Friday, October 7, 2011

நம்பிக்கையாளர்களை மாற்ற நாம் விரும்புகிறோமா? - 1


ரொனால்ட் ஏ. லின்ட்சே

மத, கடவுள் நம்பிக்கையாளர்களை மாற்ற நாம் விரும்புகிறோமா?  மத நம்பிக்கையாளர்களை  தங்கள் நம்பிக்கைகளைக் கைவிடும்படிச் செய்வது,  மதம்சாரா மனிதநேய கவுன்சில், விசாரணைக்கான மய்யம் போன்ற அமைப்புகளின் முக்கியமான பணி களில் ஒன்றாக இருக்க வேண்டுமா?

இக் கேள்விகளுக்கு முறையாகப் பதில் அளிக்க வேண்டுமானால், முதலில் நாம் ஒரு கேள்வியைக் கேட்கவேண் டும். மதநம்பிக்கையாளர்களை மாற்றுவதன் மூலம் நமது எந்த நோக்கங்கள் ஈடேறுகின்றன? என்ற கேள்விதான் அது.

மதவாதிகள் உண்மை அல்லாத, பொய்யான, தவறான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர்
மத நம்பிக்கை என்பதன் மிகச் சரியான இயல்பு ஒருவருக்கொருவர் வேறுபடும்.  என்றாலும், தெய்வம் உள்ளிட்ட  இயற்கையை மீறிய சக்தி ஒன்று இருப்பதை வழக்கமாக ஒப்புக் கொள்வது என்பது எல்ல நம்பிக்கை யாளருக்கும் பொதுவானது. இத் தகைய ஆற்றல் இருப்பதில் நம்பிக்கை இல்லாத நாம் அத்தகைய ஆற்றல் இருப்பதற்கான ஆதாரத்தைத் தேடு கிறோம்.

உலக இயற்கையை மீறிய சக்தி ஒன்றோ, பலவோ இருக்கின்றன என்று மதநம்பிக்கையாளர் கள் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்வதற்கு உள்ள ஆதாரங்கள் போதுமானவை யாக இல்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மதவாதிகள் உண்மை அல்லாத, பொய்யான, தவறான, போலி நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்றே கூறலாம்.

மதநம்பிக்கையாளர்கள் அத் தகைய தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தால் நமக்கு என்ன? அவ்வாறு அவர்கள் தவறான நம்பிக்கை கொண்டிருப்பது என்பதுவே நமக்கு ஏதேனும் வேறுபாட்டை உணர்த்துகிறதா?  நீங்களோ, நானோ பல விஷயங்களை, இயல்பியல் பாடத்தைப் பற்றியோ, வேறு நமக்கு அதிகமாக அறிமுகமில்லாத செய்திகள் பற்றியோ தவறாகக் கருதிக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் இந்தத் தவறுகள் எல்லாம் நமக்குப் பேரச் சத்தையோ, பீதியையோ ஏற்படுத்து வதில்லை.

மதநம்பிக்கையாளர்கள் கொண்டுள்ள விரும்பத்தகாத, தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் அதனால், மதநம்பிக்கையாளர்களை அந்த நம்பிக்கைகளைக் கைவிடச் செய்ய வேண்டும் என்ற முயற்சியை மேற் கொள்வது விரும்பத்தக்கதுதான் என்று நாம் கருதினால்,   முக்கியத்துவம் இல்லாத எண்ணிக்கை கொண்ட ஒரு சில மதநம்பிக்கையாளர்கள், விரும்பத் தகாதவை அல்லது தீங்கு விளைவிப்பவை என்று கருதப்படும் வழிகளில் தங்களின் நடவடிக்கைகளை, தங்களின் மத நம்பிக்கை காரணமாக வடிவமைத்துக் கொண்டதுதான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

இத்தகைய அதிக தீங்கு விளைவிக்கும், விரும்பத்தகாத நடவடிக்கைகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்று நான் கருதுகிறேன். தனக்குத் தானே தீங்குகளை விளைவித்துக் கொள்ளும் நடிவடிக்கைகளை முதல் பிரிவாகக் கொள் ளலாம்.

மற்றவர்கள் மீது மதநம்பிக்கையை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சி என்பது தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை என்பதன் இரண்டாவது பகுதியாகும். மற்ற மக்களுக்குப் பெரும் அளவில் கேடு பயக்கும் சில கொள்கைளை ஆதரிப்பது அல்லது  தங்களின் நடத்தை மூலம் தங்களின் மத நம்பிக்கைகளை வெளிப் படுத்துதல் என்று நேரடியாகத் தொடர்பு இல்லாத தீங்கு நிறைந்த நடவடிக்கைகள் மூன்றாவது பிரிவாகும்.


மதநம்பிக்கையாளர்கள் மற்றவர்களை மாற்றுவதற்கே தீவிரமாக முயல்கின்றனர் எனது இக்கருத்தில் இருந்து சிலர்  மாறுபட்டிருக்கலாம்.  தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொள்ளும் மத நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் தனிப்பட்டவர்களின் தவறான நம்பிக் கைகளைப் போக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நியாயத்தை  பெரும்பாலான எல்லா வழக்கு களிலும், அவர்கள் கொண்டிருக்கும் மதநம்பிக்கைகள் அளிப்பதில்லை என்றே நான் நினைக்கிறேன். தவறான நம்பிக்கைகளை மதங்களால் உருவாக்க முடியும்; உருவாக்குகின்றன.

மனிதர்கள் நேசிப்பது, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது போன்ற கனவுகளும் இத்தகைய தவறான நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. ஒரு மாயத் தோற்றத்தின் அடிப்படையில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் பற்றி  நாம் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன்.  சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது, உண்மை நிலையை எடுத்துக் காட்டி விழிப்படையச் செய்து அவர்களை நாம் நிச்சயமாகப் பாதுகாக்கத்தான் வேண்டும். ஆனால், நான் கூற வருவதெல்லாம் என்னவென்றால்,  மதநம்பிக்கைகளின் காரணமாக உருவாகும் சில தவறான நம்பிக்கைகள் மட்டுமே, அவர்களின் மதநம்பிக்கையைப் போக்குவதற்காக குறிப்பிடத்தக்க காலத்தையும், முயற்சி யையும் நாம் மேற்கொள்வதற்கான போதுமான காரணமாக ஆகாது.

அரசு ஆதரவைப் பெறும் மதநம்பிக்கையாளர்கள்

என்றாலும், பலருக்கு, அனைத்து மத நம்பிக்கையாளருக்கும் அல்ல; நம்பிக்கை என்பது ஒரு தனிப்பட்ட விஷயமாக இருப் பதில்லை. அதற்கு மாறாக, மதநம்பிக்கை யாளர்கள் பலரும் மற்றவர்களை மாற்றவே தீவிரமாக முயல்கின்றனர். மேலும், அரசின் ஆதரவைப் பெற்று, தங்களின் நம்பிக்கைகளை அவர்கள் மற்றவர்கள் மீது திணிக்க முயல்கிறார்கள். தங்கள் மதத்தைக் கைவிடுவதையோ அல்லது விமர்சிப்பதையோ தடை செய்யும் சட்டங்களாக அந்த ஆதரவு இருக்கலாம்.

அல்லது சில இஸ்லாமிய நாடுகளில் உள்ளது போன்று தெய்வநிந்தனை, மத எதிர்ப்பு ஆகியவற்றைத் தடை செய்யும் சட்டங்களாக இருக்கலாம். அல்லது  மதச் சின்னங்களைப் பொதுச் சொத்துகள் மீது பொறிப்பதை அனுமதிக்கும் அமைதியான முறையில் மதத்தை ஆதரிக்கும் சட்ட மாகவும் அது இருக்கலாம்.

எந்த வடிவத்திலும் அரசின் ஆதரவை ஒரு மதம் எடுத்துக் கொள்வது மாபெரும் தவறாகும். எது ஒன்றைப் பற்றியும் அது சரியானதா, தவறானதா என்று முடிவு செய்யும்  தனி மனித சுதந்திரத்தை மீறுவதாகும் அது.  எந்த வித நிர்பந்தமும், கட்டாயமும் இன்றி, தூண்டுதல் இன்றி, அரசின் மேற்பார்வை அல்லது தலையீடு இன்றி, இயற்கையை மீறிய சக்தி ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற தனது முடிவை மேற்கொள்ள ஒவ்வொருவரும் சுதந்திரம் பெற்றவர் களாக, உரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

மதச்சார்பற்ற அரசு நடைமுறையை ஆதரிப்பவராகவும் மதநம்பிக்கையாளர் இருக்க முடியும்

ஆனால், மதநம்பிக்கையாளர்கள் சிலரை  தங்களின் நம்பிக்கைக்கு ஊன்றுகோலாக அரசைப் பயன் படுத்திக் கொள்ளும் நோக்கத்தை, இலக்கை அவர்களது மதநம்பிக்கைகள் அளிக்கின்றன என்பதையும், மத நம்பிக்கை கொண்டிருந்தாலும் மற்ற தனிப்பட்டவர்கள், அரசையும் மதத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற கொள்கையின் தீவிர ஆதர வாளர்களாக உள்ளனர் என்பதையும் கவனிக்கவும்.

உண்மையைக் கூறுவ தானால், அமெரிக்காவில், மத சுதத்திரத்துக்கு அரசமைப்புச் சட்டப்படி நமக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதற்குப் பொறுப்பான தனிப்பட்டவர்கள் உண் மையில் ஓரளவு மத நம்பிக்கை கொண்டவர்கள்தான்.

வேறு சொற் களில் கூறுவதானால்,  மதநம்பிக்கை கொண்ட ஒருவர் மதச்சார்பற்ற அரசு நடைமுறையை ஆதரிப்பவராகவும் இருக்க முடியும்.  எனவே, மதத்திற்கு தனிப்பட்ட ஆதரவு அளிக்கும் நடைமுறையை எதிர்த்துப் போராடுவது பற்றிய கவலை கொண்டவர்களாக நாமிருந்தால்,  மதநம்பிக்கையாளர் களை நாஸ்திகர்களாக மாற வலியுறுத்த வேண்டும் என்ற தேவையே இல்லை.
( தொடரும்)

(நன்றி: ஃப்ரீ என்கொயரி - ஏப்ரல் , மே -2011
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...