Thursday, August 4, 2011

தி.மு.க. வெறும் அரசியல் கட்சியல்ல!

தமிழக வரலாற்றில் அண்ணாவும் கலைஞரும் எனும் தலைப்பில் தமிழர் தலைவர் உரையாற்றியபோது- தி.மு.க.வுக்கு உள்ள தனித்தன்மை என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

திராவிடர் கழகத்தைவிட்டு தி.மு.க. பிரிந்த போது கூட இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்-என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்.
அதற்குக் காரணம் என்ன? திராவிடர் கழகத்தின் சமுதாயக் கொள்கைகளிலிருந்து தி.மு.க. எந்த நிலையிலும் விலகிவிடாது என்பதற்கான உத்தரவாதம் அது.
 
ஆட்சிக் கட்டிலில் அண்ணா அமர்ந்து ஆட்சி செய்தது குறுகிய காலமே என்றாலும், அந்தக் குறுகிய காலகட்டத்தில் அவர் செய்த மூன்று சாதனைகள்- தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொன்னாரே-அதனை நிரூபிக்கக் கூடியவைகளாக அமைந்துவிட்டன.

அந்த மூன்று சாதனைகள் என்ன? பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் விளக்கினார். 1. சுயமரியாதைத் திருமணத்திற்கான சட்ட பூர்வமான அங்கீகாரம்.
 
(இதற்கு முன் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் செல்லுபடியாகும். (RETROSPECTIVE EFFECT)
2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்.
3. தமிழ்நாட்டில் இந்திக்கு இடம்இல்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே!
அண்ணாவின் இந்த ஆட்சியின் சாதனைகள்- காலத்தை வென்று கல்வெட்டாக நிமிர்ந்து நிற்கக் கூடியவை. வெறும் அரசியல்வாதியாக அண்ணா இருந்திருந்தால் இந்தச் சிந்தனை வந்திருக்க முடியாது. அதற்கு முன் ஆண்டவர்களுக்கு இந்தச் சிந்தனை வரவில்லையே!
 
இந்தச் சாதனைகள் எத்தகையவை என்பதை அண்ணாவின் வாயால் கேட்பதுதான் சுவை ததும்பக் கூடியதாகும்.
 
என் ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதால் அதனைச் செய்துவிடலாம்.
அதே நேரத்தில் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் செய்த இந்த மூன்று சாதனைகளின் மீது கைவைத்திட எந்தக் கட்சி ஆட்சியினருக்கும் துணிவுண்டா? கை வைத்தால் என்ன ஆகும்? என்ற அச்சம் அவர்களை உலுக்கும். அந்த அச்சம் இருக்கும் வரை இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆண்டு கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம் என்று சொன்னாரே-இது உண்மைதானே!
 
அதே நிலையில் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களின் ஆட்சி சாதனைகளைக் காண முடியும்-

(1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

(2) தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டம்

(3) தமிழ் செம்மொழி அங்கீகாரம்

(4) நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்

(5) சிதம்பரம் கோயில் தீட்சிதர் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டு, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்தது. (அதற்கு முந்தைய ஆட்சிகளில் எவ்வளவோ முயன்றும் சாதிக்க முடியாத நிலை இருந்தது)

(6) வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளால் உண்டாக்கப்பட்ட சத்திய ஞான சபையில் ஜோதி வழிபாடு என்ற நெறிமுறைக்கு முரணாக, உருவ வழிபாட்டினைத் திணித்து ஆட்டம் போட்ட ஆரியத்தை வெளியேற்றிய சாதனை!

(7) பெண்களுக்குச் சொத்துரிமை-இவையெல்லாம் அசாதாரண சாதனைச் சிகரங்கள் அல்லவா!
 
சாலை போடுவதும், பாலம் கட்டுவதும் எந்த ஆட்சியிலும் செய்யக் கூடியவைதான். ஆனால் சமூக மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் பார்வையில், திராவிடர் இயக்க சிந்தனையின் அடிப்படையில் செய்யப்பட்ட இந்தச் சாதனைகள்தானே காலத்தின் உச்சியில் கதிரவனின் ஒளியாக மின்னிக்கொண்டிருக்கும்!
 
இது பெரியார் அவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்ட அரசு என்று அண்ணா அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிரகடனப்படுத்தினார் என்றால்,
 
இது சூத்திரர்களின் அரசு என்று கலைஞர் அவர்கள் சட்டப்பேரவையில் சூளுரைத்தாரே! தி.மு.க.வினர் பகுத்தறிவுக் கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்-பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அண்மைக்காலமாகக் கூடுதல் கவனத்துடன் அழுத்தமாகச் சொல்லி வருகிறார்.
டில்லி-பெரியார் மய்யம் திறப்பு விழாவில் வாஸ்து பார்ப்பது கோவிலுக்குச் செல்லுவதையெல்லாம் தி.மு.கவினர் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரையாக அல்ல; கட்டளையாகச் சொல்லுகிறேன் என்றாரே!

எந்த இடத்திலும், நிலையிலும் தந்தை பெரியார் அவர்களைச் சுட்டிக் காட்ட வேண்டிய இடத்தில் மறவாமல் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுவதைத் தன் கடமையாகக் கொண்டிருக்கிறார் மானமிகு கலைஞர் அவர்கள்.
சென்னையில் கலைவாணர் அரங்கில் ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, கொட்டங்கச்சி ஏந்தல், நாட்டார்மங்கலம் போன்ற ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்டோர் தேர்தலில் நிற்க முடியாத ஒரு தீண்டாமை தலைவிரித்தாடியது.
5 ஆம் முறையாக கலைஞர் அவர்கள் ஆட்சிப் பீடம் ஏறிய நிலையில், அந்தஊராட்சிகளில் எல்லாம் தேர்தலை நடத்தி, தந்தை பெரியாரின் தலைசிறந்த மாணாக்கர் என்பதை நிரூபித்துக்காட்டினார்.
 
தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்களுக்குப் பாராட்டு விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. (13.11.2006) அந்த விழாவில் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர் ஒன்றைக் குறிப்பிட்டார்:

நாங்கள் அழகாக எழுதி, அண்ணாவைப் போல் எழுத முயற்சித்து, அண்ணாவைப் போல எழுதிப் பார்த்து புரட்சிக்கவிஞர் போல் எழுத வேண்டுமென்று முயற்சித்து அதைப் போல கவிதைகளை எழுதி, எவ்வளவு எழுதினாலும், அத்துணையும் தந்தை பெரியார் அவர்களுடைய அந்தச் கொச்சைத் தமிழுக்கு முன்னால் என்றைக்கும் நின்றதில்லை. (கைதட்டல்). அந்தக் கொச்சைத் தமிழ்தான் இன்றைய ஜாதி ஒழிப்புக்கு, மதமாச்சரியங்களால் ஏற்படுகின்ற மடமைகளைக் கொளுத்துவதற்குப் பயன்பட்டிருக்கிறது -என்று எவ்வளவு அழகாக, மிக உண்மையான கருத்தொன்றைப் பதிவு செய்திருக்கிறார் மானமிகு கலைஞர்.

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஓர் அரசியல் கட்சிக்காவது தி.மு.க.வைப் போல சமுதாயக் கொள்கைகள் உண்டா என்று சவால் விட்டுக் கேட்க முடியும்.
அரசியலுக்கு வந்த காரணத்தால் சமுதாயத்தில் புரட்சியையும், நாம் மறந்துவிடவில்லை. ஆனால் இப்பொழுது ஏற்படுகின்ற புதிய கட்சிகளைப் பாருங்கள். திராவிட என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு, பெயரை வைத்தாலுங்கூட, சமுதாயத்தைப் பற்றிப் பேசப் பயப்படுவார்கள்; கடவுளின் பெயரால் நடைபெறுகின்ற அக்கிரமங்களைக் கண்டிக்க அஞ்சுவார்கள். ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற சதிச்செயல்களை எல்லாம் வீழ்த்த வேண்டுமென்று சொல்கிற தைரியமும், அந்த அஞ்சாமையும், அந்தத் துணிவும் எந்தத் திராவிடர் இயக்கத்திற்கு ஏற்படுமென்றால், திராவிடர் கழகத்திற்கு நிகராக-அடுத்தபடியாக அந்த உணர்வு ஏற்படக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை மறந்துவிடக்கூடாது என்றாரே! (முரசொலி 15.9.2006)
இந்தத் தனித்தன்மையைத் தான் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், வேறு எந்த ஆட்சியும் பாலம் கட்டலாம், சாலைகள் போடலாம்; ஆனால் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி சாதித்துள்ள சமுதாய ரீதியான சாதனைகளை வேறு யாரால் செய்ய முடியும்? என்ற கேள்வி மூலம் உறுதிப்படுத்தினார்.

தனக்குப் பின்னர் தி.மு.க.வின் பகுதியை தம்பி கருணாநிதி எழுதி முடிப்பார் என்று அண்ணா அவர்கள் மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் கூறியதை மிகவும் பொருத்தமாகக் கையாண்டார் கழகத் தலைவர்.

அது எந்த அளவுக்குத் துல்லியமானது என்பதை நாடு கண்டுகொண்டுதான் இருக்கிறது.
 
அறிஞர் அண்ணா, கலைஞர் இருவருக்கும் இடையே உள்ள நகைச்சுவை உணர்வுகளை பல நிகழ்வுகளின் மூலம் எடுத்துக்காட்டினார்.

பேருந்துகளில்,
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
சொல் இழுக்குப் பட்டு
என்ற திருக்குறள் எழுதப்பட்டு இருந்தது பற்றி சட்டப்பேரவையில் ஓர் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இக்குறள் யாருக்காக எழுதப்பட்டுள்ளது? என்பது அவரின் கேள்வி.
முதல் அமைச்சர் அண்ணா என்ன பதில் சொன்னார்?
யாருக்கெல்லாம் நாக்கு இருக்கிறதோ அவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது என்றார்.
கேள்வி கேட்டவரே விழுந்து விழுந்து சிரித்தார்.
புளி விலை குறைந்தது யாருடைய சாதனை? என்பது கேள்வி. புளியமரத்தின் சாதனை! என்பது அண்ணாவின் பதில்.
இதே போல முதல்வர் கலைஞர் அவர்களின் பல பதில்களும் உள்ளன.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அசையும் சொத்து எவ்வளவு? அசையாச் சொத்து எவ்வளவு? என்று சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குக் கலைஞர் கம்ப்யூட்டர் போல அளித்த பதில் என்ன தெரியுமா? அசையும் சொத்து அங்கு வந்துபோகும் பக்தர்கள்; அசையாச் சொத்து ஆஞ்சநேயர் என்றார். சட்டமன்றமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.
முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரே வாய்விட்டுச் சிரித்த தகவல் ஒன்று உண்டு.
திருச்செந்தூர் முருகன் கோயில் நகைகளும்-வைரவேலும் கொள்ளை போனதைக் கண்டித்து கலைஞர் அவர்களும், தோழர்களும் நடைப்பயணம் சென்றார்கள். அந்தப் பயணம் முடிவுற்றது. அதற்குப் பிறகு சட்டப்பேரவையும் கூடியது.
அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்: கருணாநிதி திருச்செந்தூருக்கு முருகனைத் தேடிக்கொண்டு போனார். அங்கு கோயிலுக்கு இவர் சென்றவுடனே இவரைப் பார்க்க விரும்பாமல், திருச்செந்தூர் முருகன் இராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்டார் என்றார். எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர் எழுந்தார். இதுவரை திருச்செந்தூரில் வைர வேல்தான் காணாமல் போய்விட்டது என்று சொல்லப்பட்டது. நானும் இதுவரை அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது முருகன் சிலையும் காணாமல் போய்விட்டது என்றும், அது இராமாவரத்தில்தான் உள்ளதென அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும் அப்ரூவராக மாறிய செய்தி இப்பொழுதுதான் கேள்விப்பட்டேன், நன்றி என்று பதிலடி கொடுத்தாரே பார்க்கலாம். முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சி-எதிர்க்கட்சி என்று இல்லாமல் அனைவருமே சத்தம் போட்டுச் சிரித்தனர். கலைஞர் அவர்களுக்கு இத்தகைய நகைச்சுவை உணர்வு என்பது இயல்பானதாகும்.
போரூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அனுமதிக்கப்பட்டார். மயக்கமருந்து (ANAESTHESIA) கொடுக்கப்பட்டு இருந்தது. தண்ணீர் கொடுக்கக்கூடாது என்பது மருத்துவர்களின் உத்தரவு. தண்ணீர் தாகம் எடுத்த நிலையில் செவிலியரை அழைத்துத் தண்ணீர் கேட்டார் கலைஞர். நாக்கை நீட்டச் சொல்லி சொட்டுச் சொட்டாகத் தண்ணீரைக் கொடுத்தார். அப்பொழுது அந்தச் செவிலியரைப் பார்த்து கலைஞர், உன் பெயர் காவேரியா அம்மா? என்று கேட்டார்.
சாதுரியமாக சமயத்துக்கு ஏற்ற நிலையில் நகைச்சுவை உணர்வோடு உடனுக்குடன் வெளிப்படுத்துபவர் கலைஞர்.

தமிழக வரலாற்றில் அண்ணாவும், கலைஞரும் எனும் தலைப்பின் கீழ் இது போல சுவையான தகவல் களையும் நினைவூட்டப்பட வேண்டிய தகவல்களையும், சமுதாயக் கருத்துகளையும் எடுத்துரைத்தார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...