2ஜி அலைக்கற்றை வழக்கு : உள்துறை அமைச்சர்
ப. சிதம்பரத்தை வழக்கில் சேர்க்கத் துடிக்கும் பின்னணி என்ன?
அய்க்கிய முற்போக்கு ஆட்சியைப் பலகீனப்படுத்தி
குறுக்கு வழியில் பதவியைப் பிடிக்கவே பி.ஜே.பி.யின் சூழ்ச்சி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் நிதி அமைச்சரும் இந்நாள் உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்தைச் சிக்க வைக்க பி.ஜே.பி. மற்றும் பார்ப்பன ஊடகங்கள் துடிக்கும் பின்னணிபற்றி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
2ஜி அலைக்கற்றை வழக்கில், குற்றச்சாட்டு விசாரணை முடிந்த நிலையில், திடீரென்று எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் அதன் சுற்றுக் கோளாகவும், கூட்டணி சேர்ந்து நிரந்தரக் கூட்டிலேயே இருப்பதாக பல்வேறு கொள்கைத் திட்டங்களைக் காட்டிச் சில கட்சிகளும் சேர்ந்து பாடுபடுகின்றன. உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களையும் குற்றவாளியாக ((Accused ஆக) சேர்த்து சி.பி.அய். விசாரிக்க வேண்டும் என்று கோருவதும், சுய விளம்பர சுப்ரமணியசுவாமி, உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு பேச இருப்பதாகக் கூறி, அதனை உடனே இங்கிலீஷ், தமிழ் தொலைக்காட்சிகள் அபாரமாக விளம்பரப்படுத்துவதுமாக இன்று உள்ளது!
பா.ஜ.க. பொறுப்பான எதிர்க்கட்சியா?
பா.ஜ.க.வுக்கு மேலும் இரண்டரை ஆண்டு காலம் - அதாவது அடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திருக்க முடியவில்லை. ஜனநாயகத்தினை மதிப்பவர்களாகவோ, அதில் நம்பிக்கை உள்ளவர்களாகவோ அவர்கள் இருந்தால், பொறுப்பான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டு, நல்ல வண்ணம் சபையை நடக்க விட்டு, கூர்மையான வாதங்களை ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசுக்கு எதிராகக் கூறி வாக்காளர்களை தம் பக்கம் இழுக்கச் செய்ய வேண்டும்.
அதை விடுத்து, ஏறத்தாழ ஒருலட்ச ரூபாய் மாத சம்பளம் (அலவன்ஸ் படி எல்லாம் சேர்த்து) மக்கள் வரிப் பணத்தில் நடக்கும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடக்கவிடாமல் முடக்கி அங்கே சண்டித்தனத்தை ஜனநாயகமாக பெரும்பாலான நாள்களில் அரங்கேற்றி, அரசியல் நடத்துகின்றனர்!
ப. சிதம்பரம் அவர்களை வழக்கில் சேர்க்கச் சொல்லுவதன் நோக்கம்
ஏதாவது துரும்பு கிடைத்தாலும் அதைத் தூணாக்கி, ஆட்சியாளரைப் பதவி விலகுங்கள், பதவி விலகுங்கள் என்று ஓங்காரக் கூச்சலிடுகின்றனர்! மீடியாக்களோ - மனுதர்ம மறுமதிப்புகளாகி இவாளுக்கு விளம்பர சடகோபம் சாத்துவது தங்கள் பிறவிப் பெரும் பயன் என்றே கருதி வெட்கம் சிறிதுமின்றி நாளும் செயல்பட்டு வருகின்றனர்!
2ஜி அலைக்கற்றை வழக்கில் தற்போதைய உள்துறை அமைச்சர், ஏற்கெனவே அவர் நிதியமைச்சராக இருந்ததால் அவரையும் குற்றம் புரிந்ததாகக் கருதி, Mid Term Poll இதில் சேர்க்க வேண்டும் என்று கூறுவதே அரசியல் உள்நோக்கம் கொண்டது; அதோடு ஒரு கல்லில் இரண்டு மாங்காய், அடிப்பது போன்று (UPA) அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை பலிவீனப்படுத்தி, ஒரு - இடைப் பொதுத் தேர்தல் கொண்டு வர முயற்சிப்பதும் ஆகும்!
திரு. சிதம்பரத்தை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று திரு. ராசாவின் வழக்குரைஞர் ஒரு ஆதாரத்தைக் காட்டி வாதாடினார்; அதனால் தம் கட்சிக்காரர் நிரபராதி - 2ஜி மத்திய அரசின் கொள்கை வயப்பட்ட நிலைப்பாட்டினை மட்டும் தான் அவர் செய்தார்; தன்னிச்சையாகவே, இதற்கு முன்பின்பற்றின முறைக்கு மாறாகவோ, அதனை மாற்றியோ தனது கட்சிக்காரரான ஆ. இராசா ஏதும் செய்யவில்லை என்று நிரூபிக்கவே அப்படி ஒன்றைக் கூறினார்.
நோக்கம் என்ன?
ஆதிக்க சக்திகள் சிதம்பரத்தை குற்றவாளியாக்கி விசாரிக்க வேண்டும் என்று கோருவது மேற்கண்ட ஆ. இராசா, மற்றும் பாதிக்கப்பட்டவர்களான குற்றம் சுமத்தப்பட்டவர்களின் ஆதாரங்களை வலுவிழக்கச் செய்யவே இப்படி ஒரு சூழ்ச்சியான ஏற்பாட்டினை, யோசனையை முன் வைக்க முனைந்துள்ளனர்!
சாட்சியாக வந்து ப. சிதம்பரம் சொன்னால் அது பயன்படும் - வழக்கில் உள்ள மற்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு; ஆனால் அவரை கூட்டு குற்றம் சுமத்தப்பட்டவராக (Co - Accused) ஆகப் போட்டால், அவர் கொடுக்கும் எந்த வாக்கு மூலத்தையும், ஆ. இராசா முதலிய பாதிக்கப்பட்டோர் எவரும் பயன்படுத்த முடியாது; அதற்கென சட்ட வலிமை கிடையாது என்பதே இன்னொரு முக்கிய நோக்கமாகும்.
சுய விளம்பர சுப்ரமணிய சுவாமிகள் முதலில் சுப்ரீம்கோர்ட்டில் பிரதமரையும் சேர்த்தே குற்றம் கூறி வாதிட்டார்! உச்சநீதிமன்றமும் அப்போது ஆவேசத்துடன் கேள்வி கேட்க பிறகு திடீரென அவர் மவுனி ஆனார்; பிரதமரைச் சேர்க்க மாட்டேன் என்றார்!
அதே வாதம் தானே இப்போது ப. சிதம்பரம் அவர்களுக்கு (அப்போது நிதி அமைச்சராக இருந்தவருக்கும்) பொருந்த வேண்டும்?
அரசியல் நோக்கர்களின் கருத்து
இன்னொரு முக்கியம் - அரசியல் நோக்கர்களின் கருத்து - நாளுக்கு நாள் பா.ஜ.க.வில் உள்கட்சி சண்டைகள் அதிகமாகி, கோஷ்டிகள் பெருகி வரும் நிலை ஏற்பட்டு மோசமாகி வருகிறது!
பா.ஜ.க.வில் பிரதமர் பதவிக்கு மோடிகளை முன்னிறுத்தும் கோஷ்டி ஒன்று; ர(த்)தயாத்திரை புகழ் அத்வானிகள், நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று சம்மன் இல்லாமல் ஆஜராகும் நிலை!
நிதின்கட்காரி தலைமை ஏற்ற பிறகு கட்சியின் கட்டுக்கோப்பு அவ்வளவு உறுதியாக இல்லை என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்களே முணுமுணுக்கின்ற நிலையில், மேலும் 3 ஆண்டு காத்திருந்தால் காவிக் கட்சி கலகலத்து மாநிலத்துக்கு மாநிலம் பிளவுபட்டு நிற்பதோடு பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற அடிப்படை உணர்வு அங்கே (உள்ளே) வேகமாக வளர்ந்தே வரும் நிலை.
இதனால் இப்படி குறுக்குசால் ஓட்டுகிறார்கள்; காங்கிரஸ் தலைமையோ எந்த முடிவையும் தள்ளி தள்ளிப் போட்டு எதையும் வளர்ந்த பிறகே, முள்ளால் எடுக்க வேண்டியவைகளை கோடரி கொண்டு வெட்டி வீழ்த்தக் கஷ்டப்படும் நிலையில் உள்ளது!
ஊடகங்களின் போக்கு!
வடமாநிலங்களில் அடுத்த ஆண்டு 2012 (மூன்று மாதங்களில்) சில மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் வருவதால், அதனோடு மத்தியிலும் தேர்தலைக் கொண்டு வந்தால் நல்லது தானே என்ற நப்பாசையால், திட்டமிட்டே மீடியா என்ற காகிதப் புலிகளின் தயவினால், விளம்பரங்கள், வழக்குகள், இவைகளே நடத்தி, கற்பனையைக்கூட்டி, திறமையான ஒப்பனைகளால் உண்மைபோல காட்சி அளிக்க வைக்கின்றனர். மக்களிடையே இதை விளக்குவதற்கு ஆளோ, கட்சியோ, நியாயமான ஏடுகளோ தொலைக்காட்சியோ இல்லை என்பதுதான் அவர்களின் பலம் - இவர்களின் பலகீனமும் இதுவே! அந்தோ!!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
தலைவர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment