தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக் காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு மத்திய அரசும், குமரி மகாசபையும் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தர விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி குமரி மகாசபை செயலாளர் ஜெயக்குமார் தாமஸ் உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், ‘‘கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்குவதற்காக மத்திய அரசு 1986 இல் நாடு முழுவதும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்கியது. உண்டு உறைவிட பள்ளியான இருபாலர் பயிலும் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உத்தரவிடவேண்டும்'' என கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ‘‘தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு ஆரம்பம் முதல் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை அமலில் இருப்பதால், நவோதயா பள்ளிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இப்பள்ளியைத் தொடங்கவேண்டும்'' என்றால், அமைச்சரவைதான் முடிவெடுக்கவேண்டும்'' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநில அரசு இடம் வழங்கி தடையில்லா சான்றிதழ் வழங்கினால் வரும் கல்வி ஆண்டில் இருந்தே நவோதயா பள்ளிகள் தொடங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என மாநில அரசு சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது, ‘‘தற்போது நவோதயா பள்ளிகளில் 6 முதல் 10 ஆவது வகுப்புகள் வரை மாநில மொழி முதன்மை பாடமாகவும், மேல்நிலை வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் கற்பிக்கப்படுகிறது. தமி ழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10 ஆவது வகுப்புகள்வரை தமிழ் முதன்மைப் பாடமாகவும், 11, 12 ஆவது வகுப்புகளில் விருப்பப்பாடமாகவும் கற்பிக்கப்படும்'' என மத்திய அரசு சார்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க தேவையான இடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 8 வாரத்தில் உரிய முடிவெடுக்கவேண்டும் என செப்டம்பர் 11 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘‘தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அவசர கதியில் தொடங்க வாய்ப்பில்லை. நவோதயா பள்ளிகள் தொடங்க மாவட்டம் தோறும் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கக் கோரப்பட்டுள்ளது. இந்தளவு போதிய இட வசதி இல்லை. உயர்நீதிமன்றக் கிளை போதிய அவகாசம் தரவில்லை.
இதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்குத் தடை விதிக்கவேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசின் மேல்முறையீடு தொடர்பாக மத்திய அரசும், குமரி மகாசபை செயலாளரும் 4 வாரங்களுக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
1986 இல் அப்போதைய மத்திய அரசு நவோதயா பள்ளிகள் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்த போது தமிழ்நாடும், தமிழ்நாட்டிலுள்ள அத்தனைக் கட்சிகளும் கடுமையாக அத்திட்டத்தினை எதிர்த்தன. எக்காலத்திலும் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பதில்லை என்று உறுதியாக இருந்தனர். திராவிடர் கழகம் திருச்சியில் மாநாட்டை நடத்தியது. பல போராட்டங்களையும் நடத்தியது.
நவோதயா பள்ளிகளைக் கட்டுவதற்கு 30 ஏக்கர் நிலத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் மாநில அரசுதான் இலவசமாக செய்து தரவேண்டும். ஆறாம் வகுப்பில் சேர்வதற்கே ‘நீட்’ தேர்வைப் போன்று இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அந்தப் பள்ளிகளில் இந்தி என்பது மொழிப் பாடமாக மட்டுமின்றி பயிற்று மொழியாகவும் உள்ளது. இது நேரடியாக இந்தித் திணிப்புக்கு வழிகோலுவதாகும். நவோதயா பள்ளிகளால் ஒரு மாநிலத்தின் கல்வித் தரம் உயர்ந்துவிடாது என்பதற்கு அப்பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள பீகாரும், உத்தரப்பிரதேசமுமே சாட்சி.
சரியான கட்டடங்களோ, ஏன் கரும் பலகை, கழிப்பறை வசதிகள் கூட சரிவர இல்லாத ஆரம்பப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஏராளம் இங்கு உள்ளனவே.
அதுமட்டுமல்ல, 1966 ஆம் ஆண்டு கோத்தாரி கமிஷன் பரிந்துரைப்படி, மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம் 30:1 ஆகும். வகுப்பு என்பதோ மற்ற அடிப்படைக் கட்டுமான வசதிகளோ பல கிராமங்களில் இல்லாத இந்நிலை இன்னமும் உண்டு.
இந்த நிலையில், மாவட்டத்திற்கு ஒரு நவோதயா- 30 ஏக்கர் நிலத்தில் - நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை - அதில் இந்தியை மிகவும் தந்திரமாக எந்த மாநில அரசின் பாடத்திட்டத்தில் செய்ய முடியாதோ அதை ஒரு புதிய தந்திரத்தில் உருவாக்கிச் செய்யும் திட்டமே நவோதயா பள்ளித்திட்டம்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் கல்வி அறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு போன்ற கல்வியாளர்களின் கனிந்த அனுபவம், நமது தெளிவான அறிவுறுத்தல்கள் காரணமாகவே தமிழக அரசுகள் தொடர்ந்து நவோதயா பள்ளிகளுக்கு கதவு திறக்க இசைவு தர மறுத்து கொள்கை முடிவை எடுத்துப் பின்பற்றி வருகின்றன.
குடிசைகளுக்குப் பக்கத்திலேயே அரண்மனைகளா என்ற கேள்வியை எழுப்பினார் கல்வி நெறிக்காவலர் நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள்.
நவோதயா ஒரு தந்திரமான பார்ப்பனீய - இந்து - இந்தி - சமஸ்கிருதவாதிகளின் முயற்சி என்பதுதான் உண்மை.
தமிழ்நாடு ஒருபோதும் இதனை ஏற்காது
No comments:
Post a Comment