Thursday, August 4, 2011

சூத்திரர்களுக்கும் கீழ் பெண்கள்!

சூத்திரர்களுக்கும் கீழ் பெண்கள்!

தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் (2)
இந்து வருணாசிரம அமைப்பில் பிர்மாவின் நெற்றியில் இருந்து பிராமணன் பிறந்தான். தோளிலிருந்து சத்திரியன் பிறந்தான். இடுப்பிலிருந்து வைசியன் பிறந்தான். பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்று எடுத்துச் சொன்ன தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், பெண்களைப் பொறுத்த வரையில் இந்து சாஸ்திர வருண அமைப்புப்படி சூத்திரர், பஞ்சமர்களுக்கும் கீழே அவர்கள் வைக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டார்.


பஞ்சமர்கள் பிறப்புப் பற்றியும் சாஸ்திரக் குறிப்பு கிடையாது. இது பற்றி தந்தை பெரியாரிடம் பொதுக்கூட்டம் ஒன்றில் அப்படியானால் பஞ்சமர்கள் எங்கு பிறந்தார்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்பொழுது அதற்குத் தந்தை பெரியார் பளிச்சென்று பதில் கூறினார்.

அவர்கள்தான் முறைப்படி அவரவர் அப்பா அம்மாவுக்கு பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தார்கள் என்று கூறினார்.

பெண்கள் ஏன் இந்து மதத்தில் வருண தர்மத்துக்குள் கொண்டு வரப்படவில்லை-பெண்கள் ஏன் அவர்கள் கண்ணோட்டத்தில் புறக்கணிக்கப்பட்டனர்? என்ற வினாவுக்கு வரலாற்று ஆய்வில் திராவிடர் கழகத் தலைவர் ஒரு கருத்தினைக் கூறினார்.

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு இந்தியாவுக்குள் கைபர், போலன் கணவாய்கள் வழியாக வந்தார்கள். அப்பொழுது பெண்களை அழைத்துக்கொண்டு வரவில்லை. நாளடைவில் இங்கு வாழ்ந்த பெண்களோடு தொடர்பு கொண்டார்கள்.

பெண்களைப் பொறுத்தவரை இன்பம் அனுபவிப்புக் கான ஒரு பொருளாகக் கொண்டார்களே தவிர, அவர்களும் மானுடத்தின் ஒரு கூறு என்று நினைக்க வில்லை என்று குறிப்பிட்டார்.

அது எந்த அளவு உண்மை என்பதையும் பார்ப்பனார் களால் எழுதி வைக்கப்பட்ட சான்றுகளிலிருந்து தெளிவாகவே புரிந்துகொள்ளலாம்.

குறிப்பாக மனுதர்மம் என்ன கூறுகிறது?

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல். ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது (மனுதர்மம்-அத்தியாயம் 5, சுலோகம் 148)

பெண்களையும், பிராமணர் அல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது (மனு- அத்தியாயம் 11, சுலோகம் 65)

கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரீ லோலனயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதைகளான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல பூசிக்க வேண்டியது (மனு- அத்தியாயம் 5 சுலோகம் 154)

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (மனுதர்மம்-அத்தியாயம் 9, சுலோகம் 17)

பூணூல் தரித்த பிறகு பார்ப்பனர்கள் துவிஜாதி (இருபிறப்பாளர்) ஆகிறார்கள். அந்த வாய்ப்பும் உரிமையும் கூட ஆண்களுக்கே தவிர பெண்களுக்குக் கிடையாது. பெண்களுக்கு உப நயனமான பூணூல் தரிப்புக் கிடையாது. அதனாலே பெண்கள் கீழ் ஜாதியாகக் கருத்தப்பட்டனர்.

இராமாயணத்தில் கூட சீதைதான் தீக்குளிக்கச் செய்யப்படுகிறாள். சீதையைப் பிரிந்து இராமன் ஒழுக்கவானாக இருந்தானா என்ற கேள்வி எங்கும் எழுப்பப்படவில்லையே- அந்தக் கேள்வியை எழுப்பும் உரிமை பெண்ணாகிய சீதைக்கு இருந்திருக்குமேயானால் இராமனையும் தீக்குண்டம் இறங்கச் சொல்லியிருப்பாரே!

இந்தக் கேள்வியை தந்தை பெரியார் எழுப்பியதுண்டு. வளர்ச்சி, விழிப்புணர்வு தலை தூக்கியதாகக் கூறப்படும். இந்தக்காலகட்டத்திலும்கூடஆண்-பெண்களுக் கிடையான ஏற்றத்தாழ்வு ஏதோ ஒரு வகையில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் நீண்ட காலமாக சமூக அமைப்பில் பெண்களை அடிமைப்படுத்தி வந்த நிலையின் பாதிப்பேதான்!

ஆனால், பேச்சில் மட்டும் மொழியைத் தாய்மொழி என்பார்கள். பூமியைப் பூமாதேவி என்பார்கள். கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்று கூறுவார்கள். ஆண்டுதோறும் சரஸ்வதி பூசை கொண்டாடுவார்கள்.

திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான் சுருக்கென்று தைப்பது போல ஒரு கேள்வியைக் கேட்டார்.

சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறோமே-ஆண்டு தோறும். சரஸ்வதி என்ற பெயருடைய நம் பாட்டிக்கு சரஸ்வதி என்று கையொப்பம் போடத் தெரியுமா? என்ற வினாவை எழுப்பிய போது பார்வையாளர்கள் பகுதியே அதிர்ந்தது! சிரிப்பொலியும் கையொலியும் போட்டிப் போட்டன!

ஆண் ஆதிக்கமனப் பான்மை இன்று முற்றாக விலகிவிடவில்லை. இல்லா விட்டால் நாடாளுமன்றத் திலும், சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் 1996 முதல் நிலுவையில் இருக்குமா?

இன்றைக்குக் கூட விதவைப் பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பானவர்கள் என்று கூறுகிறவர்கள் ஜெகத் குருக்களாக இருக்கிறார் களே- வேலைக்கு போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர் கள் என்று கூறும் சங்கராச் சாரியார்கள் நடமாடுவது எப்படி?

மனுவின் மிச்ச சொச்சங்களாக சோ.ராமசாமி போன்றவர்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

ஓர் எடுத்துக்காட்டு:

கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மையான அபிப்பிராயம்தான் என்ன?

பதில்: உயர்ந்தவர்கள். அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள் (துக்ளக் 18.3.2009)

பெண்களை பார்ப்பனர்கள்-இந்து மத சனாதனிகள் பார்க்கும் பார்வை, போடும் எடை இதுதான்.

தந்தை பெரியார் அவர்கள்தான் தன்மான இயக்கத்தின் கொள்கைகளில் பெண்ணுரிமைக்கு முக்கிய இடம் கொடுத்தார். 1929 செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி தமிழர் தலைவர் எடுத்துக்கூறினார்.

பெண்களுக்கு சொத்துரிமை பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் 1989 இல் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகுதான் நாடாளுமன்றத்தில் இந்தியா முழுமைக்குமான சட்டம் நிறைவேற்றப்பட்டது. மத்தியில் சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் ஏன் விலக நேரிட்டது? இந்து சீர்திருத்த சட்டம்- பெண்களுக்குச் சொத்துரிமை தொடர்பான பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுதானே! பதவி பெரிதல்ல கொள்கை பெரிதென வெளியேறினார்.

1928ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டிலேயே ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநில மாநாட்டிலும் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தச் செங்கற்பட்டு மாநாட்டில், பெண்கள் உரிமைகளுக்கான முக்கியத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

11 ஆவது தீர்மானம்:

பெண்களின் கலியாண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டும் என்றும், மனைவி, புருஷன் இருவரில் ஒருவருக்கொருவர் ஒத்து வாழ இஷ்ட மில்லாதபோது, தம்முடைய கல்யாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ள உரிமையிருக்க வேண்டுமென்றும், விதவைகள் மறு விவாகம் செய்து கொள்வதற்கு உதவி செய்ய வேண்டுமென்றும், கலியாணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்களும், பெண்களும் ஜாதி, பேதமின்றித் தங்கள் தங்கள் மனைவி புருஷர்களைத் தேர்ந் தெடுத்துக்கொள்ள பூரண உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கேற்றவாறு கல்யாணச் சடங்குகள். திருத்தப்பட வேண்டும் என்றும், கல்யாணம் முதலிய சடங்குகள் சொற்ப பணச் செலவில் நடத்தப்பட வேண்டும் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு நாளைக்கு மேலாவது, ஒரு விருந்துக்கு மேலாவது நடத்தக்கூடாதுதென்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்-13:

பள்ளிக்குப் போகத்தக்க சிறுமிகளுக்கு ஆரம்பக் கட்டாயக் கல்வி மாத்திரம் பொது நிதிகளிலிருந்து போதிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் எண்-25:

பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் வேலையில் பெண்களே அதிகமாக நிமியக்கப்படுவதற்கு தக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், ஆரம்பக் கல்வி கற்றுக்கொடுக்கும் உபாத்தியாயர் வேலைக்குப் பெண்களையே நியமிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இதுபோன்ற தீர்மானங்கள் 80 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்களால் நிறை வேற்றப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டன. அவை பிற்காலத்தில் அரசுகளால் சட்டங்களாகவும் ஆக்கப்பட்டு பெண்கள் இப்போது அனுபவித்தும் வருகின்றனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களுக்கு வாய்ப்புக்கொடுத்தால் அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிப்பார்கள்-நிரூபித்தும் வருகிறார்கள் என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், அதற்கு எடுத்துக் காட்டாக இங்கே நம் துணைவேந்தர் இங்கே இருக்கிறார் என்று அவர் சொன்னபொழுது பலத்த கரஒலி!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...