Thursday, January 9, 2020

ஊழலுக்கு அப்பாற்பட்டதா பிஜேபி ஆட்சி?

தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கும் பணியில் ரூ.1600 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய தணிக்கை வாரியமான சிஏஜி, அசாம் பாஜக மாநில அரசு மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2016ஆம் ஆண்டில் அசாம் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 15ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு  முற்றுப் புள்ளி வைத்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. அங்கு மாநில முதல்வராக சர்பானந்தா சோனோவால் தலைமையில்  ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம், மாநில அரசுமீது ரூ.1600 கோடி முறைகேடு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் தான் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய தணிக்கை வாரியமே தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
1971இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர், வங்கதேச விடுதலைப் போர் ஆகியவற்றின்போது, ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். காலப்போக்கில் அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில், அசாமில் குடியேறிய வங்க தேசத்தவர்களால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப் படுவதாகக் கூறி அசாமை பூர்வீகமாகக் கொண்டவர்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான்,   1971ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்க முடிவு செய்து, 1951ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று, அதன் இறுதிப்பட்டியலும் மத்திய பாஜக அரசால் வெளியிடப்பட்டது.
அதன்படி,   சட்டவிரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டமும் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால்  மீண்டும் போராட்டங்கள்  பலமாக வெடித்துள்ளன.
இந்த பரபரப்பான சூழலில்தான் கடந்த ஆண்டு அங்கு கணக்கைத் தணிக்கை  செய்த மத்திய கணக்கு வாரியமான சிஏஜி,  தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பான தகவல்களை திரட்டுவதில் கடந்த 3 ஆண்டுகளில்  1,600 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டி உள்ளது. இந்தமுறைகேடுகள் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர் பான தகவல்களை திரட்டுவது மற்றும்  பதிவேற்றுதல், அதற்கான செலவினங்களில் நடைபெற்று உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து  மாநில நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சிஏஜி கூறியுள்ள குற்றச்சாட்டுக் குறித்து, சட்ட மன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
பாஜக மாநில அரசில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து சிஏஜி நேரடியாகக் குற்றம் சாட்டி உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
பிஜேபி ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று பிஜேபி, சங் பரிவார் வட்டாரம் உரத்தக் குரலில் பேசி வருகிறது.
மத்திய பிரதேசத்தில் பிஜேபி 15 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடத்தப்பட்ட ஊழல் (வியாபம்) விண்ணையும், மண்ணையும் தொடும் அளவுக்கு அபாயகரமானது.
பொய்தான் அவர்களுக்கு முதலீடும், கொள்ளை இலாபமும் ஆகும் என்பதில் அய்யமில்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...