டு - அதாவது மனிதர்களை மனிதர்களே சுமக்கும் இழி கொடுமை கைவிடப்பட்டது.
பார்ப்பன அர்ச்சகர்களைத் தூக்கும் கொடுமை
1. வைசீக புராணம் படிப்பவரை (அய்யங்கார்த் திருமேனியை) சாத்தார வைஸ்யரும், சேர்ந்து தூக்கி, கோயிலிலிருந்து வீதிக்கு வந்து வீதி வழியாக அவர் வீட்டில் கொண்டு விடுதல்.
2. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து, இராப்பத்து, முடிவு நாள் அன்று வேதம் ஓதும் அய்யங்காரைத் தூக்கி சுமத்தல்.
3. இராப்பத்துக்கு அடுத்த நாளும் தூக்கி சுமக்கும் வழக்கம்.
இவை கைவிடப்பட்ட நிலையில், இவ்வாண்டு நாளை (7ஆம் தேதி) மீண்டும் நடத்திட (அதாவது மனிதர்களை மனிதர்களே தூக்கி சுமக்கும் கொடுமை) முயற்சிப்பதாக கேள்விப்படுகிறோம். இதுபற்றி விடுதலையில் சில நாள்கள்முன் எழுதப்பட்டுள்ளது.
மீறினால் போராட்டம்!
திருச்சி மாவட்ட கழகத் தலைவர் மு.சேகரும், மாவட்டப் பொறுப்பாளர்களும் சிறீரங்கம் திராவிடர் கழகத் தோழர்களும் சிறீரங்கம் காவல் நிலைய அதிகாரிகளைச் சந்தித்து தங்களது இயக்கத் தலைமையின் ஆணைப்படி, இம்முறை சட்ட விரோதமாக மீண்டும் தொடர்ந்தால் எதிர்த்து அறப்போர் நடத்தத் தயங்கமாட்டோம் என்று கூறியவுடன், அந்த அதிகாரி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியுள்ளார்; அப்படி ஏதும் நடக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் என்றாலும், மீறி நடந்தால் நமது கழகத் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை தமிழக அரசின் காவல்துறையினருக்குத் தெரிவிப்பது நமது மனித உரிமை காப்பு அடிப்படையில் அவசர - அவசியமாகிறது.
கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
(முகாம்: திருச்சி 6.12.2011)
தலைவர், திராவிடர் கழகம்
(முகாம்: திருச்சி 6.12.2011)
No comments:
Post a Comment