தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது; முடிவு செய்யப்பட்டது என்பதற்காக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அவற்றையெல்லாம் ரத்து செய்வதோ, மாற்றி யமைப்பதோ பொதுமக்கள் மத்தியில் பொதுவாகக் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துத் தரும் என்பது பொது அறிவு உள்ள அனைவராலும் ஒப்புக்கொள்ளப் படக் கூடிய உண்மையாகும்.
முதலாவதாக, 1000 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து கட்டப்பட்ட தலைமைச் செயலகம், சட்டப் பேரவை ஆகியவற்றைப் பயன்படுத்தப் போவதில்லை; மாறாக பழைய கோட்டையிலேயே அவை இயங்கும் என்று அறிவித்ததன்மூலமாக முதற்கெட்ட பெயர் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு ஏற்பட்டுவிட்டது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கட்டடங்கள் பழுதுபட்டுவிட்டன; மழை பொழிந்தால் கோப்புகள் வீணாகின்றன என்று அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களே வெளிப் படையாகக் கூறி, வேறு இடங்களைத் தேடியதெல்லாம் நாட்டு மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட இடத்தில் பணியாற்ற விரும்பவில்லை என்று கூறுவது வெறும் அரசியல் வெறுப்புதான் என்ற எண்ணம் தொடக்கத்திலேயே எழுந்துவிட்டது.
சில ஏடுகள், சில கட்சிகள் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கவில்லை என்பதாலேயே, தாம் எடுத்த முடிவு சரிதான் என்று முதலமைச்சர் நினைத்திட வேண்டாம்.
அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி கூட மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது.
அடுத்தகட்டமாக சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படாது; பழைய முறையே தொடரும் என்று அ.தி.மு.க. அமைச்சரவை முடிவு எடுத்திருப்பதும் கடும் எதிர்ப்புக்கும், விமர் சனத்துக்கும் ஆளாகிவிட்டது.
சமச்சீர் கல்வித் திட்டம் என்பது அரசியல்வாதிகள் தயாரித்த திட்டம் அல்ல - கல்வி நிபுணர்கள் ஆய்ந்து பொதுமக்களின் கருத்தையும் கேட்டுக்கூட பரிந்துரைக்கப்பட்டதாகும்.
இந்த நிலையில் அரசியல் கண்ணோட்டத்தோடு இதையும் அணுகுவது ஆரோக்கியமானதாக இருக்க முடியாது.
சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப் பட்டுள்ள நிலையில் (சுமார் 200 கோடி ரூபாய்) அவற்றையெல்லாம் மூட்டை கட்டி ஒரு பக்கத்தில் ஒதுக்கித் தள்ளிவிட்டு பழைய பாடத் திட்டம் என்பது - மக்கள் பணம் மதிக்கப்படவில்லை - மாற்றமான கல்வித் திட்டம் மறுக்கப்படுகிறது என்ற எண்ணத்தைத்தான் உருவாக்கும்.
இதற்கிடையில் இந்து முன்னணி அதிபர் திருவாளர் இராம. கோபாலன் அய்யர் குறுக்குச்சால் ஓட்டியுள்ளார்.
கருணாநிதி தயாரித்த சமச்சீர் கல்வித் திட்டம் என்றும், தோற்றுப்போன ஈ.வெ.ரா.வின் கொள் கையைக் கொல்லைப்புறம் வழியாகக் கொண்டுவரும் கல்வித் திட்டம் என்றும் தி.க. தலைவர் கி. வீரமணி இதன் பின்னணியில் இருக்கிறார் என்றும் வழக்கம் போல தனது ஓட்டை வாயைத் திறந்து ஓலம் விட் டுள்ளார். இதிலிருந்து சமச்சீர் திட்டம் நிறுத்தப் படுவதற்கான பின்னணியின் ஒரு முனை வெளிச் சத்துக்கு வந்துவிட்டது.
பெரியார்பற்றி பாடத்தில் இடம்பெறுவதாகவே இருக்கட்டும்; அதில் என்ன தவறு? தந்தை பெரியார் அவர்களைவிட மக்களுக்குத் தொண்டு செய்த மாமனிதர் யார்?
சமூகச் சீர்திருத்தம், சமூகநீதி, பெண்ணுரிமை என்பதெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்ட உயர் எண்ணங்கள்தானே?
முதலமைச்சர் இந்தப் பிரச்சினையில் எந்த எண்ணம் கொண்டுள்ளார்? பெரியாரைப்பற்றிப் பாடம் இருந்தால் இந்த முதலமைச்சர் தடுத்துவிடுவார் என்ற எண்ணம் மக்களிடம் பரவவேண்டுமா?
திருவாளர் சோ ராமசாமியா? பெரியார் ராமசாமியா? இந்த ஆட்சிக்கு யார் நெருக்கம் என்பது மக்களுக்குத் தெரிந்துவிடாமல் போகாது.
இந்த ஆட்சியைச் சுற்றி ஒரு பூணூல் வேலி போடத் தீவிர முயற்சிகள் நடந்துகொண்டுள்ளன. எதில் வெல்வார் முதல்வர்? எங்கே பார்ப்போம்!
No comments:
Post a Comment