Wednesday, November 15, 2017

20ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதா? மேனாள் அமைச்சர் சவுமிய தொண்டமான் பெயர்களை நீக்குவதா?

இலங்கைத் தீவில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற சவுமிய தொண்டமான் பெயரில் இருந்த நிறுவனங்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. இந்தத் தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் தற்போது ஆளும் சிறீசேனா தலைமையிலான அரசு தமிழர்கள் - ஈழத் தமிழர்கள் - மலையகத் தமிழர்கள் உட்பட பலரும் வாக்களித்ததால்தான், அவர் ராஜபக்சேயைத் தோற்கடித்துப் பதவிக்கு வர முடிந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
ஆனால் இந்த அரசு வந்தும் தமிழர்களின் நியாயமான மனித உரிமைகள் இன்னும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
அய்.நா.வின் மனித உரிமைக் குழுவின் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கை
போர்க் காலத்தில் நிகழ்ந்த அதீதக் கொடுமைகளை விசாரிக்க அய்.நா.வின் மனித உரிமைக் குழுவின் நடவடிக்கைகள் ஏதோ ஒப்புக்கு, உலகத்தாரின் கண்களில் மண்ணைத் தூவுவது போல, அக்குழுவின் பணியையே - விசாரணையையே - நீர்த்துப் போகுமாறு செய்து விட்டது உலகறிந்த உண்மை.
தமிழர்கள் வாழும் பகுதிகளைச் சுற்றி நிற்கும் இராணுவம் இன்னமும் திரும்ப அழைக்கப் படவில்லை.
அவர்களின் நிலங்களில், காணிகளில் சிங்களக் குடியேற்றங்களை சட்ட பூர்வமாக, அரசு செய்து வருகிறது.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதா?
யாழ்ப்பாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் அரசு, தமிழர் (திரு. விக்னேசுவரன்) ஒருவர் தலைமையில் உள்ளதால், அது  அதிகா ரங்கள்  வழங்கப்படாத அரசாக - ஏதோ பெயர ளவுக்கு உள்ள ஓர் அரசாகவே நீடிக்கும் நிலை உள்ளது!
இதோடு தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள கிராமங்கள், ஊர்களில் உள்ள தமிழ்ப் பெயர்களை மாற்றி சிங்களப் பெயர்களையே சூட்டிடும் கொடுமை, இராஜபக்சே ஆட்சிக் காலத்தில் துவங்கியது  - இன்னமும் தொடருகிறது.
தமிழர், தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் இவற்றின் அடையாளச் சுவடுகளையே அழித்து அடுத்து வரும் தலைமுறைகளுக்குத் தமிழர்களின் பங்களிப்பு, உரிமைகள், பாரம்பரிய பண்பாட்டுத் தடங்கள் அழிக்கப்பட வேண்டுமென்றே திட்ட மிட்டு நடத்த அந்நாட்டு அரசே செய்து வருகிறது.
மேனாள் அமைச்சர் சவுமிய தொண்டமான் பெயர் நீக்கம்
அண்மையில் நெஞ்சு கொதிக்கும் ஒரு செய்தி. அரசு நிறுவனங்களுக்குச் சூட்டப் பெற்று பல்லாண்டுகளாக இருந்த தமிழர் முன்னாள் அமைச்சர் திரு. சவுமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பெயரை நீக்கி விட்டு வேறு பெயர்களை வைப்பது மேலே கூறியதற்கு ஆதாரமான அண்மைக்கால அரசின் நடவடிக்கை.
இதை இந்திய அரசு வேடிக்கைப் பார்த்து இருப்பதா?
பெரு மதிப்பிற்குரிய தொண் டமான் அவர்கள் மலையகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக வாழ்நாள் இறுதிவரை (30.8.1913 - முதல் 30.10.1999 வரை) இருந்த தலை சிறந்த அரசியல் ஞானி - தொண்டறச் செம்மல்.
இலங்கையின் (1947) முதல் நாடாளுமன்றத்தில் திரு. தொண்டமான் அவர்களின் தலைமையில்  இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள், ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந் தெடுக்கப்பட்டனர் என்பது வரலாறு அல்லவா?
1948இல் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட பின், ஏறத்தாழ 40 ஆண்டுகள் தொடர் போராட்டத்தினை நடத்தி மீண்டும் 1987இல் மலையகத் தமிழர்களுக்கு குடிஉரிமை கிடைக்க அரும்பாடுபட்ட வரலாறு படைத்தவர் திரு சவுமிய தொண்டமான் அவர்கள்.
நாடாளுமன்ற வளாகத்திலும், தொண்டமான் சிலை உள்ளதே!

அவரது அளப்பரிய தொண்டினைப் பாராட்டி - வருங்கால சந்ததியினரும் உணர வேண்டி தொண்டமான் அவர்களுக்கு நாடாளுமன்றத் தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அங்கே நிறுவப்பட்ட ஒரே தமிழன் சிலை அய்யா தொண்டமானின் சிலைதான்.
"தொண்டமான் தொழிற் பயிற்சி மய்யம்", "தொண்டமான் விளையாட்டு மைதானம்" "தொண்டமான் கலாச்சார மன்றம்" என்று அவரது பெயர்  சூட்டப் பெற்று, பல ஆண்டுகளாக புழக்கத்திலிருந்த அந்த வரலாற்றுச் சின்னங்களின் பெயர்களை இப்போதுள்ள இலங்கை அரசு பூல்பேங்க் தொழிற்பயிற்சி மய்யம் (Pool Bank Vocational Training Centre) டன்பார் விளையாட்டு அரங்கம் (Dunbar Playground) ராம்போடா கலாச்சார மய்யம் (Ramboda Cultural Centre)  என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்!
என்னே கொடுமை! தமிழரின் தலைவருக்கு இப்படிப்பட்ட கொடுமை புரிவதா?
20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
நமது இந்திய வெளியுறவுத் துறையும், பிரதமரும் இதில் தலையிட்டு மீண்டும் அப்பெயர்கள் இடம் பெற முழு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசர அவசியமாகும்.
இதனை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன் பிடித்தலிலும், அடிக்கடி கைதுகள், படகுகள் பறிமுதல் என்பதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஓர் ஆர்ப்பாட்டத்தை 20.11.2017 அன்று காலை 11 மணியளவில் சென்னையில் திராவிடர் கழகம் நடத்துகிறது.  திராவிடர் கழகத்தினரும், ஒத்த கருத்துடையோரும், மின்னஞ்சல்களை பிரதமருக்கும், வெளியுறவுத் துறைக்கும் குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கி. வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்


சென்னை 
14-11-2017

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...