Wednesday, July 10, 2019

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அரிமாக் குரல்!

மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அளவுகோல் பற்றி நாட்டில் சர்ச்சை கொழுந்து விட்டு எரிகிறது. உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற சட்டம் - மத்திய பிஜேபி அரசால் அவசர அவசரமாக மூன்றே நாள்களில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெற்று, உடனே செயலுக்கு வரவேண்டும் என்று மத்திய பிஜேபி ஆட்சி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது.

வேறு எந்தப் பிரச்சினையிலும் காட்டாத காற்று வேகம் உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு என்பதில் மட்டும் ஏன் இவ்வளவு சூரத்தனம்?
அங்கேதானிருக்கிறது பார்ப்பனத்தனம். இந்த சட்டத்தால் பலனடையப் போவது அவர்கள்தானே.

இந்தநேரத்தில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏன், நினைவு படுத்திக் கொள்வதும் அவசியமாகும். இடஒதுக்கீட்டினால் தகுதி - திறமை போய்விடும் என்று யார் யார் எல்லாம் கூச்சல் போட்டார்களோ, அந்த வகையறாக்கள்தான் இப்பொழுது 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தந்து கை தட்டி வரவேற்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒரு வினாவை எழுப்பினார். "இந்தச் சட்டத்துக்கான அவசரமும், அவசியமும்தான் என்ன? உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியோர் கல்வியில் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டா? புள்ளி விவரங்கள் உண்டா?" என்பதுதான் அந்த  அர்த்தமிக்க வினாவாகும். வினாமட்டுமல்ல - அர்த்தம் நிறைந்த அரிமாக் குரல் அது.

அவர்களால் அந்தப் புள்ளி விவரங்களை எடுக்கவும் முடியாது, எடுத்தாலும் சொல்லவும் முடியாது; காரணம் அந்த உயர்ஜாதிக்காரர்கள் அவர்களின் விகிதாசாரத்துக்கு மேல் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பல மடங்கு ஆதிக்க சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஊஞ்சலாடுகிறார்கள். ஏதோ பொத்தாம் பொதுவில் திராவிடர் கழகத் தலைவர் இந்தக் கருத்தினை எடுத்துச் சொல்லவில்லை. எதையும் ஆதாரத்துடன் சொல்லிப் பழக்கப்பட்ட தலைவர் "எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி" (8.6.2019) வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையிலிருந்து ஒரு புள்ளி விவரத்தைத் துல்லியமாக எடுத்துரைத்தார். அய்ந்து கல்வி நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், 445 உயர் கல்வி நிறுவனங்களில் 28 விழுக்காட்டினர் உயர்ஜாதியினர் என்பதுதான் அந்தப் புள்ளி விவரம்.

இப்பொழுது நம் முன் உள்ள கேள்வி - ஏற்கெனவே பல மடங்கு இடங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆதிக்க ஜாதியினரை மேலும்,  மேலும் கொழுக்க வைப்பதுதானே இந்தப் புதியச் சட்டம்?

சமூக நீதியைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்டத்திலும் அங்குலம் அங்குலமாகத் தடைகளைத் தாண்டித்தானே வரவேண்டியிருந்தது.
ஒரு கால கட்டம் இருந்தது. மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்துக்குரல் கொடுத்ததின் விளைவாகத்தானே - நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் (இராம ராய நிங்கர்) பிரதமராக இருந்த போது தானே அந்த நிபந்தனை தூக்கி எறியப்பட்டது.

சமஸ்கிருதம் தெரிந்திருப்பதற்கும், மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கும் என்ன சம்பந்தம்? அதன் திரை மறைவில் இருந்த சூழ்ச்சி என்ன? சமஸ்கிருதம் யார் படித்திருப்பார்கள்? மற்றவர்கள்தான் படிக்க முடியாதே - படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்பதுதானே மனுதர்மம். பார்ப்பனர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான சூழ்ச்சி என்பதல்லாமல் அது வேறு என்ன?

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரான  கா.நமச்சிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81, சமஸ்கிருத பேராசிரியரான குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300. இது என்ன கொடுமை! அதையும் எதிர்த்துக் குரல் கொடுத்து சம நிலைக்குக் கொண்டு வந்தவர் தந்தை பெரியாரே!.

"மதர் இந்தியா" எனும் புகழ் பெற்ற நூலை எழுதிய மிஸ் மேயோ பனகல் அரசரைப் பார்த்து, "பார்ப்பனரல்லாதாருக்கு மூளை இல்லையா? ஏன் அவர்கள் படிக்கவில்லை" என்று கேட்டார். அதற்குப் பனகல் அரசர் கூறியது, "பார்ப்பனர்கள் மூளையின் சூழ்ச்சியால் தானே அவர்கள் படிக்க முடியாமற் போயிற்று" என்றார்.

சூத்திரர்கள் வேத சாஸ்திரங்களைத்தான் படிக்கக் கூடாதே தவிர, மற்றவற்றைப் படிக்கலாமே என்று சத்தியமூர்த்தி அய்யர் சாமர்த்தியமாக பதில் சொன்னதாக நினைப்பு!

அந்தக் காலக்கட்டத்தில் படிப்பது என்றால் வேத சாஸ்திரங்கள் மட்டும்தானே இருந்தன.

இப்படியொரு நீண்ட கால போராட்டத்தின் தொடர்ச்சியில் நீதிக்கட்சியும், அந்த ஆட்சியும், தந்தை பெரியாரும் தலை தூக்கிய நிலையில் சமுக நீதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, திராவிடர் கழகத் தலைவரின் வழிகாட்டுதல்படி அதன் பரிணாம வளர்ச்சியாக 69 சதவிகித இடஒதுக்கீடு என்னும், அசைக்க முடியாத கோட்டையாக - சட்ட ரீதியாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானத்தை உடைக்க - அடிக்கல்லைப் பெயர்ப்பதுதான் இந்தப் பொருளாதார அளவுகோல்; ஓர் இடத்தில் பொருளாதார அளவுகோலை நுழைத்துவிட்டால்  69 சதவிகிதத்திலும் அதைக் கொண்டு வருவதற்கான ராஜபாட்டைத் திறந்து விடப்பட்டு விடும். அதற்கான தொடக்கத்தைத் தொடக்கத்திலேயே கிள்ளி எறியாவிட்டால் போராடி கட்டிய சமுக நீதிக் கோட்டை தரைமட்டமாகி விடும், எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...