Tuesday, July 10, 2018

தமிழ்நாடு தழுவிய அளவில் இருகட்டமாக விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம்!


ஆர்.எஸ்.எஸ். வார இதழ் மீது சட்டப்படியான நடவடிக்கை
  குடந்தை மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு

நமது
சிறப்புச் செய்தியாளர்


கும்பகோணம், ஜூலைதமிழ்நாடு தழுவிய  அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம் இரு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். கழகத்தைக் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு (75 ஆம் ஆண்டு) நேற்று (8.7.2018) கும்பகோணத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

அதில் கழகத் தலைவர் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது:

திராவிட இயக்கத்துக்கு என்று ஒரு நீண்ட வரலாறு உண்டு.

காங்கிரசிலிருந்து சமூகநீதியின் உரிமைக்காக காஞ்சிபுரம் மாநாட்டிலிருந்து 1925 இல் வெளியேறிய தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார். அதன்மூலம் சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியை, மாற்றத்தை ஏற்படுத்தினார்.

டிசம்பர் ஒன்றாம் தேதி  திராவிட மாணவர் போராட்ட தினம்!

மாநாட்டுக்குத் தலைமை வகித்த திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் தனது தலைமை உரையில் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

திராவிட மாணவர் கழகம் தோன்றிய டிசம்பர் முதல் தேதியை திராவிட மாணவர் கழக நாளாக அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொள்கிறேன். வெறும் திராவிட மாணவர் தினம் அல்ல; திராவிட மாணவர் போராட்ட தினம்'' என்று அறிவிக்கப்படுகிறது. (பெருத்த ஆரவாரம், கரவொலி).

அதேநேரத்தில், அடுத்த டிசம்பர் முதல் தேதிக்கு முன்னதாக ஒவ்வொரு உயர்நிலை, மேனிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும், பல்கலைக் கழகத்திலும் திராவிட மாணவர் கழகம் அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப்பட்ட செய்தியை உடனுக்குடன் விடுதலை'க்கு அனுப்பவேண்டும்.''

- திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர்

தோல்வி கண்ட கட்சிக்குத் தலைமை ஏற்றவர் பெரியார்

நீதிக்கட்சி ஆட்சியின் கல்வி, சமூகநீதி தொடர்பான சாதனைகளுக்காக ஆதரித்தார். இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் தந்தை பெரியார் 1938 ஆம் ஆண்டில் சிறைத் தண்டனை ஏற்றார்.

தந்தை பெரியார் சிறையில் இருந்த அந்தத் தருணத்தில் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெறும்போது தலைமையேற்க யாரும் முன்வரு வார்கள். ஆனால், தேர்தலில் நீதிக்கட்சி தோற்ற நிலையில், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் தந்தை பெரியார். கல்வி, உத்தியோகங்களுக்காகவே பெரிதும் செயல்பட்ட நீதிக்கட்சியை, சமுதாய மாற்றத்துக்கான கொள்கைகளையும் உள்ளே புகுத்தி வரலாற்றில் திருப்பு முனையை விளைவித்த திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தார்.

திராவிடர் கழகத்துக்கு மூத்தது திராவிட மாணவர் கழகம்


 

திராவிடர் கழகம் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டில் சேலத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்றால்திராவிட மாணவர் கழகம் இதே குடந்தையிலே தாய்க்கழகமான திராவிடர் கழகம் தோன்றுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்டது (பலத்த கரவொலி1).

தோற்றுநர்களை நினைவு கூர்வோம்!




திராவிட மாணவர் கழகத்தைத் தோற்றுவித்தவர்களுள் முக்கியமானவர்கள் தவமணி ராசன், கவிஞர் கருணானந் தம், பூண்டி கோபால்சாமி (செங்குட்டுவன்), கோ.லட்சும ணன், இராமதாசு போன்றவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த வரலாற்றுப் பணிக்காக இந்நாளில் நினைவுகூர்கிறோம்!

இன்றைக்கு நடைபெற்ற இந்த மாநாடு - அதனையொட்டி நடைபெற்ற பேரணி இந்த இயக்கம் புது முறுக்கோடு எழுந்து நிற்கிறது என்பதற்கு அடையாளம். அதுவும் வைதீகப் புரியான இந்தக் கும்பகோணத்தில் இந்த எழுச்சி மாநாடும், பேரணியும் நடைபெற்றுள்ளன.

மாணவத் தோழர்களே, வருக! வருக!!

பாராட்டிப் போற்றிய பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!' என்றார் ஈரோட்டுக் குருகுலத் தில் இருந்த நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

அந்த உணர்வை இன்று குடந்தை ஏற்படுத்திவிட்டது. நமது கழக மாணவர்கள் மற்ற எந்தக் கட்சிக்கும் கிடைத்திராத கொள்கைச் சிங்கங்கள்- பத்தரை மாற்றுத் தங்கங்கள்!

தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்துள்ள மாணவத் தோழர்களே, உங்களை வருக! வருக!! என வரவேற்கிறேன் (பலத்த கரவொலி).

போராட்டக் கருவில் வெடித்த திராவிட மாணவர்கழகம்

நமது திராவிட மாணவர் கழகம் தோன்றியதே  போராட்டம் என்ற கருவிலிருந்துதான் - அதன் பிறப்பே போராட்டம்தான்.

பேரணி புறப்படுவதற்கு முன்னதாக கழக மாண வரணியினர் இருபாலரும் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து நின்றனர். அப்பொழுது அவர்கள்எடுத்துக்கொண்ட பத்து உறுதிமொழிகளும் எந்தக் கட்சியிலும், அமைப்பிலும் கேட்டிராத ஒன்றாகும். இதற்கு நிகரானது இதுதான்!

இந்த இயக்கத்தை வீழ்த்திட எந்த கொம்பனாலும் முடியாது. திராவிட இயக்கத்தைப் பலகீனப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் சிலர் கிளம்பியுள்ளனர். அவற்றை யெல்லாம் எங்கள் மாணவர்கள், எங்கள் இளைஞர்கள் சந்திப்பார்கள் - முறியடிப்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.இதழ்மீது சட்டப்படி நடவடிக்கை




விஜயபாரதம்' என்பது மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸின் வார இதழ். அதில் வந்த ஒரு செய்திபற்றி இங்கு எனக்கு முன் உரையாற்றிய கழகத்தின் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.

எங்கள் வீட்டுத் திருமணம் - பேரன் திருமணம் கடந்த ஜூன் 17 ஆம் தேதி  நடைபெற்றது. அதுபற்றி அந்த ஆர்.எஸ்.எஸ். இதழ் உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டு உள்ளது. பொட்டு வைத்து, மாலையுடன், தாலியும்கட்டி அந்தத் திருமணம் நடைபெற்றதாகக்கூறி, உபதேசம் ஊருக்குத்தான் என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

இப்படி எல்லாம் உண்மைக்கு மாறானவற்றைப் பிரச் சாரம் செய்வதை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள் ளார்கள். இங்கே துணைத்தலைவர் ஒன்றைச் சொன்னார். இதுபோன்ற புரட்டுச் செய்திகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டப்படவேண்டும்  என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த மாநாட்டின் வாயிலாகவே அறிவிக்கிறோம். ஆர்.எஸ்.எஸின் வார இதழான விஜயபாரதம்'மீது சட்டப் படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் (பலத்த கரவொலி, ஆர்ப்பரிப்பு!)

                                  இருகட்டங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்



திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் உரையைக் கேட்கத் திரண்டிருந்தோரின் ஒரு பகுதி (குடந்தை, 8.7.2018)

இந்த மாநாட்டில் ஒரு முக்கிய அறிவிப்பு - கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக தீர்மானமாகவே அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு தழுவிய அளவில் இரு கட்டமாக விழிப் புணர்வுப் பிரச்சாரத்திற்கான திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.

முதற்கட்டமாக நாகர்கோவிலில் தொடங்கி விழுப்புரம் வரை (22.8.2018 முதல் 28.8.2018) நடைபெறும். இரண்டாம் கட்டமாக அரியலூரில் தொடங்கி சென்னை வரை (1.9.2018 முதல் 9.9.2018) நடைபெறும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று 51-(எச்) என்ற பிரிவு கூறுகிறது!

"அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; எதையும் கேள்வி கேட்கும் உரிமை, சீர்திருத்தம் இவற்றை வளர்க்கப் பாடுபடவேண்டும் - அது ஒவ்வொரு குடி மகனின் கடமை" என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த இரண்டு கட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணமாகும் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...