Friday, April 27, 2018

உடையப் போவது எந்தப் பிம்பம்?

தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி என்னும் தலைப்பில் திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டம் நேற்று (20.3.2018) மாலை சென்னை பெரியார் திடலில், நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடத்தப்பட்டது. குறுகிய கால அறிவிப்பில் மன்றமே வழியும் அளவுக்குப் பல்வேறு தரப்பட்ட பெருமக்கள் கூடியிருந்தனர்.
இதுபோன்ற சிறப்புக் கூட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பேசுகிறார் என்றால் அந்தக்கூட்டம் களைகட்டவே செய்யும்.
தந்தை பெரியாரைச் சீண்டினால் அதன் விளைவு மிகக் கடுமையாக இருக்கும் என்பதைப் பார்ப்பனர்களும், பாரதீய ஜனதா, சங் பரிவார் வட்டாரமும் வட்டியும் முதலுமாகச் சேர்த்துத் தெரிந்து கொண்டிருக்கும் காலக் கட்டம் இது.
இந்த நிலையில்தான் பார்ப்பன அதிகப் பிரசங்கிகள் சில பேர் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். "பெரியாரின் பிம்பத்தை உடைத்தால் பெரியாரின் சிலைகள் தானாகவே உடையும்" என்று அறிவித்துள்ளனர்.
அந்த வேலையை இப்பொழுதே தொடங்கி விட்டனர். இவ்வார 'துக்ளக்' இதழைப் படித்தவர்களுக்கு இது மிகவும் நன்றாகவே விளங்கும்.
ஒரு பொய்யைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், அது உண்மையாகி விடும் என்ற கோயபல்சு தத்துவத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டு சுவாசித்து வாழக்கூடிய கூட்டம்தான் இந்த ஆரிய பார்ப்பனக் கூட்டம்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி, மடத்துக்குத் தன்னை வரவழைத்து, தன் கையைப் பிடித்து இழுத்தார் என்று எழுத்தாளர் அனுராதா ரமணன் கண்ணீரும், கம்பலையுமாக அளித்த பேட்டி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானதைப் பார்த்து பெரியவாள்களின் சின்னப் புத்தியை பக்தர்கள் கூட அறிந்து முகம் சுளித்ததுண்டு.
அந்த நேரத்தில் கூட திருவாளர் குருமூர்த்தி அய்யர் 'துக்ளக்' ஏட்டில் தங்கள் லோகக் குருவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறதே என்ற ஆத்திரத்தில், பதற்றத்தில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணியின் மீதே அபாண்ட பழி சுமத்தியவர் என்பதைத் தெரிந்து கொண்டால், இவர்களின் யோக்கியதை எவ்வளவு மட்டரகமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
நேற்றைய சிறப்புக் கூட்டத்தில் அவர்களின் பித்தலாட் டத்தை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துக் காட்டினார் திராவிடர் கழகத் தலைவர். ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரத'த்தில் கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலில் "காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டதின் பின்னணியில் சோனியா காந்தி இருந்தார்" என்று பிரணாப் முகர்ஜி எழுதிய நூல் ஒன்றில் (THE COALITION YEARS 1996-2012) குறிப்பிட்டு இப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது - "விஜயபாரதத்தில்".
எதிலும் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அபரீத ஆர்வம் கொண்டவரான திராவிடர் கழகத் தலைவர் -அந்த நூல் பற்றி விமர்சனம் வந்த நேரத்திலேயே அதனை வரவழைத்துப் படித்து இருந்தார்.
'விஜயபாரத'த்தில் குறிப்பிடப்பட்டிருந்த அந்தப் பகுதியை எடுத்துக் காட்டி சிறப்புக்கூட்டத்தில் படித்துக் காட்டினார். உண்மை என்னவென்றால் பிரணாப் முகர்ஜி எழுதிய அந்த நூலில் 'விஜயபாரதம்' சுட்டிக்காட்டியபடி -சோனியாகாந்தியின் பெயரே இடம்பெறவில்லை - இதனை திராவிடர் கழகத் தலைவர் கூட்டத்தில் படித்துக் காட்டி விளக்கியபோது கூட்டத்தினர் 'இப்படியும் ஒரு கூட்டமா?' என்று வெட்கித் தலைகுனிந்தனர் என்றே சொல்ல வேண்டும்.
கொஞ்சம்கூட ஈவு இரக்கமின்றிப் பொய் சொல்லுவதில் ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்துக் கொள்ள வேறு யாரும் கிடையாது. எடுத்துக்காட்டாக திருச்சியில் 2018 ஜனவரியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டை பாதிரியார் எஸ்றா சற்குணம் தொடங்கி வைத்தார் என்று இந்த ஆர்எஸ்எஸ் கும்பல் பிரச்சாரம் செய்யவில்லையா? பாதிரியார் எஸ்றா சற்குணம் அவர்களே மறுத்து அறிக்கை வெளியிட்ட பின்னரும் கூட, அதே பொய்யைத் திரும்பத் திரும்ப சொன் னவர்கள்தானே இந்த சங்பரிவார் பேர்வழிகள் என்பதை எடுத்த எடுப்பிலேயே எடுத்துக்காட்டிப் பேசினார் தமிழர் தலைவர்.
இதன் நோக்கம் திராவிடர் கழகத்தைச் சிறுமைப்படுத்த வேண்டும் - திராவிடர் கழகத்தின் பின்னணியில் கிருத்து வர்கள் இருக்கிறார்கள் என்று காட்ட வேண்டும்- அதன் மூலம் தங்களின் குருதியில் எப்பொழுதும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சிறுபான்மையினர் மீதான வெறுப்புச் சூட்டிற்கு வடிகால் தேட வேண்டும் என்பதே!
திராவிடர் கழகம் என்பது சிறுபான்மையின மக்களின் கைக் கருவி என்று காட்டுவதன் மூலம் திராவிடர் கழகத்தின் கருத்துகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கவேண்டும் என்பதே!
இதன் மூலம் திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்தின் பலன் மக்களைச் சென்றடையக்கூடாது என்பதுதான்.
பிரச்சாரக் களம் என்கிற போது திராவிடர் கழகம் குத்தூசி போன்றதாகும். ஆரியக் கற்பனைப் பலூன்களைப் பதம் பார்த்து விடும் என்பதை நம் மக்களை விட பார்ப்பனர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
தமிழ்நாட்டில் தாங்கள் காலூன்ற முடியாததற்கு தந்தை பெரியார் தத்துவமும், திராவிடர் கழக செயல்பாடுகளுமே காரணம் என்பதைத் தெள்ளிதில் உணர்ந்த அந்தக்கூட்டம் தந்தை பெரியாரின் பிம்பத்தை தங்களிடம் உள்ள ஊடக பலத்தால் பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் உடைத்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு திரிகிறார்கள். அது எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும் என்பதை ஆசை வெட்க மறியாத அந்தக் கும்பல் உணரப்போவதில்லை.
திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் தமிழர் தலைவர் தலைமையில் எத்தகு வலிமை உடையது என்பதை நாடறியும். திராவிடர் கழகத்திற்கு அப்பால் உள்ள பார்ப் பனர் அல்லாதாரும், தந்தை பெரியார் தம் தொண்டின் பலனையும், திராவிடர் கழகத்தின் செயல்பாட்டின் பலனையும் துய்த்துக் கொண்டிருப்பவர்கள். ஆகையால் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் பஞ்சதந்திரங்களை நன்கு அறிந்தவர்கள் தான் நம் மக்கள்.  அவர்கள் விரித்த வலையை கிழித்தெறியக்கூடியவர்கள் தான் என்பதில் அய்யமில்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...