கடவுள் நம்பிக்கையாளர்களும், மத
நம்பிக்கையாளர்களும், பகுத்தறிவாளர்கள் கேட்கும் அடிப் படையிலான
வினாக்களுக்குப் பதில் சொல்லாமல் திசை திருப்புவது அவர்களின்
வாடிக்கையாகும்.
பல பெயர்களில் சொல்லப்பட்டாலும் கடவுள்
ஒருவரே - அவருக்கு உருவம் கிடையாது - எங்கும் நிறைந்தவர் என்று பொதுவாக
அவர்கள் சொல்லுவது வழக்கமே.
நடைமுறையில் என்ன நடக்கிறது? உருவமில்லாத
கடவுளுக்கு உருவங்கள் உருவாக்கப்பட்டது ஏன்? மனைவி, வைப்பாட்டி, மக்கள்
ஏன்? என்ற கேள்விக்கு விடை மட்டும் கிடைக்கவே கிடைக்காது.
அறியாமை அடர்ந்திருந்த காலத்தில்
அச்சத்தின் காரணமாகக் கற்பிக்கப்பட்ட கடவுள், மதத்தின் கைக்குச் சென்று
நிறுவன மாக்கப்பட்ட பின் தலபுராணங்களும், வண்டி வண்டியாகக் கதைகளும்
புனையப்பட்டன.
வயிற்று வலி தீர வேண்டுமா? வைத்திஸ்வரன்
கோயிலுக்கு வாருங்கள், திருமணம் ஆக வேண்டுமா? திருமணஞ்சேரி கோயி லுக்கு
வாருங்கள், வழக்குகளில் வெற்றி பெற வேண்டுமா? கொல் லங்குடி வெட்டுடையான்
(சிவகங்கை அருகில்) காளிகோயிலுக்கு வாருங்கள், செலவுக்குத் தட்டுப்பாடா?
சிதம்பரம் அருகில் உள்ள வழித்துணை நாதர் (மார்க்கசகாயேஸ்வரர்) கோயிலுக்கு
வாருங்கள் என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது?
ஒரே கடவுள் தான், நாமங்கள் தான் வெவ்வேறு
என்று கூறி சமாளிக்கும் மதவாதிகள் ஒவ்வொரு கோயிலிலும் உள்ள
கடவுளுக்கெல்லாம் வெவ்வேறு சக்திகளைக் கூறுவது ஏன்?
ஆரூரில் பிறக்க முக்தி -
தில்லையம்பதியைத் தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, ஆனால்
அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று கூறுவதெல்லாம் எதைக் காட்டுகிறது?
எங்கள் கடையில் வாங்குங்கள். துணி சாயம் போகாது என்று சொல்லும்
வியாபாரிக்கும், இவர்களுக்கும் என்ன வேறுபாடு?
பக்தியைக் காட்டி பண வசூல்தானே! கடவுள் தான் சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே - அவருக்கு ஏன் பணம் - தங்கக் குவியல்?
மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்
ஜெயேந்திர சரஸ்வதி 1976 மே மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய
இந்து மாநாட்டில் பேசும்போது "பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது. கோயிலுக்குப் போவது ஒரு வகை ஃபேஷன் ஆகி விட்டது" என்று பேசவில்லையா?
இந்த நிலையில் என் மதம்தான் உயர்ந்தது, உன் மதம் மட்டமானது என்று பேசுவதெல்லாம் எதைக் காட்டுகிறது?
ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதத்தில் (21.6.2019 பக்கம் 35) ஒரு கேள்வி பதில்.
கேள்வி: நமது ஹிந்து மதம் கிறிஸ்துவ, முஸ்லிம் மதங்களி லிருந்து எந்த வகையில் மாறுபடுகிறது?
பதில்:
எல்லா மதங்களும் உண்மை. அவர்கள் வழிபடும் கடவுள்களும் உண்மை என்று
கூறுவது ஹிந்து மதம். ஆனால் மற்ற மதங்கள் எங்களது மதமே உண்மை,
மற்றதெல்லாம் பொய், எங்கள் கடவுளை வணங்கினால் மட்டுமே உங்களுக்கு நற்கதி
கிடைக்கும் என்று கூறுகின்றன - என்று ஆர்.எஸ்.எஸ். இதழ் எழுதுகிறது.
இதைச் சொல்லுவதற்கு விஜயபாரதத்துக்கோ, அவர்களின் கூட்டமான சங்பரிவார்களுக்கோ கிஞ்சிற்றேனும் யோக்கியதை உண்டா?
450 ஆண்டு கால வரலாறு படைத்த முஸ்லிம்களின் பாப்ரி மஸ்ஜித்தை அடித்து நொறுக்கியவர்கள் இதை எழுதுவதற்குத் தகுதி படைத்தவர்கள் தானா?
ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருந்த கே.எஸ்.
சுதர்சன் ஆக்ராவில் நடைபெற்ற - ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்திருந்த மூன்று
நாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் பேசியது என்ன?
"இந்தியாவில்
உள்ள கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் சிறீராமபிரான், சிறீகிருட்டிண
பகவான் ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டி
ருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்" ('தினமணி' 16.10.2000) என்று கூறினாரே.
இதுதான் இந்து மதம் மற்ற மதங்களையும் மதிக்கிறது என்பதற்கான அடையாளமும் - அத்தாட்சியுமா?
ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று மெச்சிக்
கொள்ளும் எம்.எஸ். கோல்வால்கர் எழுதிய (We or our Nationhood Define)
நூலில் என்ன குறிப்பிடுகிறார்? தமிழில் மொழி பெயர்த்து நாகபுரி
பாரத்பிரகாசன் வெளியிட்டுள்ள நூலின் பெயர் - "நாம் அல்லது நம் சமுதாயத்
தன்மையின் விளக்கம்!" என்பதாகும். அந்த நூலின் 65ஆம் பக்கம் இவ்வாறு
கூறுகிறது.
"ஹிந்துஸ்தானத்தில் வாழும்
ஹிந்துக்களல்லாதார் ஹிந்துப் பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு, ஹிந்து
சமுதாயத்தை உயர்ந்த மதிப்பில் வைத்துப் போற்றி, ஹிந்து இனம் அதனுடைய
பண்பாடு ஆகிய இரண்டின் புகழைத் தவிர வேறு எதையும் அவர்கள் வரவேற்கக்
கூடாது. அதாவது அவர்கள் இந்நாடு, அதனுடைய பழமையான பாரம்பரியம் ஆகியவற்றைக்
காண சகியாத தன்மையினையும், நன்றி கெட்ட தன்மையினையும் முற்றிலும்
நீக்கிவிட்டு, உறுதியான எண்ணத்துடன் அன்பையும், பக்தியையும், அவைகளுக்குப்
பதிலாகக் கொள்ளுதல் வேண்டும். ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் அவர்கள்
அந்நியராக இருப்பதை விட்டொழிக்க வேண்டும். அவ்விதம் இருக்க அவர்கள்
விரும்பவில்லையென்றால், அவர்கள் ஹிந்து சமு தாயத்துக்கு முற்றிலும்
கீழ்ப்பட்ட மக்களாக, சலுகைகள் எதுவும் பெறத் தகுதியற்றவர்களாக, கண்ணியமாக
நடத்தப்படுவதனையோ அல்லது பிரஜா உரிமையினையோகூட அடைய அருகதை யற்றவர்களாக,
சுருங்கக் கூறுமிடத்து எதனையும் கோர முடியாத மக்களாக வாழ்தல் வேண்டும்"
என்கிறார் கோல்வால்கர். இதற்கு என்ன பொருள்?
மனிதநேயம் என்றால் என்ன என்று கடுகளவும்
தெரியாத இந்த 'விஜயபாரதம்' வகையறாக்கள்தான் எல்லா மதங்கள், அவர்களின்
கடவுள்கள் உண்மை என்று கூறுவது இந்து மதம்தான் என்று கதைப்பது - எவ்வளவு
பெரிய பித்தலாட்டம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா!
No comments:
Post a Comment