ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை
குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று ஆர்பிஅய்
முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைக்கு ரிசர்வ்
வங்கி நிர்வாகக் குழு திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இதன்படி, 2018-19 ஆண்டுக்கான ரிசர்வ்
வங்கியின் உபரி ரூ.1,23,414 கோடி, திருத்தப்பட்ட பொருளாதார முதலீட்டு
கட்டமைப் பின் (இசிஎஃப்) கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உபரி ரூ.52,637 கோடி
என மொத்தமாக ரூ.1.76 லட்சம் கோடி உபரித் தொகை மத்திய அரசுக்கு
வழங்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றிலும் ரிசர்வ்
வங்கிகளிடம் இருக்கும் உபரி நிதி, அரசிடம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளது. பல்வேறு
நாடுகளில் உள்ள ரிசர்வ் வங்கிகள் அதிகபட்சமாக 14 சதவீத உபரி நிதியை தங்கள்
வசம் வைத்துள்ளன.ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி 28 சதவீத உபரி நிதியை
வைத்துள்ளது.
அதை தன்னிடம் வழங்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியதை அடுத்து, அதற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு
அமைக்கப்பட்ட, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழு,
3 முதல் 5 ஆண்டு இடைவெளியில் ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியை மத்திய
அரசுக்கு அளிக்கலாம் என்றும், இதன் மூலம் அரசு தனது நிதிப் பற்றாக்குறையை
சமாளிக்க முடியும் என்றும் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment