Friday, November 11, 2011

ஏழை அழுத கண்ணீர் வீண்போகாது! அது பெரும் படைக்கு ஈடானது


ஏழை அழுத கண்ணீர் வீண்போகாது! அது பெரும் படைக்கு ஈடானது


அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு கலைஞர் இடித்துரை


சென்னை, நவ. 10- ஏழை அழுத கண்ணீர் வீண் போகாது. அந்தக் கண்ணீர் பெரும் படைக்கு ஈடானது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் உடன் பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் விளக்கியுள்ளார். கலைஞர் எழுதிய (9.11.2011) கடிதம் வருமாறு:
இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்று  ஒரு பழமொழி சொல்வார்கள்.  அதைப் போல நம்முடைய முதலமைச்சர் ஜெயலலிதா எப்போது  பதவிப் பொறுப்புக்கு வந்தாலும், அவருக்கு முந்தைய ஆட்சியில் மக்களுக்குப் பயன்படும்  என்னென்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டன என்று கண் டறிந்து, அவைகளுக்கெல்லாம் மூடு விழா நடத்துவ திலேயே மகிழ்ச்சி அடைபவர்.  மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு ரசிப்பதிலே சிலருக்கு ஒரு திருப்தி ஏற்படும் என்பார்கள்.  ஆங்கிலத்தில்  அதற்கு சாடிஸ்ட்  என்பார்கள்.  அந்த வகையில்தான் பல்லாண்டு காலமாக உழைத்து ஊதியம் பெற்று தங்கள் எளிய குடும்பங்களைக் காப்பாற்றி  வந்தவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு அதிலே ஒரு தனி சுகம் காண முயலுகிறார்.
பண்பாட்டுச் சின்னங்களை அகற்றுவது - நினைவில் நிலைத்து நிற்பவைகளை இடிப்பது  - தனக்குப் பிடிக்காதவர்களை சிறையிலே அடைப் பது - மாற்றுக் கருத்து தெரிவிப்போர் மீது பொய் வழக்கு தொடுப்பது - அரசு அலுவலர்களை யெல்லாம் அடிமைகளாக நடத்துவது - அரசு அதிகாரிகளையெல்லாம் சவுக்காலடித்து வேலை வாங்குவேன் என்பது  -  ஆறு மாதங்களுக்கொரு முறை அமைச்சர்களை வீட்டிற்கு அனுப்புவது - ஆறு வாரங்களுக்கு ஒரு முறை அதிகாரிகளை யெல்லாம் பந்தாடுவது - அரசின் வருவாயையெல் லாம் அரசு அலுவலர்களுக்கே  செலவழிக்கிறேன் என்றுரைப்பது - பேச்சுரிமை, எழுத்துரிமையைப் பறிப்பது - என்று  இவைகளையே தனது சாதனை களாக நடத்திக் கொண்டிருக்கின்ற ஜெயலலிதா அரசு, அந்த வரிசையில் நேற்றையதினம் அறிவித் திருக்கின்ற மற்றொரு  மூடுவிழா  -  13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை கொஞ்சமும் இரக்க மின்றி  வீட்டிற்கு அனுப்புகின்ற  சாதனையாகும்.   தி.மு. கழக ஆட்சி 1989ஆம் ஆண்டு மீண்டும் அமைந்த போது, தமிழகத்திலே வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கிய ஒரு திட்டம்தான் மக்கள் நலப் பணியாளர்களை நிய மித்த திட்டமாகும்.   இந்தத் திட்டத்தைத் தொடங் கிய போது மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக 750 ரூபாய் மதிப்பூதியம் என்ற  அளவிலே  நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் இரண்டாண்டுகளில் 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும், அவருடைய பரந்த உள்ளம் காரணமாக 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களையும் பதவி நீக்கம் செய்து 13-7-1991 அன்று முதல்  வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
1996ஆம் ஆண்டு  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி  அமைந்ததும், பதவியிழந்த  13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களுக்கும்  மீண்டும் வேலை வாய்ப்பளித் தோம். அதைப் போலவே பத்தாயிரம் சாலைப் பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப் பட்டது.   2001ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும்  முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றதும், காழ்ப் புணர்ச்சி எதுவுமே இல்லாத அவர், கருணை உள்ளத்தோடு கழக ஆட்சியிலே நியமிக்கப்பட்ட  13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி அவர்களின் வயிற்றெரிச்சலையும் சம்பாதித்துக் கொண்டார்.   1-6-2001 முதல்  மக்கள் நலப் பணியாளர்களை யெல்லாம் பணி நீக்கம் செய்து ஜெயலலிதா ஆட்சியின் ஊரக வளர்ச்சித் துறை ஆணை எண். 149 அறிவித்தது. பணியிழந்த 13 ஆயிரத்து  247 பேரில் சுமார் பாதி பேர் பெண்களாகும்.   அய்ந்தாண்டு காலம் பணியாற்றி மாதந்தோறும் ஊதியம் பெற்று வந்த அந்தக் குடும்பத்தினர் எல்லாம் திடீரென்று வேலையில்லை என்றால் வாழ்வாதாரத் திற்கு என்ன செய்வார்கள்?    அந்த ஊதியத்தை நம்பி பல பேர் திருமணம் செய்து கொண்டிருப்பார்கள். பலர் தங்கள்  பெண்களை திருமணம் செய்து கொடுத் திருப்பார்கள். அவர்களின் கதி எல்லாம் என்ன வாகியிருக்கும்? அதைப் பற்றி ஜெயலலிதா விற்கு என்ன கவலை? பல பேர் தற்கொலையே செய்து கொண்டு மாண்டார்கள்.   இந்த வேலையை நம்பி பலருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில்  வேலை போனதால்  திருமணங்கள் நிறுத்தப்பட்டு, அதை நம்பியிருந்த பல பெண்கள் நிர்க்கதிக்கு ஆளானார்கள்.
உதாரணமாக ஒருசிலவற்றை கூற வேண்டு மேயானால், நாகை மாவட்டம், கீழையூர்  அருகே யுள்ள வைரவன்கட்டளை என்ற கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்ற மக்கள் நலப் பணியாளர் வேலை போனதின் காரணமாக  11-6-2001 அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளர் சி. கந்தசாமியின் வேலை பறி போன காரணத்தால், அவருடைய மனைவி பிரபா என்பவர் 11-6-2001 அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  12-6-2001 அன்று நத்தம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளராகப் பணியாற்றி வந்த திலகர் என்பவரும் வேதனை தாங்காது  தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர்களின் குடும்பத்திற்கு அப்போதே தி.மு. கழகத்தின் சார்பில் தலா  25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராமமூர்த்தி பணி பறி போனதும் சோகத்தில்  பட்டினி கிடந்தே மாய்ந்து போனார். நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடியைச் சேர்ந்த இளங்கோவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  ராமனாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் கபிலன்  வேலை போன காரணத்தால்  பட்டினி கிடந்து உயிர் துறந்தார் என்று பட்டியல்  நீளுகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் நடத்திய எந்தப் போராட்டத்திற்கும் ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை.   2006ஆம் ஆண்டு தி.மு. கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் - பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த மக்கள் நலப் பணியாளர்கள் என்னைச் சந்தித்து தங்கள் வேதனையை வெளிப் படுத்தினார்கள். 1-6-2006 முதல்  மீண்டும் அவர்கள் எல்லாம் தி.மு. கழக அரசினால்  பணி நியமனம் பெற்றார்கள்.   பணி அளித்தது மாத்திரமல்லாமல், கால முறை ஊதியத்தின் கீழ் மக்கள் நலப் பணி யாளர்களை கொண்டு வர வேண்டுமென்ற எண்ணத்தோடு தி.மு. கழக ஆட்சியில் 1-6-2009 முதல் ரூ. 2500 - 5000 மற்றும் ரூ. 500 தர ஊதியம் என்ற அளவில் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை காரணமாக 12,653 மக்கள் நலப் பணியாளர்கள் பயன் பெற்றனர்.
மக்கள் நலப் பணியாளர்கள் முதியோர் கல்வி யைப் பரப்புவதிலும்  -  குடிப் பழக்கத்தின்  தீமை களை  மக்களுக்கு  உணர்த்துவதிலும் -  தெரு விளக் குகளைப் பராமரிப்பதிலும் - மற்றும் சத்துணவு மய்யங்களைக் கவனிப்பதிலும் தங்களது பணி களைச் செலுத்தி வந்தார்கள்.  அ.தி.மு.க. அரசு எப்போது பதவிப் பொறுப்புக்கு வந்தாலும், அரசு அலுவலர்களையெல்லாம் ஏதோ எதிரிகள் என் பதைப் போல  நினைத்துச் செயல்பட்டு வருகிறது.   அவர்களும் அரசின் ஓர் அங்கம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்.  2002ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது  அரசு அலுவலர்களை அடக்குவதற்காகவே எஸ்மா, டெஸ்மா என்ற பெயரில் அவசரச் சட்டங்களை யெல்லாம் இயற்றியதும், அதன் பிறகு கழக ஆட்சியிலே அந்தச் சட்டங்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டதும் அரசு அலுவலர்களே நன்கறி வார்கள்.    மக்கள் நலப் பணியாளர்களைப் பொறுத்த வரை  தற்போது அவர்கள் அரசுக்கு எதிராக எந்தப் போராட்டத் திலும் ஈடுபடவில்லை.  ஏன்  எந்தக் கோரிக்கை யையும் கூட முன் வைக்கவில்லை.  இந்த நிலையில் அவர்களை பணி நீக்கம் செய்வது அவசியம்தானா?  1989ஆம் ஆண்டு முதல் அவர் களை  நாடாறு மாதம், காடாறு மாதம் என்பதைப் போல அய்ந்தாண்டு கால தி.மு. கழக ஆட்சியில் பணியிலே நீடிப்பதும், அ.தி.மு.க. ஆட்சி அமைந் தால் அவர்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்புவது மான கொடுமை நீடித்தால்   அவர்களின் வாழ்க்கை என்னவாகும்?  இந்த வயதுக்கு மேல் அவர்கள் வேறு வேலை தேடிக் கொள்ள முடியுமா?  அவர்களின் குடும்பங்கள் என்ன நிலைக்கு ஆளாகும்? அர சாங்கம் என்றால் அதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?   கருணை என்றால் என்ன விலை என்று கேட்பதா? புதிதாக பணி வாய்ப்பு தராவிட்டாலும், பணியாற்றியவர்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்பினால் அவர்கள் எங்கே போவார்கள்?  அவர்களும் தமிழ்நாட்டுக் குடி மக்கள்தானே? இன்னும் சொல்லப்போனால்  அவர்களும் வாக்களித்துத் தானே ஜெயலலிதா இன்று முதலமைச்சராகியிருப்பார்.
அவர்களின் பணி நீக்க ஆணையிலே கையெழுத்து போடுவதற்கு முன்பு  ஒரு நிமிடம் முதலமைச்சர் அவர்களின் பிற்கால வாழ்க் கையைப் பற்றி  நினைத்துப் பார்த்திருக்க வேண் டாமா? அவர்கள் எல்லாம் மிட்டா மிராசுகளா? முதலாளிகளா? ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று கிடைக்கும் ஊதியத்தைப் பெற்று, அதை வைத்து  தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலையிலே இருந்தவர்கள் அல்லவா? திடீரென்று  அவர்கள் எல்லாம் வேறெங்கே செல்வார்கள்?   கடந்த முறை   ஜெயலலிதா ஆட்சியிலே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட போது, பட்டினி கிடந்தும் தற்கொலை செய்து கொண்டும்  பலர் மாண்டிட நேரிட்டதே, அந்த நிலையை மீண்டும் உருவாக்கலாமா? அரசுப் பொறுப்பிலே இருப்போர் அதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஏழை அழுத கண்ணீர் வீண் போகாது  என் பார்களே? அந்தக் கண்ணீர் பெரும் படைக்கு ஈடானது என்பார்களே? அந்த ஏழைகளின் வயிற் றிலே ஒரு அரசு இப்படியெல்லாம் அடிக்கலாமா?   கோடிக் கணக்கிலே  அரசின் நிதியைச் செல வழித்துக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை வீணாகப் போட்டு வைத்திருப்பதும் - அண்ணாவின் பெயரிலே உள்ள நூலகக் கட்டிடத்திலே குழந் தைகளுக்கான மருத்துவமனையைத் தொடங்கப் போகிறேன் என்பதும் - அமைச்சர்களாக இருந்த வர்கள் மீதெல்லாம் பொய் வழக்குகளைச் சுமத்தி, அவர்களை சிறையிலே அடைத்து வைத்து இன்பம் காண்பதும் - ஒரு அரசுக்குரிய  இலக் கணங் கள்தானா? இதற்கான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...