Friday, November 17, 2017

அறந்தாங்கி பொதுக்கூட்டம்

சமூகப் புரட்சி வரலாற்றை உண்மையாக எழுதவேண்டுமானால்

பெரியாருக்குமுன் - பெரியாருக்குப் பின் என்றே எழுதவேண்டும்










அறந்தாங்கி, நவ.16 - உண்மையான வரலாற்றை எழுதவேண்டு மானால், பெரியாருக்குமுன் - பெரியாருக்குப் பின் என்றே பட்டியலிட்டு வெளியிடவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

9.11.2017 அன்று புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் நடைபெற்ற உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு: பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்னால்...

ஒரு பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்னால், இந்த அறந்தாங்கி நகரில் உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பாக,  நமக்கெல்லாம் விழி திறந்து, தன்னுடைய விழிகளை இறுதியாக மூடிக்கொண்ட அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா என்ற இந்த தன்மான திருவிழா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய மண்டல திராவிடர் கழகத் தலைவரும், முதுபெரும் இயக்கத் தோழருமான அன்பிற்குரிய அருமைத் தோழர் செயல்வீரர் இராவணன் அவர்களே,

இந்நிகழ்வில் நம் அனைவரையும் வரவேற்ற மாவட்டத் தலைவர் மானமிகு தோழர் மாரிமுத்து அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய மண்டல செயலாளர் தேன் மொழி அவர்களே, பொதுக்குழு உறுப்பினர் கண்ணுச்சாமி அவர்களே,

மாவட்டச் செயலாளர் இளங்கோ அவர்களே, தொடக்க உரையாற்றிய கழகச் சொற்பொழிவாளர்கள் மணியரசன் அவர்களே,
டாக்டர் அன்பழகன் அவர்களே,

நம் அன்பான வேண்டுகோளை ஏற்று, இங்கே சிறப்பாக உரையாற்றிய கருத்துகளை எடுத்து வைத்துள்ள தோழமை கட்சி நண்பர்கள் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் முபாரக் அலி அவர்களே,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கல்வி பொரு ளாதார விழிப்புணர்வு இயக்கத்தைச் சார்ந்த தோழர் கலை முரசு அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் செங்கோடன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் கவிவர்மன் அவர்களே,

புதுக்கோட்டை மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் அருமை சரசுவதி இராமதிராசன் அவர்களே,

பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் அத்திவெட்டி வீரையன் அவர்களே,

திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் அவர்களே,

புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அறிவொளி அவர் களே, மாவட்டச் செயலாளர் வீரப்பன் அவர்களே,

காரைக்குடி மாவட்டத் தலைவர் அரங்கசாமி அவர்களே,

அறந்தாங்கி நகரத் தலைவர் தோழர் பன்னீர்செல்வம் அவர்களே, மாவட்ட அமைப்பாளர் தங்கராசு அவர்களே,

பட்டுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பேராவூரணி சிதம்பரம் அவர்களே, மாவட்டத் துணைத் தலைவர் நல்ல தம்பி அவர்களே, மாவட்ட துணை செயலாளர் நீலகண்டன் அவர்களே,

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள்!
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் கரம்பக்குடி முத்து, வல்லவாரி இரணியன், பட்டுக்கோட்டை நெடுவாசல் புரவலர் வேலு, மண்டல இளைஞரணி செயலாளர் நீலகண் டன், நன்றியுரை கூறவிருக்கின்ற அறந்தாங்கி நகர செயலாளர் யோகராசு உள்பட அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெரு மக்களே, தோழர்களே, வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என் னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

இந்தக் கூட்டத்தினை 10 மணிக்குள்ளாக முடிக்கவேண்டும்; நாங்கள் எப்பொழுதுமே கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்கள், சட்டத்தை மதிக்கின்றவர்கள். அந்த வகையில், நான் என்னு டைய உரையை ஒரு அய்ந்து மணித்துளிகள் முன்பாகவே முடிப்பேன். காரணம் என்னவென்றால், இரண்டு கடிகாரங்கள் ஒத்துப் போகவில்லை. ஆகவேதான், அந்த அடிப்படையில் சிறப்பாக ஒரு கட்டுப்பாட்டிற்கு இணங்க, ஒரு பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்னால், உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய ஒரு அரிய வாய்ப்பினை தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து சென்னையில் மழை; வருகின்ற வழியில் எல் லாம் மழை. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருக்கிறதா என்று அவ்வவ்பொழுது கேட்டுக்கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியோடு, இங்கே கூட்டம் சிறப்பாக, இயற்கையினுடைய ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில், நான் எண்ணிப் பார்க்கிறேன்.

அறந்தாங்கிக்கு நான் வருவது இது முதல் முறையல்ல!

நாங்கள் எல்லாம் இந்த மேடையில் அமர்ந்து இன்றைக்கு உரையாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்றால், இந்த ஊரைப் பொறுத்தவரையில், இந்த அறந்தாங்கிக்கு நான் வருவது இது முதல் முறையல்ல; பழைய நண்பர்களுக்கு அது தெளிவாகத் தெரியும். இன்றைய இளைஞர்களுக்கு இது புதுமையாகக்கூட தோன்றக்கூடும்.

71 ஆண்டுகளுக்கு முன்னால், 1945 ஆம் ஆண்டில், அய்யா இராமநாதன் அவர்களுடைய தலைமையில், நாங்கள் திராவிடர் மாணவர் கழகப் பிரச்சாரத்திற்காக வந்தபொழுது, இதே நகரில், மேடையின்மீது தூக்கி நிறுத்தப்பட்டவன்தான், இப்பொழுது உங்கள் முன் நின்று உரையாற்றிக் கொண்டி ருப்பவன்.

அந்த அளவிற்குத் தொடர்ந்து இந்த இயக்கம், இந்தப் பணி, இதில் ஒரு மிகுந்த மனநிறைவு - மாற்றங்களைக் கண்டு வரவேற்கக்கூடிய உற்சாகம் இவை அத்தனையும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மக்களை அவதிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் செய்திகள் அடுக்கடுக்காக வந்திருக்கின்றன

நான், கழகத்தினுடைய கொள்கைகள், அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளையெல்லாம் சொல்லவிருக்கிறேன் என்றாலும், அதிக நேரம் சொல்ல முடியாது. ஒரு 40, 50 மணித்துளிகள் உரையாற்றலாம். அந்த நேரத்திற்குள் எல்லா செய்திகளையும் விளக்கிவிட முடியுமா? மாற்று நடப்புகளை விளக்கிவிட முடியுமா? ஒவ்வொரு நாளும் மக்களை அவதிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் செய்திகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்ச் சமுதாயத்தினுடைய காவல் நிலையம் - தீயணைப்பு நிலையம் திராவிடர் கழகம்
ஒரு நோயைக் கட்டுப்படுவதற்குள் - அதாவது டெங்கு காய்ச்சல் வந்து முடிவதற்குள், பன்றிக் காய்ச்சல் வருகிறது - பன்றிக் காய்ச்சல் முடிவதற்குள் - பதவிக் காய்ச்சல் வருகிறது - இப்படி பலவகையான அளவிற்கு, காய்ச்சல்களுக்குப் பஞ்சமில்லாத, குற்றங்களுக்கு, நோய்களுக்குப் பஞ்சமில்லாத - எந்த நோய்க்கு சிகிச்சை கொடுப்பது என்று யோசிப்பதற்குள் - இன்னொரு இடத்தில் மதவெறி தீப்பிடிக்கிறது - ஆணவக் கொலை தீப்பிடிக்கிறது என்றெல்லாம் வருகிறபொழுது - எல்லா பகுதிகளிலும் எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும் - 24 மணிநேரமும் தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் எப்படி விழிப்பாக இருப்பார்களோ, அதுபோலத்தான் இந்த இயக்கம் என்பது - தமிழ்ச் சமுதாயத்தினுடைய காவல் நிலையம் - தீயணைப்பு நிலையம்.

எங்களுடைய பணி என்பது, மான அவமானத்தைப் பாராத பணி!

ஜாதி வெறி, மதவெறி, பதவி வெறி எல்லா வெறிகளும் தீயாக மாறுகின்ற நேரத்தில், அதனை அணைக்கக்கூடிய தீயணைப்பு வீரர்கள்தான் பெரியார் பெருந்தொண்டர்களாக, கருப்புச் சட்டைக்காரர்களாக இருக்கக்கூடிய எங்களைப் போன்றவர்கள். எங்களுக்கு வேறு பணிகள் கிடையாது; ஓய் வெடுத்துக் கொள்ளலாமா என்றால், மற்றவர்கள் ஓய்வெடுக் கலாம். ஆனால், இப்படிப்பட்ட கடமை வீரர்களான காவலர் களோ, தீயணைப்பு வீரர்களோ நிச்சயமாக ஓய்வெடுக்க முடியாது. அவர்களுக்கு இருக்கின்ற விதிமுறைகளே வேறு. இன்னுங்கேட்டால், தொழிற்சங்கத்தைக்கூட அவர்கள் அமைக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், கடமையாற்றவேண்டியவர்கள் என்ற அளவில் அவர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அதுபோன்றவர்கள்தான் நாங்கள்.

எனவே, எங்களுடைய பணி என்பது, மான அவமானத் தைப் பாராத பணியாகும். தந்தை பெரியார் சொன்னார்,

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொன்னார். மனித சமுதாயத்தையே உள்ளடக்கினார்கள் தந்தை பெரியார் அவர்கள். மனிதன் என்பதற்கு அடையாளமே மானம் - அறிவு - பகுத்தறிவு. இந்தக் கருத்துகளை அவர் எடுத்துச்சொல்லியதன் விளைவாக இந்த சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள், சாதாரண மாற்றங்களல்ல, ஏராளமான மாற்றங்கள்.

வியாபரத்திற்காகவோ, லாபத்திற்காகவோ கொண்டுவரப்படவில்லை

அவை எல்லாவற்றையும் விளக்கவிட முடியாது என்பதற் காகத்தான் நண்பர்களே, சிறு சிறு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். அதனை தோழர்கள் உங்களிடம் கொண்டு வருவார்கள் - அதனை நீங்கள் வாங்கிப் படிக்கவேண்டும்; பரப்பவேண்டும். அவை எல்லாம் வியாபாரத்திற்காகவோ, லாபத்திற்காகவோ கொண்டுவரப்படவில்லை. தந்தை பெரியார் காலத்திலிருந்தே இந்தப் பிரச்சார முறை கையா ளப்படுகிறது.

ஒன்று, நாங்கள் பேசுவதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக் கின்றதா என்று நீங்கள் தேடினால், இதோ ஆதாரம் என்று சொல்வதற்கு அந்த நூல்கள் பயன்படும்.

இரண்டு, நம்முடைய உணர்வுகள், அறிவை வளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சொன்னால், எல்லா நேரத்திலும், எல்லா கருத்துகளையும் ஒன்றாக வைத்துவிட முடியாது என்பதற்காகத்தான், இந்த நூல்களை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். இந்தப் புத்தகங்களை நீங்கள் வாங்கிப் படிக்கவேண்டும், பிறருக்குக் கொடுக்கவேண்டும், அருள் கூர்ந்து பரப்பவேண்டும்.
மருந்தை சாப்பிடுவது என்பது நம்முடைய நோயைக் குணப்படுத்துவதற்காக...

நான் அடிக்கடி சொல்கின்ற ஒரு உதாரணம், மருந்து சாப்பிடுகிறோம்; எதற்காக மருந்து சாப்பிடுகிறோம் என்று யாரையாவது கேட்டால், மருந்தைக் கண்டுபிடித்தவர் வருத் தப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் சாப்பிடு கிறோம் என்று சொல்வார்களா? அல்லது மருந்துக் கடைக்காரர் களுக்கு வியாபாரம் நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் மருந்து சாப்பிடுகிறோம் என்று சொல்வார்களா? நிச்சயமாக இல்லை. மருந்தை சாப்பிடுவது என்பது நம்முடைய நோயைக் குணப்படுத்துவதற்காக.

பெரியாரை நீங்கள் வாசிப்பதும், சுவாசிப்பதும் நம்முடைய அறியாமை நோயை, ஜாதி நோயை, தீண்டாமை நோயை, பெண்ணடிமை நோயை போக்கிக் கொள்கின்ற பணிக்காக நாம் செய்யவேண்டும்.

அதுமட்டுமல்ல, மருந்து வாங்கி வா என்று யாரிடமாவது சொன்னால், டாக்டர்கள் எழுதிக் கொடுத்தால்கூட, அந்த மருந்தை வாங்கும்பொழுது, கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள், குறிப்பாக ஒன்றைப் பார்ப்பார்கள். அது என்னவென்று சொன்னால், எக்ஸ்பையரி டேட் என்று போட்டிருப்பார்கள்; அந்த மருந்து எவ்வளவு காலத்திற்கு வேலை செய்யும் என்ப தற்கு அவர்கள் தேதியை குறித்திருப்பார்கள். காலாவதியான பிறகு அந்த மருந்தை கடைக்காரர் கொடுத்தால், அவரிடம் கோபப்பட்டு, அந்த மருந்தைத் திருப்பிக் கொடுப்போம். காலாவதியான மருந்தை சாப்பிட்டால், பயன் தராது; பயன்தராது என்பது மட்டுமல்ல, எதிர்விளைவுகளைக் கூட அது உண்டாக்கக்கூடும் என்று நாம் அஞ்சுகிறோமே, அப் படிப்பட்ட பகுத்தறிவுள்ள மனிதர்கள் நாம்; நம்முடைய வாழ் நாளில் காலாவதியான கருத்துகளை மூளையில் ஏற்றிக் கொள்ளலாமா என்பதை தயவு செய்து நீங்கள் எல்லோரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு மனிதனுடைய வாழ்வின்  ஆயுள் சராசரி என்ன?

காலாவதியான மருந்தைவிட, காலாவதியான கருத்துகள் - பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பு இருந்தது என்றால், அப்பொழுது உலகம் எப்படி இருந்தது. அறிவினுடைய தரம் என்ன என்பதை நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் சராசரி வயது என்ன? இன்றைக்கு மனிதனுடைய வாழ்வின் ஆயுள் சராசரி என்ன? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

எனவேதான் நண்பர்களே, உங்களிடத்தில் இந்த முன் னுரையை நான் பீடிகையாக வைக்க விரும்புகிறேன். அருள் கூர்ந்து நாங்கள் சொல்கின்ற கருத்துகளையெல்லாம் நீங்கள் நம்பவேண்டாம்; ஏற்கவேண்டாம்; தயவு செய்து கேளுங்கள்; சிந்தியுங்கள். நம்மை எதிர்க்கின்ற நண்பர்கள் யாராக இருந்தாலும், மாற்றுக் கருத்துடையவர்கள் கூட அருள்கூர்ந்து நீங்கள் காது கொடுத்து கேளுங்கள்; அப்பொழுதுதான் பெரியாருடைய மருந்து வேலை செய்யும். அதுதான் மிக முக்கியம். கேட்டாலே, அதனுடைய பலன் என்ன என்பதை நன்றாக, தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

மக்களுடைய ஒத்துழைப்போடு, அனைத்துக் கட்சித் தோழர்களின் தோழமையோடு...

இந்த ஊரைப் பொறுத்தவரையில், நான் சொன்னேன்.

71 ஆண்டுகளுக்குமுன் முதன் முறையாக இந்த ஊரில் பேசக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். இன்றைக்கும் அந்த மேடை கட்டப்பட்டு இருக்கிறது என்றால், நம்முடைய நகர செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் அருமையாக மக்களுடைய ஒத்துழைப்போடு, அனைத்துக் கட்சித் தோழர் களின் தோழமையோடு இதனை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

சுயமரியாதை வீரர் மெய்யநாதன்
ஆனால், இந்த மேடையைக் கட்டுவதற்கு எத்தனை பழைய தோழர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள். நான் நினைத் துப் பார்க்கிறேன், மெய்யநாதன் அவர்கள், தந்தை பெரியார் அவர்களுக்கு மிக நெருங்கிய உற்றவர்கள். இங்கே தோழர் யாரையாவது அடையாளம் காணவேண்டும் என்றால், அந்தக் காலத்தில் தோழர் மெய்யநாதன் அவர்கள்தான், பழைய சுயமரியாதை வீரர். அதுமட்டுல்ல, இன்னும் சொல்ல வேண்டு மானால், வரிசையாக பல பேருக்குத் தெரியாது; நான் வரும் பொழுதுகூட நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு வந்தேன்.

நாராயணசாமி

நீதிக்கட்சி - அதனுடைய முதலமைச்சர் பொப்பிலி அரசர் அவர்கள். அவர் தஞ்சையில் மாநாடு போட்டிருந்தபொழுது, அந்தக் கட்சிக்குள் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில், பொப்பிலி அரசரைக் கடத்தவேண்டும் என்று அவருடைய எதிரிகள் கருதிய நேரத்தில், பொப்பலி அரசரை அப்படியே குண்டு கட்டாகத் தூக்கி தோளில் சுமந்து கொண்டு வந்த பெருமை இந்த அறந்தாங்கியைச் சேர்ந்த ஒரு தோழ ரையே சாரும். அநேகமாக வயதானவர்களுக்குத் தெரியும் - அவரு டைய பெயர் நாராயணசாமி என்பது. ஆனால், அவருடைய இயற்பெயரே மறைந்துவிட்டது - அவரை எல்லோரும் பொப்பிலி, பொப்பிலி என்றுதான் அழைப்பார்கள். அவர் ரயில்வே கேட் கீப்பராக இருந்த சாதாரண எளிய கழகத் தோழர். ஆனால், கொள்கையில் உறுதியானவர்.

அறந்தாங்கி துரையரசன்
அதைவிட இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால், சட்டமன்ற உறுப்பினராக இருந்த - அரசியலில் எந்த கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், அறந்தாங்கி துரையரசன் அவர்கள் எங்களோடு சுற்றுப்பயணத்தில் எப்பொழுதும் வந்தவர்கள் மட்டுமல்ல,  இயல்பாகவே பல நேரங்களில் இருக்கக்கூடியவர். அவருடைய அன்பு மகனைப் பார்க்கிறேன்.

மங்கை சம்பந்தம்

அவர்கள் எல்லாம் அரசியல் ரீதியாக எந்தக் கருத்திலே எப்படி இருந்தாலும் என்றைக்கும் சுயமரியாதைக்காரர்களாக, என்றைக்கும் பெரியார் தொண்டர்களாக அவர்கள் இருந் தார்கள். அதுபோலவே, எப்பொழுதும் அழுத்தம் திருத்தமாகப் பேசக்கூடியவர் மங்கை சம்பந்தம் அவர்கள். இப்படி பல தோழர்களைப் பார்க்கிறோம். அந்த வரிசையில் இன்றைக்கு அய்யா நம்முடைய கண்ணுசாமி போன்றவர்கள், இராவணன் போன்றவர்கள் எல்லாம் எங்களோடு இருக்கிறார்கள் என்பது இருக்கிறதே, இது மிகப்பெரிய வாய்ப்பு.

பெரியார் என்ன செய்தார்?

அதேபோல, இன்றைக்குப் பாராட்டப் பெற்றவர்கள் எல்லாம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் - இவர்களுடைய உழைப்பு, இவையெல்லாம் சேர்ந்துதான் இந்த மேடையைக் கட்டியிருக்கிறார்கள். எனவே, இந்த மேடையில் நாம் நின்று கொண்டு பேசுகின்ற நேரத்தில், எங்களுக்கெல்லாம் இன்னமும் இந்த சமுதாயத்தில், பெரியாருடைய உழைப்பைப்பற்றி பேசவேண்டிய அந்தக் காலகட்டம் இருக்கிறது.

பெரியார் என்ன செய்தார்? என்று கேட்கக்கூடிய   ஒரு விஷமப் பிரச்சாரம் இளைஞர்கள் மத்தியில்கூட செய்கிறார்கள்.

பெரியார் என்ன செய்தார் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால், நம்முடைய தோளின்மீது இந்தத் துண்டு இருக்கிறதே, இது பெரியார் இல்லாவிட்டால், போட்டிருக்க முடியுமா? என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
முழங்காலுக்குக் கீழே வேட்டிக் கட்டிக் கொண்டிருக் கின்றோமே, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகிய நாம்,

பெரியார் பிறந்திருக்காவிட்டால்,

பெரியார் இந்த இயக்கத்தைத் தோற்றுவித்திருக்காவிட்டால்,

பெரியார் உழைத்திருக்காவிட்டால்,

பெரியார் கல்லடி படாமல் இருந்திருப்பாரானால்,

பெரியார்மீது செருப்பு வீசப்பட்டும் அதைப்பற்றி கவலைப் படாமல், ஒரு செருப்புதானே வீசினான்; இன்னொரு செருப் பையும் வீசட்டுமே என்று கேட்டுப் பெற்ற ஒரே தலைவர் உலக வரலாற்றிலேயே தந்தை பெரியாரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

95 வயதை நெருங்கக்கூடிய அந்தக் காலகட்டத்தில்கூட தந்தை பெரியார் அவர்கள் உருக்கமாக சொன்னார். பெரி யாரைப் பார்த்திராத இளைஞர்கள் இன்றைக்கு வந்திருக் கிறார்கள், இயக்கத்திற்கு. அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அய்யா அவர்கள் கூட்டங்களில் பேசும்பொழுது சொல்வார்கள். அவருக்கு இயற்கை வழியாக சிறுநீர் கழிப்பதில்லை. காரணம், அவருடைய உடலில் ஒரு பகுதியில் ஓட்டை போட்டு, ஒரு ரப்பர் குழாயை செலுத்தி, அந்த ரப்பர் குழாயில் எப்பொழுதுமே சிறுநீர் வடிந்துகொண்டே இருக்கும். ஒரு பாட்டலில் அதனை வைத்து, அடிக்கடி அந்தக் குழாயை மாற்றி, அந்த பாட்டிலை ஒரு  வாளியில் வைத்து, அந்த வாளியைத் தூக்கிக்கொண்டும், சுமந்துகொண்டும் தந்தை பெரியார் பிரச்சாரம் செய்தார்.

எனக்கு ஆறு கால்கள் என்றார்  தந்தை பெரியார்
அய்யா அவர்கள் சொல்லும்பொழுது, உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள், இரண்டு கைகள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், எனக்கு ஆறுகால்கள். ஏனென்று சொன்னால், என்னால் எழுந்து நின்று வேனில்கூட ஏற முடியாத சூழ்நிலை. எனவேதான், எனது இடப்பக்கம் ஒரு வரும், வலப்பக்கம் ஒருவரும் இருப்பார்கள். அவர்களுடைய தோளைப்பற்றிக் கொண்டுதான் நான் வரவேண்டும். எனவே, எனக்கு இரண்டு கால்கள்; இரண்டு பேருக்கும் நான்கு கால்கள். ஆக மொத்தம் ஆறு கால்கள்.

ஆறு முகத்தை - இல்லாத ஒன்றைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றோமோ தவிர, ஆறு கால்களை வைத்துக் கொண்டு தன்னுடைய தொண்டினை செய்த  ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும் - அவர்தாம்

பெரியார் பார்!

என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்களே, அப்படிப் பட்ட தந்தை பெரியார் அவர்களுடைய உழைப்பு எப் பேர்ப்பட்ட உழைப்பு.

அவர் இல்லாவிட்டால், நாம் எல்லாம் படித்திருக்க முடியுமா? இத்தனைப் பள்ளிக்கூடங்கள் வந்திருக்க முடியுமா?

இன்றைக்குப் பெருமையாக இருக்கிறது; வேறு எங்கும் போகவேண்டாம்; நம்முடைய சூழ்நிலையை எண்ணிப் பாருங்கள். நாம் எல்லாம் இங்கே ஒன்றாக அமர்ந்திருக்கின்றோம். யார் என்ன ஜாதி என்று பார்த்து நாம் அமர்ந்தோமோ?

பெரியாருக்கு முன் -  பெரியாருக்குப் பின்...

சமூகப் புரட்சி வரலாற்றைச் சரியாக எழுதவேண்டுமானால், பெரியாருக்கு முன் - பெரியாருக்குப் பின் என்று எழுத வேண்டும். அப்பொழுதுதான் உண்மைகள் விளக்கும். பெரி யாருக்கு முன் எப்படி இருந்தது? ரயில்வேயை வெள்ளைக் காரர்கள் கொண்டு வந்தார்கள். ஜாதி ஓரளவுக்கு ஒழியும் என்று சொன்னார்கள்; இது மற்ற நாடுகளில். ஆனால், இந்த நாட்டில், நம்முடைய நாட்டில், பார்ப்பனீயம் இருக்கிறதே, அது மனிதத் தன்மையையே கொல்லக்கூடிய ஒரு விஷப் பொருள். ஆகவே, அதனுடைய அடிப்படை என்ன என்று சொன்னால்,

நிறைய பேருக்கு இந்தத் தகவல் தெரியாது. நூறு ஆண்டு களுக்கு முன்பு வெள்ளைக்காரர்கள் ரயிலை கொண்டு வருகிறார்கள். தனியார் கம்பெனி - முதன்முதலில் நான்கு பெட்டியைக்கொண்டுதான் ரயில் விடுகிறார்கள். ரயிலைக் கொண்டுவரும்பொழுது மனு போட்டார்கள்; அது என்ன மனுவென்றால்,

பஞ்சமர்களுக்கு ரயிலில் போகிற  தகுதி கிடையாதாம்

நீங்கள் நான்கு பெட்டிகளை விடுவது முக்கியமல்ல; நான்கு கம்பார்ட்மெண்ட் இருக்கிறதே, அதில் ஒன்று பிராமணனுக்கு மட்டும்; இன்னொன்று சத்திரியனுக்கு; இன்னொன்று வைசியனுக்கு; இன்னொன்று சூத்திரனுக்கு என்று மனு போட்டார்கள்.
பஞ்சமர்களுக்கு ரயிலில் போகிற தகுதி கிடையாதாம். அன்றைக்கு நாடகம் பார்ப்பதற்குக்கூட உரிமையில்லை அவர்களுக்கு.
சென்னையில் நடைபெறும் நாடகத்திற்கு விளம்பம் போடுகிறார்கள்.

அபிராம சுந்தரி சரித்திரம் நாடகத்திற்கு விளம்பரம் போடுகிறார். அதற்குக் கீழே அச்சிட்டு இருக்கிறார்கள், பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று. இன்றைக்கு அது போன்று சொல்ல முடியுமா?

பெரியார் என்ற மாமனிதரால், அவர் தொடங்கிய இயக்கத்தால்தான் வந்தது

ஒரு துணைவேந்தர் ஜாதி குறித்து பேசியதால், தலைமறைவாக இருக்கிறார்; தீண்டாமை ஒழிப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவோமோ என்று பயந்து போயிருக்கிறார்.

இந்த அளவிற்கு வந்ததற்கு யார் காரணம்?

சரசுவதி பூஜை கொண்டாடியதினால் வந்ததா? இல்லை நண்பர்களே, பெரியார் என்ற மாமனிதரால், அவர் தொடங்கிய இயக்கத்தால்தான் வந்தது நண்பர்களே!

அசல் மனுதர்ம புத்தகத்தில், அதில் முதல் அத்தியாயத்தில் ஜாதியை சொல்லக்கூடிய நிலையில், ஜாதிக்கு வேர் என்று சொல்கின்ற நேரத்தில், எதைச் சொல்லுகிறார்கள் என்றால்,

87 ஆவது சுலோகம்

அந்த பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக, தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளின்றும் உண்டான, பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமான கருமத்தைத் தனித்தனியே பகுத்தார்.

இதுதான் வருணாசிரம தருமம் - ஜாதி தர்மத்திற்கு இன்றைக்கும் அடிப்படை.

ஏன் இந்த ஜாதியினால் இவ்வளவு பெரிய ஆட்டம், இவ்வளவு பெரிய மாறுதல்கள், இவ்வளவு பெரிய விஞ்ஞான வளர்ச்சிகள் வந்தாலும்கூட, ஜாதி ஏன் இன்னமும் நிலைத்திருக்கிறது? இவ்வளவு பிரச்சாரம் செய்தும் இருக்கிறதே! ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றனவே! என்று கேட்கக்கூடிய கேள்விகள் இருக்கலாம்.

ஜாதியை மனிதர்கள் உண்டாக்கவில்லையாம்;  கடவுள் உண்டாக்கினாராம்

ஆனால், அதனுடைய அடிப்படை என்னவென்றால், மனிதனால் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், அதனை எப்பொழுதோ ஒழித்திருப்பார்கள் ஜாதியை. ஆனால், மிக சாமர்த்தியமாக, அந்த சூழ்ச்சியை செய்திருக்கிறார்கள் என்றால், ஜாதியை மனிதர்கள் உண்டாக்கவில்லையாம்; கடவுள் உண்டாக்கினாராம்; எந்தக் கடவுள் உண்டாக்கினார்?

இந்து மதத்தில் ஆக்கல், காத்தல், அழித்தல் என்று மூன்று துறையாக கடவுளைப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

பெரியார்தான் கேட்டார், அட முட்டாள் பயலே, கொஞ்சம் அறிவை பயன்படுத்தவேண்டாமா? ஆக்கினால் எதற்காக அழிக்கவேண்டும்? அழிக்கவேண்டும் என்றால், எதற்காகக் காக்கவேண்டும்? என்று கேட்டார்.

எங்கள் மூன்று பேரையும்பற்றி  நீங்கள் என்ன சொல்வீர்கள்

இங்கே மேடையில் நாங்கள் மூன்று பேர் அமர்ந்திருக்கின்றோம். தோழர் கம்யூனிஸ்ட் நண்பர் எனக்கு ஒருபுறமும், இன்னொருபுறம் இராவணன் அமர்ந்திருக்கிறார்.

இங்கே களிமண்ணைக் கொண்டு வந்து சக்கரத்தில் வைத்து பானை செய்துகொண்டிருக்கிறோம். இவர் சக்கரத்தை சுற்றி சுற்றி பானையை செய்து கொடுக்கிறார். இவர் ஆக்கல் கடவுள் - பிரம்மா.

நான் அதனை காக்கின்ற கடவுள் - விஷ்ணு என்றால் - அந்தப் பானையை எடுத்து காய வைக்கவேண்டும் என்பதற்காக எடுத்து வைக்கிறேன்.

இராவணன் கையில் ஒரு தடியை வைத்துக்கொண்டு, அந்தப் பானையை உடைத்தார் என்றால்,

எங்கள் மூன்று பேரையும்பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள், ‘‘பைத்தியக்காரப் பயல்களா? இவர்கள்’’ என்று நினைப்பீர்கள் அல்லவா?

நான் சொன்ன சம்பவத்தை நினைத்துப் பார்க்கையில், அறிவு வேலை செய்கிறது. ஆனால், பக்தி என்று வரும்பொழுது புத்தி போய்விடுகிறது.

இதைத்தான் பெரியார் சொன்னார்,

பக்தி வந்தால் புத்தி போய்விடும்

புத்தி வந்தால் பக்தி போய்விடும் என்று.

ஓரிடத்தில் மாடு கட்டியிருந்தால், அது மூத்திரம் பெய்தால், யார்மேலாவது பட்டுவிட்டால், உடனே அவர், ‘‘ஏனய்யா, இங்கேதான் மாட்டைக் கட்டுவதா? என் மேலே பட்டுவிட்டதே - தண்ணீர் கொண்டுவா கழுவவேண்டும்’’ என்று சொல்பவன்தான் மனிதன். பகுத்தறிவு தடையில்லாமல் வேலை செய்கிறது.

பஞ்சகவ்யம் என்ன  சந்திர மண்டலத்திலிருந்து வந்ததா?

கொஞ்சம்தூரம் சென்றதும் இவனுக்கு ஞாபகம் வந்துவிடுகிறது. அடடே, இன்றைக்கு திதி என்று அய்யர் சொன்னாரே - அய்யரைக் கூப்பிடுங்கள் என்றவுடன்,

அய்யரும் வந்து, பசு மாடு இருக்கிறதா? என்கிறார். இருக்கிறது என்றவுடன், டம்ளரை எடுத்துக்கொண்டு வாங்க என்கிறார்.

டம்ளரை எடுத்துக்கொண்டு பசு மாட்டிடம் செல்கிறார்கள்; அப்பொழுதுதான் அது வேலையை முடித்திருக்கும்; அதன் பின்னே சென்று நோண்டியாவது, கொஞ்சம் மூத்திரத்தைப் பிடித்துக்கொண்டு வந்து, அதில் கொஞ்சம் பாலை ஊற்றி, கொஞ்சம் நெய்யை ஊற்றி அதனை பஞ்சகவ்யம் என்கிறான்.

பஞ்சகவ்யம் என்ன சந்திர மண்டலத்திலிருந்து வந்ததா? அல்லது செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்ததா? நம் கண் எதிரேயே மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் கலந்து கொடுக்கிறான். அதனை வாங்கி மடமடவென்று குடிக்கிறார்கள். யார் குடிக்கிறார் என்றால், அய்.ஏ.எஸ்., அதிகாரி, அய்.பி.எஸ். அதிகாரி, அய்க்கோர்ட் ஜட்ஜ் குடிக்கிறார்; அவர்கள் மட்டும் குடிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தினரை வரிசையில் நிறுத்தி குடிக்க வைக்கிறார்கள்.

மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று பெரியார் சொன்னார்.

(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...