நாக்பூரில் உள்ள மகிளா கலாவாணிஜ்ய
மகாவித்யாலா என்ற கல்லூரியில், காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் நாளன்று
கல்லூரி நிர்வாகம் வித்தியாசமான உறுதிமொழியை மாணவிகளைக்கூற வைத்துள்ளது.
பொதுவாக பள்ளி - கல்லூரி துவக்கத்தின்
போது நாங்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற உறுதிமொழியைத்தான்
கூறச்சொல்லுவார்கள். ஆனால் நாக்பூரில் உள்ள மகிளா கலாவாணிஜ்ய மகாவித்யாலாயா
புதுவிதமான உறுதி மொழியை மாணவிகளிடமிருந்து வாங்கியுள்ளது.
கல்லூரி பேராசிரியர் பிரதீப் தாண்டே
என்பவர் எழுதிய உறுதிமொழியை அவரும், கல்லூரி முதல்வரும் முன்மொழிந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவிகளும் இந்த உறுதிமொழியைக் கூறுமாறு
வற்புறுத்தினார்கள்.
அதில் "நான் இந்த உறுதிமொழியை
உளப்பூர்வமாக ஏற்கிறேன், நான் எங்கள் கலாச்சாரத்தின் மீதும், சமூக பழக்க
வழக்கங்களின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறேன், எங்களது பெற்றோர்
மீது நம்பிக்கை வைத்து அவர்களின் கட்டளையை மீறமாட்டேன், எனது பெற்றோர்கள்
எங்க ளுடைய எதிர்காலத்திற்காக கொடுப்பதை ஏற்பேன், ஆனால் வலுக்கட்டாயமாக
மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணைக் கேட்டால் கொடுக்க மறுத்து எதிர்ப்பு
தெரிவிப்பேன்."
"இந்த நாட்டின் உறுதித்தன்மை அதன் கலாச்சாரத்தில் உள்ளது. ஆகவே அந்தக் கலாச்சாரத்தை நான்
பாதுகாப்பேன், யாரையும் காதல் செய்யவும் மாட்டேன், காதல் திருமணத்தை
அங்கீகரிக்கவும் மாட்டேன், காதல் என்ற பெயரில் நான் விழுந்து எனது
எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ள மாட்டேன்." என்று உறுதிமொழி ஏற்றனர்.
இது தொடர்பாக இந்த உறுதிமொழியை எழுதிய
பிரதீப் தாண்டே 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்குக் கூறியதாவது: "இது
விமர்சனத்திற்கு ஆளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனால் காதலால் எத்தனைக்
குற்றங்கள் நடக்கின்றன என்று தினசரி நாளிதழ்களைப் பார்த்தாலே தெரிந்து
கொள்ளலாம். இந்தக் காதலால் எத்தனைப் பெற்றோர்கள் தற்கொலை செய்து
கொள்கிறார்கள். இதை எல்லாம் நான் சிந்தித்துப் பார்த்தேன்."
"இந்தியா போன்ற நம் நாட்டிற்குக் காதல்
தேவையில்லை. இது வெளிநாட்டுக் கலாச்சாரம். அங்கே ஆடு, மாடுகளைப் போல்
பிள்ளைகளை விரட்டி விடுவார்கள். ஆகையால் அவர்கள் காதலித்துக்
கொள்கிறார்கள். இங்கே அப்படி அல்ல, பண்பட்ட ஒரு குடும்ப அமைப்பு உள்ளது.
இந்த அமைப்பின் கீழ் வாழும் அனைவருமே சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சார
ஒழுக்கத்துடன் வாழ்கின்றனர். ஆகவே நமது கலாச்சாரத்தை பாதுகாக்கவேண்டும்.
இதனால் தான் நான் இந்த உறுதிமொழியை எழுதினேன், இதைக் கல்லூரி நிர் வாகமும்
உடனே ஏற்றுக்கொண்டு என்னையே முன்மொழியக் கூறினார்கள்."
"அனைத்து மாணவிகளும் அவர்களாகவே விருப்பப்பட்டு இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில்
இருந்தே, நாடு முழுவதும் இந்துத்துவ சில்லரை அமைப்புகள் காதலுக்கு எதிராகப்
போர்க்கோலம் பூண்டுள்ளன. ஒருபுறம் 'லவ்ஜிகாத்' என்ற பெயரில்
இஸ்லாமியர்களைத் திருமணம் செய்யும் இந்துக்களை மிரட்டுவதும், போலிப்புகார்
கொடுப்பதும், ஜாதி மாறித் திருமணம் செய்பவர்களை ஊர் பஞ்சாயத்து
முன்னிலையில் நிற்கவைத்து அவமதித்து இணையர்களைப் பிரிப்பதும் தொடர் கதையாகி
வருகின்றன. இந்த நிலையில் தற்போது கல்லூரிகளிலேயே காதலுக்கு எதிரான
வேலையை தங்களது அமைப்பைச்சேர்ந்தவர்களின் மூலம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
18 வயது நிறைந்த பெண்ணும், 21 வயது
நிறைந்த ஆணும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொள்வது
சட்டப்படியானது. இதில் தலையிட அரசுக்கே உரிமை இல்லை என்கிறபோது, ஒருகல்லூரி
நிருவாகம் எப்படி தலையிட முடியும்?
இதன் பின்னணியில் உள்ளது - இந்து மத
வெறிச் சிந்தனையே! காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் அங்கே ஜாதியின்
ஆணி வேர் அறுபட்டு வீழ்கிறது. ஜாதி ஒழிக்கப்பட்டால் இந்து மதம் ஆட்டம்
கண்டு விடும். உயர் ஜாதி பார்ப்பன ஆதிக்கம் சரிந்துவிடும். இந்தக்
காரணத்தால் தான் இது போன்ற அத்துமீறல்களும், ஆதிக்க ஜாதி உறு மல்களும்
நடக்கின்றன. சட்ட விரோதமாகச் செயல்பட்ட நிருவாகத்தின் மீது நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
No comments:
Post a Comment