Friday, April 27, 2018

மொழி துவேஷம் - இனத் துவேஷம் இரண்டும் சங்கர மடத்தின் இரு விழிகள்!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது நம் நாட்டுப் பழமொழி. காஞ்சி சங்கர மடத்தைப் பொருத்த வரையில் அதன் குருதிவோட்டத்தில் பொங்கி நிறைந்தது - தமிழினத் தோஷமும் - தமிழ்மொழித் தோஷமும் ஆகும்.
அதன் வரலாற்றையும், அதன் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கவனித்து வந்தவர்களுக்கு,  அறிந்தவர்களுக்கு இது நூற்றுக்கு நூறு துல்லியமான உண்மை என்பது விளங்கும்.
இந்து மதம் என்று சொல்லி பெரும்பான்மை மக்களை தங்கள் காலடியின் கீழ் நிற்க வைத்திருந்தனர்.
ஆனால் அவர்கள் சொல்லும் இந்து மதம் என்பது அவாளுக்கானது - மற்றவர்களுக்கு எந்த வகையிலும் தொடர்போ, உறவோ கிடையவே கிடையாது. சைவம், வைணவம் என்று சொல்லப்படுவதற்கும், இந்து மதத்துக்கும் எவ்வித ஒட்டும் இல்லை - உறவுமில்லை.
சைவ பெரும் புலவர்கள் கா-சு-பிள்ளை, தமிழ்க் கடல் மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தரம் போன்றோர் இதனைத் தெளிவாகத் திட்டவட்டமாக ஆய்வுக் கண் கொண்டு நிறுவியுள்ளனர்.
கடவுள் நம்பிக்கையிலும், சம்பிரதாயங்களிலும் ஊறிக் கிடந்த பெரும்பான்மை மக்கள் ஆரிய சங்கர மடத்தின் சூழ்ச்சியினை அறியாது அவர்களின் வலைகளில் சுருண்டனர்.
தந்தை பெரியாரும், அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் ஆரியத்தின் நயவஞ்சகத்தையும், வரலாறு நெடுக நடந்து வந்துள்ள ஆரியர் - திராவிடர் போராட்டத்தையும் எடுத்துச் சொல்லி, எடுத்துச் சொல்லி புதியதோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திறந்த வெளியில் இன்று சங்கராச்சாரிகளையும், சங்கர மடத்தையும் விமர்சிக்க முடிகிறது - புரட்டி எடுக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் இவர்களின் சமூக மாற்றத்திற்கான பெரும் பணிதான் - ஏன் புரட்சி என்று கூடச் சொல்லலாம்.
இந்தியாவிலேயே சங்கராச்சாரியார்கள் இருவர் கைது செய்யப்பட்டதும், சிறைப்பட்டதும் தமிழ் மண்ணில் தான் நடந்திருக்கிறது. அதனைச் செய்தது அதிமுக ஆட்சியில் செல்வி ஜெயலலிதா (முதல் அமைச்சர்) என்றாலும், அதற் கான ஒரு சூழலை உருவாக்கித் தந்தது தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் இயக்கங்களும்தான்!
சங்கர மடம் தமிழை நீஷப் பாஷை என்று கருதக் கூடியது. இன்று வரைகூட பூஜை வேளையில் தமிழை பேச மாட்டார்கள்; அப்படிப் பேசினால் தோஷமாம் - மறுபடியும் ஸ்நானம் செய்துவிட்டுதான் பூஜையில் ஈடுபடு வார்கள்.
ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் காஞ்சி புரத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய போது காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (மறைவு) அவர்களோடு உரையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
கீ. இராமலிங்கனார் தமிழில் பேசினார், சங்கராச்சாரி யாரோ சமஸ்கிருதத்தில் பதில் சொன்னார். அதனை மடத்து மேலாளர் தமிழில் மொழி பெயர்த்தும் சொன்னார். உரையாடல் முடிந்ததும், ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் மொழி பெயர்த்துச் சொன்ன மேலாளரிடம் ஒரு கேள்வி கேட்டார்!
"நான் பேசும் தமிழ் சங்கராச்சாரிக்கு புரிந்து இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது அவர் ஏன் தமிழில் எனக்குப் பதில் சொல்லாமல் சமஸ்கிருதத்தில் பேசுகிறார்" என்று கேட்டபோது அந்த மேலாளர் சொன்னதுதான் அதிர்ச் சிக்குரியது. "பெரியவாள் பூஜை வேளையில் நீஷப் பாஷையில் பேச மாட்டார்!" என்றாரே பார்க்கலாம்.
ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனாரின் இந்தப் பேட்டி 'உண்மை' இதழில் (15.12.1980 பக்கம் 38) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பாரம்பரியத்தில் தான் காஞ்சி மடத்தின் ஜூனியர் சங்கராச்சாரியார் விஜயேந்திரரை அணுகிட வேண்டும்.
சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் - தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது  - எழுந்து நில்லாமல் அமர்ந்திருந்தார் என்பதை சங்கர மடத்தின் பாரம்பரிய தமிழ் மீதான துவேஷத்தின் தொடர்ச்சியாகத் தான் கருத வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கெல்லாம் சங்கராச்சாரியார்கள் எழுந்து நின்று மரியாதை காட்டுவது சங்கர மடத்தின் சம்பிரதாயமல்ல என்று சங்கர மடமே அதிகாரப் பூர்வமாக அறிவித்த பிறகு இதில் வேறு மாதிரியாக சிந்திப்பதற்கோ, முடிவு செய்வதற்கோ எங்கே இடம் இருக்கிறது?
காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் சரஸ்வதி தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய் திருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கும்.
கோயிலுக்கும், தமிழ் வழிபாடு என்ற கருத்திலும் காஞ்சி மடத்திற்கு மாறுபட்ட கருத்து உண்டு.
சங்கர மடத்தின்மீது தொடர்ந்து இத்தகைய குற்றச் சாட்டுகளை திராவிடர் கழகம் வைத்து வந்தது உண்மை தான் - உறுதியானதுதான் - தெளிவானதுதான் என்பது இப்பொழுது நிரூபணமாக ஓங்கி நிற்கிறது.
சிதம்பரம் நடராஜன் கோயிலில் ஓதுவார் ஆறுமுகசாமி அவர்கள் திருப்புகழைப் பாட முடியாதபோது, அக் கோயில் தீட்சதர்களால் அடித்து உதைக்கப்பட்டார்; அவர் கை முறிந்து போகும் அளவுக்கு அந்தத் தாக்குதல் கண்மூடித்தனமாக இருந்தது என்பதையும் இந்த நேரத்தில் சிந்தித்தாக வேண்டும். அந்தப் பிரச்சினை வந்தபோது சங்கர மடத்தின் நிலைப்பாடு என்ன? ஏன் பார்ப்பனர்களின் மனப்பான்மை என்ன?
தந்தை பெரியார் சொன்ன ஆரியர் - திராவிடர் போராட் டம் என்பது என்ன என்று இதுவரை அறிந்திராதவர்கள் கூட இப்பொழுது உணர்ந்திருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...