மெர்சல்’ என்ற ஒரு திரைப்படத்தில் கூறப்பட்ட அப்படத்தின் கதாநாயகரால் சொல்லப்பட்ட வசனங்களை எதிர்கொள்ள முடியாமல், பி.ஜே.பி.யினர் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள்.
இவ்வளவுக்கும் அந்த வசனம் என்பது குற்றமுடை யதுமல்ல - சட்ட விரோதமானதுமல்ல; இன்னும் சொல்லப் போனால், பி.ஜே.பி.யால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை அதிகம் கொண்ட தணிக்கைத் துறையால் அனுமதிக்கப் பட்டவையே அந்த வசனங்கள்.
குறிப்பாக நடுத்தர மக்களையும், அதற்குட்பட்டவர் களையும் சிறுதொழில் செய்பவர்களையும் மிகக் கடுமை யாகப் பாதித்திருப்பது நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரியாகும்.
ஏதோ ஒரு திரைப்படத்தில் அதுபற்றி விமர்சிப்பதாக ஆத்திரப்படுபவர்கள் - பி.ஜே.பி.யில் உள்ள முன்னணித் தலைவர்கள் ஜி.எஸ்.டிபற்றியும், பண மதிப்பிழப்புப்பற்றியும் மிகக் கடுமையாகக் குறைகூறியிருக்கிறார்களே - அதற்கு என்ன பதில்? நாணயமான முறையில், நாகரிகமான முறை யில் பதில் சொல்ல வக்கில்லாமல் ஜி.எஸ்.டி.பற்றி விமர்சனம் செய்த மேனாள் மத்திய நிதியமைச்சர் (பி.ஜே.பி.) யஷ்வந்த் சின்காமீது இன்றைய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பயன்படுத்திய சொற்கள் வெட்கப்படத்தக்கவை. அவரது வயதை முன்னிறுத்தி வேலை வாய்ப்புக்கு இடமில்லை என்று சொல்லுவதெல்லாம் ஏற்புடையதுதானா? என்ன குறை சொல்கிறார்கள்? அது சரியா? தவறா? என்றுகூட சிந்திக்கப் பக்குவம் இல்லாத ஒருவர்தான் இந்தியாவின் மிக முக்கிய நிதித்துறையின் அமைச்சராக இருக்கிறார் என்பது வருத்தத்திற்குரிய ஒன்றே!
திரைப்படத்தில் விஜய் என்ற கதாநாயகர் ஜி.எஸ்.டி.பற்றி சொன்ன கருத்தைக்கூட விமர்சிக்கலாம்; அதில் ஒன்றும் குற்றம் கிடையாது. ஆனால், அந்த நடிகரைப்பற்றிக் கேவலமான வார்த்தைகளால் ஏசுவதும், அச்சுறுத்துவதும், அந்த வசனங்களைத் திரைப்படத்திலிருந்து நீக்கவேண்டும் என்று துள்ளிக் குதிப்பதும் ஆரோக்கியமானதுதானா? ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை, கருத்துரிமைக்கு இடம் கிடையாதா?
பி.ஜே.பி. முன்னணியினரின் தரமற்ற பேச்சுகளைக் கண் டித்து, தலைவர்கள் அறிக்கையினைக் கொடுத்துள்ளார்கள். அதே வரிசையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் அவர்களும் தன் கருத்தினை வெளியிட்டுள்ளார். அப்படி வெளியிடுவது அவருக்கு உள்ள உரிமை - ஏன் கடமை யும்கூட!
முடிந்தால், அவர்களுக்குப் பதில் சொல்ல முன்வர வேண்டும்; இல்லை என்றால், கண்டுகொள்ளாமல் வெளி யேறவேண்டும்.
ஆனால், நடந்தது என்ன?
தமிழக பி.ஜே.பி.யின் தலைவராக இருக்கக்கூடிய படித்த வரான டாக்டர் தமிழிசை அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்மீதும் கட்சியின்மீதும் அவதூறுச் சேற்றை வாரி இறைக்கலாமா?
கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறார், நிலங்களை அவர் கட்சியினர் அபகரிக்கிறார்கள் என்பது போன்ற வார்த்தை களை வாரி இறைப்பது அவரது இயலாமையையும், கண் ணியமற்ற தன்மையையும் தான் வெளிப்படுத்துகிறது.
உண்மை என்னவென்றால், பஞ்சமி நிலங்களைப் பறிகொடுத்தவர்கள் அவர்கள்.
கொச்சைப்படுத்திப் பேசியதற்காக தமிழக பி.ஜே.பி. தலைவர்மீது மான நட்ட வழக்குக் கூடத் தொடுக்க முடியும் - தொடுக்கவும்வேண்டும்.
நடைபாதைகளில் கோவில் கட்டுவது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோவில்களைக் கட்டுவதெல்லாம் இந்துத்து வாவாதிகளுக்கு சர்வசாதாரணம்! அத்தகு அத்துமீறல்களை, ஆக்கிரமிப்புகளைப்பற்றி பா.ஜ.க. தலைவர்கள் பேசு வார்களா? அதிகாரம்தான் கையில் இருக்கிறதே - அவற்றை அகற்றுவதற்கு முன்வருவார்களா?
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, சமூகநீதிக்காக, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இலட்சியங்களை முன்னெடுத்து உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போர்க் குரல் கொடுப்பவர்களை களத்தில் நின்று போராடுபவர்களை, கட்சி நடத்துபவர்களை கொச்சைப்படுத்துவது என்பது பி.ஜே.பி.யின் இந்துத்துவாவின் கொள்கைகளுக்கும், நோக்கத்துக்கும் உகந்த ஒன்றே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில்தான் தமிழக பி.ஜே.பி. தலைவராக இருக்கக்கூடியவரின் பேச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். இதற்குப் பதிலடி என்பது ஏட்டிக்குப் போட்டியாக கொச்சை வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபடாமல் இந்துத்துவா சக்தி களின் ஆணிவேரை மண்ணும், மண்ணடி வேருமாக வீழ்த் துவதுதான் சரியான பாடம் போதிப்பாக இருக்க முடியும்.
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரைக் கேவலமாகப் பேசுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களை, கரூரில் பி.ஜே.பி.யினர் தாக்கி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பி.ஜே.பி.க்கு எப்படி இந்தத் தைரியம் வந்தது? மாநிலத்தில் உள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் தொங்கு சதையாக இருந்து வருவதால் ஏற்பட்ட அசட்டுத் தைரியம்தான் இது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று எச்சரிக்கிறோம். கடைசியாக ஒன்று - பந்தை அடிக்க முடியாவிட்டால், காலை அடிப்பது குற்றமாகும் (Foul Game). ஆடும்வரை ஆடுங்கள் - மக்கள் மத்தியில் பி.ஜே.பி.யின் முகத்திரை கிழிந்து வருகிறது. அதன் ஆட்சியின் நாள்கள் எண்ணப் படுகின்றன என்பது மட்டும் உண்மை!
No comments:
Post a Comment