Wednesday, November 15, 2017

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமான நிகழ்ச்சி



சிதம்பரத்தில் இளமையாக்கினார் குளம் என்று ஒன்றுண்டு. மனைவியைத்தொடாமலே வாழ்ந்து வாலிபத்தை வீணாக்கியதற்குக் காரணமான சிவன் மீண்டும்  தம்பதியரை சேர்த்து வைத்து வாழ்வை அனுபவிக்க வாய்ப்பாக குளத்தில் குளிக்கவைத்து இளமையை மீட்டுக் கொடுத்தார் என்று ஒரு புளுகு பெரியபுராணத்தில் உண்டு.

உண்மையில் 11.11.2017இல் தூய. தாவீது மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 85 வயது ஆசிரியர்  வீரமணியும், 81 வயது பண்ருட்டி இராமச்சந்திரனும் 11 வயது பள்ளி மாணவர்களாக மாறிய வியப்புக்குரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர் பழையபட்டினத்தில் கி.பி. 1717 இல் நிறுவப்பபட்ட பழைய எஸ்.பி.ஜி பள்ளியின் 300ஆம் ஆண்டு விழாவையொட்டி பள்ளியின் பழைய மாணவர்கள் கூடிப் பேசினோம். சிறப்பு அழைப்பாளர் களாக ஆசிரியரும், மேனாள் அமைச்சரும் கலந்து கொண்டனர். பள்ளியை முழுவதும் சுற்றிப் பார்த்துத் தத்தம் பள்ளிப் பருவ நிகழ்ச்சிகளை பரிமாறிப் பரவசப்பட்டனர். பள்ளியில் எல்லாக் கட்டடங்களும் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளன. ஓரு கட்டடத்தைத் தவிர. அது எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரின் வீடு. பழைமை மாறாமல் பாதுகாக்கப்படும் வீடு. அந்த வீட்டில் தான் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசை நிறுவியவரான. ராபர்ட் க்ளைவ் தங்கியிருந்தார். தூய தாவீது கோட்டை எனப்பட்ட கடலூரில் கவர்னராகப் பணியாற்றிய அவர் கமுக்கமாகத் தங்கிய வீடான அக்கட்டடம், அதற்கான கல்வெட்டு ஆகியவற்றின் முன் நிழற்படம் எடுத்துக் கொண்டனர்.ராபர்ட் க்ளைவ் புழங்கிய வீடும், அலுவலகமும் இன்றும் கடலூரில் கார்டன் ஹவுஸ் என்ற பெயரில் இப் போதைய மாவட்டாட்சியரின் அலுவலகமாக உள்ளது.  படிப்பு வராத முரட்டுச் சிறுவனாக இந்தி யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட க்ளைவ்  கடலூரில் பக்குவப்பட்டு கவர்னர் நிலைக்கு உயர்ந்தார் என்ற வரலாற்றை நகைச் சுவையுடன் ஆசிரியர் எடுத்துக் காட்டினார்.

ஜெர்மன் நாட்டவரான மத போதகர் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்து சமயப்பணியும் தமிழ்ப் பணியும் கல்விப்பணியும் செய்ததை ஆசிரியர் சிறப்பாகக் குறிப்பிட்டார். தரங்கம்பாடியில் அச்சுக் கூடத்தை நிறுவி தமிழின் முதல் அச்சுநூலான தம்பிரான்வணக்கம் என்ற நூல் வெளியிடப்பட்ட செய்தியையும் எடுத்துக் கூறிய போது பழைய மாணவர் பலருக்கும் அது புதிய செய்தி.




சீகன் பால்கு உருவாக்கிய பள்ளியில் தமது 11 ஆம் வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படித்த காலத்திலேயே பொதுக் கூட்டங்களில் பேசிய பெருமைபெற்றவராக இருந்ததையும் திங்கள் கிழமைகளில் தம் வகுப்பாசிரியர் அவரைப் பார்த்து எந்த ஊரில் கூட்டம் பேசினாய் எனக் கேட்ட பழைய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டார். பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருக்கும், தாம் கடவுள் மறுப்புக் கொள்கைக்காரர் என்பது தெரிந்திருந்தும் தங்களது கொள்கையை மாணவர்கள்மீது திணிக்காமல் கல்வி கற்பிப்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தனர் என்பதையும் கூறிப் பரவசப்பட்டார்.

1950களில் இப்பள்ளியில் பாடித் திரிந்த பறவைகளில்  ஒன்றான பண்ருட்டியார், தாம் ஏழாம் வகுப்பில் தேறாமல் போனதை எடுத்துக் கூறினார். தாம் மட்டுமே தேறவில்லை என்பதைச் சற்று  வருத்தத்துடன் சொன்னார். 11ஆம் வகுப்பில் (பள்ளி இறுதி வகுப்பில்) பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியதைப் பெருமை பொங்கக்கூறி மகிழ்ந்தார். சிறப்புப் பேச்சாளர்கள் இருவருமே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உயர்படிப்பு படித்ததையும் ஆசிரியர் அவர்கள் பொது வாழ்க்கையில் சமூகத் தொண்டில் ஈடுபட்டதையும், தாம் வேறு திசையில் அரசியல் வாழ்க்கைக்குப் போனதையும் ஏழு முறை சட்டப் பேரவை உறுப்பினர் ஆனதையும் குறிப் பிட்டார். சமூக மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் பெரியார் வழியில் ஆசிரியர் உழைத்து வருவதைப் பேசிப் பூரிப்படைந்தார். ஆசிரியர் எனக்கும் ஆசிரியரே என்றார்.

ஆசிரியருக்கும், பண்ருட்டியாருக்கும்  சீகன் பால்கு விருது அளித்துப் பாராட்டினார்கள்.  விழா வுக்கு முதல் நாள் பண்ருட்டியாரின் பிறந்தநாள்  என்பதையறிந்த பள்ளித் தாளாளர் கேக் வெட்டிப்  பாட்டு பாடிக் கொண்டாடி விட்டார்.

தென்னிந்திய திருச்சபை பேராயர் வரவியலாத நிலையில் அவரின் பேராளராகக்கலந்து கொண்ட ஆயர்கள் இருவரும்  தந்தை பெரியார் கருத்தையும், தொண்டையும் தம் சமயக்கருத்துகளோடு ஒப்பிட்டுப் பெருமைப்பட்டனர். தந்தை பெரியாரின் வழித் தோன்றல் என்றே அவர்கள் நம் ஆசிரியரைப் போற்றியது நமக்கெல்லாம் பெருமை.




கல்வியில் பின் தங்கிய கடலூர் மாவட்டத்தில் மிகவும் பின் தங்கியுள்ள உழைப்பாளர்கள் நிறைந்த கடலூர் பழையபட்டினப் பகுதியில் உள்ள பள்ளியின் கட்டடப் பணிக்காக ஆசிரியர் அய்ம்பதாயிரம் ரூபாய் தந்தது பலரும் அறியாத செய்தி.  மாணவர்கள் பாடப் புத்தகங்களுக்கப்பாலும் நிறையப் படிக்க வேண்டும் எனக்கூறிய ஆசிரியர் பள்ளி நூலகத்திற்கு .ஏராளமான நூல்களை அளித்தார்.

எம் பள்ளியின் 250ஆம் ஆண்டு விழா 1972 இல் (1973ஆகவும்இருக்கலாம்) நடந்தது. அப்போதைய கல்வித்துறை இயக்குநரான டாக்டர் டைடஸ் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர் அப் போதைய மின்துறை அமைச்சசரான பண்ருட்டியார். அந்த விழாவில் நன்றியுரையை நம் ஆசிரியர் நிகழ்த்தினார். கிறித்துவப் பள்ளிகள் இல்லையேல் தமிழகத்தில் கல்வியே இல்லை என்று அந்த விழா விலும் குறிப்பிட்டார். இந்த விழாவிலும் குறிப்பிட்டார்.

"தூய தாவீது மேல் நிலைப்பள்ளியில் கல்வி மட்டுமே கற்பிக்கப்பட்டது. ஒழுக்கமும் கட்டுப்பாடும் கற்பிக்கப்பட்டன. மதக் கொள்கை கற்பிக்கப்பட வில்லை. சிறப்பு அழைப்பாளரான அமைச்சரும் நன்றியுரை நிகழ்த்துகிற நானும் இந்தப் பள்ளியில் படித்து நாத்திகர்களாகத் திகழ்வதே அதற்கான எடுத்துக்காட்டு"  என்று குறிப்பிட்டார்.

அத்தகைய சிறப்புக்குரிய நாத்திகர் இருவர் 300ஆம் விழாவிலும் கலந்து கொள்வது பொன்மலர் நாற்றமுடைத்து என்பது  போல!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...