Saturday, October 1, 2011

குலக்கல்வித் திட்டத்துக்கு ஜே போடுவதா?


துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (12) குலக்கல்வித் திட்டத்துக்கு ஜே போடுவதா?


கலி.பூங்குன்றன்


தி.மு.க. பிரிந்த பின் திராவிடர் கழகத்துக்கும், தி.மு.க.வுக்கும் இடையே ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்கள் தந்தை பெரியார் அவர்கள் தி.மு.க.வையும் அதன் முன்னணித் தலைவர்களைப் பற்றியும் விமர்சனம் செய்தது என்பதைப் பற்றித்தான் திருப்பித் திருப்பி துக்ளக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார் திருவாளர் கே.சி.லட்சுமி நாராயணன்.


எந்த ஒரு கட்சியிலிருந்தும் பிரிவு ஏற்படும் பொழுது இத்தகைய விமர் சனங்கள் ஏற்படுவது இயல்புதான். இது குறித்து விடுதலை ஆதாரபூர்வமாகப் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிர சுக்குள் ராஜாஜி கோஷ்டி, காமராஜர் கோஷ்டி என்றெல்லாம் இருந்து வந்திருக்கின்றன. சத்தியமூர்த்தி அய்யர் அணி, ஆச்சாரியார் அணிகள் இருந் திருக்கின்றன. ஒருவரை ஒருவர் விமர் சனம் செய்திருக்கின்றனர். இதைப் பற்றி யெல்லாம் விரிவாக விடுதலை எடுத்துக் கூறியும், அரைத்த மாவையே அரைக்கும் அரை வேக்காட்டுத் தனத்தில் பம்பரம் சுற்றுகிறது துக்ளக்.


தி.க.வும் - தி.மு.க.வும் வாதப் - பிரதி வாதங்கள் செய்திருந்தாலும், தந்தை பெரியார் அவர்கள் காலத்திலேயே அதற்கான முடிவுகள் காணப்பட்டு, ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்று அண்ணா சொல்லும் அளவுக்கு நிலைமைகள் சீரடைந்தனவே. இது சூத்திரர்களின் அரசே என்று கலைஞர் சொல்லும் அளவுக்கு திராவிடர் கழகத்துக்குப் பெரு வெற்றி கிடைத்துவிட்டதே. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், எழுதுவதற்கு வேறு சரக்கு இல்லாத கையறு நிலையில் நிற்பதாகத் தெரிகிறது.


இதனூடே சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது போல ஆச்சாரியார் (ராஜகோபாலாச்சாரி) கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு முட்டுக் கொடுக்க வந்தாரே பார்க்கலாம்.


ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு சிறு வனும், சிறுமியும் பள்ளிக் கூடத்திற்குச் செல்ல இயலும் வகையில் ஒரு புதிய, மாற்றியமைக்கப்பட்ட, ஏற்பாட்டை கல்வி முறையை ராஜாஜி அறிமுகம் செய்தார். அது ஒரு புரட்சிகரமான ஏற்பாடு. முன்னேறிய பல நாடுகளில் கல்வி முறை அவ்வாறு அமைந் திருக்கிறது.


அது வரை கல்வி கற்காத ஏழைக் குழந்தைகள், புதிய ஏற்பாட்டின் விளை வாக கல்வி கற்பார்கள் என்பதுதான் அந்தத் திட்டத்தின் தனிச் சிறப்பு. எனினும் திராவிடக் கட்சிகள், அரசியல் நோக்கத்துடன் அந்தப் புதிய ஏற்பாட்டை எதிர்த்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் அந்த எதிர்ப் புக்கு ஆதரவு தந்தார்கள்.


அந்தச் சூழலில் ராஜாஜி அமைச் சரவை 13-.4.-1954 அன்று பதவி விலகிறது. அன்றைய தினமே காமராஜர் தலை மையில் புதிய காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்றது. (துக்ளக் 5-.1--0.2011 பக்கம் 12)


உடம்பெல்லாம் மூளை என்று பீற்றிக்கொள்ளும் ராஜாஜியால் வாய்தா காலத்துக்குக் கூட ஆட்சி செய்ய முடியாமல் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் ஒட்டு மொத்த தமிழினமே எரிமலைக் குழம்பாக வெடித்துக் கிளம்பிய நிலையில், பஞ்சக் கச்சம் காணோம், துண்டைக் காணோம் என்று ஆச் சாரியார் ஓடி (அத்தோடு அவர் பொது வாழ்க்கையும் அனேகமாக அஸ்தமனம் ஆயிற்று!) 57 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அக்ரகாரத்தின் ஆற்றாமை அடங்கவில்லை.


ஆச்சாரியார் கொண்டு வந்த அந்தக் குலக்கல்வித் திட்டம் - வருணாசிரமப் புத்தி பார்ப்பனர்களை விட்டுப் போகவில்லை என்பதைத்தானே துக்ளக்கட்டுரை நிரூபிக்கிறது?


முன்னேறிய பல நாடுகளில் கல்வி முறை அப்படித்தான் இருக்கிறதாமே - எந்த நாட்டில் அப்படி இருக்கிறது? துக்ளக் பட்டியல் கொடுக்கட்டும் பார்க்கலாம். தொழிற்கல்வி என்கிற ஜாதித் தொழில் வேறு - அப்பன் தொழிலை அவன் மகன் -மகள் செய்ய வேண்டும் என்பது வேறு. இரண் டையும் போட்டுக் குழப்பக்கூடாது; குழப்ப முயற்சிக்கவும் கூடாது. அந்தச் சூழ்ச்சி வலையை முறியடித்தது விழிப்புணர்வுடன் தமிழ்நாடு.


புதியகல்வித் திட்டத்தின்படி அது வரையில் கல்வி கற்காத ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பார்களாம்.


என்ன கதை இது? இந்த அரைநேரக் குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத் துவதோடு, ஏற்கெனவே இருந்து வந்த ஆறாயிரம் கிராமப் பள்ளிகளை மூடினார் அந்த மூதறிஞர் என்பதை மூடிபோட்டு மறைக்கும் முப்புரிகளின் சூழ்ச்சியை நினைத்துப் பார்க்கவேண்டும்.
இப்பொழுது மட்டுமல்ல. 1937_-39 ஆண்டுகளில் சென்னை மாநிலப் பிரதமராக வந்த போதும் கூட 2500 பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்திய நவீன மனு இந்த ஆச்சாரியார்.


முதல் அமைச்சர் என்றால் புதியன வற்றைத் திறப்பார்கள்.  மூளை நிரம்பி வழியும் இந்த மகானுபாவரோ மூடுவிழா நடத்துவதிலேயே  மூச்சு வைத் திருப்பவர்.


சூத்திரர்கள் _- பஞ்சம மக்கள் படித்து விடக்கூடாது படித்துவிட்டால் பிரா மண உயர்ஜாதித் தன்மை உருக் குலைந்து போய்விடும் - ஒரு கட்டத்தில் உடலுழைப்புச் செய்ய வேண்டிய அவசியம் பார்ப்பனர்களுக்கு ஏற்பட் டாலும் ஏற்படக்கூடுமே _- அதனால் தான் இந்த முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள்.


ஜாதி பற்றிய ஆச்சாரியாரின் கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொண் டால், ஆச்சாரியார் எப்பொழுது பத விக்கு வந்தாலும் ஏன் பள்ளிக் கூடங் களை மூடுகிறார் என்பதன் ரகசியம் உடைபட்டுப் போய்விடும்.


இவர்தான் ஆச்சாரியார்!


ஜாதி வேற்றுமைகளை ஒழிக்க வேண்டுமேயொழிய ஜாதிகளையல்ல. இதை எல்லோருக்கும் ஒளிவு மறைவு இல்லாமல் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், இன்னும் சிறிது காலம்தான் உயிரோடு இருப்பேன். எனக்குப் பின்னால் இவைகளைச் சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள்.






ஜாதி இருப்பதுதான் நமது பாரம் பரியத்துக்குச் சிறப்பு. ;இந்தக் கூட்டுக் குடும்பம் போன்றே அதுவும் அழியக் கூடாத அமைப்பு.


(பம்பாய் படேல் நினைவுச் சொற் பொழிவில் ஆச்சாரியார்)


ஜாதி முறை ஒழியவேண்டுமென்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாது. இதை நன்கு யோசித் துத்தான் நம் முன்னோர்கள் வர்ணா சிரம முறையை வகுத்துள்ளார்கள். அதன்படி அவர்கள் தங்கள் முறைக் கேற்றவாறு நடந்து மக்களுக்குத் தொண்டு புரிய வேண்டும்.


(கரூரில் ஆச்சாரியார் 29_-1_-1961 இல்)


இட ஒதுக்கீடு பற்றி . . .


முன்னாட்களில் ஜாதி  அமைப்பில் கீழ் மட்டத்தில் சேர்ந்திருப்பது இழிவாகவும், பிரதிகூலமாகவும் கருதப் பட்டது. பிரதிகூல நிலையில் தாங்கள் இருப்பது, பிறரது பரீட்சைக்கு உள் ளாகாதபடி சம்பந்தப்பட்டவர்களால் மறைத்துக் காக்கப்பட்டது. இப்போதே பழைய பிரதிகூல நிலையில் இருப்பதே புதிய அனுகூலமாகிவிட்டது. எனவே இதை மறைக்காமல் பின் தங்கிய வகுப்பிலும், ஷெட்யூல்டு வகுப்பிலும் இடம் பெறுவதற்காகப் போட்டி ஏற்பட்டுள்ளது. பின்தங்கியவர்கள் விசேஷ உரிமைகள் கேட்பதற்காகவே பழைய ஜாதி வித்தியாசங்களைக் காப்பாற்றுவதிலும் தீவிர நாட்டம் காட்டப்படுகிறது. பின்தங்கியவர்கள் நல்லவர்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஒரு சிலர் பிரதிகூலம் ஒன்றையே சலுகையாக்கிக் கொள் ளாதபடி செய்ய வேண்டும்.


சமூகத்தை முறைப்படி சீர்திருத்துவதாக நம்பிக்கை கொண்டிருக்கும் சிலருக்கு இக்கருத்து ருசிக்காது. பின்தங்கியவர்களின் முன்னேற்றத்தையும் க்ஷேமத்தையும் தடுப்பதே இக்கருத்துகளின் நோக்கம் என்று அவர்கள் கண்டனம் செய் வார்கள். விவேகமற்றவர்கள் விவே கத்தை என்றுமே தவறாகத்தான் கருதியிருக்கிறார்கள்.


(தமிழக சட்டமன்றத்தில் கம்யூனல் ஜி.ஓ. பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் சி.ஆர். ஆச்சாரியார் அளித்த பதில்.)


தர்மம் கெட்டுப் போனால், அதர்மத்தினாலாவது இதைத் தடுக்க முயலுவது ஒரு தருமமாகும் என்று சென்னை கோகலே மண்டபத்தில் (15-_12_1964) பேசியவராயிற்றே இதே ஆச்சாரியார்.


(சுதேசமித்திரன் 16_-2_-1964)
ஆச்சாரியார் கூறும் _ மனுதர்மம் வலியுறுத்தும் இந்தக் குலதர்மத்தின் அடிப்படையில்தான் ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைத் திணித்தார் என்பதைப் புரிந்து கொண்டால், துக்ளக்கும், கல்கியும், தினமலரும் இன்றைக்கு ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்திற்காக வக்காலத்து வாங்குவதன் வண்டவாளமும், இரக சியமும் அப்பட்டமாகப் புரியுமே!


இத்தகைய மனப்பான்மை உடைய ஒருவர் ஒடுக்கப்பட்ட மக்கள் படிக்க வேண்டும் - உத்தியோகங்களுக்குச் செல்லவேண்டும் என்பதில் நாட்டம் கொள்வாரா? அல்லது நயவஞ்சக வலை பின்னும் வேலையில் ஈடுபடு வாரா?


கே.சி. லட்சுமிநாராயண அய்யர் வாள் துக்ளக்கில்  குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்து வரிந்து வரிந்து எழுதுவதில் ஆச்சரியமில்லை. துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியும் இவ்வாறு எழுதியவர்தான்.


மாணவர்கள் வெறும் ஏட்டுக் கல்வி கற்பதோடு நின்றுவிடாமல், ஏதாவது ஒரு தொழிலையும் ஓரளவு கற்றுக் கொள்ள வேண்டும் என்று ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது முடிவு செய்தார். ஒரு மாணவனுடைய பெற்றோர் எந்தத் தொழில் செய் கிறார்களோ, அந்தத் தொழிலை அவனுக்கும் கற்பித்தால், அவனுடைய பெற்றோர்க்கும் அது உதவியாக இருக்கும்; பார்த்துப் பழக்கம் இருக்கும் என்பதால், அவனுக்கும் அது எளிதாக வரும் - என்ற முறையில் அவர் சிந்தனை ஓடியது. முடிவைப் பொறுத்த வரை நல்ல எண்ணத்தோடு செய்யப்பட்ட முடிவுதான். அச்சத்தின் காரணமாக அதை மாற்றாத உறுதியும் ராஜாஜி யிடம் இருந்தது. செயல்படுத்தக்கூடிய துணிவும் இருந்தது.


ஆயினும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தபோது அவர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. தனது கட்சியை அவர் கலந்து ஆலோசிக்கவில்லை. குலக்கல்வி எனப் பேச்சு வந்த போது, அந்தத் திட் டத்தைக் கொண்டுவருவதில் தனக்கு இருந்த நோக்கம், நல்லெண்ணம் போன்றவற்றை எடுத்துக் கூறி மற்ற வர்களும் அதை ஏற்குமாறு செய்வதற்கு ராஜாஜி முனையவில்லை.


கட்சிக்குச் சற்றே வளைந்து கொடுத்து, மற்றவர்களும் அதை ஏற்குமாறு செய்து, சிலரைச் சமாதானப் படுத்தி, பெயருக்குக் சில மாற்றங்களைச் செய்து, மக்களிடையே நின்று, திட்டத்தின் நன்மைகளை விளக்கிச் செயலாற்றும் அளவுக்கு இறங்கி வர அவர் தயாராக இல்லை. அதனால் அவரும் பதவியை விட்டுப் போனார். திட்டமும் போயிற்று. அதை எதிர்த்துப் புரளி கிளப்பியவர்களின் பேச்சு எடு பட்டது.  ராஜாஜியின் நல்லெண்ணம் அடிபட்டது.


(துக்ளக் 15.-7.-1988)


துக்ளக் மட்டுமல்ல,  கல்கியும், தின மணியும்,  தினமலரும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை அரை நூற் றாண்டுக்குப் பிறகும் கூட- தமிழ்நாட்டு மக்கள் அதை வெறுத்துத் தூக்கி எறிந்தார்கள் என்கின்ற  பாடத்தைக் கூடப் படிக்காமல் பூணூல் வெறியுடன் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத் திற்காகப் பூணூலால் பூமாலை சூட்டு கிறார்கள். இதுதான் அவாளுக்கே   உரிய வருணாசிரம வெறியும், பூணூல் புத்தியும்.


கல்கி என்ன கதைக்கிறது? அதையும் பார்த்து விடலாமா?


ராஜாஜி ஒரு வேளை படிப்பு, ஒரு வேளை தொழில் என்றார். அவர் திட்டம், இருக்கிற பள்ளிகளையும், ஆசிரியர்களையும் வைத்துக் கொண்டே இரட்டிப்பு எண்ணிக்கையில் நவீன கல்வி போதிக்க வழி வகுத்தது. அதே நேரத்தில் உடல் உழைப்பின் மகத் துவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. தொழில் அறிவையும், ஆர்வத்தையும் பெருக்கியது.


எந்தத் தொழிலானாலும் அது இழிவில்லை என அறிவுறுத்தியது. குமாஸ்தா மனப்பான்மையை விரட்டி அடிப்பது, தொழில் ஊற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவது, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது. தொழிற்கல்வித் திட் டத்தைக் குலக்கல்வித் திட்டம்  என்று பெயர் சூட்டி ஒதுக்கியது அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாக இருந்தது. அவ்வளவுதான் என்று கல்கி எழுதியது  (1980 ஜூலை).


ஆச்சாரியாரின் குலக்கல்வி - தொழிற்கல்வியாம். மலம் எடுப்பவன் மகன் மலம் எடுக்கும் தொழிலைச் செய்ய வேண்டும். பார்ப்பனர்கள்தான் பெரும்பாலும் படிப்பாளிகள். உத்தி யோகம் பார்ப்பவர்கள் (1950_களைக் கணக்கில் கொள்ள வேண்டும்). வழக்கறிஞர்களாக, டாக்டர்களாக, இருப்பார்கள். பொறியாளர்களாக இருப்பார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் பிற்பகலில்  என்ன தொழிலைச் செய்வார்கள்? புள்ளி விவரம் வாரியாக இதுவரை இந்த வினாக்களுக்குப் பதிலிறுத்துண்டா பார்ப்பன வகையறாக்கள்?


தினமலர் என்ன சொல்லுகிறது?


கேள்வி: இன்றைய இளைய சமுதா யத்தினருக்கு பல்கலைக் கழகங்கள் கல்வி கற்றுத் தருவதை விட ஏதாவது கைத்தொழில் கற்றுத் தந்தால் என்ன? பட்டத்தை வைத்துக் கொண்டு ரோடு ரோடாக அலைந்து திரிவதை விட, கைத்தொழில் ஒன்றைக் கற்றுத் தொழில் செய்யலாமே?


பதில்: கற்றுத் தருவதைவிட - என் பதை விட - நீங்கள் கூறும் திட்டத் தையும், அன்றைய முதல்வர் ராஜாஜி அமல்படுத்தினாராம்.  (படித்து, கேட்டுத் தெரிந்து கொண்டதால் ராம் போட்டுள்ளேன்). அப்போது இந்தத் திராவிடக் கட்சிகள் குய்யோ முறையோ எனக் கத்தி  பைசா பெறாத காரணங்களைக் கூறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, இக்கல்வி முறையை (காலையில் ஏட்டுக் கல்வி- மாலையில் தொழிற்கல்வி) தொடரவிடாமல் தடுத்துள்ளனர். பலனை இன்று அனுபவிக்கிறோம்.
(தினமலர் -வார மலர் 4-4-2010)
ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டப்படி அரை நேரம் படித்து, அரை நேரம் குலத் தொழிலைச் செய்ய விட்டிருந்தால், இந்தத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்த அளவு படித்திருப்பார்களா? சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் 89 சதவிகித மாணவ, மாணவிகள் பார்ப்பனர் அல்லாதார் என்று துணைவேந்தர் க.திருவாசகம் சொல்லும் (20-.11-.2010) நிலை உருவாகி இருக்காதல்லவா? எல்லாம் பார்ப்பனர் களின் வயிற்றில் அல்லவா அறுத்து வைக்கப் பட்டிருக்கும். அந்த நிலை பறிபோய்விட்டதே என்கிற ஆத்திரம் 56 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அவாளுக்கு அடங்கவில்லை.


பார்ப்பனர்களைப் பொறுத்தவரை மனுநீதிதான்  ஆதிக்கபுரியைக் கட்டிக் காக்கும் கோட்டை.


சூத்திரன் தன் தொழிலை விட்டு உயர் குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்.


(மனுதர்மம அத்தியாயம் 10 சுலோகம் 96)


பெரியார் சகாப்தத்தில் இது தலை கீழாக மாறி விட்டது; மனுதர்மப்படி குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த பார்ப்பன ராஜாஜி பதவியை விட்டு விரட் டப்பட்டார்.


அதனால்தான் அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பெரியார் ஒரு தனி மனிதரல்லர்; ஒரு சகாப்தம், - ஒரு காலகட்டம், -ஒரு திருப்பம் என்றார்.


தந்தை பெரியாருக்கு எதிராக துக்ளக் ஆச்சாரியாரைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதனைச் சவாலாக ஏற்கிறோம்.  ஆச்சாரியாரின் ஆரியத் தாண்டவம்.
-  அடுத்த இதழில்!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...