ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1952 ஆம் ஆண்டு நடந்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனைகள் வைத்த முதல் கோரிக்கை, ‘‘எங்களுக்கு என்று விளையாட்டுக்குத் தந்த ஆடைகளை அணிவகுப்பில் கலந்துகொள்ளும் போது அணிவிக்க சுதந்திரம் கொடுங்கள்'' என்பது தான் அந்தக் கோரிக்கை. ஆனால், அப்போதைய ஒலிம்பிக் ஆணையம் கலாச்சார அடையாளம் என்று தனி விதியை உருவாக்கி சேலை கட்டாயம் எனக் கூறிவிட்டது. காமன்வெல்த் போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியப் பெண்கள் சேலை அணிந்து அணிவகுப்பது காட்டயமாக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையம் வீராங்கனைகள் உடை குறித்து பரிசீலனை செய்ய இந்திய ஒலிம்பிக் குழு பரிந்துரை செய்திருந்தது. ஏற்கெனவே இந்திய வீராங்கனைகளின் நீண்ட கால கோரிக்கைகளை நினைவில் கொண்டு இந்திய ஒலிம்பிக் ஆணையம் இந்திய வீராங்கனை களுக்கான ஆடை கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது.
பிரேசில் நாட்டில் 2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் இந்திய வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் காமன்வெல்த் போட்டியில் அணிவகுக்கும் இந்திய வீராங்கனைகள், ஆடவர்களைப் போல் கோட் சூட் அணிந்து பங்கேற்பார்கள் என அறிவிக் கப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் இந்த முடிவை பெண் வீராங்கனைகள் வரவேற் றுள்ளனர்.
ஆனால், இது குறித்து ரஞ்சித் மிஸ்ரா என்ற வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த விளையாட்டு ஆணைய உறுப்பினர் கூறும் போது, ‘‘பன்னாட்டு விளையாட்டுகளில் இந்தியாவிற்கு என்று இருக்கும் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டவே சேலை அணிவிக்கும் நடைமுறையை விளையாட்டு ஆணையம் வகுத்திருக்கிறது. இந்த விதிமுறையைத் தளர்த்துவதன் மூலம் நமக்கான கலாச்சாரம் என்ன என்பதை உலகம் தெரிந்துகொள்ளாமல் போய்விடும். ஆகவே, விளையாட்டு ஆணையத்தின் இந்த முடிவை மறுபரீசீலனை செய்யவேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் சேலை என்பது கலாச்சார அடையாளம் அல்ல. டில்லி, அரியானா, பஞ்சாப் போன்ற பகுதிகளில் சேலைகள் அணிவது கிடையாது. அதேபோல் வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளிலும் சேலை கட்டுவது கிடையாது. சேலை என்பது முக்கியமாக தென் இந்தியா மற்றும் மகாராட்டிரா பெண்களின் ஆடையாக உள்ளது. சேலையை இந்தியக் கலாச்சார ஆடை என்று கூறமுடியாது.
ஒலிம்பிக்கிற்குச் சென்று சேலை கட்டுவது இருக்கட்டும்; இப்பொழுதெல்லாம் இந்தியாவில் குறிப்பாகப் படிக்கும் பெண்கள் எங்கே சேலை கட்டுகிறார்கள்? இன்னும் சொல்லப்போனால், இப் பெண்களுக்குச் சேலை கட்டவே தெரியாது என்று சொல்லி விடலாம்.
ஓர் அவசர காலத்திலும், அபாயத்திலிருந்து தப்பும் நேரத்திலும் பெண்கள் விரைந்து ஓடிவர இந்தப் புடவை என்பது மிகப்பெரிய தடைக்கல் அல்லவா? இதனைத் தந்தை பெரியார் நீண்ட காலமாகவே சொல்லி வந்துள்ளார்.
தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் குட முழுக்கின்போது ஏற்பட்ட தீ விபத்தில் பெரும்பாலும் பெண்கள் சிக்கிக்கொண்டு மரணித்ததற்குக் காரணம் இந்தப் புடவைதான் என்று அண்ணா பல்கலைக் கழக ஆய்வு சொல்லவில்லையா?
கலாச்சாரம் என்று கூறி, கற்காலத்துக்குப் போக வேண்டாமே!
No comments:
Post a Comment