Friday, April 27, 2018

பிப்ரவரி 5ஆம் தேதி சமூகநீதிக்கான போர்க்கனல்!


திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் 27.1.2018 சனி மாலை கூட்டப் பெற்ற தேசிய ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் சமூக நீதித் திசையில் முக்கியமான மைல்கல்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் குறிப்பாகக் கிராமப்புற மக்கள் இந்நாட்டின் பெரும்பான்மை யானவர்கள் இவர்கள் நீண்ட காலமாகக் கல்வி உரிமை  மறுக்கப்பட்டவர்கள்.
பெரும்பான்மையான மக்களுக்குக் கல்வியைக் கொடுக் காதே என்று உலகில் சொன்ன ஒரே மதம் இந்து மதமாகத் தானிருக்க முடியும். கடவுளை முன்னிறுத்தி மதத்தினை முன்னிறுத்தி வேத சாஸ்திரங்களை எடுத்துக்காட்டி இந்தக் கொடூரம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
பார்ப்பனர் அல்லாத மன்னர்களும், பார்ப்பனர்களின் 'தெய்வீக!' சூட்சமச் சிறைகளில் தங்கள் சிந்தனைகளை அடகு வைத்து,  கல்விக் கூடங்களைப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே நடத்தி வந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை வரலாறு.
தந்தை பெரியார் சகாப்தத்தில் சுயமரியாதை இயக்க, நீதிக்கட்சி திராவிட இயக்க வரலாற்றில்தான் இந்த அநீதி அடித்து நொறுக்கப்பட்டது - கற்க வேண்டும் என்ற கனல் வீறு கொண்டு எழுந்தது.
தந்தை பெரியார் அவர்களால் ஆதரிக்கப்பட்ட நீதிக் கட்சி ஆட்சி அதற்கான அடிகோளினை நாட்டியது. இந்தி யாவிலேயே இந்தப் புரட்சி சென்னை மாநிலத்திலே நடை பெற்றது. அந்த உணர்வு இன்று இந்தியாவின் மற்ற மற்ற பகுதிகளிலும் பரவி வந்து கொண்டு இருக்கிறது.
ஒரு கால கட்டம் இருந்ததுண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால், சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. நீதிக்கட்சி முதல் அமைச்சர் பனகல் அரசர் தான் அதை உடைத்தார்.
இன்றைக்கு டாக்டர்களாகப்  பவனி வரும் பார்ப்பனர் அல்லாத டாக்டர்கள் எத்தனைப் பேருக்கு இந்த வரலாறு புரியப் போகிறது? கல்வித் துறையில் அங்குலம் அங்குலமாகப் படிப்படியாக வளர்ச்சி பெறுவதற்குப் பின்னணியில் பெரும் போராட்டங்கள் நடந்தேறியுள்ளன.
1928 முதல் சென்னை மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த இடஒதுக்கீடு சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் முதல்  காவு கொண்டதா இல்லையா? அதனை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கி முதல் சட்டத் திருத்தத்தை இந்தப் பிரச்சினைக்காகக் கொண்டு வரக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் அல்லவா -  தமிழ் மண் அல்லவா!
இத்திசையில் எத்தனை எத்தனையோ போராட்ட வர லாற்று கல்வெட்டுகள் உள்ளன என்றாலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் தங்கள் விகிதாச் சாரத்துக்கு ஏற்ப, கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெற்று விடவில்லை.
இதில் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 22.5 விழுக் காடு இடங்கள் (தாழ்த்தப்பட்டோர் 15, மலைவாழ் மக்கள் 7.5 விழுக்காடு)   என்பது சட்டப்படியாக இருந்தாலும், நடை முறையில் இந்த விழுக்காட்டில் இன்னும் பாதியளவைக்கூட எட்டவில்லையே! விதி, சட்ட மீறல்கள் சாங்கோ பாங்கோப மாக நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கின்றன!
பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள் மத்தியிலே நியாயமான உரிமை வேட்கை எரிமலை வெடித்து எழுந் திருந்தால் இந்த நிலை தொடருமா?
குப்புறத் தள்ளியதோடு மட்டுமல்லாமல் குழியையும் பறித்த குதிரையின்  கதையாக  இப்பொழுது 'நீட்' என்ற தேர்வை அகில இந்திய மருத்துவக் கல்வி சேர்க்கைக்குக் கொண்டு வந்து மருத்துவக் கல்லூரிகளில் நுழைய தலைப்பட்ட முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்புச் சுவர் எழுப்பி விட்டது.
ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றம் 'நீட்' செல்லாது என்று தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்றைக்கு மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு - தனக்கே உரித்தான சமூக நீதிக்கு எதிரான பார்ப்பனத் தன்மையோடு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து 'நீட்' தேர்வைக் கொண்டு வருவதில் பிடிவாதமாக இருந்து காரியத்தைச் சாதித்துக் கொண்டு விட்டது.
தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள், ஆசிரியர்கள், மாண வர்கள் பெற்றோர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் திராவிடர் கழகம் ஒருங்கிணைத்து கருத்தரங்குகள் மாநாடு கள், போராட்டங்கள் என்று பல வழிகளிலும் ஜனநாயக முறைகளில் அறப்போரை நடத்தி இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்தது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு சட்டப் பேரவையில் இதற் காக இரு சட்டங்களை நிறைவேற்றச் செய்தோம். ஆனால் அந்த சட்டங்களுக்கு இதுவரை ஒப்புதலை தரவில்லை. மத்திய அரசு சட்ட விரோதமாக நடந்து கொள்வதில் மோடி அரசுக்கு நிகர் மோடியே.
'நீட்' தேர்வின் விளைவாக தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மை மக்களும், கிராமப்புற மக்களும், அண்மைக் காலமாக பெற்று வந்த நல்வாய்ப்பு பலவந்தமாகப் பறிக்கப்பட்டு விட்டது.
வெளி மாநிலத்தவர்களும் பார்ப்பனர்களும், தலைநகரில் உள்ள கே.எம்.சி., (கீழ்ப்பாக்கம்), ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் வழிந்து காணப்படுகின்றனர்.
கடந்தாண்டு நடைபெற்ற 'நீட்' தேர்வில் பல்வேறு குளறு படிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறான கேள்வித்தாள்கள் என்பதெல்லாம் எதேச்சையாக நடைபெற்றவையல்ல. திட்டமிட்டுப் பார்ப்பன ஆதிபத்தியங்கள் நிகழ்த்திய 'திருவிளையாடல்கள்'
கேள்வித்தாள் தயாரிப்பில் மாநிலப் பாடத் திட்டமும் கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவித்தார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மூன்று நாட்களுக்குள் இல்லை, இல்லை, சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில்தான் தேர்வு என்று அறிவிக்கிறார் என்றால் மூன்று நாள்களுக்குள் நடந்த சதிப் பின்னணி என்ன?
நாம் தூங்குகிறோம் என்று கருதித் நம் தொடையில் கயிறு திரிக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களே உரிமைப் பதாகையை கையில் ஏந்தி ஓங்கி எழுவீர்! எந்த உரிமையை ஈட்டுவதாக இருந்தாலும் அதற்குரிய கஷ்ட நஷ்டம் என்னும் விலையைக் கொடுக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.
வரும் 5ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் அனைத்துக் கட்சிகளும், சமூக  அமைப்புகளும், கட்சிகளைக் கடந்து கம்பீர மாக எழுந்து உரத்தக் குரல் கொடுப்போம் வாரீர்! 'நீட்' வந்து விட்டதே என்று தயக்கம் வேண்டாம், எத்தனையோ சட்டங் களையும் மக்கள் போராட்டத்தால் பின் வாங்க செய்த வரலாறு நமக்கு உண்டு. இதிலும் வெற்றி பெறுவோம் எழுவீர்! எழுவீர்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...