Monday, March 2, 2020

நினைவுத் திறனை அதிகரிக்கும் மாதுளை

வைட்டமின்கள் சி, பி, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், இரும்புச் சத்து, நார்ச்சத்து என மாதுளம் பழத்தில் முக்கியமான சத்துகள் நிரம்பியிருக்கின்றன. மாதுளம் பழச் சாற்றில் 100-க்கும் மேற்பட்ட பைட்டோகெமிக்கல் வகைகள் இருக்கின்றன.
மாதுளம் பழம் தரும் நன்மைகளில் சில:
மாதுளை முத்துகள் சிவப்பு நிறத்தில் இருப்பதற்குக் காரணம், அதிலிருக்கும் பாலிபீனால்கள். மாதுளம் பழச் சாற்றில் பாலிபீனால்கள் நிரம்பியிருப்பதால், அது நினைவுத் திறனை அதிகரிக்க உதவுகிறது. அன்றாடம் மாதுளம் பழச் சாற்றை அருந்தி வந்தவர்களின் நினைவுத்திறன் மற்றவர்களைவிடக் கூடுதலாக இருந்தது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. அன்றாடம் காலையில் ஒரு கப் மாதுளம் பழச் சாறை அருந்துவது நினைவுத்திறனை அதிகரிக்கும்.
ரத்த அழுத்தம், இதய நோய்களைத் தடுக்கும்
மாதுளம் பழச் சாறு, இதய நலனைப் பாதுகாப்பதற்கான சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இதயத்தின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்த குழாய்கள் இறுகாமல் பார்த்துக்கொள்ள மாதுளைச் சாறு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. ஆனால், ரத்த அழுத்தம், கொழுப்பைக் குறைக்க மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு மாதுளைச் சாறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதனால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு, மாதுளம் பழச் சாற்றைப் பருகலாம். ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க மாதுளை உதவுகிறது.
புற்றுநோய்களைத் தடுக்கும்
மாதுளம் பழம் சில வகைப் புற்றுநோய்கள் உருவாவதைத் தடுக்கிறது. இந்தப் பழத்தில் வீக்கத்தை எதிர்க்கும் பண்புகள் அதிகமாக இருப்பதாலும், அதிகமான பாலிபீனால்கள் இருப்பதாலும், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைக் குறைக்கிறது. அத்துடன், புற்றுநோய் பரவாமலும் தடுக்கிறது.
மார்பக, நுரையீரல், ஆண்மைச்சுரப்பி புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராடும் தன்மை மாதுளம் பழத்தில் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
மூட்டுவீக்கம், மூட்டு வலி நிவாரணம்
மாதுளையில் இருக்கும் வீக்கத்தை எதிர்க்கும் பண்புகள் மூட்டுவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், மூட்டு வலியிலி ருந்தும் பாதுகாக்கின்றன. மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் அடைப்பு என்சைம்களை நீக்குவதற்கு மாதுளைச் சாறு உதவுகிறது. அத்துடன், மாதுளையில் அதிகமாக இருக்கும் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களால், வீக்கத்தை எதிர்க்கும் வலிமையான பண்பைக் கொண்டிருக்கிறது. அதனால், உடல் வீக்கத்தைக் குறைக்க இந்தப் பழம் உதவுகிறது.
எலும்புகளின் ஆரோக்கியம்
எலும்புகளின் தேய்மானத்தைக் குறைக்கவும் மாதுளம் பழம் உதவுவதாக 2013இ-ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கும் மாதுளம் பழத்தில் இருக்கும் வலிமையான ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள்தாம் காரணம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...