அரசியல் சட்ட மோசடி
நம்மை ஆளும் சிவில் சட்டம் இந்துத்துவா என்ற இந்துச் சட்டம். இந்தச் சட்டத்திற்கும் தமிழனுக்கும், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தம்தான்! தன்னைத் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் அவரும், திராவிடன் என்று மார்தட்டும் எவரும் இந்து என்று சொல்ல முடியுமா? The Concise Oxford Dictionary of Current English பக்கம் 516 இல் Hindu என்பதற்கு “Aryan of N. India Who (also anyone who) professes Hinduismஎன்று போட்டிருப்பதுடன் இதற்கு சமஸ்கிருத ரூட் (வேர்ச் சொல்) Sindu River என்று குறிப்பிட்டுள்ளது. ஹிந்து என்றோ, இந்து மதம் என்றோ, இந்தியா என்றோ ஆரியர்களின் எந்த ஆதாரத்திலும் ஒரு இடத்திலாவது சொல்லப்படவில்லையே! சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ் லெக்சிகன் என்ற பேரகராதியிலும் (பக்கம் 296) ஹிந்து என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.
அப்படிப்பட்ட காட்டுமிராண்டி காலப் பழக்க வழக்கங்கள், எண்ணங்கள் இவைகளைக் கொண்ட ஆரிய மதம், அந்த ஆரிய மதக் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் சட்டம்தான் ஹிந்துச் சட்டம். அதை நம் மீது சுமத்துவது முறையா?
அதன் காரணமாக பெரும்பாலான நாம் வெகு சிறுபான்மையோரின் வைப்பாட்டி மக்களாக இருக்கலாமா? ஒரு கூட்டத்திற்குரிய தகுதியான அம்சம் எதுவும் இந்தச் சட்டத்தில் கிடையாது. சட்டம் தெரியாத சமஸ்கிருதவாதிகள், சமஸ்கிருதம் தெரியாத சட்டவாதிகள் இவைகளின் மூளைகளது கற்பனையே இந்து லா என்று நெல்சன் என்ற அறிஞர் கூறினார்.
அந்தச் சட்டம் இன்னமும் நம்மை ஆளுவதா? சுதந்திர நாட்டில் மனிதனைச் சூத்திரன் என்று தயங்காது, நா கூசாது அழைக்கும் சட்டம் அனுமதிக்கப்படலாமா? இந்த இந்து லாவுக்கு ஆதாரம், சுருதிகளும் ஸ்மிருதிகளும் ஆகும். இவைகளைச் செய்தவர்கள் யார் என்றால் ரிஷிகளாம்! அந்த ரிஷிகள் பிறப்போ ஆபாசம், அருவருப்பு, அறிவுக்குப் பொருந்தாதவைகள். இவைகளை இன்று 1973 இல் ஏற்கிறோம் என்றால் நாம் காட்டுமிராண்டிகளா? நாகரிக மனிதர்களா?
இதை மாற்றி அமைக்க வேண்டும். மத்திய அரசு அதற்காக அவர்கள் மலையைத் தூக்கவேண்டியதில்லை.
அவர்களது அரசியல் சட்டத்தில் உள்ள Directive Principles of the state policy என்ற நான்காம் பாகத்தில், 44 ஆவது பிரிவில், “The State shall endeavour to secure for the citizens, a uniform civil code throughout the territory of India.” இந்தியா முழுமைக்கும் உள்ள குடிமக்களுக்கு ஒரே மாதிரியான வகையில் அமல்படுத்தக்கூடிய சிவில் சட்டத்தினை அரசு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதே அதை அமல்படுத்தினாலே போதுமே!
சுயராஜ்யத்திற்கு வெள்ளி விழா கொண்டாடி ஓராண்டு ஆகிவிட்டது. இந்த 26 ஆண்டு காலத்தில் இதைச் செய்ய டில்லி அரசு காதொடிந்த ஊசிமுனை அளவுக்காவது முயற்சி எடுத்ததா? தொடர்ந்து பார்ப்பனத் தலைமையே இந்திய ஆட்சிக்கு இருப்பதால் இதில் கை வைக்க அவர்களுக்கு மனம் வரவில்லை என்றுதானே மற்ற மக்கள் எண்ண வேண்டும்?
Directive Principles of the State Policy என்பவைகள் அரசுக்கு ஆணை பிறப்பிக்கும் பகுதி (Mandatory) அல்ல; வெறும் பரிந்துரைதான் (Recommendatory) என்றுகூட இப்போது அரசு தரப்பில் எவரும் மழுப்பல் பதிலைக்கூடத் தரமுடியாது. காரணம், 40ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திற்குப் பிறகு அப்பகுதியும் சட்ட வலிமை வாய்ந்தவைகளாக சுப்ரீம் கோர்ட்டால் கருதித் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது!
எனவே, அவர்கள் எழுதி வைத்து ஏட்டுச்சுரைக்காய் ஆக்கியதை, உண்ணும் சுரைக்காயாக ஆக்குங்கள் என்று கேட்கும் கோரிக்கையை டில்லி அரசு ஏற்க வேண்டாமா? என்ற நிலையில் இதைவிடப் பெருத்த அரசியல் சட்ட மோசடி (Fraud on the Constitution) வேறு இருக்க முடியுமா? இதுவரை நம் போராட்டத்திற்கு இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் பேர் கொடுத்துள்ளார்கள்.
இன்னும் கொடுக்க இருக்கிறார்கள். நம் போராட்டம் அரசியல் நோக்கத்திற்காக அல்ல; நமக்கு மானம் வேண்டும் என்பதற்காக. இதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் - ஏதோ சட்டமன்றத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக எதிர்த்து இருப்பார்கள். மற்றபடி மானம் வேண்டாம் என்று யார்தான் சொல்வார்கள்? இழிவு ஒழிவது மட்டுமல்ல- உலகத்திலேயே நல்ல பகுத்தறிவுள்ள சமுதாயமாக நாம் திகழ வேண்டும் என்று எடுத்துரைத்தேன்.
உணர்ச்சிப் பிழம்பாக இங்கு கூடியிருந்த கருஞ்சட்டைப் பட்டாளத்திடையே தந்தை பெரியார் அவர்கள் மாநாட்டுத் தலைமையுரையாற்றுகையில் சட்டத்தைக் காட்டி அச்சுறுத்தி எங்களைப் பணிய வைக்கலாம் என்று எண்ணிவிடாதே என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்கள்.
குறிப்பாக, நமது வரவேற்புக் குழுத் தலைவர் காலையில் மிகச் சிறப்பான உரையை நிகழ்த்தினார். அதற்கு மேல் ஒன்றும் நான் சொல்வதற்கு என்று ஒன்றும் இல்லை என்று அய்யா குறிப்பிட்டார்கள்.
நாம் மனித இழிவை ஒதுக்க வேண்டும் என்ற லட்சியத்திற்காகக் கூடி இருக்கிறோம். வேறு எந்தப் பலனையும் எதிர்பார்த்து நாம் கூட்டம் கூடவில்லை. நூற்றுக்கு 97 பேராக உள்ள மக்களை சட்டத்தில் ஈன ஜாதி என்று எழுதி வைப்பது என்ன நியாயம்? நான் சொல்கிறேன், சட்டத்தில் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதைப் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம் என்றால் இதைவிடக் கேவலம் ஒன்றும் இல்லை. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்றெல்லாம் சொல்லி வந்திருக்கிறோமேயல்லாமல் காரியத்தில் ஒன்றும் நடைபெறவில்லை.
சட்டத்திலேயே இழிவு பொறிக்கப்பட்டு இருக்கிறதே அதை மாற்று என்கிறோம். யோக்கியமான அரசாங்கம் என்றால் என்ன செய்ய வேண்டும்? சரி இதுவரை நாங்கள் அதைச் கவனிக்கவில்லை - மாற்றி விடுகிறோம் என்று ஏற்பாடு செய்வதுதானே நியாயம். அதைவிட்டுவிட்டு நியாயம் கேட்கிற என்னைப் பார்த்து நாட்டுப் பிரிவினை கேட்கிறான் - ஏழு வருடம் ஜெயிலில் போடு என்றால் இது என்ன நியாயம்?
நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? உலகத்தில் எந்த நாட்டிலாவது அந்த நாட்டு மக்கள் மைனாரிட்டி மக்களுக்குத் தேவடியாள் மக்களாக இருக்கிறார்களா? இங்குதானே அந்தக் கொடுமை இருக்கிறது. இதை நாம் பொறுத்துக்கொண்டுதான் தீரவேண்டுமா? சட்டம் இன்று நமது இழிவை நிலைநிறுத்துகிறது. இதை மாற்ற முடியாதா? சின்னக் காரியம்தானே. இதை மாற்றவில்லை என்றால் உன்னை மாற்றித்தான் தீரவேண்டும். இதை வைத்துக் கொண்டே உன்னை ஒழித்துக்கட்ட வேண்டியதுதான். சட்டத்தைக் காட்டி அச்சுறுத்தி எங்களைப் பணிய வைக்கலாம் என்று மட்டும் எண்ணிவிடாதே. பயந்தவர்கள் நாங்கள் என்றால் இந்தக் காரியங்களில் எல்லாம் ஈடுபடுவோமா? எங்களை மிரட்ட ஆரம்பித்தாயானால், மிரட்டித்தான் பாரேன் என்று நாங்களும், சரி ஒரு கை பார்ப்போம் என்று கீழே இறங்கி வந்துவிடுவோம். இந்து என்று சொல்லிக் கொள்கிறோமே அதற்கு அடிப்படை உண்டா? இந்து என்றால் கருப்பன், திருடன் என்ற அர்த்தமும் உண்டு. உலகிலேயே இதைப் போன்ற குழப்பமான காட்டுமிராண்டி மதம் வேறு எங்கும் கிடையாது. இதிலிருந்து நாம் விடுபட்டால்தான் நம் மானம் மிஞ்சும்.
சுயமரியாதைச் சங்கம் நம் நாட்டில் தோன்றுகிறவரை நம் நாட்டில் இந்து சனாதன சங்கம் என்ற பெயரில் அமைப்புகள் இருந்து வந்தன. சனாதன சங்கம் என்றால் வருணாசிரமம் என்று அர்த்தம். வருணாசிரமம் என்பது தர்மத்தைக் காப்பாற்றுவதுதான் என்று பொருள். சுயமரியாதை இயக்கம் தோன்றியதற்குப் பிறகுதான் அவை எல்லாம் மறைந்தன என்று குறிப்பிட்டார்கள்.
நமது இழிவை ஒழிக்கும் காரியத்தில் பல கஷ்டங்களையும் நாம் கடந்துதான் தீரவேண்டும். ஆகவே, தோழர்களே மீண்டும் மீண்டும் சொல்கிறேன், நமது இழிவு ஒழியாவிட்டால் பிரிவினைதான்! நமது இழிவு ஒழியாவிட்டால் பிரிவினை தான்! பிரிவினைதான்! இதில் இன்னொரு முக்கிய விஷயம். நம் இழிவை ஒழித்துக் கொள்வதற்கு நாம் உண்மையாக இருக்கிறோம் என்பதை எதிரிகள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு நமது இனத்தவர்கள் பெருவாரியாக இதில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, பெண்கள் அதிகம் ஈடுபட வேண்டும் என்று எடுத்துரைத்தார்கள்.
நமது ஆட்சி கடவுள், மத நடவடிக்கைகள் சம்பந்தமற்ற மதச் சார்பற்ற (Secular State ஆட்சி என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்ற போதிலும் , மக்கள் எல்லோரும் மதப்படியும் அதிகப்படியும் பிரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி, சமணர்கள், சீக்கியர்கள், பகுத்தறிவாளர் நாஸ்திகர்கள் உள்பட இந்துமதஸ்தர்கள் என்று ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இந்துக்களில் இரண்டு ஜாதி உண்டென்றும், அவற்றில் ஒன்று பார்ப்பனர் (பிராமணர்) மற்றுமொன்று பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா மக்களும் சூத்திரர்கள் ஆவார்கள் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்றும், சூத்திரன் என்றால் நாலாவது ஜாதி ஆவான் என்பதோடு, எமன் என்றால் பார்ப்பானுடைய (பிராமணனுடைய) கட்சி மகனாவான் என்று இந்து லா என்னும் சட்டத்திலேயே விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் 372 ஆவது விதி இந்து லா என்பதை அங்கீகரிப்பதோடு, மதச் சுதந்திர உரிமை என்னும் பேரால், அரசியல் சட்டத்தில் சொன்ன 25,26ஆவது ஷரத்துக்களைக் காட்டி சுப்ரீம் கோர்ட் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாது என்றும், மத விஷயங்களில் அரசு தலையிட்டு ஜாதி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்களைச் செய்ய இயலாது என்றும் திட்டவட்டமாக அண்மையில் ஒரு தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பது பார்ப்பனரல்லாத சூத்திர மக்களாகிய நம் மக்கள் இழிவினை என்றும் நிலைநிறுத்தும் தன்மையில் இருப்பதால், அதனை மாற்றி நம்மை மனிதர்கள், சமத்துவம் வாய்ந்த மனிதர்கள் என்பதைச் சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்பதால், கீழ்க்காணும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்று அரசியல் காரணங்களின்று, சமுதாயக் கண்ணோட்டத்தோடு தமிழர் சமுதாயத்தின் சார்பாக மத்திய அரசாங்கத்தை நாம் கேட்கிறோம்.
ஜாதியைப் பாதுகாப்பதற்கே அரசியல் சட்டம் அமைந்துள்ளது என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்காய் போன்ற உதாரணம், அண்மைக்காலத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அர்ச்சகர் இடத் திருத்தம் சம்பந்தமாக வந்த தீர்ப்பாகும்.
கோயில் கர்ப்பகிரகத்தின் உள்ளே செல்ல அர்ச்சகர் தவிர்த்த வேறு எவருக்கும் உரிமை கிடையாது. அர்ச்சகராவதற்கு ஆரம்பப்படி பார்ப்பனர் தவிர்த்த வேறு எவருக்கும் தகுதி கிடையாது என்பதால் கர்ப்பகிரகத்திற்கு வெளியேதான், மந்திரித் தமிழன் நீதிபதித் தமிழன், அய்.ஏ.எஸ், தமிழன் முதல் அன்னக்காவடி பக்தனான தமிழன் வரை நிற்க வேண்டும் என்றால், இது மனித சமுதாயத்திற்கே இழிவான காரியம் அல்லவா? இதைத் தெரிந்து நமது தந்தை பெரியார் குரல் கொடுத்தார். சாமி சிலை வரை சென்று தொடும் உரிமை பார்ப்பனரைப் போல எல்லா மக்களுக்கும் வேண்டும் என்று கேட்டோம். அதன் மூலம் ஜாதி ஒழிய - அவமானம் நீங்க வழி ஏற்பட வேண்டும் என்று கேட்டோம்.
அனைத்து ஜாதியினரும் இதற்கு அர்ச்சகராகலாம் என்று ஒரு சமுதாய சமத்துவச் சட்டத்தைத் தி.மு.க. அரசு 1970 இல் நிறைவேற்றியது. 4 கோடி மக்களின் பிரதிநிதிகளான 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றம் இதற்கு எதிர்ப்போ சலசலப்போ இன்றி ஏகமனதாக நிறைவேற்றி தனிப் பெருமை பெற்றது! ஆனால், அதைக் கண்டு மனம் எரிந்த பார்ப்பனர், ஜாதி ஆதிக்கத்தின் வேரில் வெந்நீர் ஊற்றுகிறார்களே என்று கருதி, உடனே டில்லி சுப்ரீம் கோர்ட்டுக்குப் படை எடுத்தனர், 1 டஜன் (12) பார்ப்பனர் ரிட்களைப் போட்டனர். வழக்கைப் பொறுத்து தமிழக அரசு வென்றது என்றாலும், தத்துவத்தைப் பொறுத்து பார்ப்பனர்களே வெற்றி பெற்றார்கள்!
அதாவது, ஆகம சாஸ்திரங்களுக்கு விரோதமாக அனைத்து ஜாதியினரை அர்ச்சகராக்க அரசியல் சட்டம் இடம் தராது என்று பட்டரங்கமாய் தீர்ப்பளித்துவிட்டது இந்தியாவின் கடைசி நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்!
இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் முக்கியமானது 25, 26ஆவது பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள மதச் சுதந்திர உரிமை. அதன்படி, சம்பந்தமான விஷயங்களில் தலையிட (to interfere with matters of religion) அதனைப் பாதிக்கும் வகையில் சட்டம் இயற்ற அரசுக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது!
அத்தீர்ப்பில் உள்ள சில வரிகளை உங்களுக்குச் சுட்டிக்காட்டுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். விக்ரகங்கள் சம்ரோட்சனை செய்யப்பட்ட இந்தக் கோயில்களில் தகுதி படைத்த அர்ச்சகர் அல்லது பூசாரி மட்டுமே கர்ப்பகிரகத்தின் உள்ளே போகலாம் என்று ஆகமங்கள் வலியுறுத்துகின்றன; ஆகமங்கள் அர்ச்சகருக்கு விதித்துள்ள தினசரி அனுஷ்டானங்களைச் செய்த பிறகே கர்ப்பகிரகத்தினுள் போகலாம்.
அர்ச்சகன் என்ற முறையில் விக்ரகத்தை வழிபாடு செய்கின்ற நேரத்தில் அவன் தொடவேண்டிய அவசியம் உள்ளது, அவ்வாறு விக்ரகத்தைத் தொடுவது அர்ச்சகனின் கடமையும் உரிமையும் ஆகும். -வேறு யாராவது விக்ரகத்தைத் தொடுவதால் அது தீட்டாகிவிடும். யார் யார் கர்ப்பகிரகத்தினுள் போகலாம், யார் யார் அதனுள் போகக்கூடாது, யார் வழிபடலாம், எந்த இடத்திலிருந்து வழிபடலாம் என்பதெல்லாம் மதம் சம்பந்தப்பட்ட செய்திகளாகும். அது கோயில்களின் பூஜை அனுஷ்டானங்கள் குறித்த சட்டங்களில் விதிக்கப்பட்டுள்ளது. (மேற்கண்ட தீர்ப்பில் அது விளக்கப்பட்டுள்ளது.)
ஆகமங்கள் அனுமதிக்காத அர்ச்சனை விக்ரகத்தைத் தொடச்செய்வதன் மூலம் அதனைத் தீட்டாக்குகின்ற அல்லது அசுத்தப்படுத்துகின்ற அரசாங்கத்தின் எந்த ஒரு நடவடிக்கையும் இந்து பக்தனுடைய மத நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் உயிர்நாடியில், பலாத்கார முறையில் தலையிடுவதாகும். ஆகவே, இத்தகைய அரசாங்க நடவடிக்கை அரசியல் சட்டத்தின் 25(1) பிரிவின்படி சட்ட விரோதமானது என்பது மேலெழுந்தவாரியாகவே தெரிகிறது.
விக்டோரியா மகாராணியின் 1858-ஆம் ஆண்டு பிரகடனம் இந்த மதச் சுதந்திர உரிமை உங்கள் மத விவகாரங்களில் ஆட்சியாளர் களாகிய (பிரிட்டிஷ்காரர்களான, அந்நியர்களான) நாங்கள் தலையிட மாட்டோம் என்று உறுதி கூறியது.
அதே மதச் சுதந்திர உரிமை சுயராஜ்யத்திற்குப் பிறகு, மக்களால் நமக்கு நாமே, வழங்கப்படும் ஓர் அரசியல் சட்டத்தில் இடம் பெறலாமா? இதை இடம் பெற வைத்தது பார்ப்பன சூழ்ச்சி அல்லாமல் வேறு என்ன? வெள்ளைக்கார ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சமூக சீர்திருத்தம்கூட சுயராஜ்ய ஆட்சியில் அனுமதிக்கப்படுவதில்லை என்றால் அதன் தத்துவம் என்ன? உள்நோக்கம் என்ன? இன்றைய ஆட்சி சோஷியலிசத்தை அமலாக்குவதாக சொல்லிக் கொள்ளும் ஆட்சி, சோஷியலிசம் என்றால் அதில் சூத்திரனுக்கும் பார்ப்பானுக்கும் இடம் உண்டா?
சோவியத் நாட்டோடு 15 ஆண்டு உடன்பாடு செய்துள்ளது. இந்திய அரசு உறவுக்குக் கைகொடுப்பது சோவியத் ரஷ்யாதான் என்று பிரதமர் கூறுகிறார். அந்த சோவியத் நாட்டு அரசியல் சட்டத்தில் 124 ஆவது பிரிவில் “Freedom of religious worship and anti - religious worship and anti-religious propaganda shall-be recognised for all citizens” என்றுதான் கூறப்பட்டுள்ளது.
மத வழிபாட்டுச் சுதந்திரமும், மதத்தினை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் உரிமையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதை அங்கீகரிக்கிறது. இதில் முக்கியமான ஒன்று கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். அந்தப் பிரச்சாரம் அனுமதிக்கப்படவில்லை. (“Freedom of religious propaganda is not guarenteed”).
ஆனால், மற்றதெற்கெல்லாம் ரஷ்யாவைப் பார்க்கும் இவர்கள் ஆட்சியில் இங்கு என்ன நடக்கிறது? ஜனாதிபதி, பிரதமர், உபஜனாதிபதி முதல் அனைவரும் ராவணனை எரிக்கும் ராம் லீலா விழா முதல் சாதாரண புட்டபர்த்தி சாயிபாபாவிடம் செல்லுவது வரை மதப் பிரச்சாரக் காரியங்களில் கலந்து கொள்ளுகிறார்களே!
No comments:
Post a Comment