Tuesday, November 21, 2017

தொண்டமான் பெயரை நீக்கி தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை சிதைப்பதா? இலங்கை அரசுக்கு எதிராக சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை, நவ.20  இலங்கையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதைக் கண்டித் தும், இலங்கையில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்ட தொண்டமான் பெயரினை மாற்றுவதை நீக்குவதைக் கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (20.11.2017) முற்பகல் 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில்  நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தலைமை செயற்குழு உறுப் பினர் க.பார்வதி, வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன் முன்னிலையில் சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்றார். வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறி யாளர் ச.இன்பக்கனி நன்றி கூறினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை கண்டன உரையாற்றினார்கள். மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தமிழர் உரிமைபறிப்புகள்குறித்த பாடலைப்பாடினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையில் குறிப்பிட்டதாவது:

இலங்கைத் தமிழர்களுக்கு எப்பொழுதெல்லாம் ஆபத்துகள் வருகின்றதோ, எப்பொழுதெல்லாம் அவர் களுடைய உரிமைகள் பறிக்கப்படுகிறதோ, அப்பொழு தெல்லாம் திராவிடர் கழகம் இதுபோன்ற ஆர்ப்பாட் டங்களை, போராட்டங்களை, உரிமைக்குரல்களை ஒலித்து வந்திருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், 1939ஆம் ஆண் டிலேயே நீதிக்கட்சியினுடைய செயற்குழுக்கூட்டத்தில் இலங்கையில் நடைபெறுகின்ற தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள்பற்றி நேரில் சென்று விசாரிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவிலே தந்தை பெரியார், டபிள்யூ.பி.ஏ.சவுந்தரபாண்டியன், என்.ஆர்.சாமியப்ப முதலியார் போன்றவர்களெல்லாம் இடம் பெற்றார்கள். அதனைத் தொடர்ந்து இன்று வரை திராவிடர் கழகம் ஈழத்தமிழர்களுக்கான உரிமைப் போரின் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

இப்பொழுது அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது? இந்த போராட்டத்தின் நோக்கமென்ன என்றால், சவுமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் ஓர் அரை நூற்றாண்டு காலம் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தவர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அங்கு வாழக்கூடிய மலையகத் தமிழர்கள் 13 லட்சம் பேர். சிங்கள அரசு சேன நாயகா தலைமையிலே என்ன முடிவெடுத்தது என்று சொன்னால், இந்த மலைவாழ் மக்களின் குடியுரிமையைப் பறித்து, ஒரு சட்டம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து தொண்டமான் அவர்கள் போராடி,  எட்டரை லட்சம் மலையகத் தமிழர்களின் உரிமைகளை மீட்டுத் தந்தார். மீதித் தமிழர்கள் இந்தியாவுக்கு அழைக் கப்பட்டனர். இன்றைக்கு இலங்கை நாடாளுமன்றத்தில்  ஒரேயொரு தமிழர் சிலை யாருடையது என்றால், அது தொண்டமான் அவர்களின் சிலைதான். அந்த அளவிற்கு அந்த நாட்டு மக்கள் மத்தியிலே, ஈழத்தமிழர்கள் மத்தி யிலே அவர் ஒரு சிறந்த போராளியாக திகழ்ந்திருக்கிறார்.

2009 இனப்படுகொலை

2009 இனப்படுகொலைக்குப்பிறகு, ஒரு மாற்று அரசாங்கம் வந்தால்கூட, அந்த மாற்று அரசால் மாற் றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், எந்த மாற்றமும் இல்லை. ஏமாற்றம்தான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் இதுபோன்ற தொடர் அழிப்பு வேலைகளை, கலாச்சார அழிப்பு வேலைகளை, பண் பாட்டு அழிப்பு வேலைகளை இன்றைக்கு சிங்கள அரசு செய்துகொண்டிருக்கிறது என்கிற நிலையில், அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

சவுமியமூர்த்தி தொண்டமான், அமைதியான இலங்கை மலர மதச்சார்பற்ற கொள்கையை முன்வைத்தார்.

பவுத்த, இஸ்லாமிய மதத்தலைவர்களின் பிடியில் இருந்த இலங்கை அரசியலை பொதுவுடமைத் தத்துவம் கொண்ட குடியரசாக மாற்ற முனைப்புடன் பாடுபட்டார். காந்தியின் அகிம்சைப் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட தொண்டமான் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான அமைதியான அரசியல் வழிப்போராட்டங்கள் நடத்திட, இலங்கை காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். பின்னாட்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற கட்சியாக உருப்பெற்றது.  இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும் தொண்டமானின் கட்சிக்கு ஆதரவளித்தனர்.

இந்த நிலையில் சுதந்திரத்திற்குப் பிறகு மலையக தமிழர்களின் குடியுரிமை கேள்விக்குறியானது. சுதந்திர  இலங்கையின் முதலாவது  பிரதமரான டி. எஸ். சேன நாயகா இலங்கையில் தமிழர்களின்  குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சவுமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் கடுமையாக வாதாடினார். ஏப்ரல் 28, 1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான் பேரணி, அறவழிப்போராட்டத்தை நடத்தினார். 29.4.1952 அன்று இலங்கை நாடாளுமன்றம் முன்பாகவும் தமது அற வழிப்போராட்டத்தை நடத்தினார். இப்போராட்டத்தி னால்  8,50,000 மலையகத் தமிழர்கள் குடியுரிமை பெற்றனர்

4.8.1960 அன்று சிறிமாவோ பண்டாரநாயகா, தொழிலாளர் பிரதிநிதியாக சவுமியமூர்த்தி தொண்ட மானை நாடாளுமன்றத்துக்கு நியமித்தார். மார்ச் 22,1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அய்க்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டார்.

1947ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டு காலம் தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  கட்சி தலைவராகவும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

பவுத்த மத நாடான இலங்கையில் மதச்சார்பற்ற மக்களை ஒன்று திரட்டி  அமைதியான இலங்கையை உருவாக்க முனைந்த தொண்டமான் சிலை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இலங்கை அரசின்  தமிழர் விரோதப் போக்கு, அடிப்படை உரிமை மீறல்களாக மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பு, ஈழத் தமிழர் வாழ்வாதாரங்களைச் சிதைத்தல், ஈழத் தமிழர்களுக்கு உதவும் இலங்கையைச் சேர்ந்தவர்களை சிங்கள விரோதிகளாக சித்தரித்தல், உண்மையை வெளிக்கொண்டுவரும் ஊடகங்கள் ஊடகவியலாளர்களைக் கொலை செய்தல், ஈழத்தமிழர்களை அந்நிய நாட்டுகுடிகளாக சித்தரிப்பது, சிங்கள மொழியை வலுக்கட்டாயமாக தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் திணிப்பது, தமிழர் அடையாளங்களை அழிப்பது, அயல் நாட்டில் வாழும் தமிழர்கள்மீது போலியான வழக்குப் பதிவு செய்து அவர்களை அவர்கள் வாழும் நாட்டின் அரசாங்கத்திடம் குற்றவாளிகளாக அடையாளம் காட்டுவது, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் தமிழர்களை இரண்டாம் தர குடிமகனாக நடத்துவது, இலங்கை தமிழர்களுக்கு கல்வி உரிமை மறுத்தல் என பலவகைகளிலும் தமிழர்களின் உரிமைகளை சிங்கள பேரினவாத அரசு மறுத்து வந்துள்ளது.

தமிழர் உரிமைகள் பறிப்பு

யாழ் நூலகம் எரிப்பு, தமிழர்கள் வழிபாட்டுத்தலங்கள் சிதைப்பு, குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை  ராணுவம் ஆக்கிரமித்தல், வடகிழக்கு மற்றும் மலையக தமிழர்களுக்கு கிடைக்கும் மின்சார வசதி, போக்குவரத்து வசதிகளை தடுத்து இடையூறு செய்தல், தமிழர் ஊடகங்களை அச்சுறுத்தி, அதன் பணியை தடுத்து நிறுத்துவது, தமிழ் ஊடகவியாளர்களைக் கொலைசெய்வது, தமிழக இளைஞர்களை வெள்ளைவேனில் கடத்திச்சென்று கொலைசெய்வது. உள்நாட்டுப்போரில் லட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்தது, அதை தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி உலக நாடுகளை ஏமற்றியது இலங்கை அரசு.

தமிழர்கள் அந்நாட்டின் பூர்வக்குடியினர். ஆனால், ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதுபோல், தமிழர்களை பூண்டோடு அழிக்க சிங்கள இனவாத அரசு திட்டமிட்டு அழிப்பு வேலைகளை செய்துவருகிறது.

2009 தமிழின ஒழிப்பில் ஈடுபட்ட இலங்கை அரசில் தமிழர்கள் வௌ¢ளை வேனில் கடப்பட்டு, காணாமற்போனவர்களாக ஆக்கப்பட்டார்கள்

ஜெனீவாவில் அய்நாவின் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையில் காணாமற்போன தமிழர்கள்குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது. அக்குழுவில் இலங்கை அதிபரும் இடம் பெற்றார். ஆனால், 2009 இன ஒழிப்பின்போது காணாமற்போனவர்கள் குறித்து அல்லாமல், குழு அமைத்த பிறகு காணாமற்போவோர் குறித்தே குழு ஆராயும் என்று மோசடி செய்கின்ற நிலையில்தான் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.

தொண்டமான் ஒரு பொதுவுடைமை சித்தாந்தவாதியாக இருந்திருக்கிறார். சிங்கள அரசாக இல்லாமல், ஒரு மதசார்பற்ற அரசாக விளங்க வேண்டும் என்றுகூட குரல் கொடுத்திருக்கிறார். கட்சிக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட்ட அத்தகைய பெருமகனாரின் பெயரால் இருக்கக்கூடிய நினைவுச்சின்னங்களை இன்றைக்கு இலங்கை அரசு அழித்துக்கொண்டிருக்கிறது. மாற்றிக்கொண்டிருக்கிறது. அவருடைய பெயரால் உள்ள தொழில் மய்யம் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அவர் பெயரால் இருந்த மைதானம் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. அவர் பெயரால் உள்ள கலாச்சார மய்யம் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

இப்படியாக, ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, தோலைக்கடித்து, துருத்தியைக் கடித்ததைப்போல, அடுத்தது சிலையைக்கூட அகற்றக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

தொடரும் இன உரிமை மீட்கும் போராட்டம்

ஆகவே, இலங்கை அரசு என்பது சிங்கள அரசாக தொடர்ந்து இன்றுவரை தமிழர்களுக்கு தொடர்ந்து பெரிய துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதுதான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நிலைப்பாடு என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகத்தான் இன்றைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கட்டளையின்படி இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இந்த உரிமைப்போராட்டம் தொடரும், இந்த உரிமைகளை மீட்டெடுக்கும்வரை இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

--------------------

கண்டன ஆர்ப்பாட்ட ஒலி முழக்கம் 


*        இலங்கை அரசே, சிங்கள அரசே,

அழிக்காதே - அழிக்காதே

தமிழர் பண்பாட்டு அடையாளங்களை

அழிக்காதே - அழிக்காதே!

*           மாற்றாதே மாற்றாதே!

தமிழர் ஊர்ப் பெயர்களை

சிங்களப் பெயர்களாக

மாற்றாதே - மாற்றாதே!

*         மலையகத் தமிழர்களுக்கு

குடியுரிமை பெற்றுத் தந்த

சவுமிய தொண்டமான் பெயரை

மாற்றாதே - மாற்றாதே!

*        சிங்கள அரசே சிங்கள அரசே

தமிழர் பகுதிகளிலிருந்த

சிங்கள இராணுவத்தை

வெளியேற்று - வெளியேற்று!

*      இலங்கை அரசே சிங்கள அரசே

தமிழர் பகுதிகளில் தமிழர் பகுதிகளில்

சிங்களக் குடியேற்றத்தை

அகற்றிடு - அகற்றிடு

நிறுத்திடு - நிறுத்திடு!

*        சிங்கள அரசே, சிங்கள அரசே

யாழ்ப்பாண பகுதி தமிழர் ஆட்சிக்கு

அதிகாரம் வழங்கு - அதிகாரம் வழங்கு!

*       இந்திய அரசே, மத்திய அரசே,

தலையிடு - தலையிடு!

இலங்கைத் தீவில்

தமிழர் பண்பாட்டு அழிப்பை

தடுத்திடு - தடுத்திடு!

*      மலையகத் தமிழர்களின்

மலையகத் தமிழர்களின்

உரிமை நாயகன்,

தொண்டமான் பெயரில் உள்ள

நினைவுச் சின்னங்களின்

பெயர்களை மாற்றாதே!

பெயர்களை மாற்றாதே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...